கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருபவர்களுக்கு மறக்க முடியாத ஆண்டு 2006. ஆவலைத் தூண்டும் இரண்டு கேள்விகளை எழுப்பி... அழுத்தமான இரண்டு பதிவுகளை விட்டுச்சென்ற ஆண்டல்லவா அது!
தேசிய அரசியலுக்கு முழுமையாகப் போகவில்லை என்றாலும் அன்னை இந்திராவுக்குப் பிறகு இரும்புப் பெண்மணி என்று அறியப்பட்ட ஜெ.ஜெயலலிதா, 1991 இல், தனது 43 வது வயதில் முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சரானார்.
அனுபவமின்மையா... பக்குவமின்மையா... பதவிப் பரவசமா... தெரியாது. அவரது ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற ஊழல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பி, 1996 இல் வந்த தி.மு.க. ஆட்சியில் அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் பதியப்பட்டன.
சுமார் 15 ஆண்டுகள் ஓடிவிட... எல்லா வழக்குகளிலும் விடுதலையான ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மட்டும் தீர்ப்பை எதிர்நோக்கியபடி, 2011இல் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார்,
2014இல் ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது கர்நாடகா நீதிமன்றம். முதலமைச்சராகவே சிறைசென்ற ஜெயலலிதா, 21 நாள்கள் சிறைவாசம் முடிந்து ஜாமினில் வெளியே வந்தார். இடைத்தேர்தலில் வென்று மீதமுள்ள நாள்களுக்கு மீண்டும் முதல்வரானார்.
2016 பொதுத் தேர்தல்... ஆட்சி அதிகாரத்தில் இருந்தபடியே தேர்தலை எதிர்கொண்டார் ஜெயலலிதா, இரண்டு கேள்விகளை அரசியல் களத்தில் உலவவிட்டபடி.
1. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்ற ஜெயலலிதாவை மக்கள் ஏற்பார்களா..?
2. தி.மு.க. தோன்றிய காலம் முதல், அதிலிருந்து பிரிந்து அ.தி.மு.க. தோன்றிய காலம் முதல் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற எந்த ஆளுமையும் செய்யத் துணியாத விஷப் பரீட்சையாக, பிரதான கட்சிகள் எதனுடனும் கூட்டணியின்றி 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க.வைக் களமிறக்கினார் ஜெயலலிதா. அதீத தன்னம்பிக்கையா? தன்னம்பிக்கை கலந்த ஆணவமா? தப்புக்கணக்கா..? ஜெயலலிதாவை நோக்கி பலப்பல கேள்விகள்.
அத்துடன், 1984க்குப் பிறகு ஆட்சியில் இருந்த ஒரு கட்சியைத் தொடர்ச்சியாக மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியதே இல்லை. இப்போது அது நடக்குமா என்ற பிரதான கேள்வியும் எழுந்தது.
ஜெயலலிதாவின் சிறைவாசத்தை மக்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அடித்தட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு, எங்களின் உரிமைகள் பறிபோகாமல் பாதுகாத்து, ஏழைகள், பெண்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தாலே போதும்... எங்கள் ஆதரவு அந்தத் தலைவருக்குத்தான்; மற்ற எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை என்று சொல்லி 136 இடங்களில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைத் தந்தார்கள் மக்கள்.
32 ஆண்டுகால வரலாற்றை மாற்றி, தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனை புரிந்து முத்திரை பதித்த ஜெயலலிதா, எமனுடன் 75 நாட்கள் போராடித் தோற்று, அதே 2016ஆம் ஆண்டில் இரண்டாவதும் இறுதியுமான முத்திரையைப் பதித்து மறைந்தே போவேன் என்று கனவிலும் நினைத்திருப்பாரா..?