சிறப்புப்பக்கங்கள்

மனதைத் திருடிய மகிழ்ச்சிப் படங்கள் (1975 - 2000)

நடிகர் இளவரசு

நன்றாக நினைவிருக்கிறது. அன்று கோ-31 பருத்தி விதை வாங்க மணப்பாறைக்கு வந்திருந்தேன். வேலை முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது கடையில் தொங்கிய குமுதம் பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன்.

அட்டையில் கோட் சூட் போட்ட அப்பா பையன் படம் இருந்தது. இயக்குநர் பாக்யராஜ் அதில் மௌனகீதம் படத்தின் கதையை தொடராக எழுதத் தொடங்கிய இதழ். அதை வாசித்திருந்த நான் சில மாதங்களில் சென்னைக்கு சினிமா ஆசையோடு வந்துவிட்டேன். மவுண்ட் ரோடு ஆனந்த் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அடுத்த காட்சி என்ன வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால் நான் தான் முன்பே படித்துவிட்டேனே? பாக்யராஜின் மௌன கீதங்கள் படம் அந்த காலகட்டத்தில் ஒரு குடும்ப வாழ்விலான கணவன் மனைவி இடையிலான உணர்வுபூர்வமான நெருக்கத்தை அவ்வளவு எதார்த்தமாக அனைவரும் ஏற்கும் விதத்தில் சொன்ன படம்.

நாயகி: ‘ஏங்க இந்த பிளவுஸை கொஞ்சம் மாட்டிவிடுங்களேன்!’ நாயகன்: எனக்கு நேரமில்லை ஆபீசுக்கு கிளம்பிட்டேன். நாயகி: ராத்திரி கழட்டறது மட்டும் அவ்வளவு வேகமா கழட்டுறே..

கூர்மையான அதே சமயம் எதார்த்தமான வசனங்களில் ஒளிந்திருந்த குறும்பை ரசிகர்கள் அன்று ரசித்தனர். இதற்காகவே பாக்யராஜ் படங்களை விடாமல் பார்ப்பார்கள். எவ்வளவு சிக்கலையும் நகைச்சுவையாக சொல்லித் தாண்டிச் செல்வார்.

1975-லிருந்து 2000 ஆண்டு வரையிலான மகிழ்ச்சியான தமிழ்ப்படங்கள் என்றால் எத்தனையோ இருக்கின்றன. பொதுவாக திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே எடுக்கப்படுகின்றன. சில படங்களில் மட்டும் இந்த ஒத்திசைவு மிக உயர்வாக வெளிப்பட்டுவிடுகிறது. அவை கிளாசிக்குகளாக மாறிவிடுகின்றன.

பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா அவற்றில் ஒன்று. ஒரு பெண்ணைக்கவர எல்லா விதங்களிலும் முயற்சிக்கும் மூன்று விடலைப் பையன்கள்… அந்தப் போட்டியில் உருவாகும் உளவியல் வயசுக்கோளாறுகள்.... அவ்வளவு சிரிப்பு எல்லா சீன்களிலும். வீட்டில் ரேஷன் கடைக்குப் போடா என்றால் மறுத்துவிட்டு ராதிகாவுக்காக ரேசன் கடைக்குப் பாக்யராஜ் போய்விட்டு வரும் அந்த காட்சி ஒன்றே போதும். நண்பனைத் தேடி வீட்டுக்குப் போகும்போது அண்ணன் வீட்டில் இல்லை என்று பக்கத்து வீட்டுப் பெண் சொல்லும் காட்சி.

இன்னும் நினைவில் இருக்கும் அந்த அசட்டுத்தனமான ரியாக்சன்... வெளியே கிடக்கும் செருப்பு எனப் பார்த்துப்பார்த்து செதுக்கி இருப்பார். நடிகர் செந்திலும்கூட இப்படத்தின் கடைசிக்கட்டத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து கலக்குவார். பாக்யராஜுக்கென்று ஒரு அபிமான திரைநடிகர்கள் குழு ஒன்று உண்டு. அவரது அநேகமான படங்களில் இவர்கள் அனைவரையும் பார்க்கலாம். ஆளுக்காள் கலக்குவார்கள்! இந்தப்படத்தை வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் பார்த்தேன்… அதுவும் அந்த இந்தி கற்றுக்கொள்ளும் ரகுதாத்தா காமெடி இருக்கிறதே…. அந்தப் பெயரில் இன்று ஒரு படமே எடுத்துவிட்டார்கள்!

உள்ளத்தை அள்ளித்தா 1996 இல் வெளியான படம். சுந்தர் சி திரைக்கதை. செல்வபாரதி வசனம். இப்போது நினைத்தாலும் அவர்களால் திரும்ப எடுக்க முடியாது; அப்படி ஒரு படம். அந்த படம் வெளியாகி மூன்றுநாள் கழித்து பேசிக்கொண்டிருந்தபோது ’முதல் மூன்று நாள்களில் படத்தைப் பார்க்க ஆளில்லை’ என்பதாகவே சொல்லப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து ரசிகர் கூட்டம் எகிற ஆரம்பித்தது. அந்தப் படத்தைப் பார்ப்பதே பெருமை என ஆகிவிட்டது. உள்ளத்தை அள்ளித்தா- மிகப்பெரிய கிளாசிக் மகிழ்ச்சித் திரைப்படம் ஆகிவிட்டது. சபாஷ் மீனா போன்ற படங்களின் தழுவல் இருந்தாலும் கார்த்திக் – கவுண்டமணி- மணிவண்ணன் ஆகியோரின் கூட்டணியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டார்கள். லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைக்கவேண்டும் என்பது சுந்தர் சியின் நோக்கம். அவர் ஒரு திட்டம் வகுத்தால் அதில் கொஞ்சமும் குழப்பமே இல்லாமல் கதையைக் கொண்டுபோகிற திறமைசாலி. காட்சிக்குக் காட்சி மகிழ்ச்சியாக நிறைத்த படம் இது.

ரஜினி அறிமுகமாகி கௌரவ வேடம், இரண்டாம் நாயகன், வில்லன் எனப் பல ரோல்கள் செய்து ஹீரோ ஆகிவிட்ட நிலையில் 1981இல் வெளியான படம் தில்லு முல்லு. கே பாலசந்தர் அவரது பாணியில் இருந்து மாறி ஒரு இந்திப்படத்தை ஒட்டி எடுத்த படம். இந்திரன் சந்திரன் என்று இரு பாத்திரங்களை மீசையை மட்டும் வித்தியாசப்படுத்திக் காட்டி அசத்திய படம். காந்தியவாதியாக வரும் சந்திரன், ‘ராகங்கள் பதினாறு’ என நடை உடை ஸ்டைல் என மாறுபாட்ட இந்திரன் என இரு ரோல்களில் ரஜினி விளையாடி இருப்பார். ரஜினியை பன்முக ஆற்றல் கொண்டவராகவும் காமெடி செய்ய முடிகிறவராகவும் நிறுவிய படம். தேங்காய் சீனிவாசன் இன்னொரு தூண் இப்படத்தில். ‘சார்.. நல்லா சொல்லுங்க நீங்க பார்த்த ஆளுக்கு மீசை இருந்துச்சா?’ என்று சந்திரன் கேட்க, ஆளைத்தான் பார்த்தோம் மீசை எல்லாமா நினைவில் இருக்கும் எனக் குழம்பி தேங்காய் சீனிவாசன் ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்கள்.. சான்ஸே இல்லை ப்ரோ!

இதைவிட்டால் அந்த காலகட்டத்தில் வந்த தம்பிக்கு எந்த ஊரு(1984) மிக மகிழ்ச்சிகரமான படம்தான். இப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். பின்னாளில் அண்ணாமலை சந்திரமுகி என ரஜினிகாந்த் சில படங்களில் மெனக்கெடாமல் காமெடி செய்வதற்கு அடிப்படை, தம்பிக்கு எந்த ஊரு படத்தில் தெரியும். இதெல்லாம் தமிழ்த்திரை உலகில் சாணக்கியராகத் திகழ்ந்த பஞ்சு அருணாசலம் கொடுத்த கமர்சியல் வடிவங்கள். ஒரே நேரத்தில் கமலையும் ரஜினியையும் எப்படிக் கையாண்டு ஹிட் கொடுக்கவேண்டும் எனத் தெரிந்தவர் பஞ்சு. இப்படத்தின் தயாரிப்பு அவர்தான்.

ஆச்சரியங்கள் பல உலகில் உண்டு. கரகாட்டக்காரன் இன்று காலம் கடந்து நிற்கும் திரைப்படம். தமிழில் எக்கச்சக்கமாக வசூலித்த அதிகநாள் ஓடிய படங்களில் ஒன்று. ராமராஜன், கனகா ஜோடி பட்டிதொட்டியெல்லாம் புகழ்பெற்ற ஜோடி. இதில் வரும் பாடல்கள், நகைச்சுவைகள் எல்லாம் மிக அருமையான கலவையில் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்ததுடன் தயாரிப்பாளரையும் மகிழ்வித்தது. கரகாட்டக்காரன் பலவிசயங்களுக்காக நினைவுகூரப்பட்டாலும் அதில் வரும் வாழைப்பழ காமெடி இதில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த காமெடியை எடுத்துமுடித்தவுடன் இறுதியில் அது மிகவும் நீளமாக இருக்கிறது. அதைத் தூக்கிவிடலாம் என கங்கை அமரன் முடிவு செய்திருக்கிறார். கவுண்டமணிதான் இல்லை வேண்டாம். அது நல்லா வரும் என்று தடுத்திருக்கிறார். அதன் பிறகே டப்பிங் பேசி இருக்கிறார்கள்! கவுண்டமணி அவர்களே சொன்ன தகவல் இது!

மகிழ்ச்சியான படங்கள் பட்டியலில் பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கவே முடியாது. பாக்யராஜ் கிட்ட இருந்து எல்லா திறமைகளையும் நகலெடுத்து உருவானவர் பாண்டியராஜன். ஆண்பாவத்தில் பாண்டியன் தான் ஹீரோ. சீதா நாயகி. ஆனால் துணை கதாபாத்திரமாகத்தான் பாண்டியராஜன் நடிப்பார். ஆனால் அவர் இத்தனைக் காலங்களில் தன் பாத்திர வார்ப்பால் ஹீரோவாகவே வளர்ந்து நிற்கிறார். கார் முட்டுதா என்று பார்த்துச் சொல்லும் காட்சியில் தொடங்கி, என் அம்மாவை மட்டும் நீ கட்டிக்கலாம்? உன் அம்மாவை நான் கட்டிக்கக்கூடாதா என்று திகைப்பில் ஆழ்த்தும் நிமிடம் ஆகட்டும்.. ஆண்பாவம் முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படமே. ஓர் அறிமுக இயக்குநராக இருந்தும் இளையராஜா அந்த படத்துக்குக் கொடுத்திருக்கும் பாடல்கள் ஆகட்டும் பின்னணி இசை ஆகட்டும்.. எல்லாம் வேற லெவல். கல்கி பத்திரிகையில் எண்பதுகளில் இளையராஜாவிடம் ஒரு பேட்டி. இசை என்பது மந்திரமா தந்திரமா என்பது கேள்வி. மனுசன் இசை என்பது தந்திரம் என்று மட்டும் பதில் சொல்லி இருப்பார். இந்த இடத்தில் இளையராஜாவை நீங்க யாருமே கொண்டாட வேண்டாம்! சும்மா அவர் இசையை ரசித்தால் போதும்யா… அவர் எல்லா கட்டத்தையும் கடந்துபோய்விட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது! அந்த காலகட்டத்தில் எல்லா படங்களிலும் மகிழ்ச்சியின் அளவை பலமடங்கு கூட்டியதில் இசைஞானியின் பங்களிப்பு அபாரமானது!

இவ்வளவு படங்களைச் சொல்லிவிட்டு இவற்றுக்கெல்லாம் மாஸ்டர் பீஸ் எனச் சொல்லத்தகுந்த ஒரு படத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கலாமா? மைக்கேல் மதனகாமராஜன் (1990). ஒரு காலத்தில் மைக்கும் கையுமாக திரையில் தோன்றிக்கொண்டிருந்தவர் கமலஹாசன். மோகன் வந்தபிறகு அவரிடம் கொடுத்துவிட்டு தன் திறமைக்குத் தீனிபோடும் பாத்திரங்களைத் தேடி அலைந்தவர்.

அப்படியொரு படமாக தனக்குத் தானே பஞ்சு அருணாசலம் வாயிலாக உருவாக்கிக்கொண்டதுதான் நான்கு வேடங்களுடன் மை.ம.கா. படம் முழுக்க எல்லோரும் சீரியஸாக நடித்துக்கொண்டிருப்பார்கள். நாம் மட்டும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருப்போம். அந்த ஆள் மாறாட்டக்காட்சிகளில் உதயம் தியேட்டரில் எகிறி சிரித்துக்கொண்டிருந்தார்கள்! சந்தானபாரதி, ஊர்வசி, அந்த பாட்டி, பீம்பாய்… எல்லாம் என்னமாதிரியான பாத்திரங்களில் பின்னிப் பெடலெடுத்திருந்தார்கள்? ஐ மீன், யூ மீன் என சாம்பாருக்குள் மீன் விழுந்த காட்சிகளை சர்வசாதாரணமாக டீல் பண்ணி இருப்பார்கள். அது சினிமா சினிமாவாக மட்டும் பார்க்கப்பட்ட காலம். அது ஒரு காமெடி படம். எப்போதும் கிளைமாக்ஸ் காட்சியை ஹீரோயிசமாகவே எடுக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா இலக்கணம். அதையே பஞ்சு அருணாசலம் போன்றவர்கள் வலியுறுத்தினாலும் அதையும் சிரிப்பு கிளைமாக்ஸாகவே எடுத்துவைத்தார்கள். அதற்கு கமலே காரணம் என்று கூறப்பட்டது. இதிலும் இளையராஜாவின் கைவரிசை. சுந்தரி நானும் சுந்தரி ஞானும் பாடலின் நுட்பங்களை இப்போதும் கேட்கையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது! அபூர்வ சகோதரர்களையும் இந்த பட்டியலில் சேர்க்கமுடியும். ஆனால் அது காலம்காலமாக உருவக்கேலிக்கு உள்ளாக்கப்பட்ட உயரம் குறைவான ஒரு மனிதனின் காதல் கதை. அவனது உணர்ச்சிகளையும் கண்ணீரையும் பதிவு செய்த கதை. அதை இதில் வைக்கமுடியாது. கமல் அந்த அப்பு பாத்திரத்தில் நடித்த புதுமைதான் பேசப்பட்டதே தவிர, அந்தப் பாத்திரப் படைப்பின் உன்னதம் அந்த அளவுக்குக் கவனிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தலைமுறையும் முப்பது ஆண்டுகள் என்பார்கள். ஆனால் சினிமாவில் மட்டும் ரசிகர்களின் தலைமுறை பத்து ஆண்டுக்கு ஒரு முறை மாறும். அப்படி மாறும் தலைமுறைகளைக் கடந்து இந்தப் படங்கள் மகிழ்ச்சிப்படங்களாகவே நீடிக்கின்றன.

சிலநாள்களுக்கு முன்பு நாராயணமூர்த்தி என்ற இயக்குநர் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கலாம்! அவர் இயக்கிய படம் மனதைத் திருடிவிட்டாய். இது பிரபுதேவா, விவேக், வடிவேலு நடித்த படம். ஒய் பிளட் சேம் பிளட் என்று வடிவேல் கேட்கும் புகழ்பெற்ற வசனம் இதில் வந்ததுதான். ஒரு பெண் ஆங்கிலத்தில் திட்டுவார். ஆனால் குரல் ஏதும் வராது. உதட்டசைவு மட்டும்தான். இதைக்கேட்கும் வடிவேலு நோ மம்மி, நோ டாடி என்ற வார்த்தைகளை மட்டும் சொல்வதன் மூலம் அந்தப் பெண் என்ன திட்டுகிறார் எனப் புரிய வைத்து ரசிக்க வைத்திருப்பார்கள். அந்தப் படம் என்ன காரணத்தாலோ தோல்வி அடைந்தது. முதல் படம் தோற்ற நிலையில் மீண்டு வரும் சூழல் அந்த இயக்குநருக்கு அமையவே இல்லை. மேலும் சில மகிழ்ச்சிப்படங்களைக் கொடுத்து நம்மை அவர் திருப்திப் படுத்தி இருக்கக்கூடும்! திரையுலகம் என்பது சாத்தியமானவை, சாத்தியமாகாதவை என இரு நிகழ்வுகளால் நிறைந்ததுதானே?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram