தொண்ணூறுகளுக்கு முன்னால் சிறுநகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு கந்துவட்டியின் குரூர முகம் நன்றாக பரிச்சயமானதுதான். அடிப்படை தேவைகளுக்காக வாங்கும் சிறிய கடன் மெல்ல மெல்ல வளர்ந்து பல சமயங்களில் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு வந்தது நிற்பதை எனது சிறுவயதில் நான் பலமுறை கண்டிருக்கிறேன். சிறுவயதில் நான் வளர்ந்தது உழைக்கும் மக்கள் அதிகம் வாழ்ந்த பகுதி.
வெவ்வேறு சமூகத்தினர் வாழ்ந்த பகுதியில் வட்டி கொடுத்து வாங்குவது மட்டும் எங்கள் ஊரின் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஓரிருவர் மட்டுந்தான். ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கும், திருமணம் மாதிரியான விசேசங்களுக்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவுமே பெரும்பாலும் கடன் வாங்குவது வழக்கம். சற்றேறக்குறைய அந்தப் பகுதியில் வாழ்ந்த எண்பது சதவிகித குடும்பத்தினர் கடன் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிலர் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கி அதனை நீண்டகாலம் சிறிது சிறிதாக அடைப்பார்கள். இன்னும் சிலர் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயை வாங்கி அதனை சிறிது சிறிதாக திரும்பச் செலுத்துவார்கள்.
ஐம்பதாயிரம் இன்றைக்கு ஒரு தொகையாக இல்லாமல் தோன்றலாம், ஆனால் தொண்ணூறுகளில் எங்களைப்போன்ற வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்த மக்களுக்கு ஆயிரம் இரண்டாயிரமே பெரிய தொகைதான். முப்பது ரூபாய் கூலிக்கு நாளொன்றுக்கு பணிரெண்டு மணி நேரம் மில்லில் வேலை பார்த்தவன் நான். கடன் கொடுப்பவர்கள் சிறிய தொகையைக் கடன் வாங்குகிறவர்களையே அதிகம் விரும்புவார்கள். முக்கியமான காரணம் அப்படி வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் அவர்கள் ஒருமுறை கடனை அடைத்துவிட்டாலும் தொடர்ந்து கடன் வாங்கியபடியே இருப்பார்கள். ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் நீங்கள் முன்னூறு ரூபாய் அதற்கு வட்டியாக கட்ட வேண்டும். வாரத்திற்கு நூறு ரூபாயாகத் திருப்பித் தருவதால் கூலி வேலைக்குச் செல்கிறவர்களுக்கு சிரமமாகத் தெரியாது. ஆனால் ஒரு ஐந்து வருடங்களில் தொடர்ந்து அப்படி கடன் வாங்குவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு லட்சரூபாய் கடனுக்கு முப்பதாயிரம் ரூபாயை வட்டியாகக் கட்டியிருப்பார்கள். இந்த எண்ணிக்கையை நூற்றுக்கணக்கான குடும்பத்திடம் வைத்து கணக்குப் பார்த்தால் அந்தத் தொகை இப்போது மலைப்பாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த அண்ணன் ஒருவர் இப்படி வட்டிக்குக் கொடுத்ததன் மூலமாக சேர்த்த காசில் அன்றைய தேதியில் எங்கள் ஊரில் நூறு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்.
கடன் கொடுப்பவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களின் மனநிலையையும் பலவீனங்களையும் நன்கறிந்தவர்களாக இருக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு முன்னால் இருக்கும் கனிவு, அக்கறை எல்லாம் கடன் கொடுத்தபின் காணாமல் போகும். ஓரிரு வாரங்கள் தவணையைக் கட்டாமல் போனால் வசூலுக்கு வருகிறவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அந்த ஒழுங்கை தவறவிடக் கூடாது. ஒரே தெருவில் நூறு பேர் கடன் வாங்கியிருப்பார்கள், ஓரிருவர் வாரத் தவணையை இழுத்தடித்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் இழுத்தடிப்பார்கள். அது பணத்தின் சுழற்சியைப் பாதிக்கும் என்பதால் வசூலுக்கு வருகிறவர் ஈவு இரக்கமற்றவராகவே இருப்பார்.
முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரியான அனூப் ஜெய்ஸ்வால் எழுதிய புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். வெறும் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஒருவர் பல காலமாக அந்தக் கடனுக்கு மாதம் இருநூறு ரூபாய் வீதம் வட்டி கட்டுகிறார். நீண்டகாலம் முதலீட்டைத் திருப்பித் தராததால் கடன் நான்காயிரமாகிறது. அதற்கு வட்டி மாதந்தோறும் நானூறு ரூபாயாக மாற, கடன் வாங்கியவன் தன்னிடம் இருக்கிற நிலத்தை விற்று அந்தக் கடனைக் கட்டச் செல்கிறான். கடனைக் கொடுத்தவர் இப்போதெல்லாம் கடனைத் திருப்பி அடைக்க முடியாது வருடக் கடைசியில் தான் கடனை அடைக்க வேண்டும் அதுவரையிலும் வட்டியும் கட்ட வேண்டுமென மிரட்டுகிறார். கடன் வாங்கியவர் மனம் வெறுத்துப்போய் தற்கொலை செய்துகொள்கிறார்.
நான்காயிரம் ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்வதைக் கேட்க உங்களில் பலருக்கு நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால் வறுமையின் தீவிரத்தைப் பார்த்தவர்களுக்கு இதுபோல் பலரைத் தெரியும். அந்த வழக்கில் அனூப் அவர்கள் விசாரிக்கத் தொடங்கும்போதுதான் தூத்துக்குடி நகரைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் அதுபோல் வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்து அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். துறைமுகங்கள் உள்ள நகரங்களிலும் தொழிற்சாலைகள் உள்ள நகரங்களிலும் இதுபோல் கந்துவட்டிக்காரர்கள் பெருமளவில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சிறுவயது முதலே நமக்கு சேமிக்கும் பழக்கத்தை பெற்றவர்கள் சொல்லி வளர்க்கக் காரணம் எந்த நிலையிலும் கடன் வாங்கிவிடக் கூடாதென்பதற்காகத்தான். முந்தைய தலைமுறையினர் பெரும்பாலானோரின் வாழ்வில் கசப்பான பக்கங்களாய் கடன் வாங்கிய காலத்தின் நினைவுகள் எழுதப்பட்டிருக்கும். அந்த நிலையும் அவமானமும் தங்களின் பிள்ளைகளுக்கு வரக்கூடாதென்பதால் சேமிப்பைக் கற்றுக் கொடுக்க நினைத்தார்கள். இன்றைக்கு அரசும் வங்கிகளும் கடன் வாங்குவதை தொடர்ந்து ஊக்குவிக்கின்றது.
பெரும் பணக்காரர்களுக்கு கடன் வாங்குவது பல தொழில்களில் ஒரு உபதொழில், நடுத்தர வர்க்கத்தினருக்கு அப்படியல்ல, தவிர்க்க முடியாத நிலை வந்தாலன்றி கடன் வாங்குவதைக் குறித்தும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்தும் ஒருபோதும் சிந்திக்காதீர்கள். கடன் வாங்குவதனை பழக்கமாக்கும் போது முடிவற்ற ஒரு சுழலுக்குள் நம்மை அறியாமலேயே நாம் சிக்கிக் கொள்கிறோம். ஒருபோதும் விடுவிக்க முடியாத சுழல்.
எழுத்தாளர் ப்ரேம்சந்தின் கைப்பிடியளவு கோதுமை என்றொரு கதை உண்டு. பசிக்காக ஒரு கைப்பிடி கோதுமையை கடனாக வாங்கிய விவசாயி அந்தக் கடனை அடைக்க முடியாமல் எல்லாவற்றையும் இழந்து நின்ற துயரத்தை பேசக்கூடிய கதை அது. எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியது.