கடிதங்கள்

உயர் எண்ணம்!

Staff Writer

அந்திமழை தீபாவளிச் சிறப்பிதழில் '50 புன்னகைத் தருணங்கள்' பல்துறை ஆளுமைகளின் பதிவுகள் அனைத்தும் அருமை! வாசகர்கள் மனங்கள் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்ற உயர் எண்ணத்தோடு உருவாக்கம் பெற்றிருக்கின்றன அனைத்துப் படைப்புகளும்! முத்துமாறன் எழுதிய ‘இதழியல் ஆய்வாளர்' படித்து மகிழ்ந்தேன். பணப்பயன் கருதாது, இதழ்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபாடு கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அ.மா.சாமி என்கிற குரும்பூர் குப்புசாமி அவர்கள்! அவரெழுதும் அத்தனை நூல்களிலும் ஆதித்தனார் மாணவன் என்றே போட்டுக் கொண்ட இதழாளர், படைப்பாளர்! ‘மனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர்' கட்டுரையில் கால்நடை மருத்துவப் பேராசிரியர் எஸ்.ஏ.அசோகன் அவர்களின் அனுபவத் தெறிப்புகள் ஒவ்வொன்றும் கால்நடை வளர்ப்போர் அனைவரும் படித்தறிய வேண்டியது!

நவீன்குமார், நடுவிக்கோட்டை

வெப் சீரீஸ்!

டிசம்பர் சீசன் கச்சேரிக்கான விமர்சனம் பருவ இதழ்களில் ஆண்டுதோறும் தவறாமல் வெளியாகிறது. சென்னையைத் தாண்டி யாரும் கேட்காத கச்சேரிக்கு விமர்சனம் எழுது வதால் மதுரையிலும், குமரியிலும் வாழ்பவர்களுக்கு என்ன பிரயோஜனம்? அதுபோல தான், வெப்சீரிஸ் விமர்சனங்களும்! நடுத்தரவர்க்கமே இன்னும் அறியாத வெப் தொடர்களுக்கு பருவ இதழில் விமர்சனம் எழுதி என்ன பிரயோஜனம்? எனினும், வெப்சீரிஸ் என்றால் என்ன? அதில் என்ன நடக்கிறது? என்பதை அறிந்து, அதன் மூலம் அத்தொடரில் நுழைய ஒரு வாய்ப்பாகலாம். ஆக, மாற்றங்களுக்கேற்ப நாமும் மாறாவிட்டால் பின்தங்கி விடுவோம் என்ற எச்சரிக்கையும் இதில் உள்ளடங்கியிருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

அ. யாழினி பர்வதம் சென்னை - 78

புரிந்தது!

50 புன்னகை தருணங்கள் தொகுப்புக்கு முன்பாக சமூக ஊடகப் போர் கட்டுரை வெளியானது. ஆகா! என்னப் பொருத்தம்! எப்படி என்கிறீர்களா? வலைதள பணிக்கென தனி அணி அமைத்து, ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகள் மீது எதிர்மறையான பரப்புரைகளால் தாக்க, தனது தலைவனைப் பற்றி மட்டும் நேர்மறையான கருத்துகளை எடுத்து வைக்க, அது பொய், ஏமாற்றுத்தனம் என்று நிரூபணமாகும் போது அதுவே எதிர்மறையாக, இப்படி தொடர்ந்து வலை த்தள பதிவுகளில் மூழ்கி கிடப்பவர்களின் மூளை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு நேர்மறையான, மகிழ்ச்சிகரமான எண்ணங்களை இட்டு நிரப்புவதே உரிய மருத்துவம் என புன்னகை பக்கங்கள் மூலம் புரிந்து கொண்டோம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

நினைவுகள்

நவம்பர் 2020 அந்திமழை படித்தேன். அருவியைப் பார்க்கும் சிறுத்தை - மனுஷ்யபுத்ரன் அந்த அருவிக்கு அழைத்து செல்கிறார். ருத்ரன் கருத்து இனிமையாக இருந்தது... எனக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் என் வீட்டை ஒட்டி ஓடும் அமராவதி ஆற்றில் நீந்திக் குளிப்பதுதான். தியோடர் பாஸ்கரன் அஞ்சல் துறைக்கு சேர்ந்த அனுபவம் மகிழ்ச்சியைத் தருகிறது. காலச்சுவடு விழா & கோயமுத்தூரில் நடந்தபோது தியோடர் பாஸ்கரனிடம் சென்று நானும் ஒரு படைப்பாளி என்றவுடன் ஆச்சரியப்பட்டார். என்ன படைப்பாளி? எந்த கவலையும் இல்லாமல் 48 ஆண்டுகாலம் அமராவதி ஆற்றில் குளித்து வளர்ந்தவன் என்றவுடன் இரண்டு கரம் நீட்டி அணைத்துக் கொண்டார். தாய் வாஞ்சையுடன் தன் குழந்தையை வாரி எடுத்து அன்புடன் அழைத்துக் கொள்வது போல... நான் வேலை இல்லாமல் ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஏற்படுத்திக்கொண்டு, ஊர் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில் மாலை நேரத்தில் ஆற்றில் தூண்டில் போட்டபோது இரண்டு பெரிய மீசை கொண்ட மீன்கள் ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ந்து கிடைத்தது. மீன்களை திண்ணையில் வைத்துவிட்டு அசந்து தூங்கிவிட்டேன். சென்னை வானொலியில் இரவின் மடியில் ஒலித்துக் கொண்டிருந்தது... நல்ல தூக்கம்... சாப்பிடாமல் படுத்துவிட்டேன்... இரவு உத்தேசமாக பத்து மணிக்கு அப்பா எழுப்பினார். நன்கு மசாலா அரைத்து மீன் குழம்பு வைத்திருந்தார். அரைத்தூக்கத்தில் மீன் குழம்பு சாப்பிட்ட சுகம் இன்னும் இருக்கிறது. அம்மா இல்லாவிட்டாலும், ஆயிரம் அம்மாவுக்கு சமமாக அப்பாவும்...

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

மகிழ்ச்சி ஆராய்ச்சி!

தலைப்பிற்கேற்ப, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்களது புன்னகை தவழும் முகத்தினை அட்டைப்படமாக அமைத்திருந்தது சிறப்பு! ஆனால், அவரைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லையே! அதுதான் குறை. பல்வேறு துறைகளைச் சார்ந்த 50 பேர், தங்களது மகிழ்வான தருணங்களை, அழகான முறையில் பதிவிட்டிருப்பது மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களது மெனக்கெடல் பாராட்டுதலுக்குரியது. நடிகர் சிவகுமார் அவர்கள் ஓவியமாக தீட்டியுள்ள, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில், நான் சிறுவயதிலிருந்து பார்த்து வியந்த கம்பீரமாக காட்சியளிக்கும் வீரபத்திரர் சிலையினை, அவ்வளவு துல்லியமாக ஓவியத்தில் வெளிக்கொணர்ந்தது கண்டு பெருமகிழ்வடைந்தேன். அவரது அனைத்து ஓவியங்களும் பாது காக்கப்பட வேண்டியவையே! அவருக்கும் அவரது ஓவியத் திறமைக்கும் தலை வணங்குகிறேன். அந்திமழை இளங்கோவன் மகிழ்ச்சியைப் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே சமர்பித்து விட்டாரே! அனைத்திற்கும் மகுடம் சூட்டினாற் போல், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பெண் அனுபவித்த பதினாறுநாள் கிராமிய வாழ்வை மிக நேர்த் தியாக கோடிட்டு காட்டிவிட்டார் அவரது ‘‘வெயிலில் அமர்தல்'' சிறுகதையில். கிராமத்தில் வீசும் காற்றில் இத்தனை வகைகளா? அங்கு காயும் வெயில் கூட அவளது மனதில் எத்தனை உணர்வுகளைத் தூண்டி விடுகிறது! கிணற்றடி... அதன் அருகில் உள்ள வாழைமரம் தனக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாகக் கருதி, தானே வாழைமரமாக ஆகிவிட்டதாக உணர்கிறாளே! ஆனால், இறுதியில் பழைய வாழ்வுமுறைகளைத் தேடியும், திடீரென தான் தொடர்பில்லாத ஏதோ உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்து தான் நெருங்கி பழகிய சமையல் கார லட்சுமி அம்மாளிடம் கூடச் சொல்லாமல், தாத்தா வீட்டை விட்டு வெளியேறி தனது உலகத்தை நோக்கிப் பயணப்படும் இந்த சிறுகதை பல உள்ள உணர்வுகளை கொணர்வதாக அமைந்துள்ளது. இந்த அழகான கிராமத்தை மிகச் சிறப்பாக படம்பிடித்து காண்பித்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அன்பான பாராட்டுப் பூங்கொத்தை சமர்ப்பிக்கிறேன்!

லயன் கா. முத்துகிருஷ்ணன் மதுரை - 20

தரம்!

அ.மா.சாமியைப் பற்றிய கட்டுரை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய முதல் தரமான கட்டுரை. நன்றி! 50 புன்னகை பக்கங்கள் பொன்னகை பக்கங்கள். 50 புன்னகை தருணங்கள் சூப்பர்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் தித்தித்தது! இந்த தலைப்பில் எழுதச் சொல்லி வாசகர்களுக்குப் போட்டி வைக்கலாமோ? தூரிகை பக்கங்கள் ட்ரிபிள் சூப்பர்! நடிப்பில் மட்டும் மன்னரல்ல! ஓவியம் தீட்டுவதிலும் மன்னர் என்பதை சிவகுமார் நிரூபித்து விட்டார்! தீபாவளி சிறப்பிதழ் சூப்பர்! எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. எழுதிய எழுத்தாளர்களும் படைத்த படைப்பாளர்களும் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள்!

அ. முரளிதரன், மதுரை - 3

மணிமகுடம்

புன்னகை தருணங்கள் 50 - ல் மதியழகன் சுப்பையாவின் முதல் முழுக்கால் சட்டை மனதை நெகிழ வைத்தது. புன்னகையோடு கண்ணீரையும் துளிர்க்க வைத்த பதிவு அது. கிராம வங்கி ஊழியர்களுக்காக குரல் கொடுத்து தீர்வு கண்ட பாரதி கிருஷ்ணகுமார் மனநிறைவைத் தந்தார். ம.நவீன் பதிவில் மிகவும் நாசுக் காகச் சொல்லி இருந்தாலும், எழுத்தாளர் ஜெயமோகன் அவருக்குக் கற்பித்தது முரட்டுத்தனமான பாடமே...ஊக்குவிப்பதில் வல்லிக்கண்ணன், தி.க.சி போல வருமா என நினைக்க வைத்தது. ராஜா சந்திரசேகர், பாரததேவி, ஆகியோரின் பதிவுகள் மனதில் நிலைத்தன. ஏனைய பதிவுகள் எண்ணங்களைத் தொட்டன என்பதும் உண்மை. அடடா...ஆசிரியர் குழுவினை அருவிக் கரையில் சந்தித்ததும் இனிமையான தருணம். சிறப்பிதழ் தலைப்புகளில் மணிமகுடம் சூட்டிக்கொள்வது அந்திமழைக்கே உரியது!

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89