சிறப்புப்பக்கங்கள்

மீண்டு வந்தவர்கள்!

அரசியலில் சில கம் பேக் ஆளுமைகள்!

தமிழ்க்கனல்

10 முறை பாஸ்!

செங்கோட்டையன்

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் முதல் செட் ஆட்களில் ஈரோடு மாவட்டம் கோபி, குள்ளம்பாளையம் கிராமத்தின் செங்கோட்டையனும் ஒருவர். சத்திய மங்கலத்திலிருந்து 1977இல் சட்டப்பேரவை உறுப்பினராக ஆனவர், அடுத்து எட்டு முறை கோபி ச்செட்டிபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தாவது முறையாக இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ள செங்கோட்டையனுக்கு, அரசியலில் இது ஒரு பிரமாண்டமான மறுவருகை!

2011இல் ஜெயலலிதா ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சரானவர், பின்னர் தகவல் நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். அடுத்த ஆண்டே புகார் காரணமாக அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா இறக்கும்வரை அவருக்கு சரிவுதான். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு 2017இல் பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சராக ஆக்கப்பட்டார். ஆனாலும் ஒதுங்கிய நிலையிலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் விஜய் கட்சியில் சேர்ந்தபோது மிகுந்த ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது! ஆனால் தவெகவில் இப்போது மூத்த அமைச்சராகவும் சட்டப்பேரவை அவை முன்னவராகவும் நட்சத்திர இடத்தைப் பிடித்துள்ளார்.  இது உண்மையில் நம்பமுடியாத மறுவருகைதான்.

மீண்டும் வெளிச்சத்துக்கு!

ஜேசிடி பிரபாகர்

லயோலா கல்லூரியின் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜேசிடி பிரபாகரை, அ.தி.மு.க.வில் சேர்த்த எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவர் பதவியில் அமர்த்தினார்.

1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வாய்ப்பு வழங்கிய எம்ஜிஆர், பிரபாகரைப் பாராட்டியும் தனக்கு பெண் இருந்தால் பிரபாகருக்குதான் கட்டிக்கொடுப்பேன் என்றும் பேசியது, பிரச்சாரத்தில் தூக்கல். அதுவே அவரின் வெற்றியையும் உறுதிசெய்தது. ஆனால், அடுத்த தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் தலைவர் வி.பி.சிந்தனிடம் தோற்றுப்போனார். எம்ஜிஆர் மறைவை யடுத்து ஜானகி அணியில் சேர்ந்தார். 89ஆம் ஆண்டு தேர்தலில் அதே சிபிஎம் கட்சியின் இன்னொரு தலைவர் உ.ரா.வரதராசனிடமும் தோல்வியைக் கண்டார்.

மீண்டும் 2011இல் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்து, வில்லிவாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனைத் தோற்கடித்தார். கடந்த தேர்தலில் அதே அன்பழகனின் பேரனிடம் தோற்றுப்போனார். அதற்குமுன் 2016இல் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினிடமும் தோல்வியைத் தழுவினார்.

வெற்றி, தோல்வி என மாறிமாறி வந்தபோதும், பீனிக்ஸ் பறவையைப்போல 73 வயதிலும் த.வெ.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகி சட்டப்பேரவைத் தலைவராகவும் கம்பேக் கொடுத்துள்ளார், பிரபாகர்.  

கழகம் முதல் காங்கிரஸ் வரை

சு.திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆர். ஆட்சியின் துடிப்புமிக்க அமைச்சர்களில் ஒருவராக வலம்வந்த அறந்தாங்கி திருநாவுக்கரசு, அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் நின்றார்... இல்லையில்லை, ஜெயலலிதாவையே காத்துநின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அது ரொம்ப காலத்துக்கு நீடிக்கவில்லை. நெடுஞ்செழியன் முதலியவர்களுடன் நால்வர் அணியாக ஜெயலலிதாவுக்கு எதிராக இயங்கினார்.

1991-96 ஜெயலலிதா ஆட்சி கடுமையான எதிர்ப்பில் முடிவுற்றபோது, மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் அது சிறிது காலம்தான் நீடித்தது.  

ஏற்கெனவே நால்வர் அணியிலிருந்து பிரிந்து, அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, கலைத்தவர், மீண்டும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற இன்னொரு கட்சியைத் தொடங்கினார். அதையும் பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டார். ஆனால், 1999இல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனார். வாஜ்பாய் அமைச்சரவையில் 2004ஆம் ஆண்டுவரை மத்திய இணை அமைச்சராகப் பதவிவகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் எண்ணியல்படி தன் பெயரை மாற்றி திருநாவுக்கரசர் ஆனார்.

பின்னர், ஜெயலலிதா மீண்டும் பா.ஜ.க.வுடன் சேர்ந்தபோது திருநாவுக்கரசருக்கு தேர்தல் வாய்ப்பு தரவிடாமல் பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்தார். அவரை மத்தியபிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்கியது, பா.ஜ.க. தலைமை.

பிறகு, 2009இல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியவர், அங்கு 2016இல் மாநிலத் தலைவராகவும் ஆனார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அளவில் தலைவர்களில் ஒருவராக மீண்டும் வலம்வநது கம் பேக் கொடுத்தார். 2019இல் திருச்சி தொகுதியில் எம்.பி.யாகவும் ஆனார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தன் மகன் ராமச்சந்திரனை அரசியலில் நுழைத்துவிட்டவர் இப்போது அமைதியாக இருந்தாலும் அடுத்த கம்பேக்கை எப்போதும் நிகழ்த்தக்கூடும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram