அந்திமழை டிசம்பர் இதழ் அத்தனை பக்கங்களும் படித்து அறியத்தக்கன. திரு.மாலன் நடுநிலையில் நின்று, சாதனை வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை,புள்ளி விவரங்கள் காட்டும் முன்னேற்றம் ஒருபக்கம். மறுபக்கம் சாதி மறுப்பு, தமிழ்வளர்ச்சி,கடவுள்மறுப்பு கொள்கைகளில் வீழ்ச்சி. காங்கிரசின் தோல்விக்கான காரணங்களை ராவ் சரியாகச்சொல்லியுள்ளார். நேருவின் அழைப்பையேற்று காமராசர் தில்லி சென்றது பக்தவத்சலத்தின் பலமின்மை, இந்திரா தன்னிடத்தை நிலை நிறுத்திக்கொள்ளச் செய்த சமரசங்கள். பீட்டர் அல்போன்ஸ் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து வாக்குவங்கி சரிந்த வரலாற்றைச்சொல்லியுள்ளார். காங்கிரஸ் நிலைபெற என்னசெய்யவேண்டும்? சிந்தனைக்குரியவற்றைச் சுட்டியுள்ளார். பழைய வரலாறுகளை நினைவுறுத்தி யதார்த்தமான செய்திகளைப் பாமரன் தந்துள்ளார். நாஞ்சில்சம்பத், திருச்சி சிவா செய்திகளில் சொல்விளையாட்டே விஞ்சியுள்ளது. அ.குமரேசன் கட்டுரை அர்த்தமுள்ள ஆழம் காட்டுகிறது. காங்கிரசோ, இடதுசாரிகளோ, திராவிட இயக்கங்களோ...யாரிடத்தும் இப்போது கொள்கைப் பிடிப்பில்லை. எல்லாம் நீர்த்துப்போய்விட்டன.
-கவிக்கோ ஞானச்செல்வன், சென்னை.
இயக்குநர் சந்திரா அவர்களின் நேர்காணல் கட்டுரை அட்டகாசம். இயக்குனர் கரு.பழனியப்பன் நடித்திருக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். கவிஞர் பழநிபாரதி அவர்களின் கருப்பு வெள்ளை விளையாட்டு கட்டுரை படித்தேன். மனம் வலித்தது. நியாயமான வரிகள். இந்தியாவில் எந்த விவசாயியும் உடன்பட்டு சாகிறானே தவிர கடன்பட்டு சாவதில்லை என்கிற வரி இதயத்தைக் குலைத்தது. பழநிபாரதி அவர்கள், விஜய்மல்லையாவை குறிப்பிட்டு கூறியிருப்பதும் அருமை. ‘1201 கோடி கடனை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்தது மகா அநியாயம். பாவம் விஜய்மல்லையா சாதாரண விவசாயி அல்லவா'.
-சங்கராபுரம் ஜி.குப்புசாமி, வடபழனி
50 ஆண்டுகால ஆதிக்கம் சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு படித்தேன். தமிழ்மண்ணில் தேசியக்கட்சி கள் வேரூன்றி வளர முடியாத காரணத்தை, பல முனைப்பார்வைகளுடன், நம் அரசியல்வாதிகளும் & விமர்சகர்களும் அலசியிருந்தனர். மக்கள் விரும்பும் தகுதிகளைக்கொண்ட தலைவர்கள், காமராஜர், மூப்பனாருக்குப்பின் உருவாகாததும், அந்தப்பாதையில் சில அடிகள் வைத்தவர்களும், டெல்லி தலைமைகளின் இயக்கத்திற்கேற்ப, தலையாட்டும் சுயசிந்தனையற்ற ரோபாட்களாய் செயல்பட்டதுமே தேசியக்கட்சிகள் இங்கு தேய்ந்துபோகக் காரணம்..! மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப முடிவுகளை எடுக்கும் அதிகார மற்றவர்களை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்? மொழி, கலாச்சாரம், கல்வி, ஆன்மிகம் என அனைத்து விசயங்களிலும், தமிழர்களோடு ஒத்துப்போகாதவர்கள் அந்நியப்பட்டதில் வியப்பில்லை.
-எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
இந்தியா, பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டம் என்பதையே நடுவணரசில் அரசோச்சும் தேசியக்கட்சிகள் மறந்துவிடுகின்றன.இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிடவேண்டும், மாநில மக்களின் மொழி, இனம், பண்பாடு, கலை, கலாச்சாரம் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்ற வீண் கனவுகளே இன்று தேசியக்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. குழம்பு, ரசம், மோர் இவைகளுக்குத் தனித்தனி ருசி உண்டு. வயிற்றுக்குள் தானே போகிறது என்று இவை களைக் கலந்து ஒன்றாக்கி சோற்றில் ஊற்றிக்கொள்ள அறிவுள்ளோர் எவரும் விரும்பமாட்டார். இதுவே தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றாமல் போனதற்கு அடிப்படைக்காரணம்.
-நெய்வேலி க.தியாகராசன்
கறுப்பு, வெள்ளை விளையாட்டு ‘‘எட்டாம் தேதி, எட்டு மணிக்கு பிரதமரின் அறிக்கையின் தாக்கம், ஒற்றை இரவில் கள்ளப்பணம் வெளியே வரவில்லை என்றாலும், பல இடங்களில் பிடிப்பது என்னமோ பாவம் இல்லத்தரசிகள்தான் (கள்ளப்பணக்காரிகள்) என்பதுதான் நிதர்சனம். கணவனுக்கு தெரியாமல் சேர்த்துவைத்த ரூ500,ரூ1000, வெளிக்கொண்டு வரவேண்டிய அவலநிலை. எல்லோர் நிம்மதியும் போச்சு!
-இ.டி.ஹேமமாலினி, ஆவடி.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை. மக்களைக் கவர்ந்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். வலிமையான பிம்பங்களாக மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டனர். அவ்வளவு சீக்கிரம் மக்கள் மனதில் இடம் பெற்றுவிட முடியாது. தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டால், முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிடுவார்கள். ஜாதியை முன்நிறுத்தினால் ஓரம் கட்டி விடுவார்கள். தனிப்பட்ட முறையில் நல்ல அரசியல் தலைவர் யார் என்றால் கூசாமல் மதிப்பிற்குரிய திரு.நல்லக்கண்ணுவைத்தான் சொல்வேன்.
-எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
அந்திமழை கோலியினை அற்புதமாய் நனைத்ததனை சிந்தனையில் போட்டு சிக்கெடுத்தேன் - விந்தைகள் தான் பிந்திவரும் ஆட்டங்கள் பிறழாமல் சச்சினையே முந்தட்டும் போட்டிடுவோம் மாலை!
- கவிஞர்.சித.கருணாநிதி, மருதூர் தெற்கு
பெண்ணுடல் அரசியல் சிறப்புக்கட்டுரை படிக்கப்பரவசமாகவும் கிறுகிறுப் பூட்டுவதாகவும் அமைகிறது.
-அ.சம்பத், சின்ன சேலம்
நக்கலும் நையாண்டியும் ஏகடியமும் கொட்டி முழக்கிய ‘கறுப்பு வெள்ளை விளையாட்டு' பழநிபாரதி ஆடிய வார்த்தை விளையாட்டு. சிரிப்பு வந்தது உடன் வேதனையும் இணைந்தது. ஓர் இரண்டாயிரம் ரூபாய் நம்மைப் படாத பாடு படுத்தி விட்டது, படுத்திக்கொண்டிருக்கிறது. சில்லரை கேட்டால் கடைக்காரர் நம்மை நோக்கும் பார்வையில் அனல் தெறிக்கிறது. இந்த நோட்டுப் பிரச்ச னை பல உயிர்களுக்கு வேட்டு வைத்துவிட்டதே?
- கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
செக்ஸ் என்றால் உள்ளூற ரசிப்பதும், ஆனால் வெளிப்படையாக பேச தயங்குவதும் தமிழனின் தனிகுணம். செக்ஸ் ஜோக்ஸ்களை படிப்பவர்களுக்கு செக்ஸ் காமெடி படங்களை ரசிக்கவா கசக்கும். ஆனால், சென்சார் போர்டை தாண்டி முழு படமும் வெளியாவது சந்தேகம். (உ-ம் : நியூ, பாய்ஸ்) கருந்தேள் ராஜேஷ் சிலாகித்த பாஸி சாட்டர்ஜியின் ஷௌகின் பட சாயலில் டி.என்.பாலு இயக்கிய ஓடி விளையாடு தாத்தா படம் வந்திருக்கிறதே. கூடவே, கன்னட பாக்யராஜ் காசிநாத்தின் செக்ஸ் காமெடி படங்கள் தமிழில் டப்பிங்காகி வெற்றி பெற்றிருக்கிறதே! கமலின் செக்ஸ் குறும்புகளையும் குறிப்பிட்டிருக்கலாமே!
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
உடலால் பெருத்து மனதால் அழுகி எனும் தலைப்பிலான மாலனின் எழுத்துக்கள் (கட்டுரை) அருமை. காமிரா கண்கள் வண்ண படங்கள் அருமை.
-அ.முரளிதரன், மதுரை.
உலகம் உன்னுடையது பகுதி படித்தபோது ‘‘மனித உருவில் புதிய பிரம்மாக்களை'' ப்பற்றிய தகவல் வியப்பில் மெய்சிலிர்த்தேன், ஆஹா இது போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு அவசியம், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் பிறந்த வாழ்க்கையை பிறருக்கு பயனளிக்கும் படி வாழ்ந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்கள் என்ற உண்மைச்செய்தி, வியப்பாகவும், பெருமிதமாகவும் இருந்தது.
- சினேகா, ஆவடி