1964 முதல் 1966 வரை சென்னை மாநகரின் கடைகளில் அரிசியைப் பார்ப்பதே அதிசயமாக இருந்தது. இரண்டு கிலோ கோதுமை, இரண்டு கிலோ மைதா, 5 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு சென்னை மாநகரின் எல்லா வட்டங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் நின்ற காட்சி என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது.
1967இல் ஆட்சிக்கு வருவதற்கு முன், அறிஞர் அண்ணா படி அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டத்தை அறிவித்தார். சென்னையில் குடிசைப் பகுதிகள் ஏராளம். அடிக்கடி தீ விபத்துகளும் தொடர்ந்தன. ஒடுக்கப்பட்ட பிரிவினர் வாழ்ந்த பகுதிகளைப் பார்த்தவர்கள் கண்ணீர் மல்கினர். அறிஞர் அண்ணா படியரிசித் திட்டத்தையும், தீப்பிடிக்காத வீடு திட்டத்தையும், புதுமுகப் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி திட்டத்தையும் வழங்கினார்.
அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு 1969இல் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1969-71, 1971-76, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய தன் காலக்கட்டங்களில் பல அரிய சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கை ரிக்க்ஷா ஒழிப்புத் திட்டம், குடிசை மாற்று வாரியம் அமைத்தல், குடிநீர் வழங்கல் வாரியம், வீட்டு வசதி வாரியத்தின் வழியாக வளர்ந்து வரும் சென்னை நகரின் பகுதிகளில் பல அரசு குடியிருப்புகள் உருவாக்குதல், அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசின் ஊழியர்களுக்குச் சமமான ஊதியம் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. மாவட்டம் தோறும் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பேருந்துகள் நாட்டுடை மையாக்கப்பட்டன. நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுப் பெரும் நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருந்த நிலங்கள் சிறுகுறு நடுத்தர விவசாயிகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறை முதன்முதலாக 1989இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளுக்கு அனைத்துச் சமூகத்தினரும் வேலை வாய்ப்புகளைப் பெற வழி வகை செய்தது.
1989ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அரசின் நிதியுதவியோடு தொடங்கப்பட்டன. அனைத்துச் சமூகத்தினரும் ஒரே இடத்திலுள்ள குடியிருப்புகளில் வாழ 1996ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் தொடங்கப்பட்டன. அவர் தொடர்ந்த நலத்திட்டங்கள் விரித்தால் பக்கங்கள் பெருகும்.
1977 முதல் 1987 எம்.ஜி.ஆர். ஆட்சியில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. அதே போன்று உணவுப் பங்கீட்டுக் கடைகளின் வழியாகக் குறைந்த விலையில் அரிசி தானியங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான தனியார் சுயநிதிப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சிக்காலங்களில் (1991-96, 2001-2006, 2011-2021) பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக் கணினி வழங்கியது, அம்மா உணவகம் அமைத்தது, கலைஞர் கொண்டு வந்த ஒரு அரிசி ஒரு ரூபாய் என்பதை, விலையில்லா அரிசித் திட்டமாக அறிவித்தது. ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் தாலிக்குத் தங்கம் வழங்கியது, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்றவற்றைத் தொடர்ந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் நுழைவுத் தேர்வையும், சரக்குச் சேவை வரி விதிப்பதையும் கடுமையாக எதிர்த்தார். அவர் மறைந்த பிறகுதான் இந்த இரண்டு திட்டங்களையும் ஒன்றிய அரசு கைகளில் எடுத்துக்கொண்டு நிறைவேற்றியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இதே போக்கு தொடர்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், மகளிருக்கு விடியல் பேருந்து பயணம், மாந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை, மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், ஊர்ப்புறங்களில் இல்லம் தேடி மருத்துவம், பள்ளியில் காலைச் சிற்றுண்டி, போன்ற சிறப்பான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அடிப்படை கல்வி, சுகாதாரம், பெண்கள் சமத்துவம், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புகளை அளித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல், குழந்தைகளின் நலன் போன்ற பல்வேறு குறியீடுகளில் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாடு இந்தியா மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களைப் பெற்று வருகின்றன. திராவிட இயக்க ஆட்சிகளின் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலத்திட்டங்ளே தமிழ்நாடு முன்னணியில் இருக்கக் காரணம்.
தமிழ்நாட்டில் ரூ.100 அளவிற்கு வரிவருவாயை ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டு, 29 ரூபாயை மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு வரிப்பகிர்வாக அளிக்கிறது. மீதம் 71 விழுக்காடு வரிவருவாய் பா.ஜ.க ஆட்சி செய்யும் வட மாநிலங்களுக்குச் செல்கின்றன. ஆனாலும் அம்மாநிலங்கள் பல்வேறு மானுட வளர்ச்சிக் குறியீடுகளில் வளர்ச்சி காணாமல் இருக்கின்றன.
அண்மையில் எகானாமிக் டைம்ஸ் இதழில் (8 டிசம்பர் 2024), 45இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரி வசூலிக்கப்படாமல் நிலுவை உள்ளது என செய்தி வெளியானது. அதில் 5 இலட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி செலுத்துவோர் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 8 இலட்சத்து 60 ஆயிரம் கோடி அளவிற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் சொத்துகளையும் கைப்பற்ற முடியவில்லை. 2 இலட்சம் கோடி ஒன்றிய அரசிற்கு வரி செலுத்த வேண்டிய முதலாளித்துவ நிறுவனங்கள் தாங்கள் தொழிலில் தோல்வி அடைந்து முழுமையாகப் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒன்றிய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையத்தைப் பொறுத்தவரை இந்த வரிகளில் ஒன்றிய அரசுக்கு 2023-24 நிதியாண்டில் 4.26 இலட்சம் கோடி வசூலிக்கப்படாமல் பாக்கி இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று விளக்கியுள்ளது. இதைத் தவிர கடந்த பத்தாண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளில் இருந்து பெரும் முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூபாய் 10 இலட்சம் கோடி ஆகும்.
இந்தியாவின் பொதுக்கடன் தொகை அளவு 2023-24இல் 173 இலட்சம் கோடி ஆகும். இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் கடன் தொகை அளவு 83.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் ஏழை எளியோர்க்கு வழங்கும் நலத்திட்டங்களின் பணத்தொகை ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது என்பது உண்மை.