அராத்து 
சிறப்புப்பக்கங்கள்

பிரேக் அப்... எமோஷனா? ஃபேஷனா?

அராத்து

ஜென்ஸீ தலைமுறையினர் பிரேக் அப்பை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்? அதை எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள்? அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் சமீபமாக பலர் பொதுவெளியில் பேசுவதைக் காண முடிகிறது.

பிரேக் அப் என்பதை என்னமோ சமீபத்தில்தான் அறிமுகமான ஒரு விஷயம் போலப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறந்த வரையில் பெரும்பாலும் பிரேக் அப் இல்லை. சங்க காலத்தில் தலைவன் பரத்தையர் வீட்டில் இருந்து சோர்வாக இல்லம் திரும்பினாலும் வெந்நீர் போட்டு குளிப்பாட்டி தலை துவட்ட பத்தினிகள் இருந்த காலம். அதே போல ஒருவனை மனதில் நினைத்துவிட்டாலே கூட சாகும்வரை அவன் ஒருவனுடன் மட்டும் தான் தன் உடலைப் பகிர்ந்து கொள்வேன் என பெண்களிடம் உறுதியான ஓர் எண்ணம் இருந்த காலம். அதனால் பிரேக் அப் பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. அதாவது பெண்களால் பிரேக் அப் நடக்காது. ஆண்கள் சமயங்களில் விட்டுவிட்டு ஓடிப்போவார்கள். அதைப் பிரிவு என முடித்து விடுவார்கள்.

அதற்குப் பிறகு பெண்கள் கொஞ்சம் தலையெடுத்து வெவ்வேறு காரணிகளை சீர்தூக்கிப் பார்த்து இந்தப்பய நமக்கு வேண்டாம் என முடிவெடுக்க ஆரம்பித்த காலத்தில்தான் காதல் தோல்வி என்ற பதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமானது. அதாவது திருமணத்தில் முடியாமல் போகும் காதலைத் காதல் தோல்வி என அறிவித்தனர். இந்தக் காதல் தோல்வி காலத்தில் ஆண்கள் தாடி வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ஆண்கள் மத்தியில் அது ஒரு ஃபேஷனாக இருந்தது. அப்போது அரிதாகத்தான் பெண்களுக்குக் காதல் தோல்வி வரும். ஆண்களுக்குக் காதல் தோல்வி என்றால் தாடி வைத்துக்கொள்வது ஃபேஷன் என்றால் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வது ஃபேஷன் ஆக இருந்தது. கர்ப்ப வலி மற்றும் பிரசவ வலியில் காதல் தோல்வியின் வலியை மரத்துப் போகச் செய்து ஆசுவாசம் அடைந்தனர் பெண்கள்.

ரெட்ரோ ஸ்டைலில் இந்த காதல் தோல்வியை “லவ் ஃபெயிலியர்” என ஸ்டைலாக அழைத்தனர். காதல் தோல்வி பாடல்கள் என கேஸட் கலக்‌ஷன் போட்டு விற்பார்கள். இப்போதும் அதை ப்ளே லிஸ்டில் வைத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் ஜீவன்களும் உண்டு. காதலில் தோல்வி அடைந்த கட்டிளம் காளை ஒருவன் தோல்வியடைந்த தன் காதலையும், தன் காதலியையும் பற்றி விவரிக்கும் போது கேட்பவருக்கு ஸ்கலிதம் ஆகி விடும். “அவ எப்டி தெரியுமா என” ஆரம்பித்து , காதல் தோல்வியடைந்த ஒருவன் “அவளை” விவரிக்கும் போது கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் “அவளை”க் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அல்லது அவளுடன் மனதுக்குள் தனியறையில் தாம்பத்திய வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

ஸோ …தாடி வைத்துக்கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது, காதல் தோல்விப் பாடல்கள் கலக்‌ஷன் கொண்ட கேஸட் வாங்கிக் கேட்பது, காதலையும் காதலியையும் பற்றி பலரையும் அமர வைத்து உயிரை உருக்கிக் கதை சொல்வது அல்லது கதாகாலட்சேபம் செய்வது என லவ் ஃபெயிலியரை கொண்டாடித் தள்ளி இருக்கிறார்கள் தமிழர்கள்.

இதன் நீட்சியாக சில வருடங்களுக்கு முன்னால் வரையில் காதல் தோல்வி அடைந்தால், சினிமா ஹீரோ தண்ணி அடித்து விட்டு நடு ரோட்டில் விலை மாதர்கள் அல்லது முக்கிய சாலைகளில் இரவினில் ஆட அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட பெண் பணியாளர்களுடன் குத்துப் பாட்டு என ஒன்றை ஆடும் ஃபேஷன் ஆரம்பித்தது.

இப்படி பிரிவு -> காதல் தோல்வி -> லவ் ஃபெயிலியர் போன்ற நாமகரணத்துடன் குத்துமதிப்பாகத் திரிந்து கொண்டிருந்ததுதான் தற்போது “பிரேக் அப்” என்று கெஜட்டில் பெயர் மாற்றிக்கொண்டு ஜென் ஸீ இடையே உலவ ஆரம்பித்து இருக்கிறது.

இப்போது பிரேக் அப் என்றால் ரொமாண்டிக் உறவில் இருந்த இருவர் தனித்தனியாகப் பிரிவது என்று ஆகிவிட்டது. இதற்கு முன் பிரேக் அப் என்பதன் அர்த்தம் - the division of something into smaller parts. அதாவது - ஏதோ ஒன்று சின்னஞ்சிறு பகுதிகளாக பிரிவது அல்லது உடைவது. அதனால் தான் இப்போதும் பிரேக் ஆன பின்பு அப்டியே ஒடைஞ்சி போயிட்டேன் எனச் சொல்கிறார்களோ என்னவோ.

நீண்டகாலமாக காதல் என்பது அகவயமானதாக இருந்து வந்திருக்கிறது. அது படிப்படியாக புறவயமாக மாறி வந்து இப்போது இப்படி நின்றுகொண்டிருக்கிறது. எப்படி? காதலில் இப்போது ஓர் உணர்வோ, வெளிப்பாடோ பிரதானம் அல்ல. காதல் என்பது இப்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். காதல் என்பது ஒரு ‘பர்ஃபாமென்ஸ்’ ஆக மாறி விட்டது. பார் என்னுடைய ஆள் எப்படி சூப்பர் ஆளாக இருக்கு பார், என உலகுக்குக் காட்டி தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடியதாக மாறி விட்டது.

இப்போது இருவர் ஒரு காதல் உறவுக்குள் இருந்தால் அது தற்போது Performative relationship ஆக இருக்கிறது. இருவரும் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொள்வது பின் தள்ளப்பட்டு, மற்றவர்களைப் பொறாமைப்பட வைக்க வேண்டிய ஒரு கருவியாக (“டூல்”) ஆக மாறி நிற்கிறது.

அடுத்து ஒருவரை ஒருவர் நேசிப்பது என்பது போய், தன்னை அடுத்தவர் எப்படி எல்லாம் நேசிக்க வேண்டும் என ‘டாமினண்ட் பார்ட்னர்’ எதிர்பார்ப்புகளை முன் வைக்கிறார்; அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதில் டாமினண்ட் பார்ட்னர் என்பவர் ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம். டாமினண்ட் என்பது அழகாக இருக்கலாம், ஸ்மார்ட்நெஸ் ஆக இருக்கலாம். பொருளாதாரமாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்தப் பின்னணியில்தான் ஜென்ஸீக்களின் பிரேக் அப்பை அணுக வேண்டும். முன்னெல்லாம் ஓர் உறவு முறிந்தால் ‘ஹார்ட் பிரேக்’ என்பார்கள். உறவு முறிந்ததில் வலி இருக்கும். அந்த வலி ஆறுவதற்கு காலம் எடுக்கும். இப்போது அது எதுவும் பெரிதாக இல்லை. ஒரு Performative relationship இல் உறவே மலர்ந்திருக்காது. எமோஷனல் பாண்டிங்கே உருவாகி இருக்காது. ஏதோ ஒரு எதிர்பார்ப்புப் பொய்த்துப் போய் அல்லது இருப்பதை விட கொஞ்சம் சிறப்பான வேறு ஒரு ஆள் கிடைப்பதால் பிரேக் அப் நடப்பதால், இரு தரப்பும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள்.

ஒரு கார் அல்லது மொபைலை அப்கிரேடு செய்வோம் அல்லவா? அதைப்போல ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன எக்ஸ்சேஞ்ச ஆஃபர் அல்லது உபயோகப்படுத்திய பொருட்களை சகோதர சகோதரிக்கு தருவோம் அல்லவா? அந்த அளவுக்கு இன்னும் போகவில்லை. ஆனால் சில இடங்களில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் நடந்து கொண்டிருக்கின்றன.அது பிரபலமாகவும் ஆகிக்கொண்டு இருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் எனில் ஓர் இரவுக்கு மட்டும் ‘கார் சாவி’ போட்டுக் குலுக்கி ஜோடி மாற்றிக் கொள்தல் அல்ல. உதாரணமாக இரண்டு ஜோடிகள் நண்பர்களாகப் பழகி, உள்ளுக்குள் கிராஸ் நெருப்பு பற்றிக்கொண்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் மாற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு காதல் உருவாவதற்கு காலம் எடுத்தால் தானே பிரிவதற்கும் நேரம் எடுக்கும்? சடுதியில் ரிலேஷன்ஷிப்புக்குள் வருவதால் சடுதியில் பிரிந்தும்விட முடிகிறது.

பல நேரங்களில் எதனால் பிரேக் அப் என்பதே சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஜென் ஸீ பையன் எதனால் பிரேக் அப் நடந்தது என ஒரு கதை சொன்னான். அதில் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. கதைதான் புரியவில்லை. பிரேக் அப் கொடுத்த அந்தப் பெண்ணின் புத்திசாலித்தனம் புரிந்தது. அந்தப் பெண், பிரேக் அப் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ‘மேனுப்புலேட்’ செய்து இவனும் அதை நம்பி, தான் அவளுக்கு சரியில்லாத ஆள் என ஒப்புக்கொண்டு இவனின் சம்மதத்தோடு பிரிந்திருக்கிறார்கள்.

இன்னொரு சம்பவம் வித்தியாசமானது. எனக்குத் தெரிந்த ஜென் ஸீ பெண் ஒருத்தி. அவளின் காதலன் அவளுடைய தோழிகளின் புகைப்படங்களைக் கேட்டுள்ளான். இவளும் அனுப்பியிருக்கிறாள். அடுத்து அந்தத் தோழிகளின் அந்தரங்கப் புகைப்படங்களைக் கேட்டிருக்கிறான். மனதுக்கு பிடிக்காவிட்டாலும், ஹாஸ்டலில் அப்படி இப்படி இருக்கையில் புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறாள். அடுத்து தோழிகளின் தொலைபேசி எண் கேட்பது, தனியாக சந்திக்கையில் தோழிகளையும் அழைத்து வரச்சொல்லி கட்டாயப்படுத்துவது, தான் அழைத்து வரும் நண்பர்களிடம் ஜோவியலாக இருக்கத் தூண்டுவது என முயன்றிருக்கிறான்.

“ஓப்பனா சொல்லணும்னா, 3 சம் இல்லன்னா குரூப் செக்ஸ்க்கு டிரை பண்ணிருக்கான் அராத்து” என்று சொன்னாள். ஆள் மாற்றிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது என்றாள்.

இதில் காமடி என்னவென்றால், அவன் இவ்வளவு செய்தும், இவள் பிரேக் அப் கொடுக்கவில்லை. இவளைக் கட்டுப்பெட்டி, மாடர்ன் இல்லை எனச் சொல்லி அவன் தான் பிரேக் அப் செய்திருக்கிறான்.

பிரேக் அப்பை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஜென் ஸீக்கள் வாழ்வில் முடங்குவதில்லை என்பது ஒரு பக்கம் பாஸிடிவாகத் தோன்றினாலும், அவர்கள் உறவையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் இதன் மூலம் தெரியவருவது. இது கொஞ்சம் கவலையளிக்கும் விஷயம் தான்.

இது அல்லாமல் உலக அளவில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜென் ஸீ குரூப் ஆட்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்து விட்டது அல்லது ‘ஏ செக்ஸுவலாக’ இருக்கிறார்கள். இதனாலும் சில இடங்களில் பிரேக் அப் நடக்கிறது. ஆண் உடல்ரீதியான உறவில் நாட்டமில்லாமல் இருக்க, பெண் அவனிடம் உரிமையுடன் நெருங்குகையில் - “ஏண்டி இப்டி காஜி புடிச்சி அலையிற” எனக் கடுப்படிக்க ஆரம்பிக்கிறான். இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் ‘ஸ்கிரீன் டைம்’ என்கிறார்கள். மொபைல் மற்றும் லேப்டாப்பில் அதிக நேரம் செலவழிப்பது ஒரு முதன்மையான காரணம் என்கிறார்கள்.

இவை அல்லாமல் இப்போது வேறு பல புதுக் காரணிகளும் உருவாகியிருக்கின்றன. தனி மனித சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது. தனக்குத் தனியாக ஸ்பேஸ் வேண்டும் என்கிறார்கள். நெருக்கம் தேவைப்படுகையில் நெருக்கம், விலகல் தேவைப்படுகையில் விலகல். இதைப் புரிந்துகொள்ளாமல் எப்போதும் போய் மேலே ஏறிக்கொண்டே இருந்தாலும் பிரேக் அப் தான்.

அடுத்து உறவைக் கெடுக்கும் பெரிய எமன் - மூட் ஸ்விங். ஒரு நாளைக்குள் பலமுறை மூட் ஸ்விங் வருகிறது என்கிறார்கள். என்னதான் மூட் ஸ்விங்கால் குரல் வளையைக் கடித்தாலும், புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்பது உறவுக்குள் எதிர்பார்ப்பு. இருவரும் ஒரே நேரத்தில் மூட் ஸ்விங்குக்குள் மாட்டி மெண்டலாக அவதாரம் எடுக்கையில் யார் யாரைத் தேற்றுவது?

இன்னொன்று சகிப்புத்தன்மை என்பது காணாமல்போய் விட்டது. ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கி, சின்னப் பிரச்னை என்றாலும் ரிட்டர்ன் அனுப்பி பழகி விட்டதை நிஜ வாழ்வில் உறவிலும் செய்யத் தலைப்படுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, இன்று பெரும்பாலான ரிலேஷன்ஷிப்புகள் ‘டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்’ ஆக மாறியிருக்கின்றன. டாக்ஸிக் எப்போது ஆரம்பித்தது? ஏன்? எதனால் என்றெல்லாம் யாரும் ஆராயத் தயாரில்லை. அந்த டாக்ஸிக் தாங்க முடியாமல் வெளியே போயிடலாம்டா சாமி என அடித்துப் பிடித்து பிரேக் செய்து வெளியே வந்து நிம்மதியாக மூச்சி விடுகிறார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம். உறவில் இருக்கும்போது ஏதேனும் ஒரு சின்ன விஷயம் ஒத்துவரவில்லை அல்லது எரிச்சல் ஊட்டுகிறது எனில் பிரிந்து விடுகிறார்கள். இதுவரை ஓக்கே. சிலர் பிரிவதற்கு பதில் அந்த கடுப்பேற்றும் நபரையே இந்த உலகில் இருந்து எடுத்து விடுவோம், பிரச்சனை முடிந்தது என்ற எளிமையான முடிவுக்கு வருகிறார்கள். அதாவது பெரிய திட்டமெல்லாம் போடாமல் வீட்டுக்கு வரவழைத்து நாற்காலியில் கட்டிப்போட்டு எரிப்பது, கோட்டையைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்று தள்ளி விடுவது, சாப்பாட்டில் விஷம் வைப்பது, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கழுத்தை அறுத்து ஃப்ரிட்ஜில் வைப்பது என மிகவும் எளிமையாக தனக்கு ஒத்துவராதவரை தங்கள் பிரபஞ்ச வாழ்வில் இருந்தே விலக்குகிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்படும் அதிர்ச்சியைத் தாண்டி, தங்கள் பிசினஸ் போச்சே என கூலிப்படையினரும் கடுப்பில் இருப்பதாகக் கேள்வி.

ஒரு சின்ன விஷயம் ஒத்துவரவில்லை எனில் கொலை செய்வதைத் தாண்டி இவர்களால் வேறு எதையும் சிந்திக்க முடியாத அளவுக்கு மூளை கற்காலத்தில் இருக்கிறதா? அல்லது ஜென் ஸீக்களின் மனம் நாம் நினைக்க முடியாத அளவுக்கு க்ரூயலாக மாறிக்கொண்டிருக்கிறதா என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.

பழங்காலம் போல அந்த அளவுக்கு விர்ஜின், கைபடாத தேகம், முத்தமிடாத இதழ்கள், தழுவாத கைகள் என்றெல்லாம் ஜென்ஸீக்கள் எதிர்பார்க்காததால், அட்லீஸ்ட் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாததால் பிரேக் அப் கள் சுலபமாகியுள்ளன. அதை தைரியமாக வெளியேவும் சொல்ல முடிகிறது. அதனால் தான் செக்ஸுவல் கம்பேட்டபிளிட்டி இல்லை என்பதாலும் தைரியமாக பிரேக் அப் செய்கிறார்கள்.

ஜென்ஸீக்கள் மத்தியில் சேர்வதும் பிரிவதும் சுலபமாக நடந்து விடுகிறது. ஏன் சேர்கிறார்கள் என்பதில் தெளிவில்லாததால், ஏன் பிரிகிறார்கள் என்பதிலும் தெளிவில்லை. இப்படிச் சொல்லலாம். சேர வேண்டும் எனத் தோன்றியது, சேர்ந்தார்கள். பிரிய வேண்டும் எனத் தோன்றுவதால் பிரிகிறார்கள்.

(கட்டுரையாளர் அராத்து, பிரேக் அப் குறுங்கதைகள் நூலாசிரியர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram