சிறப்புப்பக்கங்கள்

கால்கடுக்கக் காத்திருக்கும் டைரக்டர்கள்

மிஸ்டர் முள்

சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவதைவிட கடினமானது வெற்றிகரமான இயக்குநராகத் தொடர்ந்து தாக்குப்பிடிப்பது. ரசிகர்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்ட இயக்குநர்களே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்த வெற்றிக்காக தவம் கிடக்கும் கதைகள் இங்கே பல்லாயிரம். அக்கதைகள் அவர்களது படங்களின் கதையைவிட பரிதாபமானவை.

அப்படிக் காத்திருப்பவர்களில் இப்போது தமிழ் சினிமாவில் டாப் டென்னில் இருப்பவர் ஷங்கர்தான். தனது முதல் படமான ஜென்டில்மேனில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே ருசித்தவர். ’இந்தியிலும் பாடுவேன் லலா லலா’ என்றபடி முதல்வன் படத்தை ’நாயக்’ என்று ரீமேக் செய்து அங்கேயும் வெற்றிகொண்டார். ஆனால் 2018இல் ரிலீஸான ‘இந்தியன் 2’வுக்குப் பின்னர் பெரும் சரிவைக் கண்டார். தெலுங்கு, தமிழில் அவர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ இவரை இன்னும் கொஞ்சம் டேஞ்சர் ஜோனுக்குள் தள்ளியது. அடுத்த ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘இந்தியன் 3’ வெளியாகுமா என கமல், ஷங்கர் இருவருமே கூட எதிர்பார்க்காத நிலையில் கடந்த இருவருடங்களாக செய்வதறியாது திகைத்து நிற்கிறார் ஷங்கர்.

இவருக்கு அடுத்த இடம் நிச்சயம் மணிரத்னத்துக்குத்தான். இயக்கத்துக்கு இணையாக தன்னை மார்க்கெட்டிங் செய்வதிலும் கில்லாடி என்பதால் ’ரோஜா’ காலத்திலிருந்தே இவர் இந்திய இயக்குநர். முன்னரே ’ராவணன்’, ‘கடல்’ என்று சில தரமான தோல்விப்படங்களைக் கொடுத்திருந்தாலும் மார்க்கெட்டில் விலைபோகிற இயக்குநராகவே இருந்தார். ஆனால் படங்களின் பட்ஜெட் மிக உயரத்தில் இருப்பதால் அங்கிருந்து ஒருமுறை விழுந்துவிட்டாலே அடிபலமாக இருக்கும். ஆனால் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இரு பலத்த விபத்துகளை சந்தித்திருப்பதால் காயம் கொஞ்சம் அதிகம். அடுத்து விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படத்திலாவது மீண்டு வருகிறாரா என்று பார்க்கவேண்டும்.

அடுத்த காத்திருப்பாளர் சேரன். ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ’வெற்றிக்கொடிகட்டு’ என்று அடுத்தடுத்து மசாலா ஹிட்களைக் கொடுத்த சேரனின் முக்கியமான இருபடங்கள் ‘ஆட்டோகிராப்’,’தவமாய் தவமிருந்து’. அடுத்து ‘மாயக் கண்ணாடி’யில் தன் முகத்தைத் தொலைத்தவர் பின்னர் கரையேறி வரவேயில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அவர் இயக்கிய நான்கு படங்களுமே வசூல் ரீதியான தோல்வி என்பதைத் தாண்டி அவை சேரனின் படங்களாகவே கூடிவரவில்லை. அடுத்து டாக்டர் ராமதாஸின் பயோபிக்கை இவர் இயக்குவதாக இருந்து அது டிராப் ஆகியிருக்கிறது. அதனால் இவரது கம்பேக்கை நம்பிக் காத்திருக்கலாம்.

கவுதம் வாசுதேவ் மேனன். 2001இல் மின்னலாக அறிமுகமான கவுதம் இந்த 25 ஆண்டுகளில் 23 படங்களை இயக்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’களுக்கு மத்தியில் ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற ஓடாத நல்ல படங்களைக் கொடுத்தவரும் கூட. விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்குக் கூட்டணி சேர்ந்த பிறகு கவுதமுக்கு நட்சத்திர பலன்கள் சாதகமாக இல்லை. பத்து வருடங்களாக ரிலீஸாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸானால்தான் தெரியும் அது கவுதமுக்கு கம்பேக்கா, செட்பேக்கா என்பது.

மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ’நந்தலாலா’ என்று பார்வையாளர்களைப் பதட்டப்படுத்தியவர். ‘டைரக்டர்கள்லயே நீ ஒரு பிசாசுய்யா’ என்று நண்பர்கள் பாராட்டியதும் அதே பெயரில் ஒரு படம் எடுத்து அதை நிரூபிக்கவும் செய்தார். அடுத்து விஷாலை வைத்து இயக்கிய ‘துப்பறிவாளன்’ பேர் வாங்கினாலும் அடுத்து ‘சைகோ’வாக மாறியதும் எடுபடவில்லை. அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் ‘ட்ரெயின்’ இரண்டு வருடங்களுக்கும் மேலாக எக்மோரின் எட்டாவது பிளாட்ஃபாரத்தை நகரவேயில்லை. அந்த ‘ட்ரெயின்’ நகர்ந்தால் தான் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் மிஷ்கின் கன்ஃபர்ம் லிஸ்டுக்கு வருவாரா என்பது தெரியும்.

லிங்குசாமி. திரையுலகில் ‘ஒன் ஃபிலிம் ஒண்டர்’ என்கிற ஒரு பிரசித்திபெற்ற பிரயோகம் உண்டு. பத்துப் படங்கள் இயக்கி அதில் 4 மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும் லிங்குசாமியும் ஒரு ஒன் ஃபிலிம் ஒண்டர்தான். ஏனெனில் லிங்கு தன் வாழ்நாளில் ஆனந்தம் போன்றதொரு படத்தை இன்னொருமுறை இயக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் அதற்கான முயற்சிகளிலும் கூட ஈடுபடவில்லை. காரணம் அவரது இரண்டாவது படமும் மிகச் சிறந்த மசாலா படமுமான ‘ரன்’னில் ‘சம்பாதித்த பெயர். இயக்குநர்களுக்கு மசாலாப்பட வெற்றி என்பது உச்சபட்ச போதை. அதிலிருந்து அவர்கள் எப்போதுமே மீளமுடியாது. தற்போது ஒரு புதுமுக நடிகரை வைத்து ஆனந்தம் போல் ‘நல்ல’ படம் இயக்கவிருப்பதாக தகவல். வாழ்த்துவோம்!

எதைச் செய்தாலும் வித்தியாசமாகத்தான் செய்வேன் என்கிற பார்த்திபன், இப்போதைக்கு அறிக்கைகள் மூலம் கருத்துச் சொல்வதுதான் முக்கியம். படம் எடுப்பதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று ரசிகர்களிடம் அன்பு காட்டுகிற அமீர், ‘ஏங்க என்னங்க நடக்குது இங்க…நல்ல படம் எடுத்தா ஏன் பாக்கமாட்டேங்குறீங்க?’ என்று கத்தியபடியே ரொம்ப நாளாக நல்ல படமே எடுக்காத தங்கர் பச்சான், ‘எமக்குத் தொழில் நடிப்பு’ என்று டிராக் மாறிப்போன செல்வராகவன், பாலாஜி சக்திவேல், எஸ்.ஜே.சூர்யா, அடுத்த படத்துடன் ’ஏழு கடல் பதினேழு மலை தாண்டிக் காத்திருக்கும் ராம், ’மக்களுக்கு இப்போதைக்கு கருத்து முக்கியம். நாம கொஞ்சம் பொறுத்து படம் பண்ணலாம்’ என்று நீண்ட ஓய்வெடுத்த கரு.பழனியப்பன், ‘யாருக்காக, எதுக்காக நான் ஹிட் கொடுக்கணும் என்று அநியாயத்துக்கு அடம் பிடிக்கும் பாலா, தரணி, வசந்தபாலன், சிம்புதேவன், ராதா மோகன்…

“ பாஸ். போதும் போதும். லிஸ்ட் ரொம்பப் பெருசா போய்க்கிட்டே இருக்கு.”

இவர்களெல்லாம் மிக விரைவில் கம்பேக் கொடுத்து தமிழ் சினிமாவைக் கரைசேர்க்கவேண்டுமென்று, இருக்கின்ற இடத்திலிருந்தே பிரார்த்தனை செய்வோம்.

ஆமென்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram