இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம். ஒரு பானை சோற்றுக்கு நான்கு சோறு பதம் என வைத்துக்கொள்க.
ராஜ்நீதி (2010)
மீண்டும் மீண்டும் மகாபாரதம் இந்திய திரைப்படப் படைப்பாளிகளை ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்துகொண்டே இருக்கிறது. இயக்குநர் பிரகாஷ் ஜா இயக்கிய ராஜ்நீதி(2010) என்ற படம் மகாபாரதத்தை இன்றைய சமகால அரசியல் சூழலில் வைத்துப் பார்க்கிறது. இந்திய அரசியல் சூழலின் அத்தனை அம்சங்களும் மகாபாரதம் என்கிற அற்புத அரசியல் காவியத்தில் அரங்கேறியவைதான்.
ராஷ்ட்ரவாதி கட்சியின் தலைவர் பானுபிரதாப், தான் அளித்த ஆதரவை விலக்கிய நிலையில் ஆட்சி கவிழ்கிறது. அடுத்த தேர்தலுக்கு முன் பானுபிரதாப் வாதநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்கிறார். தம்பி சந்திர பிரதாப்பிடம் கட்சியை ஒப்படைக்கிறார். பானுபிரதாப்பின் மகன் வீரேந்திர பிரதாப்புக்கு இது பிடிக்கவில்லை. தனக்கே அதிகாரம் வேண்டும் என நினைக்கிறார். சந்திரபிரதாப்புக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ப்ரித்வி பிரதாப். இளையமகன் சமர் பிரதாப் ( ரன்பீர் கபூர்).
பிரித்வி, அப்பாவின் அதிகாரத்தை தானும் வெளிக்காட்ட முனைகிறார். ஆசாத் நகர் என்ற பகுதியில் கட்சி சார்பாக வெளிஆள் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க உள்ளூரில் எதிர்ப்பு. எதிர்ப்பவர் அங்கே செல்வாக்கு பெற்ற இளைஞரான சூரஜ் (அஜய் தேவ்கன்). பெயரைக் கவனியுங்கள் சூரியன்.
ஆமா… பிரித்வி, சமர் ஆகியோரின் தாய்க்கு திருமணத்துக்கு முன்னால் பிறந்த மகன் தான் சூரஜ். அவனை கங்கை ஆற்றில் விட, தலித் சமூகத்தை சேர்ந்த காரோட்டியால் வளர்க்கப்பட்டிருக்கிறான்.
கட்சிக்கூட்டத்தில் நியாயம் கேட்கவரும் சூரஜ், பிரித்வியால் அவமானப்படுத்தப்பட, அதே இடத்தில் கட்சிப்பதவி தந்து அமர வைக்கிறான் வீரேந்திர பிரதாப். கர்ணனுக்கு அங்க நாட்டை துரியோதனன் தந்தது போல.
சந்திரபிரதாப்பை வீரேந்திராவும் சூரஜும் கொலை செய்து, பிரிதிவியின் மீது வன்புணர்வு குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்புகிறார்கள். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் தம்பி சமர், இப்போது கட்சியையும் குடும்பத்தையும் மீட்க வேண்டும். தன் தாய் மாமாவான பிரிஜ்கோபாலுடன் சேர்ந்து திட்டம் போட்டு, பதிலுக்குப் பதில் கொலைகளில் ஈடுபடுகிறார். இடையே தன்னைக் காதலிக்கும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இந்துவை (காத்ரினா காய்ப்), தேர்தல் பிரச்சார நிதியுதவி பெறுவதற்காக அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ஆனால் சமருக்கு வீரேந்திரா வைக்கும் குறியில் அண்ணன் பிரித்வி இறக்க, இப்போது அண்ணி ஆகிவிட்ட இந்துவை முதலமைச்சர் வேட்பாளராக்கி ஜெயிக்க வைத்துவிட்டு நாட்டை விட்டே செல்கிறான் சமர்.
தன் அண்ணன் என்று தெரியாமலேயே சூரஜையும், வீரேந்திர பிரதாப்பையும் போட்டுத்தள்ளிவிடுவதும் நடக்கிறது. முன்னதாக மகாபாரதக் கதையை அடியொற்றி, தன் மகன்கள் பக்கம் வந்துவிடுமாறு சூரஜை, பிரித்வி- சமர் ஆகியோரின் தாய், தான் தான் உன் அம்மா எனச் சொல்லி அழைக்கும் கண்ணீர்க் காட்சியும் உண்டு.
அதிகாரத்துக்காக இந்தியாவின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் நடப்பதைவிட இப்படம் கூடுதலாக எதையும் சொல்லிவிட வில்லைதான். புழுதி படர்ந்த மைதானங்களில் பெருங்கூட்டம், ஹெலிகாப்டர்களில் வந்திறங்கும் அரசியல்வாதிகளுக்காக வாழ்க கோஷம் எழுப்பும் காட்சிகள் படம் முழுக்க நிறைந்துள்ளன. கிட்டத்த படத்தின் கதையே பிரச்சார மேடைகளில் நகர்வது போன்ற உணர்வும் ஏற்படும். அரசியல் என்பது மேடைகளில் நடிக்கப்படுவதுதானே?
பீப்லி லைவ்
அமீர்கான் தயாரிப்பில் அனுஷா ரிஸ்வியின் இயக்கத்தில் 2010-இல் வெளியான படம் பீப்லி லைவ். நாடு முழுக்க குறிப்பாக மகாராஷ்ட்டிராவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பெரும் பிரச்னையாக இருந்த காலகட்டம் அது. துணிச்சலாக இப்பிரச்னையை கையில் எடுத்து, இதை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் எப்படி தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொன்ன கறுப்பு காமெடி வகை படம் இது.
பீப்லி முக்கியபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமம். ஏழை விவசாயியான நத்தாவும் அவனது அண்ணன் புதியாவும் தங்கள் கடனைக் கட்டாவிட்டால் நிலத்தை வங்கி பிடுங்கிக் கொள்ளும் என அறிந்து கிராமத்தலைவரிடம் உதவி கேட்கிறார்கள். அவரோ, உங்களில் யாராவது தற்கொலை செய்துகொள்ளுங்கள்; அரசாங்க உதவி கிடைக்கும் என கிண்டலாகப் பேசித் துரத்த, இவர்களோ அப்படிச் செய்யலாமே என நினைத்துவிடுகிறார்கள். குடும்பத்துக்காக நத்தாவை தியாகம் செய்யுமாறு புதியா கேட்பதை அங்கே வந்த பத்திரிகையாளர் ராகேஷ் கேட்டுவிடுகிறான். அதை தன் சானலுக்குச் சொல்ல, அங்கிருந்து செய்தி நத்தாவின் தற்கொலை பற்றிப் பரவுகிறது. இதை கவர் செய்ய ராகேஷுடன் கிராமத்துக்கு நந்திதா என்ற பெண் பத்திரிகையாளர் வர, போட்டிச் சானல்களும் கிராமத்துக்குள் நுழைந்து நத்தாவின் தற்கொலை எப்போது எனக் கழுகுபோல் காத்திருக்கிறார்கள். அவனை விடாமல் பின் தொடர்கிறார்கள். அப்போது வரும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி இதனால் பிரச்னை வரும் என நினைத்து நத்தாவுக்கு பணம் கொடுத்து அவனை தற்கொலை செய்யவிடாமல் தடுக்கப் பார்க்க, எதிர்க்கட்சியோ தற்கொலை செய்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்த ஒரே அக்கப்போர்! இடையில் நத்தாவை ஊர்த்தலைவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் கடத்திச் செல்கிறார். இதில் செய்தி சேகரிக்கச் செல்லும் ராகேஷ் அப்போது ஏற்படும் தீவிபத்தில் இறக்கிறான். நத்தா செத்துவிட்டதாக எல்லோரும் நினைக்க, விபத்தில் செத்தவர்களுக்கு நிதியுதவி கிடையாது என அரசு மறுக்கிறது. ஊடகங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றன. தப்பிப்போன நத்தா தொலை தூர ஊர் ஒன்றில் கட்டடத் தொழிலாளியாக கூலி வேலை செய்வதுடன் படம் முடிகிறது.
மழையின்றி வறண்ட நிலப்பரப்பில், வறுமையான விவசாயிகளின் மத்தியில் காமிராக்களை வைத்து, தங்கள் டிஆர்பிக்காக போட்டியிடும் சானல்கள்; தங்கள் நலனுக்காக ரத்தம் உறிஞ்சக் காத்திருக்கும் அரசியல்வாதிகள் என சமூகத்தின் மனச்சாட்சியை அசைத்துப் பார்த்தது அப்படம். வளர்ச்சி, தொழில்மயம் ஆகியவற்றின் உண்மை விலை என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் என்பதையும் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரம் மட்டுமே என்று மாறிப்போயிருப்பதையும் அபத்த நாடகமாகச் சொன்னது பீப்லி லைவ். விவசாயி தற்கொலை என்பதை செய்திகளில் ஒன்றாகப் பார்த்து அமர்ந்திருந்த நகர்ப்புற வர்க்கத்துக்கு உண்மையில் இப்படம் சொன்னது ஒரு வலுவான செய்திதான். ஏராளமான விருதுகளை வென்ற இப்படம் ஆஸ்கர் போட்டிக்கும் அனுப்பப்பட்டது!
ஆந்தி
விடுதி மேலாளரான ஜேகே, போதையில் இருக்கும் ஓர் அரசியல்வாதியின் மகளான ஆர்த்திக்கு உதவி செய்கிறான். இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள். பிறகு மண முறிவு ஏற்பட்டு விலகிச் சென்றுவிடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து ஜேகே நடத்தும் விடுதியில் கட்சிப் பிரச்சாரத்துக்காக வந்து தங்குகிறார் முன்னாள் மனைவியும் தற்போதைய அரசியல் கட்சித் தலைவருமான ஆர்த்தி தேவி. அவர்களிடையே ஓர் உணர்வுபூர்வமான சந்திப்பு நிகழ்கிறது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுதி மேலாளருக்கும் ஆர்த்திக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்புகிறார்கள். ஆர்த்திக்கு தோல்வி நிச்சயம் எனச் சொல்லப்படுகிறது. இச்சமயம் எதிர்க்கட்சி வேட்பாளர் தன் மீது களங்கம் செலுத்தி உரையாற்றிக்கொண்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் துணிச்சலாக மேடை ஏறுகிறாள் ஆர்த்தி. அதுதான் கிளைமாக்ஸ். விடுதி மேலாளர் என் கணவர். அவருடன் பழகியது பாவமா? உங்களுக்குச் சேவை செய்யவே தன் கணவரைப் பிரிந்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் சந்தித்தேன். அது தவறா? என்னை விட்டுவிடுங்கள். எனக்கு வாக்களிக்காதீர்கள்… என ஆர்த்தி தேவி உணர்ச்சி மல்க உரையாற்றுகிறாள். மக்கள் உருகிப்போய் உடனே ஆர்த்தி தேவி வாழ்க என கோஷம் எழுப்புகிறார்கள். ‘நீ அரசியலில் ஈடுபடவேண்டும். தொடங்கியதை முடிக்கவேண்டும்’என ஜேகே சொல்லி ஹெலிகாப்டரில் வழியனுப்பி வைக்கிறான். இது 1975-இல் வெளியான ஆந்தி என்ற இந்திப் படத்தின் கதை. இதன் இயக்குநர் குல்சார். ஆர்த்தியாக நடித்தவர் புகழ்பெற்ற வங்காள நடிகை சுசித்ரா சென். ஜேகே வாக நடித்தவர் சஞ்சீவ்குமார்
ஏதோ காதல்கதை போல் சாதாரணமாகத்தான் இருக்கிறது. ஆனால் வெளிவந்த ஆண்டில் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. படம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது என்று படாதபாடு படுத்தப்பட்டது. முதலில் காங்கிரஸ் கட்சியின் புகழுக்குக் கேடு விளைவிப்பதாக தேர்தல் ஆணையம் தடை விதித்தது. பின்னர் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபின் சுத்தமாக படம் எங்கும் வெளியிடப்படவில்லை. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக தேசிய அளவில் இப்படம் பெரும் புகழ் அடைந்தது. இதற்கடுத்து 1977-இல் வந்த தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, தடையை நீக்கியது. படத்தை தூர்தர்ஷனில் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டது. இதுவே சுசித்ராவின் கடைசி இந்திப்படமாகவும் அமைந்தது. அவர் 1978-இல் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். படத்தில் ஆர்த்தியின் தோற்றம் இந்திராவைப் போல் அமைக்கப்பட்டதால் பல நடிகைகள் நடிக்க மறுத்தனர். சுசித்ரா துணிச்சலாக ஒப்புக் கொண்டார். குல்சார் இந்த தோற்றம் அப்போதைய பீகார் அரசியல்வாதி தாரகேஸ்வரி சின்ஹாவை ஒட்டி அமைக்கப்பட்டது எனக் கூறினார். ஆனாலும் முன் தலையில் நரைமுடி; கறுப்புக் கண்ணாடி என அப்படியே இந்திராவை முன் நிறுத்தி இருந்தார்கள்.
இது ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண், தன் குடும்பவாழ்வில் இருந்து விலகி தனக்கென ஓரிடத்தை அரசியலில் நிறுவுவதை அடிப்படையாகக் கொண்ட பெண்ணியப் படமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் அது இந்திரா காந்தியின் உச்சகட்ட அதிகார காலகட்டத்தில் வெளியான படம் என்பதால் அரசின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அருமையான பாடல்கள்; பின்னணி இசை; போரடிக்காத திரைக்கதை கொண்ட இப்படம் நல்லதொரு காண் அனுபவமாகவே அமைகிறது.
சபர்மதி ரிப்போர்ட் (2024)
2002-இல் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிந்து 59 பேர் சாம்பலானார்கள். சமர்குமார் என்ற பத்திரிகையாளர், தன் சானலின் மூத்த நிருபருடன் அதைப் படமெடுக்கப் போகிறார். அது விபத்து அல்ல திட்டமிட்ட சதி என அவருக்குத்தோன்றுகிறது. அதை சதி என நிறுவி அதைச் செய்தவரை(?)க் கண்டுபிடிப்பதே கதை. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் இப்படத்தில் இந்தி மொழி ஜர்னலிசத்துக்கும் ஆங்கில ஜர்னலிசத்துக்குமான மோதல் வேறு. உச்சகட்ட அபத்த காட்சிகளுடன் கடைசியில் நீதிமன்றத்தில் சமர்குமார் சவால் விடுகிறார். பின்னர் ஓர் இந்தி சானலில் தோன்றி அவர் தன் செய்தியைச் சொல்வதுடன் முடிகிறது.
கலை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதாகவும் நல்லிணக்கத்தை உருவாக்குவதாகவும் பாதிக்கப்படுகிறவர்களின் பக்கம் நிற்பதாகவும் இருக்கவேண்டும் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தால் முழுக்க முழுக்க அதற்கு எதிர்முனையில் இருந்து எடுக்கப்பட்ட படம்தான் இது. ஆளுங்கட்சி சார்பில் வரவேற்கப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இருக்கத்தேவையில்லை. ஆனால் படம் வெளியான பின்னர் சரியான வரவேற்பையும் பெற முடியாமல் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனது என்பதே ஓர் ஆறுதல்.