தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் வெற்றி தோல்வி என்ற இரண்டையுமே சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் படுதோல்வியில் விழும் ஓர் இயக்கம் மீண்டு எழுவது என்பது அதன் உறுதியான தலைமையாலும் , தன்னலமற்ற தொண்டர்களாலும் அவர்கள் நம்பும் கொள்கைப் பிடிப்பாலும் மட்டுமே சாத்தியம்! அப்படி கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக திமுக இருப்பதால்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் படுதோல்விகளுக்குப் பிறகும் மீண்டு எழும் இயக்கங்களில் முதல் இடத்தில் திமுக இருக்கிறது. நாட்டில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் பல்வேறு கட்சியினர் நாடெங்கும் கைது செய்யப்பட்ட “இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை” முதல் ஆளாக எதிர்த்த காரணத்தால் திமுக ஆட்சி 1975-இல் கலைக்கப்பட்டது.
கலைஞரின் இல்லத்தில் பணியாளர்களாக இருந்தவர்களைக்கூட போலீஸார் மிரட்டிய காரணத்தால் அத்தனை பேரும் பயந்து வேலைக்கு கூட வரவில்லை. தலைவர் கலைஞரின் ஓட்டுநர்கூட பணியில் இருந்து நின்று விட்ட நிலையில் மு.கண்ணப்பன் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலைஞருக்கு கார் ஓட்டிய நிகழ்வெல்லாம் நடந்தது.
தனது உடன்பிறப்புகள் எல்லாம் சிறைக்குச் சென்ற நிலையில் கிட்டத்தட்ட தனி நபராக தலைவர் கலைஞர் பணிபுரியும் சூழல். அவரது எழுத்துகள் சென்சார் செய்யப்பட்டதால் எதையும் வெளியில் வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலில் தான் எழுதிய அறிக்கையை நகல் எடுத்து சென்னை அண்ணா சாலையில் தனியாக நடந்துசென்று கண்ணில் படுபவர்களிடமெல்லாம் நோட்டீஸாக விநியோகித்தார்.
இயக்கத்தவர் அத்தனை பேரும் சிறையில் கலைஞரோ தனி மரம். இனி திமுக அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்த நிலையில் மிசா காலம் முடிந்த போது “திமுக அப்படியே கட்டுக்குலையாமல் இருந்ததோடு” பெரும் எழுச்சி பெற்று அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்கு சென்றது.
அதிலிருந்து அடுத்து வந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவே ஆளும் கட்சியான சூழலில் இனி ஒரு போதும் திமுக ஆட்சிக்கு வராது என்ற எண்ணமே பலருக்கும் இருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று முறை தோல்வியைச் சந்தித்தாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ எவரும் திமுகவை விட்டு விலகாது இருந்ததோடு ஆளும் கட்சியான எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இருந்து நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றோர் எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்தது கலைஞரின் உறுதியான தலைமையைப் பறை சாற்றியது!!
இந்த உறுதியான தலைமைப் பண்பினால்தான் கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1989 இல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது! ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் போலியான காரணங்கள் கூறி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த 1991 தேர்தலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பழி திமுக மீது சுமத்தப்பட தலைவர் கலைஞரைத் தவிர திமுகவில் நின்ற அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந்தனர். அதற்கும் சிகரம் வைத்தாற்போல 1993 இல் வைகோ திமுகவை உடைத்து தனிக்கட்சி கண்டார். கட்சி நிர்வாக ரீதியாக சரிபாதியாக பிளவு கண்ட நிலையில் 1996 தேர்தலைச் சந்தித்த திமுக முழுமையான வெற்றியைக் கண்டு “ஸ்வீப்” அடித்த அதிசயமும் நடந்தது!
அதே திமுக 2011 ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வரவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. எதிர்க்கட்சியாகக் கூட வர இயலாத திமுக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்வந்த 2016 ஆண்டு தேர்தலில் 89 இடங்களில் வென்றது. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு எதிர்க் கட்சியும் இத்தனை இடங்களைப் பெற்றதில்லை என்ற சாதனையையும் செய்தது.
அதன் தொடர்ச்சியாக கலைஞரும் காலமான நிலையில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். ஐம்பது ஆண்டுகள் கோலோச்சிய கலைஞரும் இல்லை, ஆளும் கட்சியும் இல்லை என்ற நிலையில் 2021 தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது திமுக!
வெற்றியும் தோல்வியும்தான் ஜனநாயகம். அதில் திமுகவின் டிஎன்ஏவில் இருப்பது
சிஎன்ஏ… அதாவது சி என் அண்ணாதுரை! தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து வெற்றிக்கான போராட்டத்தை நடத்தும் வித்தையை அன்று அண்ணா தன் தம்பிகளுக்குக் கற்றுத் தந்தார். தலைமுறைகள் கடந்தும் அந்த வித்தை திமுகவினருக்கு வழி வழியாகக் கடத்தப்படுகிறது. அதனால் என்றும் போராடி வெல்லும் இயக்கமாக திமுக இருக்கிறது.
(கட்டுரையாளர் எம்.எம். அப்துல்லா, திமுக மேனாள் எம்பி).