சிறப்புப்பக்கங்கள்

36 வயதினிலே; மாடித்தோட்ட நாயகி

வானவன்

கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த ஜோதிகா சிறிய இடைவெளிக்கு பின் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தபோது அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘36 வயதினிலே'.

தொலைக்காட்சித் தொடர், சக ஊழியரோடு மல்லுக் கட்டுதல், பேருந்து பயணம், உடலாலும் மனதாலும் அயர்ச்சியுறும் 36வயது குடும்ப பெண், பதின்ம வயது பெண்குழந்தைக்கு தாய், நாட்டின் மூத்த குடிமகனை சந்திக்கும் வாய்ப்பின்போது மயங்கி விழும் எதார்த்த பெண் என அழகாகப் பொருந்திப் போகிறார் ஜோதிகா.

 மகளும் கணவனும் தன்னை அலட்சியப்படுத்தும் போது வெகுண்டெழுந்து, தனக்கான தனித்துவத்தை நிலைநாட்ட, மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து விஷமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்துஅதை பரவலாக்கி, நாடுமுழுவதும் அது குறித்து பேச வைத்து, இரண்டாயிரம்பேருக்கான திருமண விருந்துக் காக, நஞ்சில்லா காய்கறிகளை மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்யுமளவுக்கு அவரின் செயல்பாடுகள் அமைவதாக கதை நகர்த்தப்பட்டிருக்கும்.

 இன்றைய மக்களின் மரபு நோக்கிய பயணத்திற்கான காரணங்களையும், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.

 பெரிய விருந்துக்கு தேவையான காய்கறிகளை மாடிதோட்டத்தில் விளைய வைக்க முடியுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

முடியும் என நிருபிக்கும் வகையில், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் பல ஆயிரம் வீடுகளுக்கு மேல் மாடிதோட்டம் உருவாகியிருக்கிறது. மூலிகைகள், நஞ்சில்லாத கீரைகள், காய்கறிகள் பழமரங்கள், மலர்ச் செடிகள் என மாடித்தோட்டம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. நம்பமுடியாதபடி பல அரியவகை தாவரங்களை இப்போது மாடித்தோட்டத்தில் வளர்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஐநூறுக்கு மேற்பட்ட நம் மரபு காய்கறி விதைகள் தேடி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மாடித்தோட்டத்துக்கான உரங்கள் நம்வீட்டின் மட்கும் குப்பையிலிருந்தே தயாரிக்கப்படுவதால், மாடித்தோட்டங்கள் அதிகரிக்கும்போது நகரைச் சுற்றியிருக்கும் குப்பை மேடுகளுக்கு செல்லும் குப்பையின் அளவு குறைக்கப்பட்டு அதனால் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மனதில் வன்மத்தை விதைக்கும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து பலர் வெளியில் வர மாடித்தோட்டம் பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் மாதவரம் பகுதியில் கடந்த மாட்டுப்பொங்கலன்று மூலிகையறிதல் என்ற

நிகழ்ச்சிக் காக மூலிகைகள் தேடியபோது அரைகிலோ மீட்டர் தூரத்தில் தானாக வளர்ந்த எழுபது மூலிகைகளை அடையாளம்காண முடிந்தது. இவ்வளவு மூலிகைகள் இப்போது கிராமங்களில் இல்லை. காரணம் கடந்த பல ஆண்டுகளுக்குமேலாக நாம் பயன்படுத்திய களைக்கொல்லி.

சரி இருக்கட்டும். மாடித்தோட்டங்களைப் பிரபலமாக்கியதில் இந்த படத்தின் பாத்திரத்துத்துக்கும் ஒரு பங்கு உண்டு என்றே சொல்லலாம்.

மார்ச், 2023