சிறப்புப்பக்கங்கள்

தொல்காப்பியரின் பிரேக் அப் விதிகள்

எண்ணித் துணிந்த தலைவிக்குத் துயரமில்லை

டாக்டர். சங்கர சரவணன்

சங்க அகத்திணை மரபுகள் ஐந்திணைகளுக்கான உரிப்பொருள்கள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐந்து திணைகளில் குறிஞ்சியில் மட்டுமே தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்கின்றனர். மற்ற நான்கு திணைகளிலும் தலைவனைப் பிரிந்த தலைவியின் மனநிலை அல்லது தலைவியைப் பிரிந்த தலைவனின் மனநிலை அல்லது தலைவனைப் பிரிந்த தலைவியைத் தோழி தேற்றுவது அல்லது தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் என எண்ணும் தோழிக்கு தன் மனவலிமையால் தலைவி தலைவனின் பிரிவைத் தாங்கி இருப்பதை வெளிப்படுத்துவது என்ற நிலையிலேயே சங்க இலக்கிய பாடல்களுக்கு திணை, துறை போன்றவை வகுக்கப்பட்டுள்ளன.

கூடலும் கூடல் நிமித்தமும் என்பதை உரிப்பொருளாகக் கொண்ட குறிஞ்சித் திணையில் தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்கின்றனர். பிற நான்கு திணைகளும் பிரிவின் அடிப்படையில் அமைந்தவையே. ஆனால், பிரிவின் பல நிலைகளை அல்லது பல வகைகளை அவை சித்திரிக்கின்றன எனலாம்.

முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவன் திரும்பி வருவான் என்ற உறுதியான நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். “கார் முந்தும் முன் என் தேர் முந்தும்” என்று வாக்களித்துப் பிரிந்து சென்ற தலைவன், கார்காலம் வந்த பின்னும் திரும்பவில்லை. இயற்கையை விடவும் தலைவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட தலைவி, “இது உண்மையான கார்காலம் அல்ல, இது கார்காலமாக இருந்திருப்பின் என் தலைவன் திரும்பி இருப்பான். இயற்கை பொய் சொல்லலாம். ஆனால், என் தலைவன் பொய் வழங்க மாட்டான்” என்று கூறுவதாக அமைந்துள்ளது ஒரு குறுந்தொகைப் பாடல்.

மருதத்திணையின் உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும். எங்கு செல்வம் சேர்க்கிறதோ அங்கு ஒழுக்கம் குறைக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ப வளமான நிலத்தில் வாழும் மருதநிலத் தலைவன் தன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையை நாடிச் செல்கிறான். சுவையான சங்கப்பாடல்கள் எழுதுவதற்கான களமாக அமைகிறது மருதத்திணையின் உரிப்பொருள். சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் என்பது கண்டிக்கக்கூடியதாக இருந்ததே தவிர தண்டிக்கக்கூடியதாக இல்லை. பரத்தையின் பொருட்டு தன்னைப் பிரிந்த தலைவனை தலைவி ஊடுகிறாள்; தோழி கண்டிக்கிறாள்; தலைவி மன்னிக்கிறாள் என அமைகின்றன பல சங்கப்பாடல்கள்.

குறுந்தொகையின் எட்டாவது பாடலாக அமைந்த ஆலங்குடி வங்கனார் பாடலில் ஒரு பரத்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையின் வீட்டில் சென்று தங்குகிறான். சிறிது காலம் கழித்து தன் வீட்டிற்கு திரும்புகிறான். அப்போது தலைவி தனது தோழிகளிடம் தன் தலைவன் நல்லவன் என்றும் பரத்தையே அவனை ஒழுக்கம் தவறச் செய்தாள் என்றும் பழிக்கிறாள். இச்செய்தி பரத்தையின் காதுகளுக்கு எட்டுகிறது. தலைவியைப் பழிப்பதுபோல பரத்தையின் கூற்றாக ஆலங்குடி வங்கனார் அருமையாக அந்தப் பாடலை அமைத்துள்ளார். “என் வீட்டில் வந்து என் அழகைப் பாராட்டி சிறிது காலம் வசித்த மருதநிலத் தலைவன் தற்போது தன் வீட்டில் தனக்குப் புதல்வனைப் பெற்று கொடுத்தவளின் சொல்லுக்கு கண்ணாடி பிம்பம்போல அடங்கி நடக்கிறான். உண்மை நிலைமை இப்படி இருக்க அவள் என்னைப் பழித்தாளாம். எங்கேனும் வயலில் உள்ள மீன் சென்று மாம்பழத்தை பறித்து வருமா?” என்பது அந்தப் பாடலின் கருத்து. “தலைவனுக்கு தலைவி மீது இருந்த காதல் குறைந்தபோது தன்னைத் தேடி வந்தான்- அவள் சொல்வதுபோல் தலைவனை நான் கவர்ந்து வரவில்லை” என்பதை மாம்பழம் கனிந்து வயலிலுள்ள மீனுக்கு உணவான உவமையைச் சொல்லி விளக்கினாள்.

தலைவியைத் தலைவன் பிரிவதற்குப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பொருள் தேடுவதற்காகப் பிரிதல், திருமணத்திற்கு பொருள் சேர்த்து வருவதற்காகப் பிரிதல், பரத்தையின் பொருட்டுப் பிரிதல் என பல்வேறு வகையில் நிகழும் பிரிவுகளில் மற்ற பிரிவுகளுக்கெல்லாம் எவ்வளவு காலம் பிரியலாம் என்று கால வரையறை செய்த இலக்கண மரபு, பரத்தையின் பொருட்டுப் பிரிதலுக்கு மட்டும் அதை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, எந்தக் காலத்தில் தலைவன் பரத்தையின் பொருட்டு தலைவியைப் பிரியக்கூடாது என்பதை மட்டும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

நெய்தல் என்பது இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கல் என்பது பெருந்துயரம். முல்லைத்திணையில் தலைவனைத் திரும்பி வருவான் என்று பிரிவுத் துன்பத்தை ஆற்றி இருந்த தலைவி, நெய்தல் திணையில் தலைவன் தன்னைப் பிரிந்து கடல் பயணம் மேற்கொண்டதால் கலங்கிபோய், புலம்புகிறாள். நெய்தல் திணையைப் பாடுவதில் புகழ்பெற்ற சங்கப்புலவர் அம்மூவனார்.

பாலை என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும். தலைவன் சென்ற வழியின் கொடுமையை எண்ணியும் அவ்வழியில் தலைவனுக்கு என்ன இடர் நேருமோ என வருந்தியும் தலைவனை பிரிந்த தலைவியின் சோகத்தைச் சித்திரிப்பவை பாலைத் திணைப் பாடல்கள். பாலைத் திணையைப் பாடுவதில் ஓதலாந்தையார் புகழ்பெற்று விளங்குகிறார்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை, ‘செலவழுங்குதல்’ என்னும் துறையில் அமைந்துள்ளது. செலவழுங்குதல் துறை என்பது தன் செலவு (பயணம்) எண்ணி தலைவி வருந்துவாள் என்பதை உணர்ந்த தலைவன் தன் பயணத்தை சில நாள்கள் தள்ளி வைத்து தலைவியை சமாதானம் செய்து அதன் பின் தன் பயணத்தை மேற்கொள்வதாகும்.

நசீம் நிக்கோலஸ் தலாப் என்ற அறிஞர் “தொடர்வண்டியை நீங்கள் தவறவிட்ட அனுபவம் ஒரு துயரமாக மாறுவது, அதைத் தொடர்ந்து நீங்கள் ஓடினால் மட்டுமே” என்கிறார். பிரிவுத் துயரும் அப்படித்தான்.

அதனால்தான் திருக்குறளில் ஒரு தலைவி செல்லாமல் இருப்பதானால் என்னிடம் சொல்; சென்று விட்டு விரைந்து வருவதானால் அதுவரை உயிரோடு இருப்பவர்களிடம் சொல் என்று சொல்கிறாள். காரணம் தன்னை பிரிந்த தலைவனின் பின்னால் அவள் நெஞ்சம் ஓடிக் கொண்டிருக்கிறது.

மாறாக, 1242வது குறளில் வள்ளுவர் சொல்லியிருப்பது போல “என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே” என்று எண்ணித் துணிந்த தலைவிக்குத் துயரமில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram