ஒரே சமயத்தில் பரிசுக்கதைகள் பதின்மூன்றையும் வெளியிட்டு சிறுகதை விரும்பிகளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். வழக்கமான தொடர்களும், பகுதிகளும் குறைந்த ஜனவரி 2023 அந்திமழை இதழ் சிறுகதை தொகுப்பு நூலாகவே சிறப்பாக அமைந்திருந்தது. அந்திமழை இளங்-கோவனின் ‘அ' விற்குப் பிறகு ஆறு ‘வ்‘ களுடன் கூடிய ‘வளவும் கதைகள்' தலைப்-பிலான சிறுகதை சிறப்பிதழின் முன்னுரை வாழ்க்கையில் நடக்கும் ஏதொன்றும் சிறுகதையாகிவிடும் வாய்ப்பினைக் கொண்டதாக உள்ள்து என்பதை உணர்த்தியதுடன், பல அரிய செய்திகளையும் முன்வைத்தது.
சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 சிறுகதைகளும் சூப்பர்! எதை பாராட்டுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. யானைமலை கதையைக் குறிப்பிட்டுச்சொல்லலாம். ஆங்கிலேயர் காலத்து மக்களின் வாழ்வை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது,
சிறுகதைப்போட்டியைப் பற்றி அந்திமழை இளங்கோவன் தெரிவித்த கருத்துகள்தான் என்னுடைய கருத்துகளும்,நன்றிகள். சினிமா விமர்சனங்கள் டபுள் சூப்பர்! கடைசிப் பக்கத்தில் வெளியான முதல் தரமான விமர்சனங்கள்!
அ.முரளிதரன்,
மதுரை
மாதம் ஒரு சிறுகதையை மட்டும் வெளியிட்டு என் போன்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்த அந்திமழை ஜனவரி 2023 இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி.
ஆமாம்... “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவும் கதைகள்' என்று பதின்மூன்று பரிசு பெற்ற சிறுகதைகளை வெளியிட்டு என்னைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. என்னைப் பொருத்த மட்டில் அண்டனூர் சுரா ஒருவர் மட்டுமே சிறுகதையாளர்களில் நண்பர். மற்றவர்கள் எனக்கு புதியவர்கள்.
அவர்களது சிறுகதையைப் படிக்கும் போது எதிர்காலத்தில் சிறந்து விளங்கிடும் வண்ணம் நிறைய எழுதுவார்கள் என்பதில் ஐயமில்லை.
அந்திமழை சிறுகதை எழுத்தாளர் களுக்காக தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. அந்திமழையில் இனி வருங்காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை வெளியிட்டு தேன்மழை பொழிய வைப்பீர்கள் என நம்புகிறோம்.
ஆட்டனத்தி,கோவை 641 007
ஜனவரி 2023 அந்திமழை மாத இதழில் வாசிப்பு திருவிழாவில் சிறுகதை சிறப்பிதழ் பரிசு பெறும் 13 சிறுகதைகளும் நல்ல முறையில் அமைந்துள்ளன. எங்களை எல்லாம் அந்திமழை மாத இதழை ரொம்ப ஆர்வமாக பார்க்க படிக்க வைத்துவிட்டீர்கள்!
கவிஞர்.கா. திருமாவளவன்
திருவெண்ணைநல்லூர்
இளங்கோவன் பழைய நினைவுகளை சிறப்பாக செய்திருக்கிறார், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு, தங்களையும் தங்களைச் சார்ந்த அந்திமழைக்கும் பாரட்டுகள். முதல் பரிசு பெற்ற நட்சத்திரம் பார்த்த சிறுவன் கதை சிறப்பாக உள்ளது, ரேணுகா கதையில் கல்வி கற்று கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது சிறப்பு. தற்போதைய நாட்டு நடப்பை எழுதியுள்ளார்கள். பரி நரியாகிய படலம் படலம் பஞ்சாயத்து என்ற பெயரில் நடந்த கதையோ? ஆனால் உண்மையே. இது கால காலமாக தாழ்த்தப்பட்டவர்கள்மேல் தொடுக்கும் கொடுமை,ஞானமுத்துவின் பாத்திரம் மனதில் நினைக்கும் படியாக இருக்கிறது. சுதந்திரம் பெற்றும் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் ககை இன்னும் பொய்யாகவே உள்ளது. இதற்கு முதல் பரிசு கொடுத்திருக்கலாம்
‘ஷைத்தான்' கதை முஸ்லிம் மக்களின் சட்டத்திற்கு விரோதமாக இருந்திருந்தாலும் ஒரு உயிருள்ள ஜீவன்பால் அன்பு காட்டுவது. கடைசி முடிவு சிறப்பாக உள்ளது. அரச தூது கதை நன்று.ஒரு மன்னன் கூட்டிவந்த இளவரசியின் மானத்தை காப்பாற்றியுள்ளது. அலுக்கை வாசனை தெரியாமல் அலுப்பு மருந்திற்கு பதில் சீயக்காய் பவுடரை தந்ததால் வந்த விளைவு. யானைமலை கதையும் மானத்திற்காக கழுத்தை அறுத்து இறந்தகாட்சி, மனதை உலுக்கியது. இதழ் சிறப்பு.
தோழர்.இரா.சண்முகவேல்
கீழக்கலங்கல்
அந்திமழை சிறுகதைச் சிறப்பிதழ் நூலகம் மூலமாக படித்தேன். அத்தனை கதைகளும் வெகு
சிறப்பாக இருந்தன. “விடியும் முன்' கதைக்கு முதல் பரிசு கொடுத்திருக்கலாம்.மேலும் “கொண்டு கூட்டு' கதை யாருமே செய்யாத புது தளத்தில் புதுமையாக நடை போட்டது. “துரோகம்' என்ற
சிறுகதை ஒரு பெண்ணை முன்னேற விடாமல் செய்ய ஆணாதிக்கம் மேற்கொள்ளும் ஈனத்தன்மையான செய்கையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. எல்லாக் கதாசிரியர்களும், கதையைத் தேர்ந்-தெடுத்தவர்களும் எனக்கு புதிதாகத் தோன்றினார்கள்.
டி.கே.கங்காராம், மதுரை
அந்திமழையில் வெளியாகும் சிறப்பிதழ் ஒவ்வொன்றிலும் அந்திமழை இளங்கோவன் எழுதும் முன்னோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறுகதை சிறப்பிதழான இவ்விதழிலும் அப்படியே!
சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஹெமிங்வே, மார்ஸ்லொ ரேனாமூர் மற்றும் கதைநேரமாக இயக்கி சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த பாலுமகேந்திரா இலக்கியச் சிந்தனை லட்சுமணன் போன்ற பெரும் கலைஞர்களை நினைவூட்டி அது சார்ந்து சில சுவையான குட்டிக்கதைகளையும் முகநூல் பதிவுகளையும் காட்சிப்படுத்தியிருந்த விதம் அருமை.
முதல் பரிசு கதையான ‘‘நட்சத்திரம் பார்த்த சிறுவன்‘‘ வித்தியாசமான கதை பின்னலில் களைகட்டுகிறது. எச்.ஐ.வி யால் பாதித்திடும் அன்பு எனும் மகனை ஏழைத்தாய் ‘‘கயல்‘‘ மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்வதுதான் கதை.வாசிப்பவர்களை தன் வசமிழக்கச் செய்து சோகம் கொள்ள வைத்துவிடுகிறது. எச்.ஐ.வி நோயாளிகளை ஒதுக்காதீர்கள் என்ற உயர்ந்த நோக்கத்தை உணர்த்திடும் உன்னத கதை என்பதில் மிகையில்லை!
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
சென்னையில் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகும் இவ்வேளையில் அந்திமழை சிறுகதைச் சிறப்பிதழ் வெளியீட்டு வாசிப்புத் திருவிழாவை பரிசு பெற்ற பதின்மூன்று சிறுகதைகளை வாசகர்களாகிய எங்களுக்கு வழங்கி மகிழ்ச்சித் தேரை ஓட வைத்துள்ளது!
வெ.லட்சுமி நாராயணன், வடலூர்
வழக்கம் போல் ‘திரை வலம்' பகுதியில் வலம் வந்தேன்! ‘டிஎஸ்பி' ‘மிடுக்' தடுக்கியதைத் தாண்டி,சிட்டாகப் பறந்தேன் ‘கட்டா குஸ்தி' க்குள் நுழைந்ததும் நீளம் புரிந்தேன்! இருந்தாலும் நெளிந்து விடாமல் ‘ஓகே' ஆனது கேக்கே சாப்பிட்ட மாதிரி இனித்தது! பாவம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' வடிவேலுக்கு ‘நொடி' விழுந்தது புரிந்தது ‘ரத்த சாட்சி' கண்டேன்! கேள்விக்குரிய அரசியல் என்ற ‘கேலி' யையும் தெரிந்து ‘விட்னஸ்' பார்த்தேன்! ‘கனெக்ட்' மீது கவனத்தை ‘கனெக்ட்' கொடுத்து அது ‘செலக்ட்' ஆகா நிலையில் என் புத்தி ‘லத்தி' க்குள் செல்ல ‘கோழி' குழம்பு தான் வறுவல் இல்லை என்பதைப் புன்முறுவலுடன் படித்து ‘விட்னஸ்' படத்துக்கான பூங்கொத்தை முகர்ந்தேன்!
மருதூர் மணிமாறன்,
இடையன்குடி
சிறுகதைக்கே... அதுவும் போட்டி ரிசல்ட் என 13 சிறுகதைகள் அதுவும் வென்றோர் படங்களுடன் அப்பப்பா! அசத்தலான சிறப்பிதழ் வெளியீட்டு இலக்கியத்திற்கு ஓர் இமயம் அந்திமழை என்று பதிவிட்டு விட்டீர்கள்!
என்.ஜே.ராமன்,
திசையன்விளை
வாசிப்பின் வளத்தை திருவிழாவாகவே மிளிர வைத்த சிறுகதை சிறப்பிதழ் அருமை. 13 சிறுகதைகளும் தரமான தேர்வு. தனித்துப் பாராட்டுவதைத் தவிர்க்கிறேன்.வளர்ச்சியையும், மலர்ச்சியையும் எதிர் நோக்கியுள்ள எழுத்தாளர்களுக்கு வரவேற்பும்...வாழ்த்துகளும்.
காதம்பரியின் திரை வலம் கண்டே படம் பார்ப்பது என்பதை சில காலமாகத் தொடர்கிறேன். சிறப்பான திரைப் பார்வை அவருடையது.
சிறப்பிதழ்களுக்கான முன்னுரையை சாரமாகத் தருவதில் நிறுவிய ஆசிரியர் தரும் விளக்கங்கள் தனித்துவமானவை. புதிய பல விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த முன்னுரைகளை எல்லாம் தொகுத்து தனி நூலாகத் தரலாமே. இது அந்திமழைக்கு ஒரு நீண்ட நாள் வாசகனின் வேண்டுகோள்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.
சென்னை -89
சிறுகதை சிறப்பிதழ் அற்புதம்! எல்லா கதைகளும் அருமை. கொண்டு கூட்டு கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
மரு.அகிலாண்ட பாரதி (வாட்ஸப் வழியாக)
பல நூற்றாண்டுகளைக் கடந்து மகாநதியாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது தமிழ் எழுத்து. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சமகால தமிழ் இலக்கியத்துக்கு
செழுமை சேர்க்க வந்திருக்கிறார்கள். பயணம் தொடரும்.
அந்திமழை இதழின் ஒவ்வொரு சிறப்பிதழும் பாராட்டுக்குரியதாக இருக்கும்.
இந்த முறை சிறுகதை சிறப்பிதழ். யாரப்பா... சிறுகதை எழுதுகிறார்கள் என்ற சந்தேகக் கேள்விக்கு விடையாக 13 நவயுக
சிறுகதைகளுடன் வெளிவந்திருக்கிறது அந்திமழை.
புதிய தலைமுறை கதையுலகை சுவாசிக்க விரும்புபவர்களுக்கு பொங்கல் பரிசாக வந்திருக்கிறது அந்திமழை சிறுகதை சிறப்பிதழ். ட்ராட்ஸ்கி மருது, மனோகர், ஜேகே, ஜீவா, பி ஆர் ராஜன், ரவி பேலட், வேல்முருகன், தமிழ் உள்ளிட்ட முன்னணி ஓவியர்கள் தங்கள் ஓவியக் கலையின் வழியாக
சிறுகதைகளுக்கு மேன்மை சேர்த்திருக்கிறார்கள்.
சுந்தரபுத்தன்,
முகநூல் பதிவில்