சிறப்புப்பக்கங்கள்

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

ந.முருகேசபாண்டியன்

அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

குறிப்பாக வைதிக சநாதனம் உருவாக்கியிருந்த இறை பற்றிய மூட நம்பிக்கையைச் சிதலமாக்கிய கலைஞரின் தொடக்க காலத் திரைப்பட முயற்சிகள், கலகப் பிரதிகளாக வெளியாகியுள்ளன. பெரியாரின் அரசியல், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளைப் பதின்பருவத்திலே பின்பற்றிய கலைஞர் திரைப்படக் காட்சி ஊடகத்தின் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தில் அழுத்தமான அரசியல் கருத்துகளைப் பரப்பினார். கலைஞர் கதை-வசனம் எழுதிய திரைப்படங்கள் பெரிதும் எதார்த்தத்தை நகலெடுப்பவை அல்ல. மந்திரி குமாரி, பூம்புகார் போன்ற வரலாற்றுத் திரைப்படங்களிலும்கூட சமகாலப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட பிரதிகள் திரையில் காட்சிப்படுத்தப்படும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றன. வெறுமனே பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை போன்றவற்றை முன்வைத்து வணிகரீதியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்குக் கலைஞர் கதை-வசனம் எழுதியிருந்தாலும் அவருடைய திராவிட இயக்க அரசியல் சொல்லாடலை முன்வைத்திடும் திரைப்படங்கள் காலங்கடந்து இன்றளவும் நிலைத்திருக்கின்றன. தமிழ்த் திரையுலக வரலாற்றில் கலைஞரின் அரசியல் தோய்ந்த கதை-வசனம் உருவாக்கிய விளைவுகள் காரணமாக அவர் கலகக்காரராக இன்றும் விளங்குகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உருவான திரைப்படம் இந்தியாவில் அறிமுகமானபோது பெரிதும் வைதீக சநாதனம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்வாங்கியிருந்தது.   புராணம், இதிகாசக் கதைகள் பின்புலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் வருணாசிரமத்தை நியாயப்படுத்திடும் சூழல் நிலவியது. இந்நிலையில் திராவிட இயக்கத்தினரின் திரைப்படம் சார்ந்த பார்வை, அன்றைய சாதியம், சநாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது. நாட்டு விடுதலைக்குப் பின்னர் கல்வியறிவு பரவலாகிடாத காலகட்டத்தில் திராவிடக் கருத்தியலை முன்வைத்த திரைப்படங்கள், பெரிதும் கவனம் பெற்றன. ‘வாளின் முனையைவிடப் பேனா முனை கூர்மையானது.’ என்ற பிரெஞ்சுச் சிந்தனையாளர் வால்டேரின் கூற்று அடிப்படையில் திராவிட அரசியலைப் பிரச்சாரம் செய்திட அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் நாடகம், திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களைப் பயன்படுத்தி வெற்றியடைந்தனர். ஒப்பீட்டளவில் கலைஞரின் திரைப்படக் கதை, உரையாடல் முயற்சிகள், தனித்து விளங்கின. கலைஞர் தன்னுடைய 23வது வயதில் 1947ஆம் ஆண்டு கதை வசனம் எழுதிய ராஜகுமாரி திரைப்படத்தின்மூலம் திரையுலகில் முதலடி எடுத்து வைத்தார். அன்று தொடங்கிய அவருடைய திரையுலகப் பயணம் 2011 ஆம் ஆண்டில் வெளியான பொன்னர் சங்கர் திரைப்படம் வரை 64 ஆண்டுகளில் 75 திரைப்படங்களுக்குக் கதை-வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கலைஞர், கட்சியின் தலைவரானபோதும் ஐந்து தடவைகள் தமிழ்நாட்டின் முதல்வராகச் செயல்பட்டபோதும்  திரைப்படங்களுக்குக் கதை-வசனம் எழுதுவதில் ஆர்வத்துடன் செயல்பட்டார்.  1943 ஆம் ஆண்டு  சாந்தா நாடகத்தின் மூலம் கலையுலகில் நுழைந்த கலைஞர், 1947 ஆம் ஆண்டில் தான் சார்ந்திருந்த அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற திரைப்பட ஆக்கத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டார். திராவிட இயக்கத்தினர் நாடகம், திரைப்படம்மூலம் அரசியல் பிரச்சாரத்துடன் பிரபலமடைந்தபோது காங்கிரஸ் கட்சியினரால் ’கூத்தாடிகள்’ என்று கேவலமாகக் குறிப்பிடப்பட்டனர்.

கலைஞர், தான் வசனம் எழுதிய திரைப்படங்கள் திரையில் ஒளிர்வதற்கு முன்னர் திரையில் தோன்றி அந்தத் திரைப்படத்தின் கரு, கதைக்களம், ஏன் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன் என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திரைப்பட  வரலாற்றில்  ஒரு படைப்பாளி, ஒவ்வொரு திரைப்படத்திலும் திரையில் தோன்றிப் பேசியது  கலைஞர் மட்டும்தான். அவருடைய கம்பீரமான தோற்றமும் கரகரப்பான பேச்சும்   பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடும் உணர்வையும் உற்சாகத்தையும் தந்தன.

கலைஞரின் படைப்பாக்கத்தில் உருவான திரைப்படங்களில் அறுபதுகள் வரை கறுப்பு வெள்ளையில் வெளியான திரைப்படங்களை ஒரு பிரிவாகவும் எழுபதுகள் முதலாக வண்ணத்தில் வெளியான திரைப்படங்களை இன்னொரு பிரிவாகவும் பிரிக்கலாம். என்னைப் பொருத்தவரை மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன், அரசிளங்குமரி, புதையல், புதுமைப்பித்தன், குறவஞ்சி, இருவர் உள்ளம், காஞ்சித் தலைவன், அவன் பித்தனா, பூம்புகார், போன்ற பழைய திரைப்படங்களின் கதையாடலும் வசனங்களும் செவ்வியல் தன்மையுடையன. பிள்ளையோ பிள்ளை தொடங்கி பொன்னர் சங்கர் வரையிலான திரைப்படங்கள் மாறிவரும் சமூகச் சுழலுக்கேற்ப அரசியல், சமூகப் பிரச்னைகளை வெகுஜனரீதியில் முன்வைத்துள்ளன.  திரைப்படக் கதையமைப்பிலும் வசனத்திலும் 1947 ஆம் ஆண்டு தொடங்கி இருபதாண்டுகள் கலைஞரின் கொடி உச்சத்தில் பறந்தது.

தேவி நாடக சபாவிற்காகக் குண்டலகேசி காப்பியக் கதையினை முன்வைத்துக் கலைஞர் எழுதிய நாடகமான மந்திரி குமாரி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் திரைப்படமாக 1950 ஆம் ஆண்டு வெளியானது. அரசர் காலத்துக் கதையில் ராஜகுரு உள்ளிட்ட வில்லன்களுக்கு முக்கியத்துவம் தந்து கலைஞர் எழுதிய கதை- வசனத்தில் வெளியான திரைப்படம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைதிக சநாதனத்தை வலியுறுத்தும் பார்ப்பனரான ராஜகுருவின் செயல்கள் ஒருபுறமும்  கடவுளின் பெயரிலான மூட நம்பிக்கைகள் இன்னொருபுறமும் காட்சிகளின் வழியாகப் பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்பின. கணவன் கொடிய திருடன் என்றாலும் அவனை  நேசித்த   மனைவியான மந்திரி குமாரியை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்வதற்காக அழைத்துச் செல்கிறான் கணவன். வழமையான சொல்லாடலில் கணவனைக் கடவுளாகச் சித்திரிக்கிற புராணிக மரபைக் கேள்விக்குள்ளாக்குமாறு மந்திரிகுமாரி, கொடியவனான கணவனை மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகின்ற காட்சியை எழுதிய கலைஞர், குடும்ப உறவில் கணவன் என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தைச் சிதிலமாக்கியுள்ளார். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் மந்திரி குமாரி பேசுகின்ற பின்வரும் வசனம் முக்கியமானது: ”ஆம் பதியைக் கொன்றேன்.பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக்கூட்டமாய் எண்ணிய ஒரு பாவியைத்தான் கொன்றேன். என்னையே கொல்ல வந்த ஒரு விஷப்பூச்சியைத்தான் கொன்றேன். ஒரு பெண்ணுக்கு அன்பிருக்கும் அளவுக்கு வீரப்பண்பிருக்கும் என்பதை மறந்த ஒரு மனோன்மத்தனைத்தான் கொன்றேன். ஏன் என்மேல் பழியா? நானொரு கொலைகாரியா? நான் அவரைக் கொல்லாவிட்டால் அவர் என்னைக் கொன்றிருப்பார் நீரே சொல்லும் அவர் இப்படிக் கொல்லப்படாவிட்டால் உலகத்தில் இன்னும் எத்தனை கோடி கொடுமைகளைச் செய்திருப்பார்.?” கணவன் என்ற சொல்லின்மீது இதுவரை வைதீக மதம்  சுமத்தியுள்ள புனிதங்களைக் கட்டுடைத்துக் கேள்விக்குள்ளாக்கிய கலைஞரின் எழுத்து, மாறிவரும் சமூகத்தின் முன்னறிவிப்பாக வெளிப்பட்டுள்ளது. கணவனே கண் கண்ட தெய்வம் என்று கண்மூடித்தனமான நம்பிக்கை வலுவாக நிலவிய அன்றைய சமூகத்தில் கலைஞரின் எழுத்து, ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.  மந்திரி குமாரி திரைப்படத்தின் வசனங்கள் இன்றைக்கும் உயிரோட்டமாக விளங்குகின்றன. மக்களைக் கொடுமைப்படுத்துகின்ற  மன்னர்,  பார்ப்பன மத குரு,  மந்திரி போன்றோரின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிராக, சராசரியான இளைஞன் தோன்றிப் போராடுகின்ற கலைஞரின் திரைப்படக் காட்சி அன்றைய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரானதாக  அமைந்திருந்தது. திரைப்படக் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் கலைஞருக்குப் பெருமை சேர்த்த மந்திரி குமாரி திரைப்படத்தின் பாடல்களும் வசனமும் முதன்முறையாகப் புத்தகமாக  வெளியான தகவல், குறிப்பிடத்தக்கது.

”கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.”என்று நீதிமன்றத்தில் பராசக்தி திரைப்படத்தில் குணசேகரன் பேசியு வசனம், இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. பாவலர் பாலசுந்தரம் எழுதிய நாடகக் கதைப் பின்புலத்தில் வசனங்களுக்காகக் காட்சிகளும் சம்பவங்களும் என்று விரித்து எழுதிய கலைஞரின் பராசக்தி திரைப்படம் வெளியானபோது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நான்கு சகோதரர்கள், ஒரு தங்கை  அடங்கிய குடும்பம் பொருளதாரச் சீரழிவினால் அடைந்த அவலத்தை முன்வைத்து சமூகப் பிரச்சினைகளைக் கேள்விகளாக எழுப்பிய கலைஞரின் உரையாடல் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. பராசக்தி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலத்தில் கலைஞரின் திராவிட இயக்க அரசியல், சமூக சீர்திருத்தக் கருத்துகள் பொதிந்துள்ளன.

”கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.” பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற கலைஞர் எழுதிய வசனங்கள், பார்வையாளர்களின் சமநிலையைச் சிதைத்து, நடப்பு வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத் தூண்டின.

கலைஞரால் கதை-வசனம் எழுதப்பட்ட தொடக்ககாலத் திரைப்பட வசனங்கள் பெரிதும் பகுத்தறிவை வலியுறுத்துகின்றன.  மனிதனுக்குத் தளையாக விளங்குகின்ற சாதி, சமயம் போன்றவற்றைக் களைந்து புதிய பாதையை அடைவதற்குப் பகுத்தறிவை வழிகாட்டியாகக் கலைஞர் முன்னிறுத்தியுள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சாக்ரடீஸ் நாடகம், பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.  "எதையும் ஏன், எப்படி எதற்காக என்று கேள்... அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம் - எவர் சொன்னாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்” என்று அறிவுறுத்துகின்றார்.  சாக்ரடீஸ்மூலம் கலைஞர் குறிப்பிடுவது, அன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேண்டுகோள்.

பண்டைத்தமிழரின் சிறப்பினைச் சுட்டுவதற்காகச் சிலப்பதிகாரக் காப்பியத்தைத் திரைப்படமாக்கிய கலைஞர், தனது பகுத்தறிவுக் கொள்கையைச் சற்றும் தளர்த்தவில்லை.  அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத சம்பவங்களையும், மூடநம்பிக்கைகளையும் நீக்கியுள்ளார். வைதீக சநாதன மரபில் பெண்ணைப் பாவ யோனியில் பிறந்தவளாகக் கருதி புறந்தள்ளிய சூழலில் கலைஞருக்கு வணிகக் குடும்பத்தில் பிறந்து கைம்பெண்ணான  கண்ணகியைப் பத்தினிக் கடவுளாக்கிய கதையாடல், தமிழரின் அடையாளமாகக் தோன்றியது. எனவேதான் கலைஞர் சிலப்பதிகாரம் காப்பியத்தைப்  பூம்புகார் வடிவில் திரைப்படமாக்கி, தமிழர் பண்பாட்டினை விளிம்புநிலையினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.      .

கலைஞரின் திரைப்பட உரையாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக விளங்குகின்றன. கலைஞரின் தமிழ் மொழி ஆளுமையானது; அவருக்கு, எந்த வகையான மொழியைக் கையாள வேண்டும் என்ற புரிதல் வலுவாக இருந்தது. எனவேதான் கேட்பவரின் மனதைச் சிந்திக்கத் தூண்டுகின்றனவாகத் திரைப்பட உரையாடலை அமைப்பதில் அக்கறையெடுத்து வசனங்களை எழுதியுள்ளார். ஐம்பதுகளில் தமிழ்த் திரைப்பட உருவாக்கத்தில் நிலவிய மந்த நிலையை மாற்றியமைத்துச், செயலூக்கம் மிக்கதாகத் தமிழ் மொழியை மாற்றியமைத்த பெருமை, கலைஞருக்கே உரியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram