சிறப்புப்பக்கங்கள்

அதிரடி ஆரம்பம்!

ஜெ. ராம்கி

1991 -ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கட்டிடம். பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக வருகை தரும் ஆளுநர் பீஷ்மநாராயணன் சிங்கை கை கூப்பி வரவேற்கும் ஜெயலலிதாவை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். வழக்கமாக அணியும் புடவைக்கு மேல் கருப்பு நிற ஓவர்கோட் அணிந்து வேறு யாரோ போன்று இருந்தார். பொதுவெளியில் அதுவரை ஜெயலலிதாவை அப்படியொரு காஸ்ட்யூமில் யாரும் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்களை பார்த்திருக்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி தோற்றமளித்தார்களோ அதே தோற்றத்துடன்தான் பதவிப்பிராமணம் எடுத்துக் கொள்வார்கள். திடீரென்று ஜெயலலிதாவை புது கெட்டப்பில் பார்த்தவர்களுக்கு சற்றே அந்நியமாகத் தெரிந்தது. ஒருவேளை புல்லட் ப்ரூப் டிரஸ் ஆக இருக்குமோ என்று நினைத்தவர்களும் உண்டு. தமிழ்நாட்டின் அன்றைய சூழல் அப்படி நினைக்க வைத்தது.

அது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்னை, பிரதான பிரச்னையாக இருந்த நேரம். பத்மநாபா படுகொலையைத் தொடர்ந்து கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்கு திருப்பெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அமைதிப்பூங்கா என்னும் தமிழ்நாட்டின் இமேஜ் முற்றிலுமாக பறிபோயிருந்தது. 225 இடங்களில் வெற்றி பெற்று, அதீத பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு பிரச்னையைத்தான் முதலில் கையிலெடுத்தார்.

சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக்குழு, ராஜீவ் படுகொலை விசாரணையை தீவிரப்படுத்திய நேரத்தில், ஜெயலலிதா அரசு இலங்கைப் போராளிக் குழுக்களின் நடமாட்டத்தை முடக்கும் தீவிர வேட்டையை ஆரம்பித்தது. அதுவரை தமிழ்நாட்டில் சுதந்திரமாக இயங்கி வந்த விடுதலைப்புலிகளை ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் முடக்கினார். விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தீவிரமான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன.

80களில் அறிமுகமான தடா சட்டத்தை ஜெயலலிதா, தமிழ்நாட்டில் முழுமையாக அமலுக்குக் கொண்டுவந்தார். தடா சட்டத்தை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை பழிவாங்கினார் என்று அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடா சட்டம் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

தமிழக காவல்துறையினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்க உத்தரவிட்டதோடு, தருமபுரி மாவட்டங்களில் இருந்த நக்சலைட் இயக்கங்களை அழிக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க தமிழகம் மற்றும் கர்நாடக காவல்துறையை ஒருங்கிணைத்து தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது. காவல்துறையினரின் சுதந்திரமான செயல்பாடுகளால் தமிழ்நாடு முழுவதும் ரௌடியிசம், கூலிப்படை கலாச்சாரமும் ஒடுக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் போலீஸ் ஆட்சியில் விரும்பத்தகாத விஷயங்களும் நடந்தன. 90களின் சாத்தான் குளம் சம்பவமாக பேசப்பட்ட சிதம்பரம் பத்மினி பாலியல் வன்கொடுமை ஜெயலலிதா ஆட்சிக்கு தீராத கறையை ஏற்படுத்தியது. அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தினால் உருவானதுதான், அனைத்து மகளிர் காவல் நிலையம். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முழுவதும் பெண் காவலர்களால் நிர்வகிக்கப்படும் முதல் காவல்நிலையம் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா கையெழுத்திட்ட முதல் உத்தரவு, மலிவு விலை மதுக் கடைகளை மூடுவதுதான். இதனால் அரசுக்கு அப்போது 322 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை இருந்தாலும் தயங்காமல் செய்தார். அது அவரது தேர்தல் வாக்குறுதி.

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி நாகப்பட்டினத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. நாகப்பட்டினம், காயிதே மில்லத் மாவட்டம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டது. 1981இல் எம்ஜிஆர், தெருப்பெயர்களின் உள்ள ஜாதியை நீக்கினார். பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ சில மாவட்டங்களுக்கு ஜாதித்தலைவர்களின் பெயர்களை வைத்துவிட்டார். பிறகு வந்த திமுக அரசு, மொத்தமாக தலைவர்களின் பெயர்களை சாதிப்பிரச்னையால் நீக்கியது வேறு கதை.ஆட்சிக்கு வந்த ஆரம்ப ஆரம்ப கட்டங்களில் ஜெயலலிதா அரசு எதிர்கொண்ட முக்கியமான பிரச்னை, காவிரி பிரச்னை. 1991 ஜூன் 25இல் வெளியான காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு, கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக அமையவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 11 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை உறுதி செய்தது. அடுத்த வந்த இரண்டு நாள்களும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. மைசூர், மாண்டியா பகுதிகளில் இருந்த கர்நாடக வாழ் தமிழர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தமிழ்நாட்டிற்கு திரும்பி வரும் நிலை ஏற்பட்டது.

கர்நாடகத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு கோவை, நீலகிரி, வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் தஞ்சமடைந்த கர்நாடக தமிழர்களுக்கு காப்பகங்கள் திறக்கப்பட்டன. கர்நாடகத்திற்கு பதிலடி தர களத்தில் குதித்த தமிழ்த் தேசிய அமைப்புகளின் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு தலையிடாத நேரத்தில், கர்நாடக மாநில கலவரங்களின் தாக்கம் தமிழ்நாட்டிற்கு பரவாமல் தடுத்தது ஜெயலலிதா அரசின் முக்கியமான சாதனையாக சொல்லமுடியும்.

ஜெயலலிதா அரசின் தொடக்க கால சாதனையாக அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தை திட்டம், போன்றவற்றைச் சொல்லாம்! ஜெவின் ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நிற்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட ’மாநில பள்ளிசாராக் கல்வித்திட்டம்’ தொடங்கும் அறிவிப்பையும் காணமுடிகிறது!