இசைஞானி இளையராஜா 
சிறப்புப்பக்கங்கள்

தமிழ்த் திரையிசை 25 ஆண்டுகள்

கால்நூற்றாண்டு தமிழகம் - சினிமா

இரா.பிரபாகர்

ஏ. ஆர்.ரஹ்மான் காலத்தில் வாழ்வது ஒரு ஆசிர்வாதம் என்று சமீபத்தில் என் மகள் சொன்னபோது நான் திடுக்கிடவில்லை. ஏனென்றால் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் இதே வாக்கியத்தை நானும் சொன்னவன்தானே. ஒரே வேறுபாடு. ஏ.ஆர்.ரஹ்மான் பெயருக்குப் பதிலாக அன்று இளையராஜா என்று இருந்தது.

கல்லூரியில் பயிலும் என் மகளின் இசை கேட்புப் பட்டியலில் இளையராஜாவின் ஒரு பாடல்கூட இல்லை. அதே போல் என் வயதொத்த ‘பெரும்பான்மையோர்’ இசைப்பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்க மாட்டார். இங்கு ரஹ்மானா? ராஜாவா? என்பதல்ல பிரச்னை. திரையிசை, இசை ரசிகர்களிடம் என்னவிதமான உறவைக் கொண்டிருக்கிறது. திரையிசை அதன் தரத்தின் அடிப்படையில் வரவேற்பைப் பெறுகிறதா? இசையல்லாத காரணிகளால் அது தீர்மானிக்கப் படுகிறதா?

வெகுசன இசை (நம்மூரில் திரையிசைப் பாடல்கள்) என்பது ஒரு செய்தித்தாளின் அன்றாடத் தன்மையோடு இயங்குவது என்று ஒரு மேற்கத்திய ஆய்வாளர் சொல்கிறார். அவர் மேற்கத்திய ராக், பாப் வகையான இசைவகைகளை உத்தேசித்துச் சொன்னாலும், நவீன ஊடக உலகத்தில் அது உலக முழுவதுமான வெகுசன இசை வகைகளுக்கும் பொருந்தக் கூடியதே.

கடந்த 100 ஆண்டுகளாக இந்தியர்கள் / தமிழர்கள் தனிப்பட்ட இசை ரசனையைப் பேணக்கூடிய வாய்ப்பற்றவர்களாக இருந்தார்கள். அதாவது பஞ்சாயத்து அலுவலக கூம்பு ஒலிபெருக்கியில் அரசு அனுமதிக்கிற நேரங்களில் மட்டுமே இசை கேட்க சபிக்கப்பட்டவர்கள். மிகநீண்ட காலம் கழித்தே அகில இந்திய வானொலி திரையிசையை ஒலிபரப்பத் தொடங்கியது. அதற்கடுத்ததாக கோயில் திருவிழாக்காலங்களில் ஊர் அதிர திரைப்பாடல்களைக் கேட்க வாய்த்தது. 1980களுக்குப் பின்னரே சோனி நிறுவனம் ‘வாக் மேன்’ எனும் ‘தனிநபர் இசைகேட்கும்’ அபூர்வ சாதனத்தை அறிமுகம் செய்தது. அப்போது கேசட் பிளேயர்களும் அறிமுகமாகத் தொடங்கியிருந்தன. இப்போது யாரோ ஒலிபரப்பும் பாடலை அல்லாமல் தனக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கத் தொடங்கும் ரசிகன் உருவாகிறான். கிராமபோன் தட்டுகளிலிருந்து காசட் ஒலிச் சுருள்களுக்குள் சவாரி செய்யும் வாய்ப்பு தமிழ்த் திரையிசையில் ராஜாவுக்குத்தான் வாய்த்தது. 80களின் இசையுலகின் ராஜாவாக இளையராஜா மாறியபோதுதான் காசட்களில் அவரவர்க்கான பாடல்களை பட்டியல்போட்டுப் பதிவுசெய்து தங்களுக்கான அந்தரங்க இசை உலகத்தை ரசிகர்கள் உருவாக்கத் தொடங்கினர். காலைப் பாடல்கள், காதல் பாடல்கள், இரவின் மடியில், அம்மா பாடல்கள், குத்துப்பாடல்கள் என பல்வேறு பட்டியல்கள் உருவாகத் தொடங்கின. 80கள், 90களில் படைப்பாற்றலின் உச்சத்திலிருந்த இளையராஜா தன் இடைவிடாத இசை மழையால் தமிழர்களை அக்கம்பக்கம் திரும்பாமல் தடுத்தாட்கொண்டிருந்தார்.

புத்தாயிரம் பிறப்பதற்கு முன்னரே 90களின் இறுதியில் தமிழ்த்திரையிசையின் தொடர் ஓட்டத்தின் ஒரு தருணத்தில் ராஜா, ரஹ்மான் எனும் இளம் ஓட்டக்காரனிடம் தனது சாம்ராஜ்யத்தைக் கையளித்தார். இல்லை அவரொன்றும் கையளிக்கவில்லை ரஹ்மான் பிடுங்கிக் கொண்டார் என்போரும் உண்டு. கலையுலகில் குறிப்பாக திரைப்படம் போன்ற நவீன ஊடகக் கலையில் எவரொருவரும் நிலைத்திருக்க முடியாது. காரணம் இந்திய / தமிழ்த் திரையிசை என்பது ஒரு சுயம்பான கலை வடிவமல்ல.

அது செவ்வியல், நாட்டுப்புற இசை ராகங்களை எளிமைப்படுத்தி மேற்கத்திய இசைச் சோடனையோடு (arrangement) கலந்து உருவானது. நாடகப் பாடல்களோடு வெகுசீக்கிரமே ஹார்மோனியம், அக்கார்டின், பியானோ, வயலின், கிளார்னட், டிரம்ஸ் போன்ற மேற்கத்திய கருவிகளைச் சாமர்த்தியமாக சுவீகரித்துக்கொண்டுதான் திரையிசை தன் பயணத்தைத் தொடங்கியது. ஆகவே பாப், ராக் போன்ற மேற்கத்திய வெகுசன (popular music) இசையுலகில் ஏற்படும் புதுமைகள் மாற்றங்களை உள்வாங்கியபடியே அது வளர்ந்திருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் உலக மயச் சூழலும் 90களுக்குப் பின் உலக இசை வகைமைகளைக் கூடுதலாக அறிந்துகொள்ளும் சூழலை உருவாக்கின. லத்தீன் அமெரிக்கா, ஜமைக்கா, ஆசிய நாட்டுப்புற இசை வகைகள் மேற்கத்திய இசை வகைகளோடு இணைந்து புதிய ‘உலக இசை’(world music) எனும் புதிய வகைமை பரவலாகியது. Ethno fusion, Ethno tecno, Reggee, Celtic, sufi போன்ற பல்வேறு வகைமைகளோடு பரிச்சயம் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் புத்தாயிரத்தைப் பிரநிநிதித்துவப் படுத்துபவரானார். இங்கே யாரும் யாருக்கும் எதையும் வழங்கிவிடவோ, பிடுங்கி விடவோ இல்லை. அதுபோல் யாரும் யாரையும் உருவாக்கிவிடவும் இல்லை. காலத்தின் தேவையை நிறைவு செய்ய இப்படித்தான் கலைஞர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பீத்தோவனும், பிகாசோவும், ராஜாவும், ரஹ்மானும் இப்படித்தான் காலத்தால் முன் மொழியப்படுகிறார்கள்.

ஆக கடந்த 25 ஆண்டுகால தமிழ்த்திரையிசையைப் பேச முற்படும்போது அதன் பெரு வெடிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானே இருக்கிறார். கணினிமயப்பட்ட ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம், பல்வழித்தட ஒலிப்பதிவு (multi track) வசதி, ஏற்கனவே குறிப்பிட்ட உலக இசையின் தாக்கம் ரஹ்மானை 21ஆம் நூற்றாண்டுக் கலைஞராக அறிமுகப்படுத்தியது.

திரை இசை எனபது வணிக நிர்பந்தங்களோடு இயங்குவது என்பதால் இசைப் பேழைகளின் விற்பனை பெரும் நட்சத்திர நடிகர்களோடு பணிபுரியும் வாய்ப்பு ஆகியனவே ஒருவரின் இடத்தைத் தீர்மானிக்கிறது என்ற நடைமுறை உண்மையையும் நாம் கணக்கில் கொண்டால், இளையராஜாவின் உச்சபட்ச படைப்பூக்கம் 90களின் இறுதியில் தேய்வடையத் தொடங்கியது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். (விடுதலை-2 இல் வரும் ‘தெனம் தெனமும்’ பாடலின் மெட்டும் தாளக்கோர்வையும் எத்தனை எளிமையானவை. பாடலின் இடைஇசைகளில் வெளிப்படும் ராஜாவின் வர்ணஜாலங்கள் எங்கே?)

தமிழ்த் திரையுலகின் தொடக்க காலம் தொட்டு, கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் தரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். ஆனால் தமிழ்த் திரையிசையைப் பொறுத்தளவில் பெருங்கலைஞர்களும் மேதைகளும் தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரை அந்த மரபு தொடர்ந்திருக்கிறது. இதில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரை மேதைகள் என்று தயக்கமில்லாமல் அழைக்கலாம். அதிர்ஷ்டவசமாக புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலேயே ரஹ்மானும் தன்னை ஒரு மேதையென நிரூபித்தார். 1992இல் ரோஜாவைத் தொடர்ந்து கிழக்குச் சீமையிலே, திருடா திருடா, டூயட், பம்பாய், ரங்கீலா, மின்சாரக்கனவு, இருவர் என அடுத்த பத்தாண்டுகளுக்குள் வெளிவந்த படங்கள் ரஹ்மானின் மேதமையை வெளிச்சமிட்டன.

ராஜா உச்சத்திலிருந்த 80களின் பிற்பகுதியில் இசையமைப்பாளராக அறிமுகமான வித்யாசாகரும் தேவாவும் சில அபூர்வமான பாடல்களையும் பல சுமாரான பாடல்களையும் கொடுத்தவர்கள். தேவா 90களில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவராக இருந்தார். வணிக ரீதியான வெற்றிப்பாடல்களை வழங்குபவராகவும் இருந்தார். ஆனாலும் ரஹ்மானின் வருகை 80களின் இசையமைப்பாளர்களின் இசையை காலாவதியாக்கியது.

ஆக, கடந்த 25 ஆண்டுகளின் தமிழ்த்திரையிசையை ஏ.ஆர்.ரஹ்மான் முதல் அனிருத் வரையிலானதாக வரையறுத்துக்கொண்டால் தமிழ்த் திரையிசை வரலாற்றில் இன்றைக்கு நிலவும் இத்தகைய வறட்சி எப்போதும் நிலவியதில்லை என்றே சொல்லவேண்டும்.

30ஆண்டுகளாகச் செயலில் இருக்கும் ரஹ்மான் தமிழ்த்திரையுலகில் மட்டுமல்லாமல், பிற இந்திய மொழிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் பங்களித்து வருபவர். கூடுதலாக பிரமாண்டமான இசைக் கச்சேரிகளை உலகம் முழுமையும் நடத்துவது உட்பட்ட அவரின் பல்வேறு பணிகளால் கடந்த பத்தாண்டுகளில், அவரால் முழுமையான இசையமைப்பாளராக இயங்க அனுமதிக்கவில்லை என்பதை அவருடைய சமீபத்திய பாடல்கள் உணர்த்துகின்றன. மேலும் திரையிசைப் பாணியை தொடர்ந்து மாற்ற முனையும் அவரின் பரிசோதனைகள் வணிகரீதியாக வெகுமக்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் அவருடைய படங்களில் ஒருசில பாடல்களில் அவரின் மேதமை வெளிப்பட்டுவிடுவதைக் கவனிக்க முடியும்.

திரையிசையின் விசேடம் என்னவெனில், வணிகரீதியாக வெகுசனங்களின் ரசனையைக் கவர்ந்துவிடும் அதே நேரத்தில் இசை நுணுக்கங்கள் தெரிந்தவர்களும் வியக்கத்தக்க கூறுகள் கொண்டதாகவும் அவை அமைந்திருக்கும். கே.வி.எம்., எம்.எஸ்.வி., ராஜா, ரஹ்மான் போன்ற மேதைகளின் பாடல்களின் இத்தகைய அபூர்வ இணைவு பெரும்பாலான பாடல்களில் நடந்தேறிவிடும். அத்தகைய இணைவுகளை இன்றைய இசையமைப்பாளர்களிடம் அபூர்வமாகக்கூடக் காணமுடிவதில்லை.

ரஹ்மான் தமிழ் திரையுலகிற்கு அவரறியாமல் செய்த துரோகம் ஒன்று உண்டு. அதாவது ரஹ்மானின் இமாலய வெற்றியை அவர்களுக்கேயுரிய பாணியில் அன்றைய இயக்குநர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் ரஹ்மானைப் போலவே பள்ளிப்படிப்பு தாண்டாத, பாதியில் இடை நின்ற (டிராப் அவுட் ஆன), மீசை முளைக்காத பதின் பிராயத்தினரைத் தேடத் தொடங்கினர். அப்படி இசையமைப்பாளராக ஆக்கப்பட்டவர்கள்தான் நம் யுவன், ஜி.வி., இ்மான், ஜிப்ரான் போன்றோர்.

1996ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் அறிமுகமாகி 100படங்களைக் கடந்தவர் யுவன் சங்கர் ராஜா. போகிறபோக்கில் உருவான மெட்டுகளாகத் தோன்றும் யுவனின் பாடல்களில் ஒரு விட்டேத்தித் தன்மை காணப்படும். தந்தையிடமிருந்து பெயரைத் தவிர இசையில் அவர் எதையும் பெற்றுக் கொண்டாரில்லை.

இனி வரும் பெரும்பாலானவர்கள் இசையமைப்பாளராவதற்கு முன் பிற இசையமைப்பாளர்களுக்கு இசைக்கோர்ப்புப் பணியில் உதவியாளராக இருந்தவர்கள். arranger or music producer என்று இவர்களை அழைக்கிறார்கள். இசையமைப்பாளரின் விருப்பத்திற்கேற்ப ஒரு மெட்டுக்கு சட்டைபோட்டு, பொட்டு வைத்து, பூ வைப்பவர்கள். அப்படி தன் திரையிசை வாழ்க்கையை ரஹ்மானிடம் தொடங்கிய ஹாரிஸ் 2001இல் அறிமுகமாகிறார். அறிமுகப் படம் எப்போதும் ஒரு இசையமைப்பாளனுக்கு முக்கியமானதாகிறது. மிகக்குறைவான மெட்டுக்களை உருவாக்கக் கூடியவரான ஹாரிஸின் பாடல்களை அவருடைய பாடல்களையே முன்பின் தழுவிக்கிடக்கும். ஒலிப்பதிவுத் தரமிக்க, எளிமையான, மென்ரசனையாளர்களை ஈர்க்கக்கூடியதாகத் தன் பாடல்களை அமைத்துக்கொண்டு சமாளித்துத் தாக்குப்பிடித்து வருபவர்.

2001 இல் நுழைந்த டி. இ்மான் கிராமியம் கலந்த மெட்டுக்களால் ஒரு சுற்று சுற்றி ஓய்ந்திருக்கிறார்.

2006 இல் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் 100 படங்களை எட்டியிருக்கிறார். சில அருமையான மெட்டுக்களுக்குச் சொந்தக் காரர்.

2011 இல் நுழைந்த அனிருத் இன்று இந்தியாவில் அதிகம் ஊதியம் பெறும் இசையமைப்பாளராகி யிருக்கிறார். இயற்பியலாளர்கள் இன்று கருந்துளை ரசசியத்தைக் கூட விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அனிருத் எப்படி இசையுலகில் இந்த உயரத்தை அடைந்தார். அவர் பாடல்களில் மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பது யாரும் விளக்கமுடியாத புதிர். அதற்குப்பின் வந்த ஜிப்ரான் (2011), சந்தோஷ்நாராயணன்(2012), ஷான் ரோல்டன்(2014), ஜஸ்டின் பிரபாகரன் (2014) இவர்கள் அனைவருமே அவ்வப்போது சில நல்ல மெட்டுக்களையும் பல சுமாரான, படு சுமாரான பாடல்களையும் தயக்கமின்றி வழங்கி வருபவர்கள். இவர்களில் சந்தோஷ் நாராயணன் அருமையான பல்லவிகளை ஆரம்பித்து அதை வளர்த்தெடுக்கமுடியாமல் தவிப்பவர். தமிழ் சினிமாவின் இன்னொரு ஆச்சரியக் குறி ஹிப் ஹாப் தமிழா.

கடந்த இரு பத்தாண்டுகளில் ரஹ்மானின் பாடல்களுக்காக மட்டுமே காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவரும் நம் பிரதமர் மோடி அவர்களைப் போல் நாடுகள் சுற்றி ஓய்ந்த நேரத்தில் வெளியாகும் பாடல்களில் ஒன்றிரண்டே தேறும். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இனி இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை இனி பேசிப் பார்க்கலாம்.

முதல்காரணம் இயக்குநர்கள். 90களுக்கு முந்தைய இசை உருவாக்கம் என்பது இசையமைப்பாளரும் இயக்குநரும் அமர்ந்து உருவாக்குவது. எந்த சோடனையும் இல்லாத இசையமைப்பாளரின் குரலில் ‘தத்தகாரமாக’ வெளிப்படும் பல்லவியை இயக்குநர் எடைபோடவேண்டும். அந்த பல்லவி எனும் விதைக்குள் மறைந்திருக்கும் விருட்சத்தை கற்பனை செய்கிறவராக அவர் இருக்கவேண்டும். அது ஆலமரமா, அரசமரமா, இல்லை, முள்செடியா என்பதை ஊகிக்கக் கூடியவராக இருந்திருக்கிறார்கள் அன்றைய இயக்குநர்கள். எந்த ஒரு சிறந்த பாடலின் முதல் நான்கு வரிகள் சொல்லிவிடும் அதன் தலையெழுத்தை. இளையராஜா வரைக்குமே தொடர்ந்து வெவ்வேறு மெட்டுக்களை சிரமமின்றி கொட்டுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள் அன்றைய இசையமைப்பாளர்கள்.

இன்று ஒரு சுமாரான மெட்டுக்கு பல்வேறு சோடனைகளைச் செய்து ஒலிப்பதிவுக் கூடத்தில் உரக்க ஒலிக்கச் செய்வதால் அதைப்பற்றிய சரியான முடிவுக்கு இயக்குநர்களால் வர இயலுவதில்லை. முக்கியமாக தற்போதைய இயக்குநர்களுக்கு ஒரு மெட்டு எப்படியிருக்கவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவில்லை. மேலும் தற்போதைய இயக்குநர்கள், இசையமைப்பாளர் தங்கள் கைக்குள் அடங்கியவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உண்மையிலேயே இசை ஞானமும் அனுபவமுள்ளவர்களோடு பணிபுரியத் தயங்குகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஜேம்ஸ் வசந்தன், ரமேஷ் விநாயகம் போன்ற திறமைசாலிகள் சிலர் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் 90களுக்குப்பின் பாடல்களின் உரிமை மூலம் கிடைத்த வருமானம் இல்லாமலாகியிருக்கிறது. ஆகவே இசைக்காக பெரும் மெனக்கிடல்களைச் செய்ய விரும்புவதில்லை. ஆகவே யூ டியூப் காணொலி களில் திடீர் வரவேற்பைப் பெறும் ஒரு பாடலை உருவாக்கியவரை இசையமைப்பாளராக்கிப் பார்க்கும் அபத்தமான போக்கு உருவாகியுள்ளது. பாடல்களை உருவாக்கும் திறனும் காட்சிகளை இசையால் அடிக்கோடிடும் பின்னணி இசைக்கோர்ப்பும் ஒருபடித்தானவையல்ல. மேற்கத்திய வெகுசன இசையுலகில், தனிப்பட்ட பாடல்களை உருவாக்குபவர்களும் திரையிசையமைப்பாளர்களும் முற்றிலும் வேறானவர்கள். அந்த வேறுபாடும் இங்கு புரிந்து கொள்ளப்படவில்லை. மிகமுக்கியமாக யுவன், ஜி.வி., சந்தோஷ் போன்றோர் அவர்களின் படைப்பாற்றலின் தன்மைக்குக் கூடுதலாக படங்களை ஒத்துக்கொள்கிறார்கள். ஆண்டுக்கு 35 படங்கள் இசையமைத்த இளையராஜாகூட ஒரு தவறான முன்னுதாரணமே. இடைவிடாத உழைப்பு படைப்புக் கலைக்கு உவப்பானதல்ல.

இன்று கணினிமயப்பட்ட இசையுலகில் கடந்த 20 ஆண்டுகளில் உருவாகியுள்ள சாத்தியங்கள் இசைஉருவாக்கத்தை தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்றியிருக்கிறது. முன் தயாரிக்கப்பட்ட தாளக்கோர்வைகள், இசைக் கருவித் துணுக்குகளை உள்ளடக்கிய மென்பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. தாளமும் சுருதியும் கைகூடாத குளியலறைப் பாடகர்கள்கூட பாடிவிடக்கூடிய மென்பொருட்கள் வந்துவிட்டன. ஒரு பல்லவி இரண்டு சரணங்கள் என நீளும் பாடல்களை இசைக் கருவிகளுடன் ஒரே மூச்சில் பாடவேண்டிய நிர்பந்தம் ஏதும் இன்று இல்லை. சில பல இசையமைப்பாளர்களும் நடிகர்களும்கூட இப்படித்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது வயதானவர்களின் புலம்பல். மக்களுக்குத் தெரியும் எதை ரசிப்பது, எதை விடுப்பது என்று என யோசிக்கலாம். இன்றைய இணைய யுகத்தில் ராஜாவின் அற்புதமான பாடல்களை விட ‘ரவுடி பேபி’ பல கோடி பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. இன்று பாடல்கள் கேட்கப் படுவதில்லை. பார்க்கப்படுகின்றன. அவரவர் தொலைபேசிகளில் ரவுடி பேபியையும் அரபிக்குத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். முன்பு வானொலிகள் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பினார்கள். இப்போது ஒவ்வொருவனும் பாடலை விநியோகிக்கிறவனாக இருக்கிறான். தன்னுடைய மொன்னையான ரசனையை தன் சகாக்களுக்கும் அவர்தம் சகாக்களுக்கும் பரப்புகிறான். இப்போதைய பாடல்கள் 50 நாள்களை கடப்பது அபூர்வமாக இருக்கிறது. ஒப்பீட்டு அளவில் இந்தித் திரையிசை உயிர்ப்பான மெட்டுக்களோடு பயணத்தைத் தொடர்கிறது. மலையாளத் திரையிசையிலும்கூட வரவேற்கத்தக்க முயற்சிகள் உண்டு. தமிழ்த் திரையிசை இன்னொரு ராஜாவுக்காகவும், ரஹ்மானுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவுத்துறை பாரதூரமான மாற்றங்களை இசைத்துறையில் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் மரபான பொருளில் இசையமைப்பாளன் என்றொருவன் இருப்பான் என்று சொல்வதற்கில்லை என்கிறார்கள் மெத்தப் படித்தவர்கள்.

(இரா.பிரபாகர் எழுதும் திசையாற்றுப்படை அடுத்த இதழில்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram