சிறப்புப்பக்கங்கள்

அவள் அவளுக்கானவள்

வீ.சு.ஜோதிலட்சுமி

ஒரு வழக்கறிஞராக நம் சமூகத்தின் குடும்ப அமைப்புகளுக்குள் நடக்கும் பல விஷயங்களை பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது. அது ஒரு விவாகரத்து வழக்கு. விவாகரத்து கோரிய கணவர் தன் மனைவியின் மேல் சொன்ன குற்றச்சாட்டு எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

திருமணத்திற்கு பின் மனைவி அவர் பெயருடன் கணவன் பெயரை இணைத்துக் கொள்ளவில்லையாம். பலமுறை கேட்ட பின்பும் தன் மனைவி, நல்ல குடும்பத்துப்பெண் போல், அவர் பெயருடன் தன் பெயரை இணைத்து கொள்ளவில்லை. எனவே தன் மனைவி இந்த திருமண உறவில் எந்த நம்பிக்கையும் பற்றும் இல்லாதவர் என்று அவர் கூறி இருந்தார்.

ஒரு மனிதரை அவரின் அடையாளத்தோடு மாண்பு குறையாமல், உடல் அளவிலும் உள்ளத்தளவிலும், இங்கு பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய தான் நமக்கு இவ்வளவு சட்டங்களும் சமூக கட்டமைப்புகளும். நம் சமூகத்தில் வாழும் பெண்கள், தனக்கான விருப்பம், அன்பு, காதல், துணை, என்பதை தேடி, திருமணம் என்னும் அமைப்பிற்குள் நுழையும் போது, முதலில் சந்திக்கும் சிக்கல், தன் சுய அடையாளத்தை இழக்கும் இடம், பெயர் மாற்றம்.

இந்தியாவில் இது சட்டப்படி கட்டாயமில்லையே, பின்பு ஏன் கவலை என்று ஒரு பொதுப் பார்வையில் பின் தள்ளி, இந்த சிக்கலைப் பார்க்க முடியாது. அவ்வளவு முக்கியம் இல்லாத, ஒரு பெண்ணின் சுய தேர்விற்கான இடமாக, திருமண உறவிற்கு பின் செய்துகொள்ளும் பெயர் மாற்றம் இருந்திருந்தால், திருமிகு ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றம் செய்து கொள்ளும் போது, அது நம் சமூகத்தின் பேசுபொருளாகி, செய்தித் தாள்களின் முக்கிய இடங்களைப் பிடித்திருக்காதே?. ரசிகர்களின் மனதை, அவர்கள் பதிவிட்டது போல் அந்த அளவிற்கு பாதிக்கவும் செய்திருக்காதே...

தொடர் சமூக போராட்டங்களினால் தமிழகத்தில் ஒருவரின் பெயரின் மூலம், அவர்தம் சாதியை, பிரிவை, வர்க்கத்தை உற்று நோக்கி, அவருக்கான இடத்தை நிர்மாணிப்பதை, ஓரளவிற்கு மேலோட்டமாவது நாம் நிறுத்திக்கொண்டுள்ளோம். ஆனால் பெண்கள் விஷயத்தில், 'இவள் யாருடையவள்' என்ற கேள்வியை, பெயரின் மூலம் தேடுவதை நிறுத்தி நாகரிகம் அடைந்து உள்ளோமா என்றால், இன்றும் இல்லைதான்.

ஒடிடியில் கொரிய நாடகங்களைப் பார்த்து ரசிக்கிறோமே தவிர, திருமணத்திற்கு பின்னும் அங்கு உள்ள பெண்கள் தங்கள் பெயர்களை மாற்றி கொள்ளும் வழக்கமோ, அதற்கான எந்த கலாச்சார கட்டாயமோ அவர்களுக்கு இல்லை என்பதை கவனிக்க மறுக்கிறோம்.

இன்னொரு வழக்கைப் பார்ப்போம். கணவன் - மனைவி இருவருக்கும் அது இரண்டாவது திருமணம். கணவனின் மனக்குறை தன் மனைவியின் முகநூல் கணக்கில் உள்ள பெயரில் தன் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை என்பது. அது முற்றிப்போய் பிரிவு வேண்டி வந்துவிட்டனர். சமூக ஊடகக் காலகட்டத்தில் இது வேறு கூடுதல் சிக்கல்.

இதுபோல் ஒரு பெயரின் மூலம், தன் மதிப்பின்மைகளை, உறவின் மேல் உள்ள அன்பை, நம்பிக்கையை அளவிட்டு, கேள்விக்குள்ளாக்கி, உறவுகளை நொறுக்கிவிடும் கொடுமைகள் உள்ளன. இவை ஒருபுறம் இருக்க, திருமணத்திற்கு பின் ஏற்படும் இந்த பெயர்மாற்றம் மூலம் சொத்து தொடர்பாக ஏற்படும் சட்டப்பிரச்னைகள் இன்னொரு புறம்.

தாத்தா எழுதி வைத்திருக்கும் உயிலில் பேரன்களுக்கும் பேத்திகளுக்கு சொத்தில் பங்கு என இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். பேத்திக்கு திருமணமாகி பெயர் மாறிவிடும் நிலையில். ‘அந்த உயிலில் குறிப்பிட்டுள்ள பேத்தி நான் தான்’ என்று திருமணச் சான்றிதழ் உட்பட்ட கூடுதல் ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டி இருக்கும். சொத்து என்று வந்துவிட்டால் உறவுகள் இரண்டாம்பட்சமாகிப் போய்விடுவதை பார்க்கத்தானே செய்கிறோம்.

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது வரும் கடவுச்சீட்டு புதுப்பித்தல், விசா நீட்டித்தல் போன்ற அலுவல் ரீதியிலான சிக்கல்கள் எல்லாம் கணவன் பெயரைக் கோரும். அதை அனுபவிக்கும் பெண்களுக்கு இதனால் பெரும் மன அழுத்தம் ஏற்படுகிறது. தான் சார்ந்த உறவுகள் எல்லாம் தோற்றுக்கொண்டிருக்கும்போது தான் வாழ்வாதாரத்திற்கு, தன் அடையாளத்திற்கு, தன் மாண்பிற்கு என கைப்பற்றி உள்ள வேலையில் ஏற்படும் மனஅழுத்தம் மிகத்தீவிரமானது.

இங்கு ஒரு பெண்ணின் பெயரிற்கு பின் இருக்கும் பெயர் பல சமயங்களில் அன்பின் அடையாளமாக இருப்பதில்லை. அது வெளிக் கட்டுப்பாட்டின் அடையாளமாகவும், அவள் யாருக்கு உடமையானவள் என்பதை நிரூபிக்கும் பொருளாகவும் உள்ளது. சமீபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தான் சார்ந்த ஒரு வடக்கத்திய சமூகத்தின் வழக்கத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் அவரது முழுப் பெயருமே, அவரது கணவனின் பெயருக்கு ஏற்றவாறு மாறிவிடுமாம். அது அவரது வாழ்வின் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறதாம்.

ஏற்கெனவே பெண்களின் உழைப்பைச் சுரண்டுதல், சம அங்கீகாரம் மறுத்தல், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் போன்ற குற்றங்கள் நிரம்பி வழிகின்றன. நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில், அரசியல் கட்சிகளில், நீதிமன்றங்களில், கல்வி, மருத்துவம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரம் மற்றும் முக்கிய பொறுப்புகள் உள்ள பதவிகளில் பெண்களுக்கு இடங்களைப் சமவிகிதத்தில் பகிர மறுப்பது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் சமூகத்தில், ஒரு பெண்ணின் பெயரை, திருமணத்திற்குப் பின் மாற்றி அமைப்பது யார் நலனுக்கான புதிய தொடக்கம்?

கல்வியில் முன்னேறி இருக்கும் நம் சமூகத்தில் ஏன் இன்னும் இந்த பழக்கம்? ஒரு பெண்ணை அவளுடைய சுய தேர்வுகளுக்காக, திறமைகளுக்காக, இயல்புகளுக்காக மதிப்பதில், அவள் பெயர் மட்டுமே அவளுக்கான அடையாளம், அவள் அவளுக்கானவள் என்று பார்ப்பதில், நமக்கு என்ன சிரமம்?

(கட்டுரையாளர் வழக்குரைஞர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram