முல்லைப் பெரியாறு வீ சக்தி அருணகிரி, தேனி
சிறப்புப்பக்கங்கள்

முல்லைப் பெரியாற்றின் பிள்ளைகள்!

ம. காமுத்துரை

நதி என்றாலே தொண்டு கிழத்தின், அல்லது பெருத்த சீவாத்தியின் சாயலை உணரமுடியும். அவளை ஆரத்தழுவி நீந்தலாம், தொபீரெனக் குதித்து அலறச் செய்யலாம், அங்கத்தை வெட்டிச் சிதைத்து குறுக்கலாம். மணல் கொள்ளை அடிக்கலாம், நடு ஆற்றில் துளைபோட்டு நீரை அள்ளி விற்பனை செய்யலாம். ஊர்க் கழிவையெல்லாம் கொண்டு வந்து கொட்டலாம். நாம் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டு அங்கம் பதறாமல் நடந்து செல்லும் பரோபகாரி.

பலரால் கைவிடப்பட்ட திட்டம் அது. அதை நிறைவேற்ற எட்டு ஆண்டுகள் மனித நடமாட்டம் இல்லாத கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட மலையில் தங்கியிருந்து காட்டாறுகளின் போக்கினை ஆய்வுசெய்தார் பென்னி குக். மேற்கில் ஓடிக்கொண்டிருந்த பெரியாற்றின் போக்கை கிழக்கில் திருப்பி, அணைகட்டி, மலையைக் குடைந்து மறுகால் பாய்ச்சி மதுரையம்பதியின் பஞ்சத்தைப் போக்கினார். அதனால் ஏறத்தாழ எண்ணூற்று சொச்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு நீர்க்கொடையளித்தார். அந்த கர்னல் ஜான் பென்னிகுக்கின் கருணைமிக்க அர்ப்பணிப்பால் கிடைத்த செல்வம் முல்லைப் பெரியாறு. அதன் பிள்ளைகள் நாங்கள் என்பதில் எங்களுக்கு அத்தனை பெருமை. அணையில் திறந்துவிடப்பட்ட நீரை கைப்பிடியாய் அழைத்து வருவதுபோல ஆரோடும் பேரழகை, அதன் நீர்ப் பாய்ச்சலை மனம் துள்ள ரசித்தபடி தனது குதிரையில் ஆற்றின் கரைவழியே பயணித்து வைகை நதியில் தவழவிட்ட வரலாறு மிக்கது முல்லைப் பெரியாறு. எங்கள் காதல் நதி. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்திய கர்னல் ஜான் பென்னிகுக், இன்றைக்கும் இப்பகுதியின் குலசாமியாக பொங்கல் வைத்துக் கொண்டாடப்படுகிறார்.

நான் பிறந்தது அம்மாவின் ஊரான வீரபாண்டி. தேக்கடியிலிருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வழியாக நடந்து ஊரைக் கடக்கும் போது தடுப்பணையில் தவழ்ந்து செல்லும் முல்லைப் பெரியாற்றின் சோஓஒ வெனும் சப்தம் இப்பவும் காதுகளில் ஓங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. வீரபாண்டியில் கண்ணீஸ்வரமுடையார் கோவிலின் வாசலை உரசிக் கொண்டுதான் ஆறு நடக்கும். கௌமாரியம்மன் கோவிலுக்குக் கிழக்கே ஊர். கோவில் பக்கம் வந்துதான் வெளியூர் போக பேருந்து ஏறவேண்டும். அந்தக் காத்திருப்பு நேரம் முழுசும் ஆற்றின் பேரோசையை வாங்கியபடியே நிற்க வேண்டும். எத்தனை நேரம்தான் அமைதியாய் நிற்க முடியும். அவ்வோசை அருகில் வாவென இழுக்கும். மெல்ல நடந்து ஆற்றில் கால்நனைக்கச் சொல்லும். குறைந்தபட்சம் பாலத்தில் நின்று தடுப்பணையில் மலைப்பாம்பென தவழ்ந்துவரும் அப்பேரழகினை ரசிக்க மனம் துள்ளும். சரி, பேருந்து வரும்வரை சின்னதாய் நடை கொடுக்க எண்ணி, கரையோரம் நடந்தால் நாணல் பூக்களின் வருடலோடு, அணையின் இசைப்பில் கிறங்கி தடுப்பணைச் சுவரின் மீது நின்று ஹாவென அதன் ஹூங்காரத்தோடு நாமும் ஓசையிட்டு, நீர்த்தாரைகளின் சிதறல்களை பன்னீர்த் துளிகளாய் வாங்கித் திரும்ப எத்தனித்தால் மனம் ஏற்றுக்கொள்ளாது. தடுப்பணையின் கல்தளத்தில் நடந்து ஆற்றினை குறுக்காகக் கடக்கச் சொல்லும். அது ஒரு சாகசமான சிறுபிள்ளை விளையாட்டு. பாசிபடர்ந்திருக்கும் அணையின் விளிம்பில் பதனமாகக் கால் ஊன்றி நடக்க வேண்டும். சற்றே இழுவையுடன் கணுக்கால் தண்ணீர் வழிந்து கொண்டேயிருக்கும். அக்கரையில் வயல்களில் வேலை செய்துவிட்டு வரும் ஆண்பெண்களுக்கு இதுதான் சுருக்கப்பாதை, வேட்டி சேலையை ஏறப்பிடித்துக் கொண்டு சதக்சதக்கென சேற்றை மிதிப்பது மாதிரி சாதாரணமாக நடந்து வருவார்கள். அதிலும் புல்லுக்கட்டு சுமந்து வரும் பெண்களைப் பார்க்கும்போது நமக்கே பயம் வரும் எங்கே ஆறு சுருட்டி உருட்டி விடுமோ என்று. அப்படி நடந்து திரும்பி வருகையில் எத்தனையோ முறை பேருந்தைத் தவறவிட்டு தாமதமாக நிகழ்வுக்குச் சென்றிருந்தாலும் சற்றும் மனம் கிலேசம் கொண்டதில்லை.

தடுப்பணையில் இருந்து வழியும் நீரை கொஞ்சமாய்த் ஊருக்குள் திருப்பி விட்டிருப்பார்கள். ராஜவாய்க்கால் எனப்பெயர். கெண்டங்கால் அளவு நீரோடும். கரையோரம் ஊருக்குள் பொட்டியம்மன் கோயில், பெரியாண்டவர் கோயில், வழக்கமான அரசமரத்தடி தோறும் வாசமிருக்கும் பிள்ளையாரது திறந்தவெளி கோயில்கள் அமைந்திருக்க, பெண்கள் குளித்து, துணிதுவைக்க, எம்போன்ற சிறுவர்கள் நீச்சலடித்துப் பழகத் தோதுவாக இருக்கும். ஆண்கள் வாய்க்காலில் குளிப்பது அரிது. காலைக்கடன் கழித்து பல் துலக்குவதோடு சரி, குளிப்பதற்கு ஆறுதான், எதிர்நீச்சல் போட்டு, அல்லது இடுப்பளவு நீரில் முங்கிக்குளித்து எழவேண்டும்.

அதிலும் ஊருக்குள் கேதம் (சாவு) விழுந்து விட்டால் ஆற்றங்கரையில்தான் தகனம் செய்வார்கள். அந்தக் கரும காரியத்தை முடித்து விட்டு, ஆண்கள் படைபடையாய் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தால் ஆறே அரண்டு போகும்விதமாய் ஆளுக்கொரு குளியல் முறை நடக்கும். கரையில் போட்டிருக்கும் துவைகல்லில் உட்கார்ந்து கொண்டு காக்காய்க் குளியல் செய்பவர்கள், உடன்வந்த சிறுவர்களை குளிப்பாட்டுவதாகச் சொல்லி கெண்டங்கால் நீரில் நின்று கைகளால் நீரை இறைத்துக் குளிப்பவர்கள், ஆற்றுக்குள் சரசரவென இறங்கி ஆழமான பகுதியில் முக்குளித்து எழுந்து வருபவர்கள், அப்படியே மூழ்கி அக்கரை தொட்டு நீச்சலடித்து திரும்புபவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அழுக்குத் தேய்க்கும் லட்சணம் இருக்கிறதே… அட அடா. புளிச்சநாரை எடுத்து முதுகுப்பக்கம் குடுத்து வீர்வீர்ரென இழுப்பதும், நார் இல்லாவிட்டால் இடுப்புத்துண்டைக் கழற்றி வரட்டு வரட்டு எனத் தேய்த்து, குளியல் திருவிழா கோலாகலமாக நடக்கும். கடைசியில் அணிந்து வந்த உடுப்புகளை அலசிப் பிழிந்து வேட்டியை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து கோவணத்தோடு நடந்து வரும் அழகை பார்க்க ஆயிரம் கண் போதாது.

அதேபோல திருவிழா முடிந்ததும், முளைப்பாரி போட்டு பெண்கள் படை திரண்டு ஆற்றில் கலக்க வருவார்கள். அப்போதும் ஒரு கலகலப்பு இருக்கும். விதவிதமாக அலங்கரித்துவரும் பெண்கள் தாங்கள் தலையில் சுமந்து வரும் முளைப்பாரியை மட்டும் ஆற்றில் ஓடும் நீரில் போட்டுவிட்டு, உடுத்திய உடை கசங்காமல் நுனிவிரலில் சேலை, பாவடையினை உயர்த்திப் பிடித்து கணுக்கால்களை மட்டும் ஆற்று நீரில் நனைத்துவிட்டு அப்படியே திரும்புவார்கள். அவர்களின் வளையல் சத்தமும், தோழிகளுடன் கொள்ளும் சிணுங்கல்களும் உடன்வரும் முறைப்பையன்களை வம்புக்கு இழுக்கும் வசீகர முறைப்புகளும் ஆற்றங்கரைக்கு கிளுகிளுப்பு. அப்போது வீசும் காற்றுக்கும் தனீ வாசம் கிடைக்கும்.

எங்க ஆயா – அம்மாச்சி எங்களது சிறுவயசில் ஒரு கதை சொல்லுவார். மாரியம்மன் கோயில் விலக்கிலிருந்து ஊருக்குள்ள போக, ரெண்டு கிலோமீட்டர் நடக்கணும். பாதைல ரெண்டுபக்கமும் நூல் பிடிச்சாப்ல இச்சிமரங்கள் நெடுநெடுன்னு வளந்து வெய்யில் மறைப்பு குடுக்கும். நடந்துவார வழியில, பொட்டியம்மன் கோயில ஒட்டி சின்னதா ஓடை ஒண்ணு பாதையக் குறுக்கால கடக்கும். அதுல எப்பவும் தண்ணியெல்லாம் வராது. மழ பெஞ்சால் மட்டும். பொசுபொசுன்னு கந்தலும் கதக்கலுமா வெள்ளம் வந்து ராஜவாய்க்கால்ல கலந்து காணாமப் போயிடும். அப்பிடியான காலத்தில ஐப்பசிமாசம் ஒருநாள் தேனி லட்சுமி டாக்கீசுல எம்ஜிஆர் படம் பாக்கணும்னு ஒரு நெறமாத சூலிக்கு ஆச வந்திருச்சு. ஆத்தா கிட்டக்கச் சொல்லி இருக்கா, ஆத்தாளும் எம்ஜியார் பைத்தியம், புருசங்காரன் வந்ததும், புள்ள இப்பிடி படம் பாக்க ஆசப்படுறா, அவ ஆசய நெறவேத்தாட்டி, பொறக்குற புள்ளக்கி காதுல ஓட்ட விழுந்துரும்னு பயமுறுத்தி கெளம்பிட்டா, புருசனும், மக ஒடம்பப்பாத்து கூட்டுவண்டி கட்டி, வைக்கோல் மெத்த போட்டு அனுப்பிச்சு வைக்கிறான். படம் முடிஞ்சி கெளம்புறாக, எங்குட்டோ தூரத்துல மழ பேய்ற வாசனை காத்துல வருது. வண்டிக்காரன் உசாராகி காளைகள வெரட்டுறான். ஊர் எல்லைல கால் வச்சதும், தூத்தல் விழ ஆரம்பிக்கிது. எறசல் மகமேல படாம இருக்க, வண்டிக்கு முன்னும் பின்னும் உள்ள படுதாவ எறக்கி விட்டுக்கறா., நடத்தி வந்தா ஓடைக்கிட்ட நாலஞ்சு வண்டி நிக்கிது. உள்காட்டுல மழ பேஞ்சு. ஓடைல வெள்ளம் போகுதாம். மாடுக கால வைக்க மாட்டேங்கிது. நல்ல இழுவைன்னு சொல்றாக. மழயும் வலுக்குது. நல்ல இருட்டு. மகளுக்கு வலி வந்திருச்சு. அப்பறம் என்னா, அங்கன இருக்க பொம்பளைக சேந்து வண்டியிலயே பேறுகாலம் பாத்து, பொம்பளப் பிள்ளைய பிதுக்கி எடுக்கறாக. வெள்ளம் வந்த நாள்ல பொறந்ததால, வெள்ளத்தாய்னு பேரு வச்சிட்டதா ஆயா கதைய முடிச்சிது.

இன்னொரு கதையும் உண்டு. அந்த நாள்ல பொம்பளப்பிள்ளைக புருசனோட சண்ட போட்டுக்கிட்டு பொசுக்குன்னு ஆத்துல போய் விழுந்து தற்கொலை பண்ணிக்குவாங்க. அப்படித்தான் தங்கரத்தினம் வீட்டு ஆம்பளைக்கி பொண்டாட்டி மேல சந்தேகம். ராத்திரியானா நெதமும் புருசங்காரெ பொண்டாட்டிகூட மல்லுக் கட்டிக்கிருப்பாலயாம். பொண்டாட்டிக்காரிக்கு ‘சீ’ந்னு வந்துருச்சு. அம்மாவாசைக்கு மறுநாளு காலம்பற எந்திரிச்சு ஈஸ்வரன் கோயிலுக்குக் கெளம்பிட்டா, புள்ளைகள நீதேங் காப்பாத்தணும்னு சாமியக் கும்புட்டுட்டு, படில எறங்கிட்டா, அங்கிட்டு வெளிக்கி இருக்க வந்த அவளோட கொளுந்தனாரு, என்னா மதனிமாதரி தெரியுதுன்னு அவசர அவசரமா ஓடிவந்து ஆத்துல குதிச்சு நீஞ்சி அவளத் தேடிப் பாக்க அதுக்குள்ள இழுவைல மாட்டிக்கிட்டா, இவனும் விடாம ஓடுபாதையிலேயே நீஞ்சி ஆளக் கண்டுபிடிச்சி, அவ தலமுடியக் கொத்தாப் பிடிச்சு இழுத்து வந்து கரையில போட்டு, அடிவகுத்துல கையக் குடுத்துத் அமுக்கி குடிச்ச தண்ணிய வாந்தியெடுக்க வச்சுட்டான். பொளீர்னு காலை வெய்யிலுல அவ கூந்தல வெலக்கி மொகத்தப் பாத்தவெ அரண்டு போய்ட்டான். ஏன்னா அது மதனி இல்ல. உப்பார்பட்டி வண்ணார் பொம்பளையாம்! தொவகல்லு நகத்திப் போடயில கால் தடுமாறி உருண்டு வந்திருக்கா. அப்பறம் ? வழக்கம்போல ரெண்டு நாள் கழிச்சி குன்னூர்ப் பாலத்து அடீல சிக்கிகிடந்த தாங்கரத்தினம் சம்சாரத்தத் தூக்கி வந்தாகளாம்.

இப்படியான கதைகளைக் கேட்டால் தனிப் புத்தகமே போடலாம். அதுபோல மீன்பிடிக் கதைகள். வலபோட்டுப் பிடிக்க, தூண்டில் வச்சுப் பிடிக்க, நீர்வற்றிய காலத்தில் மட்டுமல்லாது புதுத் தண்ணி வரும்போதும் மீன் பிடிப்பு நடக்கும், ஆற்றைவிட வாய்க்காலில் அதிகம் கிடைக்கும். அயிரையும், குரவையும் வீடு மணக்கும்.

வெள்ளம்னு சொன்னாலே எல்லாரும் பயப்படுவாங்க இல்லியா… எங்களுக்கு பயமே கிடையாது. இப்பவும் இந்த வருசம் கூட வெள்ளம் வந்தது. கோயில் சுவரை எட்டி மோதிப்போனது. அரசாங்கத்தின் எச்சரிக்கை, ஆள் நடமாட்டாம் இருக்கக்கூடாது அப்படி இப்படின்னு உத்தரவு போட்டாலும் வெள்ளத்தைப் பார்வையிட ஊர்ச்சனம் திரண்டு வரும். அதுவொரு கண்கொள்ளாக் காட்சி. திமுதிமுன்னு செந்தண்ணி திரண்டு உருண்டு வரும் அழகை எப்போ பாக்க முடியும், கள்ளழகர் ஊர்வலத்தில திரண்டு வரும் ஜனக்கூட்டம் மாதிரி ஆடலும் பாடலுமா கும்மாளமிட்டு வருமே. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல வாடிவாசல்ல இருந்து ஓடிவரும் திமில் வச்ச காளைகள் ஒரு நூறு ஆயிரம் கிளம்பி தாவித் தாவி வந்தா எப்பிடி இருக்கும் அந்த கம்பீரத்தை ஒருநாள் வெள்ளத்தில்தான் தரிசிக்க முடியும்.

கடைசியாக ஒரு செய்தி, இந்த அணையைக் காக்க, ஆற்றைக் காக்க, மாநிலம் தழுவிய போராட்டம் ஒன்று நடந்ததே. அது வரலாறு. எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்த மக்கள் திரள் ! மாவட்டம் முழுசும் எந்த சாதி மதம், அரசியல் பாகுபாடு இல்லாமல் பொங்கி எழுந்த வரலாறு முல்லைப் பெரியாறு தவிர வேறு எந்த நதிக்கும் கிடையாது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram