பிரதமர் மோடியின் தலைமையிலான பிஜேபி இன்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கத் துள்ளிக் குதிக்கிறது! ஆனால் பிஜேபியை தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒப்புக்கொண்டு வரவேற்பதற்கு வாஜ்பாய் தான் காரணமாக இருந்தார். அவரை திமுக, அதிமுக - இரு கட்சியினரும் ஆரம்பத்தில் ஆதரித்தனர். அது ‘ஜெ’வும் கலைஞரும் இருந்த நாள்கள்! இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று பிஜேபிக்கு தமிழ்நாட்டில் அகலமாகக் கதவைத் திறந்துவிட்டனர்.
18 கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தும் குறைந்த மெஜாரிட்டியுடன் வாஜ்பாய் ஆட்சி இருந்த 1998 ஆம் ஆண்டு அது! தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. ஆனால் பாஜக- அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு! அதிமுக 19 இடங்கள் வெற்றி!
‘ஜெ’வின் ஆதரவுடன் டெல்லியில் வாஜ்பாய் ஆட்சி! மகிழ்ச்சியான ஆரம்பம் என்று நினைத்தால் ‘கூட்டணி தர்மம்’ என்று சொல்லப்பட்டு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற ஆரம்பித்தது! யாரையும் விரோதியாகக் கருதாத அற்புதமான தலைவராக இருந்த வரலாறு உடையவர் வாஜ்பாய். ‘எதிர்காலத்தில் பிரதமராக வரக்கூடியவர்’ என்று நேருவால் பாராட்டப்பட்டவர்.
‘ஜெ’வை அவர் மதித்தார். சொல்லப்போனால் அவரை மத்திய ராணுவ அமைச்சராக பதவி வகிக்க அழைப்பு விடுத்தார். ‘ஜெ’ தயாராக இல்லை. அவரது கடுமையான நிபந்தனைகள் வேறு! சுப்ரமணியசுவாமிக்கு நிதியமைச்சர் பதவி தர வற்புறுத்தினார்! தன் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் முழுவதையும் நீக்கவேண்டும் என்றார். அப்போது நடந்துகொண்டிருந்த திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றார்.
தமிழகத்தில் அப்போது நடந்துகொண்டிருந்த திமுக ஆட்சியின் ஜெ மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை போய்க் கொண்டிருந்தது. அதனால்தான் டிஸ்மிஸ் செய்யக் கோரினார். நியாயமான ஆட்சியை நடத்த விரும்பிய வாஜ்பாய் இதற்கு உடன்படவில்லை. ’ஜெ’விடமிருந்து வற்புறுத்தல் கடிதங்கள் டெல்லிக்குப் பறந்தன.
வாஜ்பாய்க்கு பொறுக்க முடியவில்லை. அவர் சமாதான முயற்சிகள் செய்துபார்த்தார். மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், பிரமோத் மஹாஜன் ஆகியோரை சென்னைக்கு அனுப்பினார்.
இரண்டு மத்திய அமைச்சர்களும் போயஸ் தோட்டத்தின் வரவேற்பறையில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். கடைசியில் இண்டர்காமில் பேசி அனுப்பினார் ஜெ.! இதற்கிடையில் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சேடப்பட்டி முத்தையா மீது ஊழல் குற்றச்சாட்டு! அவர் ராஜினாமா செய்தார். அதிமுக தலைமை கடும் கோபம் கொண்டது! டெல்லி சென்ற ஜெயலலிதா டீ பார்ட்டி கொடுத்தார்! சோனியா காந்தி கலந்துகொண்டார். கதை முடிந்தது! ஒரு ஓட்டில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது!
ஆட்சி கவிழ்ந்த அன்று கண்கள் கலங்கிய நிலையில் வாஜ்பாய் இருந்ததாக செய்திகள் வெளியாயின. கூட்டணி ஆட்சி நடத்துவது எளிதாக இருக்காது என்றாலும் நாடாளும் ஆசை யாரை விட்டது?
அடுத்துவந்தது 1999 நாடாளுமன்றத் தேர்தல். ‘ஜெ’ இருந்த இடத்தை நிரப்ப வாஜ்பாய்க்குக் கை கொடுத்தார் கலைஞர். நடக்க சாத்தியமில்லை என சொன்னவர்கள் ஏமாந்தனர்.
முரசொலி மாறன்தான் திமுக - பாஜக கூட்டணி அமைய அப்போது மகத்தான காரணகர்த்தா. பிரமோத் மஹாஜனும் மாறனும் நண்பர்கள். இருவரும் இணைந்து களத்தில் இறங்கினர். எல்லாவிதத்திலும் எதிர் எதிரான மாறுபட்ட கருத்து இருந்தாலும் பாஜக திமுக கூட்டணி அமைந்தது இவர்கள் இருவரால்தான்!
அப்போது திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக உருவாகி சில ஆண்டுகளே ஆகி இருந்தன. வைகோ பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். கலைஞர் அவருடன் மீண்டும் நட்புகொள்ளத் தயங்கவில்லை! ‘எங்களுக்கு பிஜேபி கட்சிபற்றி உடன்பட முடியாத மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் வாஜ்பாய் என்ற தலைவர் மீது மாறாத மதிப்பு உண்டு’ என்றார் கலைஞர்.
காமராஜருக்கு கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைக்க திமுக திட்டம் தீட்டியதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலை இருந்தது. வாஜ்பாய் தலையிட்டு அனுமதி அளித்தார். நட்புக்கரம்!
‘ஜெ’ போல கலைஞர் வாஜ்பாய்க்கு எந்த தலைவலியும் தரவில்லை. முரசொலி மாறன், டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் மத்தியில் முக்கிய பொறுப்புகளில்!
காட்சிகள் மாறின. 2001இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. பாஜக கூட்டணியில் இருந்த திமுக தோற்றது.
சிலநாள்களில் ஒருநாள் நள்ளிரவில் ஜெ ஆட்சியால் முரட்டுத்தனமாக கலைஞர் கைது செய்யப்பட்டார். ‘ஜெ’வின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஊரே சொன்னது. வாஜ்பாய் ஆட்சி கைது முறைகளை ஏற்கவில்லை. டெல்லியில் இருந்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
2003-இல் முரசொலி மாறன் திடீரென உடல்நிலை குன்றி, ‘கோமா’வில்! கடைசிவரை இலாகா இல்லாத மத்திய அமைச்சராக மாறன் இருக்குமாறு மதிப்பளித்தார் வாஜ்பாய்! மாறன் இறந்தபோது அஞ்சலி செலுத்தவந்தார் அவர்!
பாஜகவின் அணுகுமுறையில் வேறுவிதமான கண்ணோட்டத்தைப் புகுத்த நினைத்தார் வாஜ்பாய்! விதி விளையாடியது! குஜராத் கலவரம் 2002 இல். கோத்ரா விபரீதங்கள்…
திமுக மைனாரிட்டிகளின் பாதுகாவலாகத் திகழ்கிறது என்ற சிறப்பு எப்போதும் உண்டு! -இன்றளவும்.
குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட அரசியல் பூகம்பம். இந்நேரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் தங்களை திமுக முற்றிலும் ஒதுக்குவதாக கூக்குரல் இட ஆரம்பித்திருந்தார்கள். வாஜ்பாயியின் பிடியிலிருந்து பாஜக நழுவுவதாகவும் திமுக நினைத்தது! நீண்ட யோசனைக்குப் பின்னர் ஆட்சி முடியும் தருவாயில் திமுக மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது!