ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நெருக்கடியிலிருந்து அ.தி.மு.க அரசு பாதுகாப்புக்காக மத்தியில் ஆட்சி செய்த கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம். அதை கொத்தடிமைத்தனம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆட்சி இழந்தபிறகு வழக்குகளை காட்டி, மிரட்டி அ.தி.மு.கவின் தயவில் பா.ஜ.கவை வளர்க்க நினைத்தனர். ஆனால் பா.ஜ.க மீதான வெறுப்பு அ.தி.மு.கவையும் பாதிப்பதால் சமயம் பார்த்துக் கழட்டிவிட காத்திருந்த அ.தி.மு.கவுக்கு அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்கள் நல்வாய்ப்பானது. அண்ணாமலையோ தனித்து நின்று வாக்குவங்கியை அதிகரிக்க முடியுமென தலைமையிடமும் உறுதி அளிக்கிறார்.
அப்புறமென்ன! கூட்டணி முறிவு அ.தி.மு.க - பாஜக இரண்டுமே சொந்தக் காலில் நின்று சுயபலம் பெற வழி வகுத்திருக்கிறது.
2024இல் களம் ரெடி! இனி, மக்கள் செல்வாக்கு பெற்ற எதிர்க்கட்சி எது என்று இருவருமே நிரூபிக்கட்டுமே.ஆல் த பெஸ்ட்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
திரைப்படத்தில் குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க விரும்பும் வசந்தபாலனின் எண்ணம் நிறைவேற நல்வாழ்த்துகள். உறவில் தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பிரிவு ஏற்படும்போது தான் உறவின் அருமையும், பெருமையும் மட்டுமின்றி இழப்பின் வலியும் பெரிதும் உணரப்படுகிறது என்பதையும் பிரதிபலன் எதிர்பாராத பெருமைக்குரியது தாய்மை என்பதையும் பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிய வைத்தது
சிவநேசனின் உளைந்தீ சிறுகதை சிறப்பான சிறுகதையாகும் பாராட்டுகள். உடைந்தது கூட்டணி இடைவேளையா? இறுதிக் கட்டமா? கட்டுரை படித்தேன். எதையும் நம்புகின்ற இளிச்சவாயர்கள் மக்கள் என எண்ணுகின்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலில் எதுவும் நடக்கலாம் எப்போதும் என்ற கூற்று சரியான கூற்றாகவே இருக்கும்.
மு.காந்திராஜா, போரூர்
சீராளன் ஜெயந்தனின் மொட்டை சிறுகதை படித்தேன். இன்று மக்களில் பலரால் சாதியம் என்னும் வெறி எத்தகையதொரு வன்முறை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிச்சமிட்டுக்காட்டியது.
வெறுப்பு துவேஷம், கேலி, கிண்டல் என்பனவற்றின் மூலம் மனக்காயங்களை ஏற்படுத்தி எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி மேற்சாதியர் இருப்பதைப் படம் பிடித்துக் காட்டியது. காதல் வென்றாலும் காதலர்கள் வாழ்வில் மூளியாக்கப்படுவதையும் பட்டவர்த்தனமாகச் சுட்டியது. குட்டக்குட்டக்குனியாமல் நிமிர்ந்துவிட்ட மகாவின் நிலையைக் கனகச்சிதமாகக் கதையாக்கி இருந்தது சிறப்பு.
வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி
கதை கேட்கும், சொல்லும் மனம் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை மீறி இடையறாது இயங்கிக் கொண்டேயிருக்கும் என்பதையும் சரியாகவும் தவறாகவும் அமையும் சூழல்தான் மனிதனைக் கெட்டவனாகவும் நல்லவனாகவும் ஆக்குகிறது என்பதையும்தான் பெற்ற எழுத்து அனுபவத்தின் மூலம் விளக்கியது சு.தமிழ்ச்செல்வியின் ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்.
முத்து வள்ளிமயில், முத்தரசநல்லூர்
பி.ஜே.பி - அ.தி.மு.க. உறவு பிரிந்தது தொடர்பான கட்டுரை படித்தேன். அரசியல் எவ்வளவு சாக்கடை என்பது நிரூபணம் ஆனது. அரசியலில் உறவும் இல்லை பிரிவும் இல்லை என்ற தத்துவம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. திசையாற்றுப்படையில் பிரபாகர் மாஸ்கோவைப் பற்றி அரிய பல தகவல்களைப் பதிவு செய்துள்ளார். லெனின் ஆட்சிக்கு வந்தவுடன் சர்ச்சுகளை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கு சுகமான வாழ்க்கை கொடுத்தால் அவர்கள் ஏன் கோயிலுக்குச் செல்கிறார்கள் என்று கூறிய மாபெரும் மனிதர்.
ஜீவா, கீழக்கலங்கல்
வசந்த பாலனின் பேட்டி அவரது படங்களைப் போலவே வித்தியாசமாக உள்ளது. போக மார்க்கம் கட்டுரை அருமை. படித்ததும் எனது வாழ்க்கைப் பாதை நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சு.தமிழ்ச்செல்வியின் கட்டுரை அருமை. அவரது புதினத்தைப் போலவே வித்தியாசமாக அமைந்துள்ளது. இலக்கற்ற பயணங்கள் கட்டுரை அருமையிலும் அருமை. படித்து முடித்ததும் ரஷ்யாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. செய்திச்சாரல் படங்கள் அருமை. அந்திமழையின் யூ டியூப் சேனல் பக்கங்கள் சூப்பர். அவற்றை துணிச்சலுடன் பிரசுரித்திருக்கும் உங்களது செயல் நன்று.
முரளிதரன், மதுரை
புத்தக அறிமுகத்திலேயே நூலை வாங்கும் எண்ணத்தை உருவாக்கும் திறன்மிகு மதிப்புரைக்கு நன்றி. இப்போதும் அப்பாவிடம் பணம் பெறுவதை விளக்கிய இயக்குநர் வசந்தபாலன் நிறைய சிந்தனையை என்னுள் வளர்த்தார்.
இலக்கற்ற பயணங்களில் இரஷ்யா பற்றிய விளக்கங்களில் இரா.பிரபாகர் கவனம் ஈர்த்து ஏக்கத்தை உருவாக்கி விட்டார்.அவரின் சொல்லாளுமை சிறப்பு. சிறப்புப் பக்கங்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், கருத்து வெளிப்படுத்துதலை யூடியூப் செயலிகள் ஜனநாயகப்படுத்தி உள்ளன. ஜனநாயகத்தில் உள்ள எல்லாப் பிரச்னைகளும் இந்த யூடியூப் உலகத்திலும் உண்டு. அதை மறுக்க முடியாது. இடம் பெற்ற யூடியூபர்களின் அனுபவங்கள் அதன் பல பக்கங்களை உணர்த்தின.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,சென்னை - 89
சிறப்புப் பக்கங்களில் யூடியூப் அரசியலா? இருக்கட்டுமே! அந்திமழைக்கு எதற்கு தயக்கம்? செய்வன திருந்தச் செய்வது தான் அந்திமழை என்பதால் ‘யூடியூப்' குறித்த சிறப்புப் பக்கங்கள் யாரையும் வருந்தச் செய்யவில்லை!
ஆர்.ஜே.கல்யாணி, செல்வமருதூர்
‘2024 தேர்தல்: மகளிர் மசோதா எப்போது கிட்டும்?' என்ற அட்டை ஃபிளாஷ் பார்த்து பக்கங்களைப் புரட்டினேன்! பாஜக இந்த விசயத்தில் கொடாக்கண்டன்! எதிர்க்கட்சிகள் விடாக்கண்டன்! ஆகக்கூடி 2032லும் கூட நமது சந்ததிகள் கனாக்கண்டு கொண்டிருக்கும்! எல்லாமே தேர்தல் படுத்தும் பாடு! கனிமொழி என்விஎன்சோமு கூறுவது நாட்டு வெடி! நாராயணன் திருப்பதி கூறுவது ஓட்டு வெடி!
எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை பெற்ற பிஜேபி கட்சி தற்போது அதிமுக கூட்டணியை முறித்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் லெட்டர் பேடு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலையில் உள்ளதால் ஜீரோ ப்ளஸ் நிகழ்வினை தொடங்கும் என்பது கேள்விக்குறி தான் என்பதே உண்மை. யூடியூப் அரசியல் ,அலசர்களின் மனப்பிரதிபலிப்புகள் நன்றாக எதிரொலித்தது,பெரும்பாலோர் தம் சுயவிருப்பங்களையையே யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை. உடைந்தது கூட்டணி! இது இடைவெளியா? இறுதிக்கட்டமா? - கட்டுரை- இது பிரசவ வைராக்கியமாகத்தான் எனக்கு படுகிறது. உறுதியாக இது இறுதியாக இருக்காது என்பதைத்தான் கடந்த காலங்கள் நிரூபிக்கின்றன. இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார். இயக்குநர் வசந்த பாலன் அனுபவங்கள் - இன்றைய இயக்குநர்களின் அவலநிலையை ஆழமாக அலசுகிறது,
வலம்புரி நாகராஜன், ஈரோடு
அக்கப்போர்வாதிகளின் நவீன வடிவம்தான் கைப்பேசியில் காணொளியாக உண்மையைத் திரித்து ஆளுக்கொரு விதமாய் நியாயம் போல யூடியூபில் பேசிக் கொண்டே இருப்பதன் பலனாய், அதை காப்பியடித்து ‘கருத்து கந்தசாமி‘களாக மாறி, இன்று எல்லோருமே அரசியல் பேசுகிறார்கள். அதனால் தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளும், புரியாததை விவாதித்துப் புரிந்துகொள்ளும் குணம், அவமானமாக கருதி காணாமல் போனது. எந்த ஒரு பிரச்சனையிலும் முடிவாக தீர்க்கமான தீர்வுகளும், அதை செயல்படுத்தும் திட்டங்களும் யாரும் தராத போது, களப்பணியாளர்கள் இல்லாத போது, (உதாரணம்: ஜாதி ஒழிப்பு) வெறும் விவாதத்தால் யாருக்கு லாபம்! காலம் கொல்லிக் கிருமியான, மனநல பாதிப்பான, யூடியூப் சேனல்களால் என்ன பிரயோஜனம்!
யாழினிபர்வதம், சென்னை - 78.
கண்ணில் தென்படும் காதில் நுழையும் பல அரசியல் யூடியூப் சானல்கள் உள்ளன. பல பொதுஇடங்களில் இந்த அரசியல் கருத்தாளர்களின் பேச்சை மெய்மறந்து கேட்கிறார்கள். அரசியல் பத்திரிகைகள் முன்பு பிடித்திருந்த இடத்தை இவர்கள் பிடித்
துள்ளனர். சற்றே மலிவான உத்திகளை பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகக் கையாள வேண்டி உள்ளது. ஆனாலும் திறமையான பேச்சும் தகவல் நுட்பமும் இருந்தால்தான் யூட்யூப் உரையாடல்களில் ஈர்க்கமுடியும். இதுபோன்ற பலரைத் தேடிப்பிடித்து அவர்கள் பின்னணியுடன் வெளியிட்ட பாங்கு பாராட்டுக்குரியது.
அ.நடேசன்,சிவகாசி