எஸ்.எஸ்.வாசன் 
சிறப்புப்பக்கங்கள்

விசுவாசம் மட்டும் போதாது!

ராவ்

வெலிங்டன் ராணுவ பீடத்தில் பயிற்சி முடித்து ராணுவ வீரர்கள் ஆகப் போவோரின் கம்பீர அணி வகுப்பு. இறுதிக் கட்டமாக ஒரு காட்சி. ஒரு வீரர் வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய வெள்ளிக்கிண்ணம் ஒன்றைக் கையில் ஏந்தியவாறு வருகிறார். வரிசையில் நிற்கும் வீரர்கள் வலது கை நீட்டி கிண்ணத்தில் இருப்பதை ஒரு துளி எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.

அந்த ஒரு துளி- நம் தேசத்து உப்பு!

நம் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பதற்கான அடையாளம். அந்த உணர்ச்சிகரமான விசுவாச காட்சியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது உண்மை!

என்றைக்குமே வழி மாறிப் போகாத, ஈடு இணை சொல்ல முடியாத விசுவாசம் அல்லவா அது!

விசுவாசம் என்றால் கர்ணனும் கும்பகர்ணனும் நினைவுக்கு வராமல் போகாது. செஞ்சோற்றுக் கடன் தான் அந்த விசுவாசத்துக் காரணம் என்றாலும் துரியோதன் கர்ணனை மிகவும் மதித்தான். துரியோதனன் கூறிய ‘எடுக்கவோ கோர்க்கவோ’ நிகழ்ச்சி உன்னத நட்புக்கானது! அதுமட்டுமல்ல துரியன் முதல்நாள் சாப்பிட்ட தங்கத் தட்டில் மறுநாள் சாப்பிட மாட்டான்! எச்சில்! ஆனால் கர்ணன் சாப்பிடும்போது அவன் தட்டில் இருந்து ஒரு கவளம் எடுத்துக்கொள்வான். கர்ணனின் விசுவாசத்தை மதித்தான் காரணம்- எதுவானாலும்.

விசுவாசம் மதிக்கப்படும்போதுதான் ஏற்றம் பெறுகிறது.

இந்த காலத்துக்கு வருவோம்.

ஆனந்த விகடனில் 1930களில் ‘மாலி’ என்ற அற்புத ஓவியர்! தன் ஓவியங்களால் வாசகர்களை திகைப்பூட்டி விகடன் விற்பனையை உயர்த்தியவர். தீபாவளி மலரில் அவரது கேலிச் சித்திரங்கள் வண்ணத்தில் வரும். இப்போதுபோல் அன்று கலர் படங்கள் எளிதில் அச்சிட முடியாது. ‘ப்ராசஸ் டிபார்ட்மெண்ட்’ என்று இருக்கும். அதில் இருப்பவர்கள் மணிக்கணக்கில் மெனக்கிட வேண்டும். ‘ப்ளாக் மேக்கிங்’ என்ற முறை- புரிய வைப்பது கடினம்- மூலம் ‘கலர் பிளேட்’ எடுக்கவேண்டும்! காஸ்ட்லி! வண்ணங்கள் சரியாக ஸ்கிரீனில் அச்சிடுவதும் எளிதல்ல.

தன் ஓவியத்துக்கு ஏற்ற ரிசல்ட் வராவிட்டால் மாலி கடும் கோபம் கொள்வார். கலர் பிளேட்டுகளைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடுவார்.

அதோடு முடியாது. ‘இனி இங்கே வேலை செய்து பிரயோசனம் இல்லை’ என்று ராஜினாமா கடிதம் அனுப்பி விடுவார்! ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் உடனே ராஜினாமாவை ஏற்று கணக்குப் பார்த்து விடை கொடுத்துவிடுவார்.

இரண்டு மாதங்கள் முடியும். வாசன் கார் எடுத்துக்கொண்டு கிளம்புவார். திருவிசை நல்லூரில் போய் தான் கார் நிற்கும். மாயாவரம் அருகே உள்ளே அந்த ஊரில் புகழ்பெற்ற தர் ஐயாவாள் வீட்டுக்கு எதிர் வீடு மாலியின் இல்லம்! டெலிபதி வேலை செய்கிறது போலும்! ஊஞ்சலில் கைப்பையோடு தயாராக இருப்பார் மாலி!

வாசன் கார் அவர் வீட்டு முன் நிற்கும். ’மாலி’ என்று குரல் கொடுப்பார் மாலி விறுவிறுவென்று காரில் ஏறுவார். கார் தஞ்சை வழியே செல்லும். ஒரு ஓட்டலில் டிபன் அருந்துவார்கள். பிறகு கார் விகடன் வாசலில். மாலி மீண்டும் விகடனில் சேர்ந்து விடுவார்.

மாலி அடிக்கடி இப்படி வேலை விடுவார், வாசன் அழைத்து வருவார். தன் தொழிலின் மீதும் விகடன் மீதும் மாலி விசுவாசம் காட்டினார். வாசன் இந்த விசுவாசத்தை மதித்தார். மாலிக்காக ப்ராசஸ் டிபார்ட்மெண்டையும் காலத்துக்கு ஏற்ப மாற்றினார்.

ரொம்ப கவனித்து பார்த்தால் மாலி அவர்களிடம் விசுவாசம் மட்டுமா இருந்தது? உசத்தியான திறமை! எதிர்கால சவால்களை சந்திக்க கூடிய திறமை.

1956இல் வாசன் விகடனை லட்சக்கணக்கில் விற்கும் அளவுக்கு ஒரு புரட்சி செய்தார். அப்போது அங்கே நீண்ட காலமாக வேறு எங்கும் போகாமல் விசுவாசமாகப் பணிபுரிந்த பலருக்கு குட் பை சொல்லிவிட்டார். வருடக் கணக்கில் விற்பனை ஒரே மாதிரி தேங்கி நின்றது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பலரிடம் இருந்து கேட்டு அறிந்த தகவல்களைப் படியுங்கள்!

நடுவில் பல ஆண்டுகள் விகடனை வாசன் நேரடியாக கவனிக்காது சந்திரலேகா உட்பட திரைப்படங்களில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. 1956இல் புதிய டீம் உருவாக்கி, தானே தலைவராக வழி நடத்தினார். விற்பனையை இரண்டு லட்சத்திற்கு ஏற்றிக் காட்டினார். வேலை பறிபோன விசுவாசிகள் இதற்கு மேல் விற்காது என்று வாசன் கேட்டபோதெல்லாம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தார்களே!

ஆகவே, முதலாளிகள் விசுவாசத்தை மட்டுமே மதிக்கவும் முடியாது! விசுவாசிகளுக்கு காலவேகத்தின் சவால்களுக்கு சவால் விட தெரிந்திருக்க வேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதையும் அவர்கள் முதல் பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்!

தினமணியில் ஆசிரியராக ஏ. என். சிவராமன் அவர்கள் 80 வயது தாண்டியும் இருந்த ரகசியம் அதுவே. தினமணிக்கு பெரும் செல்வாக்கு ஏற்படுத்தித் தந்தவர். ஓய்வு பெற்ற பிறகும் ஏ.என். எஸ் வீட்டில் சும்மா இருக்கவில்லை! உருது கற்றுக் கொண்டிருந்தார்.

தினமணி ஆசிரியர் பிரிவில் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர் சேஷாத்திரி அவர்கள்! அவருடைய விசுவாசம் பிளஸ் திறமைக்கு மதிப்பு கொடுத்து எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் அவர் வசிப்பதற்கு வழி செய்யப் பட்டிருந்தது.

நீண்ட காலம் தினமணியில் பணிபுரிந்த பத்திரிகை உலக ஜாம்பவான் என். ராமரத்தினம் ஆசிரியராக வேலை பார்த்தபடியே மயங்கி உயிர் இழந்ததாக கேள்விப்பட்டதுண்டு!

ஆதித்தனாரும் இதே கண்ணோட்டத்தில் திறமையும் விசுவாசமும் உள்ள அ.மா. சாமி போன்றவர்களை இறுதிவரை கைவிடவில்லை!

சுந்தரராமசாமியின் கதை ஒன்று. பெரு முதலாளிடம் நீண்ட காலம் விசுவாசமாக வேலை பார்த்து கொண்டிருந்தார் ஒரு கணக்குப்பிள்ளை. எத்தனை இலக்கமானாலும் கூட்டல் கழித்தல்களை மனக்கணக்காக முடிப்பார்! முதலாளிக்கு பிரமிப்பு. கால்குலேட்டர் வந்தவுடன் கணக்கு பிள்ளை மதிப்பு புஸ்வாணம்! விசுவாசம் ஹோ கயா..! விசுவாசத்துக்குப் பலவிதங்களில் ஆபத்து வரும்!

முதலாளி போய் அவர் இளம் வாரிசு வருவார்! நாம் சொன்னால் கேட்காமல் பதில் பேசுகிறாரா என்று வாரிசு நினைத்த நிமிடமே விசுவாசி வீட்டுக்கு கிளம்ப வேண்டியதே.

‘ இப்பொழுது எல்லாம் விசுவாசம் தேவையற்றது என்று கருதப்படுகிறது. கம்ப்யூட்டர், ஏஐ என்று வந்த பிறகு விசுவாசம் குப்பைக் கூடையில் வீசப்படுகிறது. வேலை பார்க்கும் இளைஞர்களும் விசுவாசம் என்றால் என்ன என்கிறார்கள். ஒரு கால் மட்டுமே பணிபுரியும் நிறுவனத்தில் வைத்திருக்கிறார்கள்! அடுத்த கம்பெனிக்கு ஜம்ப் செய்ய இன்னொரு கால் தயாராக இருக்கிறது. இதனால் நிறுவனங்களின் வெற்றி பாதிக்கப்படாமல் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. இதுவே இன்றைய நிலைமை’ என்று கூறினார் ஒரு பத்திரிகையாளர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram