சிறப்புப்பக்கங்கள்

மனம் மகிழுதே

திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்

மகிழ்ச்சியே மனித வாழ்வின் அடிப்படை நோக்கம். அதை அடைய பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்துள்ளது மனித இனம். அத்துடன் அதைத் தேடி அலையவும் செய்கிறோம். அவ்வகையில் திரைப்படங்களின் பங்களிப்பு முக்கியமானது. பழங்கால தமிழ்ப்படங்களில் இருந்து சில ரசனைக்குரிய காட்சிகளை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

1. சபாபதி (1941)

ராவ் சாகிப் மாணிக்க முதலியாரின் (எஸ். குப்புசாமி அய்யங்கார்) ஒரே மகன் சபாபதி (டி.ஆர். ராமச்சந்திரன்) . நல்லவன். ஆனால் புரிதலில்லாதவன். அவர்கள்வீட்டு வேலைக்காரனோ நாணயமானவன். இருப்பினும் முட்டாள். அவன் பெயரும் சபாபதிதான். படிப்பில் நாட்டமில்லாத மகனுக்கு தமிழ்வாத்தியார் (கே. சாரங்கபாணி) வைத்துப் பாடம் சொல்லச் செய்கிறார் ராவ் சாகிப்.

 இருப்புப் பாதையைப்பற்றி கட்டுரை எழுதுகிறான் சபாபதி. அதைப் படித்த ராவ் சாகிப்புக்கு கோபம் பொத்துக் கொண்டுவருகிறது, தமிழ்வாத்தியாரை அழைத்து அதைப் படிக்கச் சொல்கிறார். வாத்தியார் படிக்கிறார். ‘இருப்புபாதை என்றால் இருப்புப் பாதை யென்று அர்த்தம்’ என்று படிக்க, சபாபதி இடைமறித்து தானே படிக்கிறான் “ மதராஸ் சவுத் இந்தியன் ரயில்வே, சதர்ன் மதராஸ் ரயில்வே இருக்கிறது. அதில் சவுத் இந்தியன் ரயில்வே, மதராஸிலிருந்து புறப்பட்டு குப், குப், குப், குப், குப், குப்... ’’

(துணையாக வேலைக்காரனும் ரயில் போல கூவுகிறான்). தமிழ்வாத்தியார் ‘குப், குப்’ எதுவரை போகிறதென்று கேட்கிறார். செங்கல்பட்டுவரை போவதாக சபாபதி சொல்கிறான். குப்குப்பைத் தவிர வேறெதாவது எழுதியிருக்கிறாயா என வாத்தியார் கேட்க, ச்பாபதி ஆர்வத்துடன், ‘செங்கல்பட்டைத் தாண்டி பாலாறு பாலம்வரும் போது ரயில் அதின் மீதில் கடகட, படபட, கடகட, படபட, கடகட என்ற சத்தத்துடன் பாலாறு தாண்டும்வரை ஒலிக்கிறது’ என்கிறான்.

குறுக்கிடும் ராவ் சாகிப்: “கடகடா பத்து பக்கம், குப்குப் எட்டு பக்கம் இதிலேயே 18 பக்கம் முடிஞ்சு போச்சு. இதுக்கு தமிழ் வாத்தியார் ஒரு தண்டம்’’ என்று வெறுப்புடன் தமிழாசிரியர் தலையில் பேப்பரைக் கிழித்துப் போடுகிறார். வாத்தியாரோ, பையனின் கற்பனா சக்தி நன்கு விளங்குவதாக சமாளிக்கிறார். மக்கள் அக்காலத்தில் ரசித்த காட்சி இது.

சந்திரலேகா (1948)

பழம்பெரும் காமெடி நடிகர் எல்.நாராயண ராவ் சர்க்கஸ் மேனேஜராக வருகிறார். கணக்கில் தில்லுமுல்லு செய்கிறார். அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறார் கணக்காளரான டி.ஏ. மதுரம். இதனை வேடிக்கையாக திரைப்படம் காட்சிப்படுத்துகிறது.

சர்க்கஸ் மேனேஜர்: ஆட்களுக்கு இளநீ வாங்கிக் கொடுத்தது 350 பணம். இன்னும் 500 உதைக்குதே. ஆ.. யானைக்கு அல்வா வாங்கிக் கொடுத்தது 200 (கணக்கெழுதும் பெண் இந்த்த அநியாயத்தைப் பார்த்து முறைக்கிறாள்) என்ன.. நான் சொல்றபடி எழுது. இல்லேன்னா உன்னை வேலையை விட்டு துரத்திப்புடுவேன். புலிக்குட்டிக்கு புல்லு வாங்கிப் போட்டது 150.

கணக்கெழுதும் பெண்: மீனுக்கு சர்பத்து வாங்கிக் கொடுத்ததுனு எழுதவா? ஆளப்பாரு ஆள.. உங்க தலைக்கு மூளை வாங்கி வச்சதுன்னு எழுதவா?

சர்க்கஸ் மேனேஜர்: எழுதேன்.. எனக்கு எப்படியாவது கணக்கு சரியாவணும். நிச்சயமாக 500 பணம் செலவழிஞ்சிப் போச்சு. கணக்கு ஞாபகமில்லை

கணக்கெழுதும் பெண்: அப்போ ஞாபகமறதி செலவுக்கு எழுதட்டுமா?

 மேனேஜர்: அப்புறம் என்ன கையக் கடிக்குமே..

தனது உடல் அசைவுகளால் வசன உச்சரிப்பால் இக்காட்சியை நாராயணராவ் பிரமாதப் படுத்தினார்.

மலைக்கள்ளன் (1954)

ஆறு மொழிகளில் வெளிவந்து அனைத்திலும் வெற்றிபெற்ற படம். இப்படத்தின் மையக் கதைக்கு இணையாக நகைச்சுவைப் பகுதியும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தில் மலைக்கள்ளனைப் பிடிக்க முயலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக எம்ஜி சக்கரபாணி நடித்தார். அவருக்கு உதவியாளர் ஏட்டு கருப்பையாவாக டிஎஸ் துரைராஜ். இன்ஸ்பெக்டரோ கண்டிப்புக்குப் பெயர்போனவர். கருப்பையாவோ பணியில் பிடிப்பில்லாத ஒரு பயந்தாங்கொள்ளி. இருவருக்கும் போலீஸ் ஸ்டேசனில் நடக்கும் உரையாடல் செம ஜாலி.

இன்ஸ்: இந்த மலைக்கள்ளன் காத்தவராயனைப் பத்தி ஏகப்பட்ட கேஸ் இருக்கே. அவங்களைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?

ஏட்டு: தெரியும் சார். அவங்க கடவுள் அவதாரங்க.

இன்ஸ்: என்னய்யா உளர்றே

ஏட்: பின்ன என்ன சார்? சில பேர் சொல்றாங்க அவங்க இருக்கறாங்கன்னு, சிலபேர் சொல்றாங்க அவங்க இல்லேன்னு. இன்னும் சிலபேர் அவங்க ரெண்டுபேருமே ஒரே ஆள்தான்னும், வெவ்வேறென்னும் சொல்றாங்க. ஒண்ணும் புரியல சார். கன்பூஷனா இருக்கு.

இன்ஸ்: என்னய்யா என்னையே கன்ப்யூஸ் பண்ணிடுவே போலிருக்கே. இதபாரு இந்த பேச்சல்லாம் பேசி ப்ரயொசனமில்ல. நீயே நேரில் போய் இந்த கேஸெல்லாம் கண்டுபிடிக்கணும்.

ஏட்டு: ஸார் ஒரு வார்த்தை. எனக்கு 3 ஆண் குழந்தை, 6 பெண் குழந்த. 2 சம்சாரம், ஒரு அம்மா, ஒரு அப்பா, நான். நான் ஒருவன் சம்பாதிச்சுத்தான் இத்தனை பேரும் பிழைக்கணும். நான் போயிட்டா இவங்க கதியெல்லாம் என்ன ஸார் ஆகிறது?

இன்ஸ்: இப்ப அதுக்கென்னய்யா?

ஏட்: இந்த மலைக்கள்ளனை பிடிக்கிற விவகாரத்தில வீடு வாசலில்லாத பிரம்மச்சாரியா தள்ளிவிடுங்க நமக்குவேண்டாங்க.

இன்ஸ்: இப்படி பயந்து சாகிற மனுசன் ஏன்யா போலீஸில் சேர்ந்தே?

ஏட்டு: பிழைக்கத்தாங்க.

இன்ஸ்: ஷட் அப். இன்னும் ஒரு மாதத்திலே மலைக்கள்ளனைப் பத்தி சரியான தகவல் கொண்டுவராவிட்டால் டிஎஸ்பிக்கு எழுதி உன்னை இந்த ஸ்டேஷனை விட்டே மாத்தறதுக்கு ஏற்பாடு செய்துவிடுவேன்.

ஏட்டு: சார் நீங்க நல்லாயிருக்கணும். அப்படியே செய்யுங்க. இந்த ஸ்டேஷனை விட்டுப் போனா போதும் சார். எங்க குடும்பம் உங்களை சாகறவரைக்கும் மறக்காது.

(இன்ஸ்பெக்டர் திகைக்கிறார்). தியேட்டர் குலுங்கியதற்கு நானே சாட்சி.

மாமன்மகள் (1955)

பிரச்னைக்கு உரிய உயில் காணாமல் போகிறது. அதி வில்லன் கன்னியப்பன் தான் எடுத்திருப்பான் என்று கதாநாயகன் சந்திரன் சந்தேகப்படுகிறான். உண்மையைக் கண்டுபிடிக்க பேயாக வேஷமிட்டு கன்னியப்பனின் மைத்துனனான கோமாளி டாண்டியின் படுக்கை அறைக்கு இரவில் சென்று அவனைப் பயமுறுத்துகிறான். டாண்டியாக சந்திரபாபுவும் சந்திரனாக ஜெமினி கணேசனும்.

(அறையில் இருள். பேய் அலறல்போல் சப்தம். பயத்தின் தடுமாறுகிறான் டாண்டி)

டாண்டி: யாரது யாரது.. (பின்) ஒண்ணுமில்ல.. (தனக்குள் ஆறுதல் சொல்லிக்கொள்கிறான். வெளிச்சம் வேண்டி சுவிட்சைப் போடுகிறான்)

பேய்: டாண்டி… டாண்டி.. டேய்… (அலறி ஓடும் டாண்டி சுதாரித்துக்கொண்டு)

டாண்டி: நாந்தான் கூப்பிட்டேன்?

(வெளிச்சம் வருகிறது)

சத்தியமா சொல்றேன் இங்கே ஏதோ சம்திங் இருக்கு.. சுவிட்சில் ஏதாவது மிஸ்டேக் இருக்குமோ.. லைட்ட அணைக்கலாம்.. ஆ..லைட் இருக்கட்டும்

(இப்போது ஜன்னல் கதவு படபடவென அடித்துக்கொள்கிறது)

டாண்டி: ஜன்னல் திறந்திருந்தா ஆபத்து( ஜன்னலை மூடியவுடன் வீராப்பு பேசுகிறான்) பேயாவது பிசாசாவது? உள்ளே நுழைய முடியுமா? (சத்தம் கேட்கிறது)

டாண்டி: ரொம்ப டேஞ்சர்- மனமே பயப்படாதே… பேயாவது பிசாசாவது.. வந்தா மரணப்பிடி போட்டு ஒரே அடிதான்.

(கட்டிலில் பேய் அமர்ந்திருக்கிறது. அலறி அடித்து மூலையில் அமர்ந்துகொள்கிறான்)

சாய்பாபா, நாராயணா என அலறுகிறான்.

பேய்: என்ன யாருன்னு நினைச்சே?

டாண்டி: ஒண்ணும் நினைக்கலீங்க. இந்த உடம்புல இருகிற அத்தனை பார்ட்ஸும் ஒவ்வொண்ணா ஸ்ட்ரைக் பண்ணுது. இந்த உடம்ப டச் பண்ணாதீங்க.. தாங்காது.

பேய்: உயில் எங்க?

டாண்டி: அத கன்னியப்பன் எடுத்துட்டுப் போயிட்டான். அவன் யார்கிட்டயும் சொல்லவேணான்னான். நீங்களும் யாருகிட்டயும் சொல்ல வேண்டாம்.

இந்த காட்சியில் சந்திரபாபுவின் அற்புதமான உடல்மொழி நகைச்சுவையின் உச்சம் தொட்டது.

மதுரை வீரன்(1956)

 தொட்டியம் பாளையபதி திம்மண்ண ராஜாவின் அருமை மகள் பொம்மி(பானுமதி). அவளை முறைமாமன் நரசப்பனுக்கு(பாலையா) திருமணம் முடிக்க யோசனை. முட்டாளும் கோழையுமான நரசப்பனை மணக்க பொம்மிக்கு விருப்பமில்லை. ஒரு சமயம் பொம்மி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அவளை வெள்ளம் அடித்து செல்கிறது ஆபத்தில் வீரன்(எம்ஜிஆர்) உதவிக்கு வந்து காப்பாற்றுகிறான். அப்போது நரசப்பன் அங்கே வந்து பொம்மியை பயமுறுத்தி அழைத்துச் செல்கிறான். அரசர் முன் தானே காப்பாற்றியதாக தன் வீர பிரதாபங்களை அளந்து விடுகிறான்:

 ராஜா: என்ன நாசப்பா?

 நரசப்பன்: ஒரே தண்ணீர் ஒரே தண்ணீர் எங்கு பார்த்தாலும் கரைபுரண்டு ஓடுகிறது காவிரி நதியில் ஒரே பயங்கரமான சுழல், பொம்மியை பொக்கு என்று அடித்துக் கொண்டு போய்விட்டது. அரசே

 ராஜா: ஆ என்ன?

நரசப்பன் ஆள்(நடிகர் ஆழ்வார் குப்புசாமி): அப்ப வீரன் இல்ல வீரன்..

நரசப்பன்: (அவனை பேசவிடாமல் பின் தள்ளுகிறான்) நான் வீரன் இல்லை… விடுவேனா? ஆற்று வெள்ளத்திலும் என் உயிரைத் துச்சமாக மதித்தேன்; படார் என்று குதித்தேன். பட பட என்று நீச்சல் அடித்தேன். ஒரு சூழல் என்னை அமுக்கியது ப்பூ என்று ஊதினேன்; போய்விட்டது. தூக்கினேன் பொம்மியை; சேர்த்தேன் கரையில்; பாருங்கள்! (தன் உடையை பிழிந்து நீரைக் காட்டுகிறான்)

ராஜா மகளிடம் பேச, அவளோ நரசப்பனே காப்பாற்றியதாகக் கூறுகிறாள்.

நரசிப்பன் ஆள்: மகாராஜா அதுல பாருங்க உண்மையில் நடந்தது என்னன்னா?

நரசப்பன்: அதான் சொல்லியாச்சே இனிமே என்ன நோன்னா? நரசப்பன் ஆள்: ஆனால் இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்குங்களே,

நரசப்பன்: இருக்கா? டேய் போடா.. இவரு பெரிய அரிச்சந்திரரு… புளுகுணிடா.. புளுகுணி. நரசப்பன் ஆள்: நானா?

நரசப்பன்: பின்னே நானா?

பாலைய்யாவும் ஆழ்வார் குப்புசாமியும் சோக முடிவுகொண்ட இப்படத்தை இக்காட்சியில் மகிழ்ச்சியாக தொடக்கி வைக்கிறார்கள்.

சக்கரவர்த்தி திருமகன் (1957)

ஆனந்தரங்கம் (கே.ஏ.தங்கவேலு) அந்தரங்கத்தை (டி.பி. முத்துலட்சுமி) திருமணம் செய்ய விரும்புகிறான். அவனது அறிவாற்றலை பயிற்சி செய்து பார்க்க ஒரு போட்டி வைக்கிறாள் அந்தரங்கம். விவரம்போதாத போதாத ஆனந்தரங்கம் தன் நண்பன் டேப் சொக்கனை (என்.எஸ்.கிருஷ்ணன்) உடன் அழைத்துச் செல்கிறான். போட்டிக்கு அந்தரங்கத்தின் தந்தை ’ராஜா’ பொன்னம்பலம் (யதார்த்தம் பொன்னுசாமி. நடுவர்.. 

போட்டி தொடங்குகிறது

அந்தரங்கம் (முதல் கேள்வி) : ஒரு குளத்தில கொஞ்சம் பூ இருந்துச்சு அங்க கொஞ்சம் குருவியும் வந்துச்சு. ரெண்டு ரெண்டு குருவியா ஒக்காந்தா ஒரு பூ மிச்சம். ஒவ்வொரு குருவியா உட்கார்ந்தா ஒரு குருவி மிச்சம். ஆக இந்த குளத்துல எத்தனை பூவு இருந்துச்சு எத்தனை குருவி பறந்து வந்துச்சு?

 ஆனந்தரங்கம்: ஐய்யோ...என்னத்துக்கு இந்த குருவியும் குளமும்…? கணக்கு போடுவது என்றால் ஐந்தும் நாலும் எத்தனை? நாலும் மூணும் எத்தனை?

 சொக்கன்: ஆமா.அதான் நாலும்...மூணும்.. என்ன சொல்றான்னா... அந்த குளத்துல மூணு பூ இருந்துச்சு. நாலு குருவி பறந்து வந்துச்சு. ரெண்டு ரெண்டா ஒக்காந்தா ஒரு பூ மிச்சம். ஒண்ணு.ஒண்ணா உக்காந்தா ஒரு குருவி மிச்சம். சரியா சொன்னாரா இல்லையா?

ராஜா பொன்னம்பலம்: மகிழ்ந்தோம் அடுத்த கேள்வி என்ன?

 அந்தரங்கம் ஒரு போர்டை காட்டுகிறாள். ஆனந்தரங்கம் அதை படிக்கிறான். உப்புமா மா… மா…. மா… மா… மா… மா..

 சொக்கன்(காதில். சரி மொத்தமே எத்தனை மா எண்ணி சொல்லு ஆனந்தரங்கம். ஒரு மா ரெண்டு மா ரெண்டு மா மூணு மா பத்துமா சொக்கன்: அப்ப உப்புமா?

 ஆனந்த ரங்கம்: பத்துமா? உப்புமா பத்துமா?

 ராஜா பொன்னம்பலம்: இரண்டு கேள்வியே போதும். அதுவே வெற்றிக்கு அறிகுறி. மாலை போடலாமா?

 மறைமுகமாக கேள்விகளுக்கு சொக்கனே பதில் சொன்னதால் மாலையை அந்தரங்கம் அவருக்கே போட முயல்கிறாள். ஆனால் சொக்கன் தடுத்து ஆனந்தரங்கத்தின் கழுத்திலே போட வைக்கிறார். எல்லாம் சுகமாக முடிகிறது.

சபாஷ் மீனா 1958

 மோகனும் (சிவாஜிகணேசன்)ராஜாவும்(குலதெய்வம்ரா ஜகோபால்) புதிதாக சேர்ந்த நண்பர்கள். பிழைப்புக்கு வழியில்லாமல் யோசித்து ஒரு தொழிலை தந்திரமாக செய்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி ராஜா வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களை கண்டறிந்து உடைப்பது என்றும் மோகன் கண்ணாடி ரிப்பேர் செய்பவனாக அந்த வீடுகளுக்கு சென்று ரிப்பேர் செய்து அதற்கான செலவை பெற்றுக் கொள்ளலாம் என தீர்மானித்து செயல்படுகிறார்கள். இரண்டுபேருமே. சூதுவாது அறியாத அப்பாவிகள் என்பதுதான் இதில்.விசயமே.

 மோகன்: நீ கல்லை எடுத்து கண்ணாடிய அடிடா. அப்புறம் நான் எவ்வளவு ஸ்மார்ட்டா பிசினஸ் பண்றேன்னு பாருடா நீ.

 இருவரும் நோட்டமிட்டு கண்ணாடி ஜன்னல்கள் மிகுந்த ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள்.

 ராஜா: மாஸ்டர் மூணாவது மாடி மேல் மாடி என்று மூன்று மாடி இருக்குது… (ஜன்னல்கள் மீது கல் எறிந்து உடைக்கிறான். வீட்டுக்கு சொந்தக்காரர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து அடடா இந்த பிள்ளைகளுக்கு லீவு விட்டாலும் விட்டாங்க பெரிய தொல்லையா போச்சு… என்று.அங்கலாய்க்கையில் இப்போது கண்ணாடி ரிப்பேர் மோகன் வருகிறான்)

 வீட்டுக்காரர்: நல்ல வேலையா வந்து சேர்ந்தே...

 மோகன்: ஏன் சார்,. மூணாவது மாடியில மூணு கண்ணாடி. மேல் மாடியில இல்ல கீழ் மாடியில நாலு கண்ணாடி. கணக்கு கரெக்ட்டா சார்?

 வீட்டுக்காரர்: அடடா அது எப்படி உனக்கு தெரிஞ்சது?

 மோகன்: எந்த நேரத்தில் எந்த வீட்டில எத்தனை கண்ணாடி உடை என்று எனக்கு முன்கூட்டியே தெரிஞ்சிடும் சார்.

 வீட்டுக்காரர்…( அதிர்ச்சியுடன்) என்ன?

 மோகன்: (சுதாரித்துக் கொண்டு) அதான் தொழில் நுணுக்கம் சார் கண்ணாடி இருக்கும் இடம் தான் கண்ணுக்குத் தெரியும் சார், 12 ¾ ரூவா ஆகும் சார்.

 பணத்தைப் பெற்றுக் கொண்டு அடுத்த வேட்டைக்கு இருவரும் தயாராகிறார்கள். அடுத்த வீட்டைக் கண்டுபிடித்து ராஜா கல் எறிவதற்கு சற்று முன்பாகவே மோகன் அந்த.வீட்டில் ஆஜராகி கண்ணாடி உடைந்துள்ளதா என விசாரிக்க இருவருமே வசமாக சிக்கி உதை வாங்கும் காட்சியைக்கண்டு ரசிகர்கள் சிரிக்க காட்சி முடிகிறது.

 1937 ஆம் ஆண்டு மிஸ்டர் டைட் அண்ட் மிஸ்டர் லூஸ் என்ற ஒரு துண்டு படத்தில் இதே காட்சி இடம் பெற்றிருந்தது இதில் மிஸ்டர் டைட்டாக தசரத ராவும் மிஸ்டர் லூசாக ஆறுமுகமும் (இவர்தான் இன்றைய காமெடியனாக இருந்த லூஸ் மோகனின் தந்தை) நடித்திருந்தனர். இந்த துண்டுப் படம், பஸ்மாசுர மோஹினி என்ற திரைப்படத்துடன் இணைக்கப்பட்டு 1937 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி சென்னை கிரவுன் டாக்கீஸில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது என்பது கூடுதல் செய்தி.

நல்லவன் வாழ்வான் (1961)

 கெட்டவனான நல்லசாமியும் (எம்.ஆர்.ராதா) பொதுநலவாதி ஆனால் ஏழையுமான முத்துவும் (எம்ஜிஆர்) தேர்தலில் நிற்கிறார்கள். முடிவில் முத்து தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் நல்லசாமியான எம்.ஆர்.ராதா நடத்தும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் அவர் நடிகவேள் என்ற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் என்பதை நிரூபிக்கிறது.

இடம் தேர்தல் களம்:

 ஒரு புறம் நல்லசாமி; மறுபுறம் முத்து.

 நல்லசாமியின் கணக்கப்பிள்ளை மூச்சிரைக்க: நமது ஆறு பெட்டி அஞ்சு நிமிஷத்துல எண்ணி முடிச்சிட்டாங்க அவனது ஒரு பெட்டி இன்னும் எண்ணி முடிக்கல..

நல்லசாமி விவரம் புரியாமல் குதூகலிக்கிறார். முத்துவும் சிரித்துக் கொண்டே வருகிறான். 

நல்ல சிவம்: இப்ப சிரிச்சுகினே வருவான்; எண்ணி முடியும் போது ஓன்னு அழுவான் அவன் மூஞ்சில தோக்குற களை வந்துடுச்சு… வேர்த்து கொட்டுது.

கணக்கன்: வந்தாச்சு வந்தாச்சு ரிசல்ட் வந்தாச்சு

நல்லசிவத்தை அவரது ஆட்கள் தூக்கிக்கொண்டு வெற்றியை கொண்டாடும் முகமாக ஆட்டம் போட மேளதாளம் முழங்குகிறது. அந்த நேரத்தில் முத்துவை தூக்கிக் கொண்டு அவனது ஆட்கள் ஆரவாரமாக வருகிறார்கள்.

நல்லசாமி: என்னையும் தூக்கிட்டு ஆடுறாங்க யாருடா ஜெயிச்சா?

கணக்கன்: அதைத்தான் சொல்ல வந்தேன் யாருன்னு கேட்டாதானே? முத்துதான் ஜெயிச்சான்.

தூக்கிக்கொண்டு வந்தவர்கள் நல்ல சிவத்தை பொட்டென்று கீழே போட்டுவிடுகிறார்கள்.

நல்லசிவம்: எல்லாரும் எனக்கு ஓட்டு போடறேன்ன்னான்... புது நோட்டா கொடுத்தேன். புலம்புகிறார்.

கணக்கன்: போகுது இவங்களையெல்லாம் அனுப்பிவிட்டா தேவல

நல்லசிவம்: யார்ரா இவங்க?

கணக்கன்: இவன் மேளம் வாசிச்சவன் இவன் மாலை போட்டவன்... இவர் வேட்டு வச்சவர்.

நல்லசிவம்:. வேட்டு தான் வச்சுட்டீங்களேடா எல்லாரும் சேர்ந்து!.... போங்கடா போங்க...

எனஆட்களை விரட்ட காட்சி முடிகிறது. இந்த காட்சி மக்களை வெகுவாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியதைக் கண்ட கொலம்பியா இசைத்தட்டு நிறுவனம் இந்த நகைச்சுவையை 78 ஆர்பிஎம் ரெக்கார்டாக ‘எலக்சன் காட்சி’ என்ற தலைப்பிலேயே வெளியிட்டது. இந்த இசைத் தட்டும் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram