சிறப்புப்பக்கங்கள்

கடன் எலும்பை முறிக்கும்!

மிஸ்டர் முள்

படத்தயாரிப்புக்கு அலுவலகம் போட்டவுடன் தயாரிப்பாளர்கள் செய்யக்கூடிய முதல் காரியம் பட்ஜெட் போடுவது. பிள்ளையார் சுழிக்கு அடுத்தபடியாக அந்த பட்ஜெட்டில் முதல் இடம் பிடிக்கிற வஸ்து ‘வட்டி’ என்றால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால் எல்லா காலங்களிலும் 90 சதவிகித தயாரிப்பாளர்கள், தங்களிடம் கோடிக்கணக்கில் சொத்துபத்து இருந்தாலும், சூடான கரன்ஸிகள் இருந்தாலும் அதைத் தொடாமல் ஃபைனான்ஸ் வாங்கிதான் படம் எடுக்கிறார்கள்.

மஞ்சப்பையுடன் தி.நகரில் இறங்கி இளையராஜா ஸ்டுடியோ, பாரதி, பாக்கிய, பாண்டிய ராஜாக்கள் ஆபிஸ் விலாசம் எங்கே என்று தேடிய காலம் தொடங்கி இன்று கார்ப்பரேட்கள் கணிசமாக களம் இறங்கியுள்ள காலம் வரை அதே நிலவரம்தான்.

அந்தநாள் முதல் இந்த நாள் வரை, விலை மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்தாலன்றி சினிமாவுக்காக கடன் கேட்டு வங்கிகளை நெருங்க முடியாது. அப்படியே வேறொரு காரணத்துக்காக சினிமாக்காரர்களை ரொம்பவும் நெருங்கிக் கடன் கொடுத்த வங்கி அதிகாரி ஒருவர் சந்திக்கு வந்த கதையும் பல சினிமா கதைகளை விட சுவாரசியமானது.

ஆக தயாரிப்பாளர்களின் ஒரே தஞ்சம் சினிமா ஃபைனான்சியர்கள்தான். இவர்களின்றி இங்கே ஒரு படமும் அசையாது. தமிழில் மதுரை அன்புச்செழியன், அவரது அன்புத்தம்பி அழகர் தொடங்கி சந்திரபிரகாஷ் ஜெயின், மதன்லால், ஜஸ்வந்த் பண்டாரி, உத்தம் சிங், மகேந்திரகுமார், திருப்பூர் சுப்பிரமணியம், ஆர்.பி சவுத்ரி என்று சுமார் 20க்கும் மேற்பட்ட தொழில்முறை ஃபைனான்சியர்கள் இருக்கிறார்கள். என்ன படம், யார் ஹீரோ, யார் தயாரிப்பாளர் என்பதை ஒட்டி இவர்களது வட்டி 2 முதல் 6 சதவிகிதம் வரை இருக்கும். ஹீரோக்கள், இயக்குநர்களுடனான பஞ்சாயத்துகளால் படம் தாமதமாகும்போது இந்த வட்டி குட்டி போடும். அப்படி கடனைவிட பலமடங்கு வட்டியை கோடிகளில் கட்டிய தயாரிப்பாளர்களின் கண்ணீர் கதைகள் பல உண்டு. வட்டிக்கு வாங்கிய காசில் பாதியை படத்துக்கு செலவழித்துவிட்டு ஃபைனான்சியர்களுக்கு நாமம் போட்டு பறந்தோடிய தயாரிப்பாளர்களும் உண்டு.

இப்படி முழுமையாக ஃபைனான்சியர்களின் பிடிக்குள் இல்லாமல் இருந்த காலமும் ஒன்று இருந்தது. ஸ்டுடியோ வைத்திருந்த பெரும் முதலாளிகள் மட்டுமே படம் தயாரிக்க முடியும் என்பது முடிவுக்கு வந்த 70, 80, 90 களின் காலம். இந்த காலகட்டங்களில் பல பட்டிக்காட்டு ராசாக்கள் தயாரிப்பாளர்களானார்கள். ஒரு சிறிய முதலீட்டோடு எந்த பின்னணியும் இல்லாத அவர்கள் படம் தயாரிக்கத் துவங்கும்போது அவர் முதலில் பூஜையை அறிவித்தவுடன் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து ஒரு சிறு தொகை அட்வான்ஸாக வந்து சேரும். அடுத்து முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இரண்டாவது ஷெட்யூலுக்கு, படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடக்கும்போது, பின்னணி இசைக்கோர்ப்பின்போது, ரிலீஸுக்கு முந்தைய தினம் பெட்டி ஒப்படைக்கப்படும்போது முழு செட்டில்மென்ட் என்று ஒரு வட்டியில்லாப் பொற்காலம் அது.

பொற்காலம் நீண்டகாலம் நீடிக்கக்கூடாதே…படத்தை பெரும் பட்ஜெட்டில் எடுத்திருப்பதாகக் கதைகட்டி, அதை சில தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தலையில் கட்ட, ரிலீஸுக்கு முந்தின நாள் செட்டில் செய்ய வேண்டிய பணத்தை முறையாக செட்டில் செய்யாமல் சில விநியோகஸ்தர்கள் பிளாக் மெயில் செய்ய நல்ல உறவு முறியத் துவங்குகிறது.

அப்படி, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மத்தியில் இருந்த இந்த புரிதல் மெல்ல தோல்வியடையத் தொடங்கியபோதுதான் மெல்ல ஃபைனான்சியர்கள் தலையெடுக்கத் தொடங்குகிறார்கள். ‘படத்தை முதல்ல ஒழுங்கா எடுத்து முடி. அப்புறம் பாக்கலாம்’ என்று விநியோகஸ்தர்கள் முறுக்கிக்கொள்ள, ‘உங்க கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பிச்சையெடுக்குறதுக்குப் பதில் மூணு வட்டிக்கு வாங்கி அப்புறம் நான் இஷ்டப்பட்ட விலைக்கு படத்தை வித்துக்காட்டுறேன்’ என்று தயாரிப்பாளர்கள் கெத்துக் காட்ட ஃபைனான்சியர்கள் தவிர்க்க முடியாத இடத்துக்கு வந்து நின்றுவிட்டார்கள்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என்று எவ்வளவு பெரிய ஸ்டார் படங்களானும் இந்த ஃபைனான்சியர்கள் தயவின்றி அணுவும் அசையாது. இந்த நட்சத்திரங்களின் பெயர்களுக்கு விசில் பறப்பதற்கு முன்பே நன்றி கார்டுகளில் ஃபைனாசியர்கள் பெயரைத்தானே முதலில் பார்க்கிறோம்.

ஒரு நூறு கோடி பட்ஜெட் படம் என்று எடுத்துக்கொள்வோம். இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஃபைனான்சியருக்கு குறைந்த பட்சம் 5 கோடியாவது வட்டி கட்டியிருப்பார். பொதுவாக கடன் அன்பை முறிக்கும். ஆனால் சினிமாவில் அது எலும்பையே முறிக்கும் என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் அனுபவம்.

அப்படி வட்டி வாங்கியவர்களுக்கு எடுத்தவுடன் நன்றி கார்டு. அந்த வட்டிக்கு முதலும் செலுத்தி படம் பார்க்கிற ரசிகர்களாகிய யாராவது நன்றி கார்டு போட்டிருக்கிறார்களா ?

உன் பணம் அது என் பணம்

தமிழ் சினிமாவில் நிதி நெருக்கடிகளால் நடந்த தற்கொலைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றில் தயாரிப்பாளர் ஜி.வி, இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் மைத்துனர் உதயகுமார் தற்கொலைகள் திரைத்துறையை உலுக்கியவை. இதற்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் இது தொடர்பாக துளி ரியாக்‌ஷன் கூட கொடுத்ததில்லை. பின்னணி அப்படி. தயாரிப்பாளர்களை இவர்கள் எப்படி டீல் செய்வார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரண சம்பவம்…நாலைந்து படங்கள் எடுத்து நொடித்துப்போன தயாரிப்பாளர். முதல்பட ஹிட் கொடுத்த இயக்குநரை வைத்து யான நடிகரை வைத்து சதுரமான ஒரு படம் தயாரித்திருந்தார். கடும் நிதி நெருக்கடி. துவக்கத்தில் அவ்வளவாக ஒத்துழைக்காத நடிகர், படத்தின் டபுள் பாஸிடிவைப் பார்த்து ரொம்ப பாஸிடிவாக தானே 50 லட்சம் கடன் வாங்கி ரிலீஸுக்கு உதவ முன்வந்தார். மேற்படியானவரிடம் ஃபைனான்ஸ் கேட்க அவரும் ஓ.கே.சொன்னார்.

அந்தப் பணத்தை வாங்க ஹீரோ, அவரது மேனேஜர், தயாரிப்பாளர் மூவரும் செல்கிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அந்த 50 லட்சம் பணமும் வருகிறது. தயாரிப்பாளரும் ஹீரோவும் மகிழ்கிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் செட்டில்மென்ட்களை முடித்து படத்தை ரிலீஸ் செய்து நிம்மதியாகிவிடலாம். அடுத்த சில நொடிகளில் படங்களில் கூட காண முடியாத ட்விஸ்ட்.

“இதோ பாருங்க……. முந்தின படத்துக்கு நம்மகிட்ட வாங்குன கடனுக்கு வட்டியும் முதலுமா இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டேன். சீக்கிரம் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணி இந்தக் கடனையும் வட்டியையும் அடைக்கிற வழியைப் பாருங்க’’ என்று கொடுத்த பணத்தை தன் பக்கம் எடுத்துக்கொண்டார். இருக்கு ஆனா இல்லை கதைதான். புதுசாக பணம் கொடுத்தார். ஆனால் பழைய பாக்கிக்காக எடுத்துக்கொண்டார். வேறு வழி கைக்கு வராத பணத்துக்கு அரும்பாடுபட்டு அசலும் வட்டியும் கட்டினார் அந்த ஹீரோ.

இப்படி பட ரிலீஸ் சமயத்தில் ஹீரோக்கள் உணர்ச்சி வசப்பட்டு கையெழுத்துப்போட்டு நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் ஏராளம் உண்டு.

இது இன்னொரு ஹீரோ ஏமாந்த கதை. படத்தை தயாரித்திருந்தது பிரம்மாண்ட நிறுவனம்தான். நடிகரும் ஒரு டானாக வளர்ந்து வந்துகொண்டிருந்தவர்தான். ஆனாலும் ரிலீஸ் செட்டில்மென்ட்களுக்கு சுமார் 15 கோடி ரூபாய் அவசரத் தேவை. தயாரிப்பாளரை நம்பிக் கடன் தரத்தயாராக இல்லாத ஃபைனான்சியர் நடிகரையும் வரச்சொல்லியிருந்தார். அவர் முன்னிலையில் அந்த 15 கோடியைக் கொடுத்த ஃபைனான்சியர், “தம்பி நான் உன்னை நம்பித்தான் இந்த் தொகையைக் கொடுக்கிறேன்,’’ என்று சொல்லி ஒரு கையெழுத்து கூட வாங்காமல் கிளம்பிப்போயிருக்கிறார். நடிகர் தம்பிக்கு குஷியோ குஷி. ‘ஃபைனான்சியர் நம்மள வச்சி படம் தயாரிக்க விரும்புறார் போல. அதுக்குத்தான் விவரமா 15 கோடியை அட்வான்ஸா கொடுத்துட்டுப்போறார்’ என்று மைண்ட்வாய்ஸில் மகிழ்ந்து கொண்டிருக்க மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஒரு துண்டுப் பேப்பரில் வட்டித்தொகை குறிப்பிடப்பட்டு ஆட்கள் வந்து நின்றிருக்கிறார்கள். தம்பிக்கு மைல்ட் அட்டாக். ஆட்கள் அத்தோடு நிற்கவில்லை. ‘அசல் 15 கோடியை எப்பத் தருவீங்கன்னு அண்ணன் கையோடு கேட்டுட்டு வரச் சொன்னார்’ என்றதும் லேசாக மயக்கமடைந்து பின்னர்தான் சுயநினைவுக்கு வந்தார்.

‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்கிற பஞ்ச் டயலாக் ஹீரோகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த ஃபைனான்சியர்களுக்கு செமயாக பொருந்தும். படத்துவக்க கால கட்டத்தில் இன்முகத்துடன் கடன் கொடுக்கும் இவர்களை ஒரு கட்டத்துக்குப் பின்னர் தரிசிக்கவே முடியாது. வட்டி சதவிகிதத்தைக் குறைக்கச் சொல்வார்கள் அல்லது தொகையைக் குறைவாகக் கொடுத்து அடுத்த படத்தில் செட்டில் செய்கிறேன் என்பார்கள் போன்ற பஞ்சாயத்துகளுக்காக செல்போனைக் கூட ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். அவர்களின் பவுன்சர் உதவியாளர்கள்தான் தயாரிப்பாளர்களை டீல் செய்வார்கள்.

சமீபகாலமாக இந்த ஃபைனான்சியர்களும் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வதில் அவ்வளவு ஆர்வமாக இல்லை. அவர்களும் வெகு சிலருக்கே ஃபைனான்ஸ் செய்வதோடு மெல்ல தொழிலுக்கு மூட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஓடிடி தள முதலாளிகள் மிக முக்கியமான படங்களுக்கு மட்டும் ஃபைனான்சியர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram