2018 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி.
கலைஞர் கருணாநிதி மறைந்த தினம்.
திராவிட உணர்வாளர்களாக இருந்த பலர் தங்களுடைய மனதில் ஒரு வெற்றிடத்தை தற்காலிகமாக உணர்ந்த தருணமும் அதுதான்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் இயக்கம் செயலலிழந்து அவருடைய உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்த அடர்த்தியான ஜனத்திரளில் நானும் ஒருவனாக இருந்தேன்.
திமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது ராஜாஜி ஹால். சிலர் கடுமையான அளவில் காவல்துறையின் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருந்தது. சிலர், நெரிசலில் சிக்கி மயக்கமாகி விழுந்ததை நேரடியாகக் காண முடிந்தது. அப்படி ஒரு பெண் இறந்ததை நேரடியாக ஒலிபரப்பியது ஒரு தொலைக்காட்சி. சென்னையில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்திருந்தார்கள்.
தேசிய அளவிலும் பல மாநிலங்களிலிருந்தும் அநேக தலைவர்கள் கலைஞருக்காக அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். மெரினா கடற்கரையில், கலைஞரின் உடலை அடக்கம் செய்வதற்கு திமுக தலைமை படாதபாடு பட வேண்டியிருந்தது. ஒரு வழியாக நீதிமன்றம் வரை சென்று வாதாடி மெரினாவில் அடக்கம் செய்வதற்கான தீர்ப்புச் செய்தி வெளிவந்தபோது, கண்கலங்கி அழுத முகத்தோடு ஸ்டாலினைப் பார்க்க முடிந்தது.
திருக்குவளையிலிருந்து திருவாரூக்கு இடம்பெயர்ந்து திருவாரூர் பள்ளியில் அடம்பிடித்து சேர்ந்ததில் துவங்கி அரசியலில் நுழைந்து கல்லக்குடி போராட்டத்திற்காக தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம் நடத்தி அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சரானது வரை கலைஞரின் வாழ்வே ஒரு எதிர்நீச்சலைப்போல தொடர்ந்து இருந்திருப்பதை உணர முடியும்.
கலைஞரின் மறைவு எத்தகைய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கவனிக்கிறவர்களுக்கு ஒன்று புலப்படும். முதலாவது அவர் மறைவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூட படுக்கையிலிருந்து எழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இடையறாத உழைப்பு அவர் மறையும் காலம்வரை உடன்பிறப்பைப் போல ஒட்டிக் கொண்டிருந்தது. கலைஞரின் அரசியலை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் கூட அவரது சலிக்காத உழைப்பை பலமுறை பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
ஒருமுறை நேர்காணலின்போது, தன் உடலைப் பற்றி இப்படிச் சொன்னார், “நான் ஓடுகிற ஓட்டத்திற்கு ஏற்றபடி உடம்பும் தான் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்”.
தான் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து அடித்தட்டு, நடுத்தர வர்க்கம் சார்ந்த மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்திக் கொண்டே இருந்தார்.
சிறுவயதில் துண்டுபிரசுரமாக வெளியிட்ட ‘முரசொலி’ துவங்கி பல்வேறு படங்களுக்கான வசனங்கள், நூல்கள், சலிக்காத மேடைப் பேச்சுக்கள், கூடவே இலக்கிய வாசிப்பு இறுதியில் ராமானுஜர் பற்றிய தொடர் என்று பரந்து விரிந்த அவருடைய எழுத்துப் பின்புலத்தையும் சரி, தேசிய, மாநில அரசியலில் தன்னைத்தானே முன்னகர்த்தி நின்ற இடமும் சரி, ஊடகம் சார்ந்தவர்களை மிக எளிமையாக சந்திக்கும் விதத்திலும் சரி, கட்சிக்காரர்களை கடைசிவரை ஞாபகத்தில் இறுத்திக் கொண்டது வரை கலைஞரால் நிரப்ப முடிந்த இடத்தை, அவரைப்போல யாரும் நிரப்பிவிட முடியாது.
இவ்வளவெல்லாம் இருந்தும் அவர் தன்னைப்பற்றிச் சொன்ன, “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என்கிற சொற்றொடர் தனக்குத் தானே அளவிட்டுக்கொண்ட சரியான மதிப்பீடு.