யூகியோ மிஷிமா  
சிறப்புப்பக்கங்கள்

விசுவாசத்தைக் கண்டறிதல்

எஸ்.ராமகிருஷ்ணன்

விசுவாசம் என்பது மன்னராட்சி காலத்தில் உருவான விழுமியம். நிலப்பிரபுத்துவக் காலத்தில் அப்பண்பு பெரிதும் வளர்ச்சி பெற்றது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவக் கால வாழ்க்கையில் விசுவாசம் என்பது வழக்கொழிந்த வெளிப்பாடு. அல்லது வணிகத் தந்திரமாகக் கருதப்படுகிறது.

விசுவாசம் என்பது ஒரு வடசொல். இதனை ஆழ்ந்த பற்று, மாறாத நம்பிக்கை, நன்றியுணர்வு என்று கூறலாம். சமயமும் அரசியலும் குற்றவுலகமும் விசுவாசத்தை முதன்மையான குணமாகக் கருதுகின்றன.

ஜப்பானில் விசுவாசமே மிக உயரிய நற்பண்பாகப் போற்றப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஜப்பானில் பேரரசர் மீதான விசுவாசம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆழமாகப் புகுத்தப்பட்டது. அதன் விளைவே மன்னரின் எச்செயலையும் எவரும் கேள்வி கேட்காமல் போரில் சண்டையிட்டார்கள். இறந்து போனார்கள்.

தன்னைப் பணியமர்த்தும் நிறுவனத்திற்கான விசுவாசம், தனது முதலாளியிடம் காட்ட வேண்டிய விசுவாசம், சக ஊழியர்களுக்குள் காட்ட வேண்டிய விசுவாசம் என ஜப்பானிய வாழ்வின் முக்கிய அம்சமாக விசுவாசமே விளங்குகிறது.

ஜப்பானிய பேரரசர் மீதான தனது ஆழ்ந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காக எழுத்தாளர் யூகியோ மிஷிமா, ‘செப்புகு’ எனும் வயிற்றைக் கிழித்துத் தற்கொலை செய்யும் முறையில் இறந்து போனார். அவரை எழுத்துலகின் சாமுராய் என்கிறார்கள்.

இது போலவே தனது எஜமானருக்காக அன்றாடம் காத்திருந்து உயிர்விட்ட ஹச்சிகோ நாயை உயரிய விசுவாசத்தின் அடையாளமாக ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இடைக்கால இலக்கியங்கள் பெரிதும் போர்வீரர்கள், பெண்களின் விசுவாசத்தைப் பேசுகின்றன. விசுவாசத்திற்காக இறந்து போனவர்களைப் பெருமைக்குரிய நாயகர்களாக அடையாளப்படுத்துகின்றது

ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தில் அவன் அதிகாரத்தை அடைவதற்காகத் தனது ராஜவிசுவாசத்தைக் கைவிடுகிறான். தனது வீட்டிற்கு விருந்திற்கு வந்த மன்னரை அவனே கொலை செய்கிறான். இதனை விசுவாசமற்ற கொடுஞ்செயல் என்றே வகைப்படுத்துகிறார்கள்.

அதே நேரம் கிரேக்க இதிகாசமான ஒடிஸியில் தன்னை நம்பிய வீரர்களுக்கு ஒடிஸியஸ் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்கிறான். போரில் கணவன் இறந்துவிட்டதான பலரும் சொல்லும் போதும் ஒடிஸியஸின் மனைவி பெனிலோப் கணவனுக்கு விசுவாசமாக நீண்டகாலம் காத்திருக்கிறாள். அவளது விசுவாசத்தை ஒடிஸியஸ் சோதனை செய்கிறான். அதில் பெனிலோப் வெற்றி பெறுகிறாள். இப்படி விசுவாசத்தைச் சோதனை செய்து பார்ப்பதை பைபிள் கதைகளிலும், இராமாயணத்திலும் காணுகிறோம்.

கிரேக்க சமூகத்தில் விசுவாசம் என்பது நட்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. நல்ல நண்பர் என்பதன் அடையாளம் அவர் காட்டும் விசுவாசமே. நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் அது ஒரு தந்திரமாக, அடிமைப்படுத்தும் வழிமுறையாக மாறியது.

நிலப்பிரபு அல்லது முதலாளியிடம் வேலைக்காரர்கள். விவசாயிகள் மிகுந்த விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சட்டமிருந்தது. ஆனால் எந்தச் சமூகத்திலும் முதலாளி இது போல வேலையாட்களிடம் விசுவாசமாக நடந்து கொண்டதில்லை. அப்படியொரு பண்பு தேவை என்று கூட அன்றைய சமூகம் கருதவில்லை. ஆனால் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் தங்களை ஆளும் அதிகாரத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த விசுவாசத்திற்கு ஏற்றாற்போலவே அவர்களுக்குச் சலுகைகள் கிடைத்தன. இப்படி நீண்டகாலமாகவே விசுவாசத்தின் தொடர்சங்கிலிமுறை சமூகத்தில் நடைமுறையில் இருந்தது

தனிநபர் சார்ந்த அறவுணர்வான விசுவாசம் இன்று வணிக நிறுவனங்களின் முதன்மையான திட்டமிடலாக மாறியிருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட பிராண்டினை வாங்கும் விசுவாசத்தை உருவாக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள்.

குடும்பம், சமயம், அரசியல், ராணுவம், குற்றவுலகம் மற்றும் வணிகம் என ஆகிய ஆறு தளங்களில் விசுவாசம் மிகவும் முக்கியமாகச் செயல்படுகிறது. இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

விசுவாசத்திற்குப் பல்வேறு முகங்கள் இருப்பதை இலக்கியமே காட்டுகிறது. குறிப்பாகக் குருட்டு விசுவாசம் பற்றியும். முரண்பட்ட விசுவாசங்கள் பற்றியும் பேசுகிறது. அது போலவே நன்மை சார்ந்த விசுவாசம், தீமை சார்ந்த விசுவாசம் பற்றியும் பேசும் இலக்கியம் விசுவாசம் உண்மையான நற்பண்பு தானா என ஆராய்கிறது.

மகாபாரதத்தில் துரியோதனின் தவறான செயல்பாடுகளை அறிந்தே கர்ணன் விசுவாசமாக நடந்து கொள்கிறான். இது போலவே பீஷ்மர் தனது சத்தியத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டிருக்கிறார். அதுவே கௌரவ அநீதியை ஏற்க வைக்கிறது.

படிப்பு வேலை, காதல், திருமணம் வணிகம், அலுவலகம் குடும்பம், மரணம் என வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் ஏதோ ஒன்றின் மீது நாம் விசுவாசத்துடன் நடந்து கொள்கிறோம். அந்த விசுவாசம் பொய்த்துப் போகும் போது வருத்தமடைகிறோம். ஆனால் விசுவாசம் தவறானது என ஒரு போதும் நினைப்பதில்லை.

விசுவாசம் என்பதை அடிபணிவதற்கான முறையாகவே அதிகாரம் பெரிதும் கையாளுகிறது. நியாயமான எதிர்ப்புணர்வுகள் கூட விசுவாசத்தின் பெயரால் ஒடுக்கபட்டிருப்பதை வரலாற்றில் காண முடிகிறது.

யார் யாருக்கு விசுவாசமாக இருப்பது. ஏன் இருப்பது. விசுவாசம் என்பது ஒருவழிப்பாதையா என்ற கேள்விகள் இன்று எழுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அரசு நமக்கு நிறைய நல்லது செய்கிறது, அவர்களிடம் நாம் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் எழுந்தன. ஆனால் சுதந்திரப்போர் இந்த விசுவாசத்தைப் புறந்தள்ளி முன்னேறி வெற்றியடைந்தது.

டால்ஸ்டாய் எழுதிய தி டெத் ஆஃப் இவான் இலிச் கதையில் தனக்கு ஏற்பட்ட நோயின் வழியாகத் தனது குடும்பத்தில் யாரும் தன்னை நேசிப்பதில்லை. வேலைக்காரன் மட்டுமே தன்னிடம் விசுவாசமாக நடந்து கொள்கிறான் என்பதை இவான் உணர்ந்து கொள்கிறான்.

அது போலவே காஃப்காவின் நாயின் விசாரணை சிறுகதையில் மனிதர்கள் உணவளிப்பதால் தான் அவர்களிடம் நாய்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறதா அல்லது அது நாயின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடா என்பது விவாதிக்கப்படுகிறது.

விசுவாசம் என்பது உயர்வு தாழ்வுகளின் போது ஒருவருடன் உடனிருப்பது. சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் பக்கத்தில் இருந்து தேவையான ஆதரவினை, உதவிகளைச் செய்வது. அது என்றைக்கும் தேவையான பழக்கம் என்கிறார் உளவியலாளர் சப்ரினா ரோமானோஃப்.

விசுவாசம் என்ற சொல் பெரும்பாலும் நிபந்தனையற்றது என்ற பொருளைக் கொண்டுள்ளது. ஆகவே இதனை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் சில நேரங்களில் ஆபத்தான நல்லொழுக்கம் எனக் கூற வேண்டும், விசுவாசி கண்மூடித்தனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது, அதைப் பலர் சுயநலம் அல்லது நெறிமுறையற்ற நடத்தைக்கான கேடயமாகப் பயன்படுத்த கூடும். என்கிறார் உளவியலாளர் வில்லியம்ஸ்.

ஒருவர் விசுவாசமற்றவராகத் தோன்றினால், அந்த நபர் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைப்பது கடினமாக இருக்கும். ஆகவே விசுவாசம் என்பது ஒரு சொல் கிடையாது. அது ஒரு உயர்பண்பு. பயனுள்ள நன்மை, என மறுத்து வாதிடுகிறார் சப்ரினா.

இந்த வாதங்களைக் காணும் போது விசுவாசம் என்ற சொல்லின் பொருளும் தேவையும் நோக்கமும் இன்று உருமாறியிருப்பதை அறிய முடிகிறது.

ஒரு நாளில் எவராலும் விசுவாசத்தைச் சம்பாதித்துவிட முடியாது என்கிறது ஐரிஷ் பழமொழி. இலக்கியம் சொல்லும் பதிலும் இதுவே.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram