கடிதங்கள்

சிம்பிள் பார்முலா!

Staff Writer

பஞ்ச பூதங்களின் சக்திக்கு அஞ்சி அவற்றையே வழிபட்டு, கொஞ்சம் யோசித்தபிறகு அந்த சக்திகளுக்கு உருவம் கொடுத்து, மதங்கள் பிறந்து நாத்திகம் வலுத்து அது தந்த வெறுமையை வெறுத்து, மீண்டும் புராண ஆகம சடங்குகள் புத்துயிர் பெற... இதற்கிடையே, தமிழ் என்ன,  எந்த மொழியில் தேடினாலும் கடவுள் யார் ! அவர் எங்கு எப்படி இருப்பார்? என்ற புதிர் மட்டும் விடுபடவேயில்லையே! அந்த ஆன்மிக வாதங்களைப் படித்து முடித்தபோது, இதுபோல ரொம்ப யோசிக்காமல்... அறவழி வழுவாமல் வாழ்ந்தால் அதுவே கடவுளைச் சேரும் வழியுமாகும் என்ற சிம்பிள் ஃபார்முலாதான் ஆன்மிகம்
என என் மனம் தீர்ப்பு எழுதியது. 


மல்லிகா அன்பழகன், சென்னை- 78 

ஏற்புடைய கருத்து


கர்நாடக வெற்றி காங்கிரசுக்கு கிடைத்த செய்தி என்ன? கட்டுரை கனமானது.
ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்துவிட வேண்டும் என்ற பேராவலால் காங்கிரஸ் சாத்தியமில்லா இலவசங்களை அறிவித்திருப்பது நடைமுறையில் நடக்குமா என்பது போகப்போகத்தான் தெரிய வரும். நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கான காரணங்களை மக்கள் முன்வைத்து, மக்களிடம் இருக்கும் உழைக்கும் சக்தியை தூண்டிவிடாமல் அவர்களை எந்த வேலையையும் செய்யவிடாமல் இலவசங்களை அறிவிப்பது கேலிக்கூத்து. இந்த வெற்றி எதிர் வரும் 2024 தேர்தலுக்கு முன்னோட்டம் என்றெல்லாம் காங்கிரஸ் உளறிவருவதை விட்டு விட்டு உருப்படியான மக்கள் மேம்பாட்டுச் சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம். இல்லையேல் கட்டுரையாளரின் ‘பாஜகவின் அசுர பலத்தை எதிர்கொள்ள திறனற்றுப் போய்விடக் கூடும்' என்ற கருத்து ஏற்புடையது.


பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

 

பாராட்டு


தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற என்னையே வியக்க 
வைத்தது, தமிழும் கடவுளும் 
சிறப்புப் பக்கங்கள். எதைப் பாராட்டுவது, எதை விடுவது என்று தெரியவில்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார் எனும் பழமொழிக்கு உதாரணமாக விளங்குகிறார் குட்நைட் பட இயக்குநர். விநாயக் சந்திரசேகருக்குப் பாராட்டுகள்!


அ. முரளிதரன், மதுரை

தேவையான செய்தி


காங்கிரசுக்குக் கிடைத்த செய்தி என்ன? கட்டுரை படித்தேன். கர்நாடகாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைத் தாலும் பாஜகவின் வாக்கு வங்கி சதவீதம் குறையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ராகுல் காந்தி, தன்னை ஒரு பண்பட்ட தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் பல யாத்திரைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், சமீபகாலமாக வெளிநாடுகளில் சென்று இந்தியா பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் பேசும் பேச்சுகளை ஒரு பண்பட்டவரின் பேச்சாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ், கர்நாடக வெற்றியின் களிப்பில் மிதந்துகொண்டு இருக்காமல் நாடாளுமன்ற தேர்தலையும், இந்த வருடக் கடைசியில் நடைபெற இருக்கும் சில மாநிலங்களின் தேர்தல்களையும் சந்திக்க ஆக்கப் பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த செய்தியாகும்.


டி.கே. கங்காராம், மதுரை

சிறப்பு


இலக்கியத் தடங்களை, பண்பாட்டுத் தடங்களைத் தேடுவதற்கு விடாமுயற்சி, பொறுமை, பட்டறிவு, பன்னூற் பயிற்சி, மொழி அறிவு ஆகியவை வேண்டியதாகும். அவ்வகையில் இரா. முத்துநாகுவின் ‘சுளுந்தீ' நாவல் பிறந்த கதை குறித்த கட்டுரை பேசப்பட வேண்டிய செய்திகள், தகவல்கள், பொருட்கள் குறித்து சிறப்பாகப் பேசி நிற்கின்றது.
முத்து.

வள்ளிமயில், முத்தரசநல்லூர்


சதம் அடிக்கட்டும்!


நேர்காணல் பகுதியில் குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் தந்துள்ள அனுபவங்கள் எதிர்காலக் கனவில் இருப்போருக்குத் தேவையானது. குட்நைட் அனுபவங்களை குறிப்பிட்ட விதமும் அதைப் பார்த்த 85 வயது பெரியவர் மகிழ்வைப்பகிர்ந்த விதமும் கண்ணூற்றதும் கலங்கிய ஆனந்த விழிகளில், இனி மசாலா படம் எடுக்கவே மாட்டேன் என்ற அவரின் சபதம் படித்தேன். சதம் அடிக்க வாழ்த்துகிறேன்.


என்.ஜே. ராமன், நெல்லை


சிந்திக்க வைத்தது!


திசையாற்றுப்படை பிரபாகர் கட்டுரை என்னை சிந்திக்க வைத்தது. படிப்பதற்கும் வேலைக்கு சம்மதமில்லாத நிலையை  மாடசாமி என்ற நபர் மூலம் தெளிவாக புரிய வைத்துள்ளார்.
முத்துநாகு தன் சுளுந்தீ நாவலைப் படிக்கத் தூண்டியுள்ளார். கடவுள் எழுதும் கவிதைகள் தலைப்பில் இளங்கோவன் அவர்கள் ஒவ்வொரு கவிஞர்களின் பாடலை 
சிறப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள். கடைசியில் இயற்கையை வணங்குங்கள், அதை பாதுகாக்க வேண்டும் இது தான் என் கொள்கை. தமிழும் கடவுளும் கட்டுரை அனைத்தும் சிறப்பு. நிம்மதியோடு புரிந்து படிக்க வேண்டிய செய்தி. இதை ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் படித்தால் நல்ல மனிதனாகலாம். 


இரா.சண்முகவேல் கீழக்கலங்கல்

எதிர்காலம்


ஈகோ என்பது காங்கிரஸ் முதல் ஆம் ஆத்மி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மறைந்துபோனால் இந்தியாவின் எதிர்காலம் நிறைவாகும் என்பதை உணர்ந்தேன். 


மருதூர் மணிமாறன், இடையன்குடி


சிந்தனை


‘இயற்கையை வணங்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்' & இது ஆதிகாலத்திலிருந்து தொடர்ந்துவரும் பழைய சிந்தனை தான்!
இயற்கையை தொடர்ந்து நன்முறையில் பாதுகாப்போம். உண்மையில், இந்த மாத சிறப்புப் பக்கங்கள் பற்றிய முன்னுரையே என்னை மிகவும் ஆட்கொண்டு விட்டது. அந்திமழை இளங்கோவன் அவர்களே தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி.


 லயன் கா. முத்துகிருஷ்ணன்


புதுக்கடவுள் வேண்டும்


கடவுள் எழுதும் கவிதைகள்... கவிஞர்கள் எல்லோருமே கடவுள் தான். படைப்பாளி வலிமையான கடவுள். எப்போதோ படித்த ஆத்மநாமின் கவிதை: அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்!
ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
இந்த மண்ணுக்கு பெரியாரும் தேவை, பெரியாழ்வாரும் தேவை.
எல்லா இலக்கியமும் போல பக்தி இலக்கியமும் உயர்வானது. தமிழில்தானே எழுதியுள்ளார்கள்.
நாட்டில் நடப்பதைப் பார்த்தால் கடவுள்னு ஒருத்தர் இருந்தால் நல்லது... அந்த வெற்றிடத்தை நிரப்பி புதிய கடவுள் பிறக்க வேண்டும்...புதிய மதம் அல்ல.


எஸ்.பஞ்சலிங்கம்,
மடத்துகுளம்.


நிலைத்திருக்கும்


சைவத்தையும் வைணவத்தையும் மட்டுமல்லாது பிற மதங்களான இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம், சமணம் ஆகிய மதங்கள் சுட்டும் இறைவனையும் இறைத் தத்துவங்களையும் போற்றியே நிறைந்து இருக்கிறது என்ற உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர வைத்த, ஆழ்ந்த படிப்பும் சிந்தனையும் படைப்பாற்றலும் கைவரப்பெற்றவர்களால் எழுதப்பட்ட பத்துக் கட்டுரைகளும் நெஞ்சில் கல்வெட்டுக்களாய் நிலைக்கும் தன்மை உடையனவாகும்.

மு.இராமு, திருச்சி


நிலைத்திருக்கும்


 சிறப்பு பக்கங்களாய் செதுக்கப்பட்ட& தமிழும் கடவுளும்&கட்டுரைகள் கல்வெட்டின் தனி நேர்த்தியுடன் அமைந்து, புரியாதிருந்த பல விவரங்களையும் அறிய வைத்தது.
முக்கியமானதாக பொ.வேல்
சாமி, நாஞ்சில்நாடன் இருவரின் கட்டுரைகள் மேலும் அறியும் ஆழ்ந்த தேடல் சிந்தனைøயையும் உருவாக்கி விட்டன.
வழக்கம் போன்றே சிறப்பு பக்கங் களின் முன்னுரையில் நிறுவிய ஆசிரியரின் முத்திரைப் பார்வை முத்தாய்ப்பு!
நம் சாமி நம் உரிமை&யில் கரு ஆறுமுகத் தமிழனின் பார்வை தனித்துவமானது.


தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,
சென்னை - 89


கதையின் தாக்கம்


ஜூன் மாத அந்திமழை இதழில் பிரசுரமான அரவிந்தன் அவர்களின்  ‘ஊட்டி வளர்த்த கதை‘. குழந்தைகளை சாப்பாடு கொடுத்துக் கையாளுவதில் உள்ள சிக்கலை படம் பிடித்து காட்டியது. எத்தனை பெரிய கருவிகளும், கண்டுபிடிப்புகளும் வந்தாலும் கதை என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் புரிய வைத்தது.       

           
மீ. யூசுப் ஜாகிர்,வந்தவாசி.


பெருந்தமிழன்


மாலன் அவர்களின் வைணவத் தமிழ் கட்டுரை வாசித்தேன். இனிப்பாக இருந்தது. கண்ணனை குழந்தையாகக் கண்டு குதூகலிக்கும் பெரியாழ்வார், கடவுளிடம் சண்டைக்குப் போகும் திருமழிசையாழ்வார், கண்ணனை  மணக்க காதலனாக வரித்துக் கொண்ட ஆண்டாள் என்று தாவித் தாவி செல்கிற அவரது கட்டுரை வைணவத் தமிழின் சுவைகளை சுட்டுகிறது.  பெருந்தமிழன் பூதத்தாரின் வரிகளை வாசித்து அதிலே சிக்கிக்கொண்டேன். அடுத்து வந்த நம் சாமி நம் உரிமை என்கிற ஆறுமுகத் தமிழனின் கட்டுரையும் பலே.


கோமகன், சென்னை 77