நிமிர்ந்து ஸ்டைலாக நடந்து ஒருவர் செல்கிறார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவை எலும்புகள். இவை நமது உடல் எடையில் 60% உள்ளன. நம் உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இவை நம்மை நிமிர்ந்து நடக்க வைக்க மட்டுமல்ல; நம் செயல்பாடுகளுக்குக் காரணமாகவும் நம் உடம்பில் உள்ள முக்கிய உள்உறுப்புகளையும் பத்திரமாக பாதுகாக்க கூடிய ஒரு கேடயமாகவும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் எலும்புகளில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நம் உடம்பில் பல உறுப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கும் உதவியாக உள்ளன.
நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன தேவை?
கால்சியமும் பாஸ்பரசும்தான் எலும்புகள் உருவாக்கத்துக்கு அவசியமான தேவைகள். இவை நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கின்றன. கேழ்வரகு, முருங்கைக் கீரை, மற்ற கீரை வகைகள், முட்டை, பிற அசைவ உணவுப்பொருட்கள் ஆகியவை கால்சியம் சத்து கிடைக்க உதவுகின்றன. நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் இருந்து கால்சியத்தை உடம்பு உறிஞ்சி நம் வயிற்றில் இருந்து எலும்புகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் வேலைக்கு வைட்டமின் டி மிக அவசியமாகும். வைட்டமின் டி தினமும் அரைமணி நேரம் வெயிலில் நடந்தாலே கிடைக்கும். ஆனல இப்போது அதை யாரும் செய்யாத காரணத்தால் மாத்திரைகள் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது. வைட்டமின் டி இல்லாதவர்களுக்கு உடல் சோர்வாகக் காணப்படும். இதற்கான பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர் ஆலோசனைப்படி இந்த வைட்டமின் மாத்திரைகள் எடுக்க வேண்டும். நம் இஷ்டத்துக்கு இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், இதன் அளவு அதிகரித்து உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வயது ஏற ஏற உடலின் கால்சியம் ஏற்புத் தன்மை குறைந்துகொண்டே போகும். எனவே கூடுதலாக கால்சியம் சத்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. முப்பது வயது வரைக்கும் தான் உணவில் இருக்கும் கால்சியம் எலும்பில் போய்ச் சேரும் செயல்பாடு நன்றாக நடக்கும். இந்த வயதுக்குப் பின்னர் எலும்புக்கு உணவில் இருந்து செல்லும் கால்சியம் அளவு குறைகிறது. எனவே சிறுவயதிலேயே ஆரோக்கியமான கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது.
எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சியும் முக்கியமானது. ஜிம்முக்குப் போய்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நடைப்பயிற்சி, ஓட்டம், விளையாட்டுகள் போன்றவற்றில் குறைந்தது தினமும் 21 நிமிடங்கள் ஈடுபடவேண்டும். இதன் மூலம் எலும்புகள் பலமாகும். கால்சியம் சத்து எலும்பில் போய்ச் சேரும்.
நாமும் ஆரோக்கியமாக உணர்வோம். உடல் உழைப்பு இல்லாமல் பணி செய்கிறவர்களுக்கு இளம் வயதிலேயே எலும்புகள் பலவீனமாகி விடுகின்றன. வயதானவர்களுக்குத்தான் எலும்பின் அடர்த்தி தன்மை குறைந்து பலவீனமாகும் தன்மை இயல்பாக ஏற்படும் என்றில்லை. உடல் உழைப்பு இல்லாத நிலையும் இளம் வயதில் இது நடக்கக் கூடிய வாய்ப்புண்டு என்பதை உணருங்கள்.
புகைப்பிடித்தலும் மது அருந்துதலும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு எதிரிகள். இவற்றால் எலும்புகளுக்குச் சேர வேண்டிய சத்துகள் குறைந்து பலவீனமாகின்றன.
ஒரு சிலருக்கு ஹார்மோன் சமநிலை பாதிப்பு ஏற்பட்டு எலும்புகள் பாதிக்கப்படும். டெஸ்டோஸ்டீரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் இதற்குக் காரணமாகின்றன. குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும்போது ஈஸ்ட்ரோஜன் குறையும். அப்போது எலும்பின் அடர்த்தித் தன்மை குறையும் (Post Menopausal Osteoporesis) நிலை ஏற்படும். இது மகளிருக்குப் பொதுவாகக் காணப்படும் பிரச்னை. இந்நிலையில் தேவையான சத்துகளையும் உணவுகளையும் மருத்துவர் ஆலோசனையின் மூலம் எடுத்துக்கொள்வது நல்லது.
எலும்புகள் வலிமையாக இருந்தால்தான் மனிதர்களால் நடமாட்டமாக இருக்கமுடியும். இதற்கு பின் வரும் நான்கு விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்.
சத்தான உணவு சாப்பிடுதல்; குப்பையான துரித உணவுகள், குளிர்பானங்களை தவிர்த்தல்
உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை கூடினால் எலும்புகளால் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.
புகை பிடித்தல், மது அருந்துதலைத் தவிர்த்தல்.
உடற்பயிற்சிகளை அன்றாடம் கடைப்பிடித்தல்.
இந்த அடிப்படையான விஷயங்களைக் செய்துவந்தாலே போதும். எலும்புகள் இரும்பு போல் இருக்கும்!