உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
1. Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb
ஸ்டான்லி குப்ரிக், உலக சினிமா மேதைகளில் ஒருவர். இவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த ‘Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb’ என்ற படம். இப்படம், இன்றும் ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒரு அரசியல் படமாகக் கருதப்படுகிறது. இது, Black Comedy வகையைச் சேர்ந்த படம். அதாவது, சமூகத்தில் நிகழும் அவலங்களுக்கு, என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டே போய், நமது அரசியலும், அரசியல்வாதிகளுமே காரணம் என்று சொல்லி, அவர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமாகும் இது.
இப்படம் வெளிவந்த வருடத்தைக் கவனியுங்கள். 1964. உலக வல்லரசுகள் ஒருவரையொருவர் அழிக்க, அணுகுண்டுகளை முழுமுனைப்புடன் தயாரித்துக்கொண்டிருந்த காலம். அதிலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலம்.
ஜாக் ரிப்பர், ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல். திடீரென்று ஒருநாள், கம்யூனிஸ்டுகள் மேல் உள்ள வெறுப்பால், தன்னிடம் உள்ள அனைத்து அணு ஆயுத விமானங்களையும், ரஷ்யாவின் மேல் ஏவி விட்டு விடுகிறார். ஏவிவிட்டவர், ஆபத்துக்காலத்தில் பின்பற்ற வேண்டிய ‘Wing Attack R’ என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து விடுகிறார். இதனால், அந்த விமானங்களை, இவரிடம் உள்ள ஒரு ரகசியக் குறியீட்டின் மூலம் மட்டுமே திரும்ப அழைக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியே நினைத்தாலும், ஒன்றும் செய்ய இயலாது.
விமானங்களை ஏவிவிட்டபின், ரிப்பர் அவசரகால உத்தரவைப் பிறப்பித்து, தனது அறையினுள் சென்று, பூட்டிக்கொண்டு விடுகிறார். இந்த உத்தரவினால், முகாமை நெருங்கும் எந்த சக்தியாயினும் சரி, சுடப்படும். இத்தகைய ஒரு நெருக்கடி, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படுகிறது. பெண்டகனில் இருக்கும் ‘பக் டர்ஜிட்ஸன்’ என்ற ஜெனரல், இதனால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி, ஜனாதிபதியிடம் விளக்குகிறார். நன்மை: ரஷ்யாவைப் பூண்டோடும் வெங்காயத்தோடும் (நன்றி: சுஜாதா) அழித்துவிடுவது. தீமை: ரஷ்யா திருப்பித்தாக்கினால், பல மில்லியன் அமெரிக்கர்கள் இறக்க நேரிடும்.
ஆனால், ஜனாதிபதிக்கு இதில் விருப்பமில்லை. அவர், ரஷ்ய தூதரை வரவழைத்து, அவரிடம் நிலைமையை விளக்குகிறார். ஒரே வழிதான் உள்ளது என்று சொல்லும் ஜனாதிபதி, ரஷ்யாவிற்கு, தாக்கவரும் விமானங்கள் பற்றித் தகவல் கொடுத்து, அவற்றை அழிப்பதே அந்த வழி எனக்கூறி, ரஷ்ய உயரதிகாரியிடம் இந்த தூதரைப் பேசச் சொல்கிறார். அவரிடம் பிறகு தானே பேசும் ஜனாதிபதி, அவர் பயங்கரமாக சரக்கடித்துவிட்டு, படு மப்பில் இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இருவருக்கும் இடையில் வரும் உரையாடல், நகைச்சுவையின் உச்சம் என்று சொல்லிவிடலாம்.
கடைசி முயற்சியாக, ஒரு படைப்பிரிவை ஏவிவிட்டு, இதற்கெல்லாம் காரணமான ஜாக் ரிப்பரைப் பிடித்துவரச் சொல்கிறார். அவரிடம் தான் அந்த ரகசியக்குறியீடு இருப்பதனால், அதனை வைத்து விமானங்களைத் திருப்பி அழைத்துவிடலாம் என்பது அவரது யோசனை.
இதன்பின் என்ன நடந்தது? ரஷ்யா அழிக்கப்பட்டதா? அல்லது விமானங்கள் திரும்பப்பெறப்பட்டனவா? ஜாக் ரிப்பர் என்ன ஆனார்? எல்லாக் கேள்விகளுக்கும், இந்தப்படத்தைப் பாருங்கள்.
இப்படம் வெளிவந்த காலத்தில், ஒரு மிக முக்கியமான அரசியல் படமாக (இப்போதும்தான்) கருதப்பட்ட இப்படத்துக்கு, பல விருதுகள் கிடைத்தன. கறுப்பு-வெள்ளைப் படமான இதிலும், குப்ரிக் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். பொறுப்பே இல்லாமல், அணுஆயுதங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தலைவர்கள் நினைத்தால், ஒரு சிறிய உத்தரவினால், இந்த உலகையே அழித்து விட முடியும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
2. All the President's Men (1976)
ரிச்சர்ட் நிக்ஸன் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டவுடன், தொடர்ந்து நமது மனதைத் தட்டும் ஒரு விஷயம் வாட்டர்கேட் ஊழல்.
ஆண்டு – 1972. ஒரு ஜூன் மாத மாலை. தேதி 17. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், வாட்டர்கேட் என்ற ஒரு கட்டிடம். அதில்தான், ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. இந்த வாட்டர்கேட் கட்டிடத்தின் நுழைவாயில் கதவில், டேப்புகள் ஒட்டப்பட்டு, அதன் காரணமாக அதன் கதவு மூடப்படாமல் லேசாகத் திறந்திருப்பதை, செக்யூரிட்டி ஃப்ரான்க் வில்லிஸ் கண்டுபிடிக்கிறார். இதனைப் போலீஸுக்கு அவர் தெரிவிக்க, ஜனநாயகக் கட்சி அலுவலகத்துக்கு உள்ளே பதுங்கியிருந்த ஐந்து பேரைப் போலீஸ் கைது செய்கிறது. இந்த ஐந்து பேருமே, ரிபப்ளிக் கட்சியின் ஒரு முக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஆண்டில், நிக்ஸன் மறுபடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Committee to Re-elect the President’ (இனி, சுருக்கமாக CReeP) என்ற ரிபப்ளிக் கட்சியின் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பதைப் பத்திரிகைகள் குறிப்பாக The Washington Post’ என்ற பத்திரிகை – தோலுரித்துக் காட்டியது. இந்த விஷயத்திலிருந்து, பட்டாசு பற்றிக்கொண்டது.
இதுதான் வாட்டர்கேட் ஊழலின் முதல் படி. சரி. இந்த ஐவரும், எதற்காக ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்தனர்? படத்தைப் பார்த்தால், இதற்கு விடை கிடைத்துவிடும். படத்தின் நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம், இக்கேள்விகளுக்கு விடை அறிய முயற்சிக்கலாம்.
இந்த ஐவரின் மீதும் கேஸ் நடக்கும் செய்தி, வாஷிங்டன் போஸ்ட்டின் நிருபர் பாப் வுட்வோர்டுக்குக் கிடைக்கிறது. அங்கே நேரில் செல்லும் அவர், இந்த ஐவரின் ரிபப்ளிக் கட்சித் தொடர்பைக் கண்டுபிடிக்கிறார். அதுமட்டுமல்லாது, இந்த ஐவரிடமும், ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருந்ததையும் அறிந்துகொள்கிறார். அந்த ஐவரில் ஒரு நபர், சி.ஐ.ஏவில் ஒருகாலத்தில் பணிபுரிந்து வந்ததையும் கண்டுபிடிக்கிறார். இவருடன் கார்ல் பெர்ன்ஸ்டீன் என்ற சக பத்திரிகையாளரும் சேர்ந்து பணிபுரிய ஆரம்பிக்கிறார்கள்.
வுட்வோர்டுக்கு, அமரிக்க அரசு எந்திரத்தில், ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உண்டு. இந்தத் தொடர்புக்கு வுட்வோர்ட் வைத்திருக்கும் ரகசியப் பெயரானது, ‘Deep Throat’ என்பதாகும். இந்த டீப் த்ரோட் நபர், அவ்வப்போது வுட்வோர்டை, ஒரு ரகசிய இடத்தில் சந்திப்பது வழக்கம். இந்தக் கேஸ் முடிந்து ஏறத்தாழ 25 - 30 வருடங்கள் வரை, டீப் த்ரோட் யாரென்றே தெரியாமல் இருந்தது. அதன்பின்பு, திடீரென்று ஒரு நாள், 2005ஆம் ஆண்டில், தொண்ணூற்றோரு வயதான ஒரு நபர் – மார்க் ஃபெல்ட் (Mark Felt) என்ற முன்னாள் FBI டெபுடி டைரக்டர் தானாக முன்வந்து, தான் தான் டீப் த்ரோட் என்று சொல்லி, அந்த மர்மத்தை முடித்து வைத்தார்.
இந்த டீப் த்ரோட், CReeP அமைப்பில் சேர்ந்த அபரிமிதமான பணத்தைப் பற்றிய (தேர்தல் நிதி) விசாரணையை முதலில் மேற்கொள்ளுமாறு வுட்வோர்டிடம் சொல்ல, அதனைப் பற்றிய விசாரணை ஆரம்பமாகிறது. அந்த விசாரணையில், இந்த CReeP அமைப்பின் பெயரில் வழங்கப்பட்ட செக் ஒன்று, பிடிபட்ட ஐவரில் ஒரு ஆசாமியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட விஷயம் வெளிவருகிறது. இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜமாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் இது குற்றம். எனவே, இதனைப்பற்றிய விசாரணையைத் தொடருகின்றனர் இருவரும்.
அந்த விசாரனையின் முடிவில், இந்த CReeP அமைப்பினிடத்தில் இருந்த பல மில்லியன் டாலர்கள் பணத்தை வைத்துக்கொண்டு, ரிபப்ளிக் கட்சியினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டெமாக்ராட்டுகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாகவும், அவர்களை ரகசியமாக உளவறிந்ததாகவும், அவர்களின் பெயரை வேண்டுமென்றே ரிப்பேர் செய்ததாகவும் தெரியவருகிறது. இந்த உளவறியும் விஷயத்தைச் செய்ய ஆணை பிறப்பித்தவர் யார்? என்ற கேள்வி அடுத்து எழுகிறது.
தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இந்த இரு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளிக்கொணர்ந்த தகவல்களின் கனம் தாளாது, ஜனாதிபதி நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டி வருகிறது. பதவிக்காலத்திலேயே ராஜிநாமா செய்த அமெரிக்க அரசின் ஒரே கறைபடிந்த ஜனாதிபதி என்ற புகழும் நிக்சனுக்குக் கிடைக்கிறது (க்ளிண்டன் விவகாரம் வேறு மாதிரியானது. அவரது சாகசங்களை மக்கள் ரகசியமாக ரசிக்கவே செய்தனர்).
3. The death of Stalin
உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரிகளில் ஒருவர் திடீரென்று இறந்தால் அதன்பின் என்ன ஆகும்? இந்தக் கதையை கறுப்பு நகைச்சுவையுடன் சொல்லிய படமே இது. தலைப்பிலேயே வருவதுபோல, ரஷ்யாவின் ஜோஸஃப் ஸ்டாலின் அப்போதைய சோவியத் யூனியனின் பெரும் தலைவர். 1953இல், மார்ச் மாதம் ஒன்றாம் தேதி, மாஸ்கோவில் நடத்தப்படும் மொஸார்ட்டின் இசையை மையமாக வைத்த ஒரு இசை நிகழ்ச்சியின் பதிவை ஸ்டாலின் கொண்டுவரச்சொல்ல, அந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்படாததால் மறுபடியும் அவர்களை வாசிக்கச்சொல்லி, நிகழ்ச்சி முற்றிலுமாகப் பதிவு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் பியானோ வாசிக்கும் மரியா என்பவர், ஸ்டாலினைத் திட்டி, விமர்சித்து ஒரு சிறிய குறிப்பை அந்த இசைநிகழ்ச்சியின் பதிவோடு ஒளித்துவைத்து அனுப்பிவிடுகிறார். அதைப் படிக்கும் ஸ்டாலின் சிரிக்கத் துவங்க, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுத் தொபேல் என்று அவரது அறைக்குள் விழுந்துவிடுகிறார். ஆனால் சத்தம் கேட்டாலும் யாருமே வருவதில்லை. காரணம், ஸ்டாலினிடம் இருக்கும் பயம்.
மறுநாள் காலை ஸ்டாலின் மயங்கிக்கிடப்பது தெரியவர, உடனே மருத்துவர்களைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால் நாட்டின் முக்கியமான மருத்துவர்களையெல்லாம் ஸ்டாலின் முன்னரே கைதுசெய்துவிட்டதால், எந்தத் திறமையும் இல்லாத ஒண்ணரையணா மருத்துவர்களே ஸ்டாலினுக்கு சிகிச்சையளிக்க வருகிறார்கள்.
அந்த நேரத்தில் ஸ்டாலின் இறந்தபின் அந்த இடத்தில் யார் வருவது என்ற பதவிச் சண்டை மெதுவே துவங்குகிறது. பெரியா, குருஷ்சேவ், வையாசெஸ்லாவ் மாலடோவ், ஜார்ஜி மாலன்கோவ் ஆகியவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்துகோண்டு பிறரை எதிர்க்கத் துவங்க, படம் முழுதும் கறுப்பு நகைச்சுவை இழையோடும் காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. இறுதியில் குருஷ்சேவ் சோவியத் யூனியன் தலைவராக ஆவதில் இந்தக் களேபரம் முடிகிறது.
இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?
ஸ்டாலினின் மரணத்தின்போது சோவியத் யூனியனில் நடந்த பல சம்பவங்கள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. உதாரணமாக, பெரியா, பல கைதிகளை விடுவித்தார். தேவாலயங்கள் மீது ஸ்டாலின் போட்டிருந்த பல இறுக்கமான விதிகளைத் தளர்த்தினார். இதெல்லாம் மக்களிடம் நல்ல பெயர் பெறுவதற்காக. ஆனால் அப்போது நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்தனர். இதனால் மக்களிடையே அவருக்குக் கெட்ட பெயரே கிடைததது. அதைத் தொடர்ந்து குருஷ்சேவ் மற்றும் ஸுகோவ் ஆகிய இருவரும் சேர்ந்து புரட்சி செய்து பெரியாவைக் கைது செய்து மரணதண்டனை விதித்து அதனை நிறைவேற்றினர். இதெல்லாம் படத்தில் ஆங்காங்கே காட்டப்படும்.
கூடவே, பதவிக்காக அரசியல்வாதிகள் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள் என்பது பல காட்சிகளில் வரும். மிகக்குறிப்பாக, உயிரோடு இருந்தபோது ஸ்டாலினைப் பார்த்து அனைவரும் எப்படியெல்லாம் அஞ்சி நடுங்கினார்கள் என்பது சில காட்சிகளில் சொல்லப்படுகிறது. அதுவே ஸ்டாலின் இனி பிழைக்கமாட்டார் என்பது தெரிந்ததும் அவர்களின் மனமாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.
அரசியல் ரீதியாக இது ஒரு முக்கியமான படமே. டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ் போலவே இந்தப் படமும் கறுப்பு நகைச்சுவையின் மூலம் ஏராளமான உண்மைகளைப் புரியவைக்கிறது.
4. Wag the Dog
இது கறுப்பு நகைச்சுவையின் உச்சம் தொட்ட இன்னொரு அரசியல் திரைப்படம். அரசியல் பிரச்சாரம் மற்றும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் போலியான கருத்துகள் எப்படி மக்கள் மனங்களை உண்மையான பிரச்னைகளிடம் இருந்து திசைதிருப்புகின்றன என்பதை செவிட்டில் அறைவதைப் போல் பளிச்சென்று சொன்ன திரைப்படம் இது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கின்றன என்ற நிலையில், வெள்ளை மாளிகையில் ஒரு மைனர் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார் ஜனாதிபதி. இந்தச் செய்தி மெல்லக் கசிகிறது. ஆனால் மக்கள் இந்தச் செய்தியால் மனம்மாறி அதிபரைத் தோற்கடித்துவிடக்கூடாது என்பதால் மிகப்பிரபலமான ஒரு அரசியல் லாபியிஸ்ட்டான கான்ராட் ப்ரீன் (ராபர்ட் டி நீரோ) அழைத்துவரப்படுகிறார். அவர் நன்றாக யோசித்துவிட்டு, அல்பேனியாவில் புரட்சியாளர்கள் திடீரென்று கிளம்பி அரசுக்கு எதிராக சண்டையிடுவதாக ஒரு போலியான செய்தியை உருவாக்குகிறார். இதனை மக்களிடையே பரப்ப, ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு பெரிய தயாரிப்பாளரான ஸ்டான்லி மாட்ஸை (டஸ்டின் ஹாஃப்மேன்) அழைக்கிறார். இப்படிச் செய்தால் உலக செய்தி ஊடங்களில் அமெரிக்க அதிபரைப் பற்றிய பாலியல் செய்தி வராமல், அல்பேனியாவின் யுத்த செய்திகளே பெருமளவில் வரும் என்பதால் இந்த ஏற்பாடு.
ஹாலிவுட் தயாரிப்பாளரான மாட்ஸ், போலியான யுத்த வீடியோக்களை எடுக்கிறார். அவை மிகத் தத்ரூபமாகவும் உருக்கமாகவும் இருப்பதால் உலகமே இந்த திடீர் சண்டையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறது. அப்போது எதிர்க்கட்சி வேட்பாளர் சி.ஐ.ஏ அமைப்புடன் ஒன்றுசேர்ந்து இதைத் துப்பறிந்து, இது போலியான சண்டை என்பதைக் கண்டுபிடித்து, சண்டை முடிந்துவிட்டதாக அறிக்கை விடுகிறது. ஆனால் சளைக்காமல் புதிய போலித் திட்டங்களை உருவாக்கும் ப்ரீன், பெண்டகனில் இருந்து ஒரு ராணுவ சார்ஜெண்ட்டைத் தேர்வு செய்து, அவர் அல்பேனியாவில் எதிரிகளிடம் சிறைப்பட்டிருப்பதாக ஒரு போலியான கதையை அதற்குத் தக்க ஆதாரங்களுடன் உருவாக்குகிறார்.
உடனே மக்களின் ஆதரவு அந்த சார்ஜெண்ட்டை நோக்கித் திரும்ப, அவரைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற கோஷங்கள் வலுக்கின்றன. இதைத்தொடர்ந்து அவரைக் காப்பாற்ற ஒரு அணி கிளம்புகிறது. ஆனால் அவரைச் சந்திக்கும்போதுதான் அவர் உண்மையில் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி என்று தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து திரும்பி வரும் வழியில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. இப்படியாகச் செல்லும் படத்தில் கடைசியில் ஜனாதிபதியே தேர்தலில் வெல்கிறார். ஆனால் படத்தின் இறுதியில் நிஜமாகவே அல்பேனியாவில் இருந்து ஒரு புரட்சிப்படை உருவாகி, அப்போது நடந்துமுடிந்திருந்த ஒரு குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறது.
இந்தப் படம், ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அரசியல்வாதிகளைக் கண்டபடி தோலுரிக்கும் படம். அரசியல்வாதிகளும் லாபியிஸ்ட்களும் நினைத்தால் எப்படிப்பட்ட போலிக்கதைகளையும் உருவாக்கி மக்களை நம்பவைப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறப்பான உதாரணம். கூடவே, இந்தத் திரைப்படம் வந்தபின்னரே மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளிண்டன் மாட்டுகிறார். இந்தப் படத்தின் தீர்க்கதரிசனத்துக்கு இது ஒரு உதாரணம்.
5. V for Vendetta
அரசியல் படங்களை எடுத்துக்கொண்டால் இந்த திரைப்படத்தை மறந்துவிட்டு எழுதவே முடியாது. பழையகால ராபின்ஹூட் போல வருங்காலத்தில் அடக்குமுறையால் துயருறும் மக்களுக்கு இடையே நம்பிக்கையின் அடையாளமாக எழுந்து நிற்பவனே இந்தப் படத்தின் நாயகன்.
வருங்கால இங்கிலாந்து. இங்கே ஒரு கொடுங்கோல் தலைவனாக இருப்பவன் சான்ஸலர் ஆடம் சட்லர். எப்படி ஒரு காலத்தில் ஜெர்மனி, ஹிட்லரால் அடக்கி ஆளப்பட்டதோ அப்படி சட்லர் இந்த வருங்கால இங்கிலாந்தை ஆண்டுகொண்டிருக்கிறார். ஒவ்வொரு குடிமகனும் கண்காணிக்கப்படுகிறான். ராணுவம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடிவுசெய்யும் அமைப்பாக இருக்கிறது. கொத்துக்கொத்தாக மக்கள் கைதுசெய்யப்படுகின்றனர். அரசின் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர்கள் - ஓரினச் சேர்க்க்கையாளர்கள், அகதிகள், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகிய அனைவருமே கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
லண்டனில் இருக்கும் ஓல்டு பெய்லி என்ற கட்டிடம் உலகெங்கும் மிகப் பிரபலமானது. லண்டன் நகரின் பிரதான நீதிமன்றம் அது. அதன் உச்சியில் நீதிதேவதையின் சிலை வடிக்கப்பட்டிருக்கும். ஒருநாள், Guy Fawkes என்ற, 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த புரட்சியாளன் ஒருவனின் முகமூடி அணிந்த நபர் ஒருவன் இந்த ஓல்டு பெய்லி கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்க்கிறான். மறுநாளான நவம்பர் ஐந்தாம் தேதி, நகரெங்கும் இருக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறான். தனது பெயர் V என்று அறிவிக்கிறான். சரியாக ஒரு வருடம் கழித்து அடுத்த நவம்பர் ஐந்தாம் தேதி அனைத்து மக்களும் ஒன்றுகூடி, லண்டன் நாடாளுமன்றத்தின் முன்னர் குழுமி, ஆடம் சட்லரின் கொடுங்கோல் ஆட்சியை அனைவரும் சேர்ந்து வேரறுக்கவேண்டும் என்று பேசுகிறான். அதன்பின், ஈவி ஹாம்மண்ட் என்ற பெண்ணின் உதவியால் அங்கிருந்து தப்புகிறான். அந்தப் பெண்ணை இதற்கு முன்னர் அவன் தான் காப்பாற்றியிருப்பான்.
ஈவி மெல்ல மெல்ல யார் இந்த V என்ற உண்மையை அறிந்துகொள்கிறாள். அந்த ஆட்சியின் மூன்று முக்கியமான நபர்களை இந்தப் புரட்சியாளன் கொலை செய்கிறான். ஒரு வருடம் முடிகிறது. மக்கள் புரட்சி வெடிக்கப்போகும் நவம்பர் ஐந்தாம் தேதி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள், Vயினால் உந்தப்பட்டு, அவனால் அளிக்கப்பட்டுள்ள அவனைப் போன்ற அதே முகமூடிகளை அணிந்துகொண்டு ஒன்றுகூடுகின்றனர்.
அதன் பின் என்ன ஆனது என்பதே வி ஃபார் வெண்டெட்டா திரைப்படம்.
இது புகழ்பெற்ற கிராஃபிக் நாவல் எழுத்தாளர் அலன் மூரால் உருவாக்கப்பட்ட ஒரு காமிக்ஸ். அந்தக் காமிக்ஸே பின்னால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. எங்கெல்லாம் உலகீல் அடக்குமுறை நிலவுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் புரட்சி வெடித்தே தீரும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்யும் திரைப்படம் இது. உலகெங்கும் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் பல உலக சினிமா விழாக்களில் திரையிடப்பட்டது. மக்கள் புரட்சியைப் பற்றி விரிவாகப் பேசக்கூடிய படங்களில் இந்தத் திரைப்படத்துக்கு ஒரு பிரதான இடம் உண்டு. இதில் நவம்பர் 5 என்ற தேதி இடம்பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. Guy Fawkes பதினேழாம் நூற்றாண்டில் இதேபோன்ற ஒரு பெரும் புரட்சியில் ஈடுபட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. Failed Gunpowder Plot என்று தேடிப்படித்துப் பாருங்கள். அதன் நீட்சி தான் இந்தப் படத்தில் வரும் நவம்பர் ஐந்து இயக்கம்.