மருத்துவக் கல்வியில் முக்கியமான ஒரு பாடம், ‘சமூகம் மற்றும் தடுப்பு மருத்துவம்’ அந்தப் புத்தகத்தின் முதல் பாடத்தின் ஆரம்பத்தில் வரும் வரிகள், ‘The best way to avoid diseases is not to be born’. நோய்களைத் தடுக்கவே முடியாது. அப்படித் தடுக்க வேண்டும் என்று நினைத்தால், பிறக்காமலேயே இருக்க வேண்டும் என்கிறார் நூலின் ஆசிரியர் பார்க். இதைத்தான் ‘பிறவாமை வேண்டும்’ என்று ஔவையார் சொல்லியிருக்கிறார்.
தர்க்கரீதியாகப் பார்த்தால், ஒரு ஆண் தன் வாழ்நாளில் எந்த மருத்துவ உதவியும் பெறாமலேயே பிறப்பு முதல் இறப்பு வரை இருந்துவிடுவதற்கான சாத்தியக் கூறு இருக்கிறது, ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படி இல்லை. ஏதேனும் ஒரு விதத்தில் அவளுக்கு மருத்துவ உதவி தேவை. நோயே வரவில்லை என்றாலும் இயற்கை பெண்ணின் உடலை வடிவமைத்த விதத்தில் அவளுக்கு சிலபல உதவிகள் தேவை. பூப்படைதல், கர்ப்பம், பிரசவம், பாலூட்டுதல், மாதவிடாய் நிற்றல் இப்படி ஏதேனும் ஒரு விதத்தில் அவளுக்கு உதவி தேவை.
உலகில் நவீன மருத்துவம் வளரத் துவங்கி, தளிர் நடை போட்டுக் கொண்டிருந்த காலங்களில் உறவில், நட்பில், ஊரில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெண்மணிகளே பிரசவம் பார்த்தார்கள். அவர்கள் கூறுவதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு பெண்கள் வாழ்ந்து வந்தனர். இயற்கை வடிவமைப்பில் பெண்ணுடல் ஒரு அற்புதம் என்றால், ஒருவிதத்தில் அந்த உடலமைப்பால் நிறைய சிரமங்களும் இருக்கின்றன. குடும்பக் கட்டுப்பாடு முறைகள் வருவதற்கு முன் தொடர்ச்சியான பிரசவங்கள் குழந்தை வளர்ப்பு என்று பல பெண்கள் அவதியுற்று மரணித்ததும் நடந்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை பெண்ணின் ஆரோக்கியத்தில் எத்தனையோ சவால்கள்.
சென்ற மாதத்தில் இரண்டு வளரிளம் பருவச் சிறுமிகளை சந்தித்தேன். ஒருத்தி பத்தாம் வகுப்பு வந்துவிட்டாள், இன்னும் பூப்படையவில்லை என்று பரிசோதனைக்குச் செல்ல, அவளுக்கு கர்ப்பப்பை மற்றும் கர்ப்பவாய் இரண்டும் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது, ஆனால் இரண்டுக்கும் இடையேயான இணைப்புப் பாதை முற்றிலுமாக வளரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரிதிலும் அரிதான நோய் இது, அறுவை சிகிச்சை செய்வது மிகக் கடினம், பெரு நகரங்கள் சிலவற்றில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற தகவல் தெரிந்து மனதளவில் குடும்பமே உடைந்து போனது. இரண்டு மூன்று நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு அதன் பின் பெருநகரம் ஒன்றுக்கு அவர்களை அனுப்பி வைத்தோம். இன்னும் சிகிச்சைகள் முழுவதுமாக முடிவு பெறவில்லை.
இன்னொரு சிறுமிக்கு பூப்பெய்தியது முதல் ரத்தப்போக்கு நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. ஒருவித ஹார்மோன் மாறுபாட்டால் நிகழ்ந்தது இது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்குப் பின் மீண்டாள். பூப்படைவது தாமதமானாலும் சரி, விரைவாக பூப்படைந்து விட்டாலும் சரி அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு, குறிப்பாகத் தாய்க்கு ஏற்படும் பதற்றம் அதீதமானது. இதற்கு சிகரம் வைக்கும் விதமாகத் தற்போது நிறைய சிறுமிகளுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையும் அதிகரித்திருக்கிறது.
மாறிவரும் உணவு முறை, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, உடலுழைப்பு இல்லாத நிலை, சரியான தூக்கமின்மை இவை இதற்கு முக்கியக் காரணங்கள். தனிப்பட்ட முறையில் வேறு சில காரணங்களாலும் இது நிகழலாம். மாதவிடாய் தொடர்பான தொந்தரவுகளைத் தவிர்க்கும் விதமாக பொதுவாக நாம் சொல்லக்கூடிய அறிவுரைகள் இவை தான். நேரத்திற்குச் சாப்பிடுங்கள், நேரத்திற்குத் தூங்குங்கள், முடிந்தவரை ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ‘ஊரே துரித உணவின் பின்னால் போகும்போது, நான் மட்டும் சுண்டல் சாப்பிடு, பழம் சாப்பிடு’ என்றால் பிள்ளைகள் ஒத்துக் கொள்வார்களா என்று கேட்கும் பெற்றோர்களிடம் எனக்குத் தெரிந்த வகையில் உணவுப் பட்டியல் ஒன்றைப் போட்டுக் கொடுக்கிறேன். வாரத்திற்கு ஒரு முறை துரித உணவை அனுமதிக்கலாம். அப்படி துரித உணவு சாப்பிட்ட அடுத்த ஒன்றிரண்டு வேளைகளுக்கு முழுமையான இயற்கை உணவுகள் எடுக்க வேண்டும்.
‘ஒரு நாளில் ஒரு முறையாவது பழங்கள் பச்சைக் காய்கறிகள், முளை கட்டிய பயிறு போன்ற சமைக்காத உணவைச் சாப்பிடுங்கள்’ என்கிறார் நேச்சுரோபதி மருத்துவரான ஒரு தோழி. அப்படி நானும் முயன்று பார்த்ததில் உடம்பு ஒரு மாதிரி இலகுவாக நன்றாகவே இருப்பதாகத் தோன்றியது. தற்போது நிபுணர்கள் கூறிவரும் உணவுப் பழக்கங்களில் seed cycling எனப்படும் விதைகள் சாப்பிடுவது பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. சீரற்ற மாதவிடாய், மாதவிடாய்க்கு முன்பாக வரும் மார்பக வலி, கோபம் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள், மாதவிடாய் வருகிறது ஆனால் சரியான ரத்தப்போக்கு இல்லை போன்ற அறிகுறிகள் இவை அனைத்திற்கும், அனைத்து வயதுப் பெண்களுக்கும் பொருந்தக்கூடிய உணவு முறையாக இது இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு ஒன்றாம் தேதி மாதவிடாய் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த மாதம் ஒன்றாம் தேதி அடுத்த மாதவிடாயை அவர் எதிர்பார்க்கிறார். இந்தச் சுழற்சியில் முதல் 15 நாட்களில் பூசணி மற்றும் ஆளி விதைகளை அவர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு எளிமையான ரெசிபி இருக்கிறது. ஒரு கை நிறைய பூசணி விதை, ஆளி விதைகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றோடு ஏழெட்டு பேரீச்சம்பழங்களைச் சேர்த்து, கொஞ்சம் ஏலக்காய், உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டால் போதும். அடுத்த 15 நாட்களுக்கு இதே போல் எள் மற்றும் சூரியகாந்தி விதைகளை உருண்டைகளாகச் செய்து பயன்படுத்துங்கள் என்கிறேன். ‘இதுவரைக்கும் அவளுக்கு மென்சஸ் சரியாவே வந்ததில்ல, விதைகள் சாப்பிட்டதில் சரியா வந்துடுச்சு’ என்று நேற்று கூட சொன்னார் ஒரு தாய்.
கூடவே உடற்பயிற்சியும் மிக அவசியம். “ஒல்லியா தானே இருக்கா? இவளுக்கு எதுக்கு வாக்கிங்? இன்னும் மெலிஞ்சிடப் போறா” என்றார் ஒரு பாட்டி. மெலிவதற்காக மட்டுமல்ல உடற்பயிற்சிகள். நாம் சாப்பிடும் உணவை நம் உடல் நல்லமுறையில் எடுத்துக் கொள்வதற்கு இவை தேவை. இதனால் இன்சுலினின் சுரப்பும் பயன்பாடும் சீராகிறது. இன்சுலின் பயன்பாடு சீரானவுடன் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் போன்றவற்றின் சமநிலை சீரமைக்கப்படுகிறது. எனவே எந்த வித உடலியல் பிரச்சனைக்கும் உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி மிகச் சரியான தீர்வு. ட்ரெட்மில்லில் நடப்பதை விட, காற்றோட்டமான இடங்களில் கையை வீசி நடப்பதும், ஏரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்வதும் நலம் பயக்கும்.
ஒரு வருடமாக மாதவிடாய் வரவில்லை, மருத்துவர் கூறியபடி நடைப்பயிற்சி, உணவுப்பயிற்சி அனைத்தையும் செய்கிறேன் பலனில்லை என்றார் ஒரு தோழி. மருத்துவத்தைப் பொறுத்தவரை எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு இருக்காது. ஒரே நபரின் உடலிலேயே ஒரே விதமான அறிகுறிகளுக்கு இந்த ஆண்டு ஒரு விதமான சிகிச்சையும், அடுத்த ஆண்டு வேறு விதமான சிகிச்சையும் தேவைப்படக் கூடும். முதற்கட்ட சிகிச்சையில் பலனில்லாத போது அடுத்த நிலை சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் அதே சமயம், உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சுய மருத்துவம் கூடவே கூடாது.
மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்களின் புதிய கவலைகளில் ஒன்று. இயற்கை மருத்துவத்தின் மேலுள்ள மோகத்தால், யூட்யூபைப் பார்த்து வீட்டிலிருந்தே பிரசவம் பார்க்கும் போக்கு. இதனால் அண்மையில் ஓரிரு தாய்மார்கள் பிரசவம் சிக்கலாகி மரணமடைந்த நிகழ்வுகள் நடந்தன. சில இன்ஃப்ளுயன்சர்களின் தாக்கத்தால் படித்தவர்கள் சிலரே இயற்கையாகப் பெற்றால் தான் நல்லது என்று சொல்வதைப் பார்க்க முடிகிறது. ‘அந்தக் காலத்துல எல்லாருமே சுகமா தானே பெத்தாங்க’ என்ற வாதம் பரவலாகி வருகிறது. சுகப்பிரசவம் நல்லது தான், ஆனால் அதற்கு வழியில்லாத போது சிசேரியன் செய்து கொள்வதில் தவறில்லை. வீட்டிலேயே பிரசவம் பார்த்த அந்த நாள்களில் எத்தனை தாய்மார்கள் பேறுகாலத்தின் பொழுது உயிரிழந்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாயுடன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும், குறைபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்த்தெடுக்கவும், கர்ப்ப காலத்தின் துவக்கம் முதல் தொடர் பரிசோதனை, ஆரோக்கியமான உணவுகள், தேவைப்பட்ட நேரத்தில் மருத்துவ கவனிப்பு அவசியம். நம்பிக்கையான குடும்ப மருத்துவரும், நன்கு பழகிய மகப்பேறு மருத்துவரும் உங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகச் செய்வார்கள். ‘என் தங்கச்சிக்கு ரெண்டுமே நார்மல் டெலிவரி. எனக்கு சிசேரியன் ஆயிடுச்சு, அதனால எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு’ என்றார் ஒரு பெண். இத்தனைக்கும் அவளுக்கு பிள்ளை பிறந்து 12 வருடங்களுக்கு மேலாகி விட்டது. பேறுகால நேரத்தில் அவள் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளைப் பற்றிக் கேட்டு உனக்கு சிசேரியன் தான் சரியான தீர்வு, கவலைப்படாதே என்று விளக்கினேன்.
சுகப்பிரசவமாகாததற்கு என் மேல் எதுவும் தவறு இருக்குமோ, என் உடல் பருமனுக்கு நான் தான் காரணம், என்னுடைய கவனமின்மையால் தான் இப்படி ஆகிவிட்டது என்று குற்றவுணர்ச்சி கொள்ளும் மனப்பாங்கு இந்தியப் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. கூடவே குடும்பத்தினரின் உடல்நலக் குறைவுகளை எண்ணி மனப்பதட்டம் கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.வயது முதிர்வால் ஏற்படும் கண்புரை, எலும்புத் தேய்மானம், போன்றவற்றிற்கு நிச்சயம் சிகிச்சையெடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி, கால்சியம், இரும்புச் சத்து மாத்திரைகளை அவசியத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
நமது சமூகம் பெண்களிடம் கோரும் பன்முகத் திறமையும் (multi tasking) சமீப நாள்களாய் பெண்களின் உடல் நலக்குறைவுகளுக்குக் காரணமாய் அமைகிறது. இவற்றால் தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, உளவியல் சிக்கல்கள் இவை ஏற்படுகின்றன.
இப்படி ஆயிடுச்சே என்று வருந்தும் பெண்களுக்காகக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன முதல் வரியைச் சற்றே மாற்றி சொல்கிறேன். ‘ஒரு வண்டி வாங்கினா ஆரம்பத்துல எந்த கம்ப்ளைன்ட்டும் இருக்காது. போகப் போக பிரேக் லூசாகும், டயர் தேஞ்சு போகும், அப்பப்ப சர்வீஸ் பண்ணிக்கணும். ரிப்பேர் பண்ணி அப்படியே ஓட்ட வேண்டியது தான்’. உடல் என்றால் நோய்கள் வரத்தான் செய்யும். முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்போம், அதையும் மீறி வந்துவிட்டால் தாமதிக்காமல் விரைந்து சிகிச்சை பெறுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு என்று அனுதினமும் அவரவருக்காக அரை மணி நேரம் ஒதுக்குவோம். அவ்வாறு செய்தால் இனி எல்லாம் சுகமே!