டேராடூனில் ஓர் அதிகாலை நேரம். டெல்லியில் இருக்கும் தொழிலதிபர் ஒருவர், பதற்றத்துடன் அழைத்தார்.
‘என் வீட்டில் 15 லட்ச ரூபாய் காணவில்லை! எப்படியாவது கண்டு பிடித்துக் கொடுங்கள்' அவர் குரலில் இருந்த பதற்றம் அந்த அதிகாலை நேரத் தூக்கத்தை சிதற அடித்தது.
‘யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?'
‘ இருபது ஆண்டுகளாக எங்கள் வீட்டில் இருக்கிறான் லால் சிங்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வேலைக்காரன். அவனை இரண்டு நாளாகக் காணவில்லை. இவ்வளவு நாளும் அவன் ஒரு பைசா எடுத்தது இல்லை. அவனை நம்பி வீட்டை மாதக்கணக்கில் விட்டுப்போயிருக்கிறோம். எந்த சிக்கலும் வந்ததே இல்லை. அவனைப் போய் சந்தேகிப்பதா என்று எங்களுக்கே தயக்கமாக இருக்கிறது. ஆனால் அவன் காணாமல் போயிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை!'
‘அவன் முகவரி இருக்கிறதா?' என்று கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். டெல்லியில் அவரது வீடு இருக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினேன். நான் பணிபுரியும் உத்தரகாண்ட் மாநிலத்தில் மலை உச்சியிலுள்ள கிராமத்தில் உள்ள முகவரி அது.
பணத்தை திருடியவர்கள் சொந்த ஊருக்கு வந்திருக்கும் வாய்ப்பு இல்லை. அப்படியே நேபாளத்துக்கு ஓடி இருப்பார்கள். இவன் திருடி இருக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஊரில் இருக்கப்போவது இல்லை. இருப்பினும் காவலர்களை அனுப்பிப்பார்ப்போம் எனத் தீர்மானித்தேன். சாதாரண உடையில் ஒரு குழுவினர் அங்கே
சென்றனர். கிடைத்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. லால் சிங் கிராமத்தில்தான் இருக்கிறான். அவனுக்கு இரண்டு மகள்கள்; வயதான தாய் தந்தையர் எல்லாம் இருக்கிறார்கள் என்று கூறினர்.
எனக்குக் குழப்பம் ஆகிவிட்டது. இவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டுவிட்டால் ஊரில் தன் மானத்துக்கு பங்கம் ஏற்பட்டதே என அவன் ஏதாவது செய்துகொண்டுவிட்டால் என்ன செய்வது? எனவே ஆளைப் பிடித்து மரியாதையாகவே பேசி விசாரித்துப் பார்க்குமாறு தெரிவித்தேன்.
எந்த பலப்பிரயோகமும் தேவை இருக்கவில்லை. போலீசாரின் முதல் கேள்வியிலேயே அவன் திருட்டை ஒப்புக்கொண்டு, எந்த பையுடன் பணத்தை எடுத்துச் சென்றானோ அதே பையுடன் 13 லட்சம் பணத்தை ஒப்படைத்துவிட்டான்.
மீதி இரண்டு லட்சம்? விசுவாசமான வேலைக்காரன் திருடனாக மாறியது எப்படி?
லால் சிங்குக்கு உதவியாக இன்னொருவன் சில மாதங்களுக்கு முன்னால் வேலைக்குச் சேர்ந் திருக்கிறான். அவனுடன் சேர்ந்து பழகும்போது, இந்த குற்றத்தைச் செய்யுமாறு அவனே தூண்டி இருக்கிறான். பணம் இருக்கும் இடமெல்லாம் லால் சிங்குக்குத் தெரியும். ஆயினும் தொடக்கத்தில் திருட்டுக்குச் சம்மதிக்காதவன், ஏதோ ஒரு பலவீனமான கணத்தில் பணத்தை எடுத்துவிட்டான். இரண்டு லட்சத்தை மட்டும் புதிய ஆள் எடுத்துக்கொண்டு நேபாளத்துக்கு ஓடிவிட, இவன் மட்டும் பேருந்து ஏறி சொந்த ஊருக்கு வந்துவிட்டான்! வந்த நாளில் இருந்து குற்ற உணர்ச்சி உறுத்த, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கையில் பிடிபட்டிருக்கிறான்.
நண்பருக்கு போன் செய்து பணம் கிடைத்த விவரம் சொன்னதும் அவர் அத்துடன் திருப்தி அடைந்தார். ‘அவன் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம்!' என கேட்டுக்கொண்டார் பெருந்தன்மையாக. புகாரை திரும்பப் பெற்றார்.
வாழ்வில் ஒரே ஒருமுறை ஏதோ பலவீனத்தில் திருட்டில் இறங்கியவனை சிறையில் தள்ளி தண்டித்து அவமானத்துக்கு உள்ளாக்கினால் அவன் மேலும் பெரிய குற்றவாளி ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது. எனவே அவனை அவன் குடும்ப நிலையை எண்ணி, அப்படியே விட்டு விட்டோம்!
(வி.முருகேசன் ஐபிஎஸ், உத்தராகாண்ட் மாநில சட்டம் ஒழுங்கு காவல்துறை துணைத்தலைவர்)
மே, 2023 அந்திமழை இதழ்