சிறப்புப்பக்கங்கள்

ஹாலிவுட் & உலகம்: நடிப்பும் இயக்கமும்

கருந்தேள் ராஜேஷ்

இந்தியத் திரையுலகில் நடிப்பு – இயக்கம் என்பது மிகவும் பிரபலம். இந்திய அளவில் ஏராளமானவர்களை இந்தப் பட்டியலில் அடக்கமுடியும். இயக்கிக்கொண்டே நடிப்பது இங்கே சாதாரணம்.

கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் பலர் இதில் உண்டு. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில், ஹாலிவுட் மற்றும் உலகப்பட அரங்கில் இயக்கிக்கொண்டே நடித்தவர்கள் குறைவு. அங்கே ஏதோ ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்துபவர்களே அதிகம்.

இருந்தாலும் ஹாலிவுட் மற்றும் உலக அரங்கில் இயக்கிக்கொண்டே நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்கள் இல்லாமல் போகவில்லை. அப்படிப்பட்ட சிறந்த நபர்களையும் அவர்களின் திரைப்படங்களையும் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்களின் கறுப்பு வெள்ளைக் காலகட்டம்:

சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன் ஆகிய இருவரும் பட்டையைக் கிளப்பிய ஹாலிவுட் படங்களின் பேசாத மௌனப்படங்களின் காலகட்டம் ஒரு பொற்காலம் எனலாம். முதலில் சார்லி சாப்ளின் மௌனப்படங்களை எடுக்கத் துவங்குகிறார். அதன்பின் சில வருடங்களிலேயே பஸ்டர் கீட்டனும் உள்ளே வந்துவிடுகிறார். ஒரே காலகட்டத்தில் இருவரும் மௌனப்படங்களை எழுதி இயக்கி நடிக்கிறார்கள். இருவரின் படங்களும் உலகம் முழுக்கப் பிரபலம் ஆகின்றன. எத்தனையோ மறக்க முடியாத திரைப்படங்களை இருவரும் இயக்கி நடிக்கின்றனர். நகைச்சுவை என்று எடுத்துக்கொண்டால் இன்றுவரை உலகெங்கும் கொண்டாடப்படும் இரண்டு முக்கியமான ஆளுமைகள் சார்லி சாப்ளினும் பஸ்டர் கீட்டனும்.

ஒருபக்கம் சார்லி சாப்ளின் The Kid, Gold Rush, Circus என்று படங்கள் எடுத்து உலகப் பிரபலமாக மாற, இன்னொரு பக்கம் பஸ்டர் கீட்டன் Sherlock Jr., The General, Steamboat Bill Jr., The Cameraman என்று தொடர்ந்து படங்களை ஒரே காலகட்டத்தில் எடுத்து சார்லி சாப்ளினைப் போலவே பிரபலம் அடைகிறார் (1921-1928 வரையிலான காலகட்டம்). இதன்பின்னர் இருவரும் பல படங்கள் எடுக்கிறார்கள். ஆனால் பஸ்டர் கீட்டனின் புகழ் மெல்ல மெல்ல முப்பதுகளில் குறையத் துவங்கி, பின்னர் சில படங்களில் தன்னை நிரூபித்து, அதன்பின்னர் சில ஹாலிவுட் படங்களில் நாயகன் அல்லாத குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதில் 1952இல் சார்லி சாப்ளின் இயக்கி நடித்த Limelight படமும் அடங்கும். ஆம். ஒரே படத்தில் இரண்டு நகைச்சுவை சக்கரவர்த்திகளும் நடித்தனர். லைம்லைட்டில் சார்லி சாப்ளினுடன் சேர்ந்து மேடையில் நகைச்சுவை செய்யும் கதாபாத்திரமாக பஸ்டர் கீட்டன் நடித்திருப்பார். இந்த ஒரே படம்தான் சார்லி சாப்ளினும் பஸ்டர் கீட்டனும் இணைந்து நடித்த படம். எப்படி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் நடித்தார்களோ அப்படி. லைம்லைட் படத்தின் கிட்டத்தட்ட இறுதியில் சார்லி சாப்ளின் பஸ்டர் கீட்டனைத் தன்னுடன் அற்புதமாக நடிக்கவைத்து மரியாதை செய்திருப்பார். கீட்டனுக்கென்றே சாப்ளின் உருவாக்கிய சீக்வென்ஸ் அது.

இப்படியாக ஹாலிவுட் திரைப்படங்களில் துவக்க காலங்களிலேயே சார்லி சாப்ளினும் பஸ்டர் கீட்டனும் திரைப்படங்களை இயக்கி நடித்து சாதனை புரிந்தனர்.

ஜெர்ரி லூயிஸ்

நகைச்சுவை நடிகர் நாகேஷ், நகைச்சுவை நடிப்பில் தனது குருநாதர் என்று ஜெர்ரி லூயிஸ் பற்றிச் சொல்வது வழக்கம். இருவரின் நடிப்பையும் கவனித்தால் கிட்டத்தட்ட ஒன்று போல்தான் இருக்கும். தமிழில் எப்படி நாகேஷோ அப்படி ஹாலிவுட்டில் ஜெர்ரி லூயிஸ். எத்தனையோ மறக்க முடியாத படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெர்ரி லூயிஸின் சிறப்பம்சம் என்னவென்றால், இவரும் ஏராளமான திரைப்படங்களை இயக்கி, அவற்றில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பதே. ஐம்பதுகளில் இருந்து அறுபதுகளின் முடிவு வரை ஜெர்ரி லூயிஸ் கொடிகட்டிப் பறந்த காலகட்டம். இவற்றில் மொத்தம் பதின்மூன்று படங்களை ஜெர்ரி லூயிஸ் இயக்கினார். அவற்றில் எல்லாம் நடிக்கவும் செய்தார் (அவற்றில் ’The Day the Clown Cried’ என்ற ஒரு படம் வெளியாகவில்லை).

உங்களுக்கு எட்டி மர்ஃபி நடித்த ‘Nutty Professor’ திரைப்படம் தெரிந்திருக்கும். 1963இல் வெளியான அதன் ஒரிஜினல் படத்தில் நட்டி ப்ரொஃபெஸராக ஜெர்ரி லூயிஸே நடித்திருந்தார். அது அவரே இயக்கிய படமும் கூட.

The Bellboy, The Ladies Man, The Errand Boy, The Nutty Professor, The Patsy, The Family Jewels, Thee on a Couch, The Big Mouth, One More Time, Which way to the Front, The Day the Clown Cried, Hardly Working, Cracking Up ஆகியவையே ஜெர்ரி லூயிஸ் இயக்கி நடித்த படங்கள். இவற்றில் ஒரு படம் வெளியாகவில்லை. One More Time திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்குப் பின்னணிக் குரல் மட்டும் கொடுத்திருப்பார். மற்றபடி எல்லாமே அவர் இயக்கி முக்கியமான வேடங்களில் நடித்த படங்களே.

வூடி ஆலன்

ஹாலிவுட் திரைப்படங்களில் வூடி ஆலனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. Take the Money and Run (1969) படத்தில் துவங்கி, மிகவும் தனிப்பட்ட பிரத்யேகமான முத்திரையுடன் திரைப்படங்களை உருவாக்கக்கூடிய ஒரு திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். நகைச்சுவை, காதல், மனச்சிக்கல்கள் (ல அல்ல. ன), தத்துவம் மற்றும் மனித உறவுகளை ஒன்றுசேர்த்தே அவரது படங்கள் அவரால் எழுதி இயக்கி நடிக்கப்பட்டிருக்கும்.

Annie Hall (1977), Manhattan (1979), Hannah and Her Sisters (1986), Crimes and Misdemeanors (1989), மற்றும் Husbands and Wives (1992) போன்ற திரைப்படங்கள் பெரும்பாலும் காதல், திருமணம், துரோகம், பாதுகாப்பின்மை, மரணம் மற்றும் வாழும் வாழ்க்கைக்கான பொருளைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றை ஆராய்கின்றன. அவரது படங்களில் அடிக்கடி முக்கியமான கதாபாத்திரங்கள் சிக்கலான உறவுகளுடன் போராடுவதைக் காணலாம், அவரது வசனங்கள் அந்தந்தக் கதாபாத்திரத்தின் பேச்சு வழக்கிலேயே வேகமாகப் பேசப்பட்டுப் புத்திசாலித்தனமான பொருளுடன் இருக்கும். இது அவரது தனிப்பட்ட பாணி.

வூடி ஆலன்

தனது முத்திரையை வெளிப்படுத்தும் ்வண்ணம் மனதில் கவலைகள் நிறைந்த, புத்திசாலித்தனமான, தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் நியூயார்க்கர் என்று அடையாளம் காணக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை அவர் வேண்டுமென்றே உருவாக்கினார், அதை அவரே தனது பல படங்களில் நடித்தார்.

ஹாலிவுட் வணிக சினிமாவிற்குள் பணிபுரியும் அதே வேளையில், இயக்குநர் ஒருவர் எவ்வாறு மிகவும் தனிப்பட்ட பாணியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியதால் ஆலனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. அவர் திரைப்படங்களை எழுதி இயக்கி நடிக்கும் வேகம் அசாதாரணமானது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு படம் எப்படியும் வந்துவிடும். இப்படிப் பல வருடங்கள். இவரது Annie Hall குறிப்பாக முக்கியமானது: அது வழக்கமான காதல் நகைச்சுவைப் படமாக இல்லாமல் அதற்கு மேலும் தாண்டிச் சென்று, நேர்கோடற்ற கதைசொல்லல், பார்வையாளர்களை நேரடியாக விளித்துப் பேசுவது மற்றும் உளவியல் அவதானிப்புகள் ஆகிய எல்லாமே கலந்த படம் அது. ஐரோப்பிய கலைப்படங்கள், இங்மார் பெர்க்மேன் பாணி உளவியல் நாடகங்கள் ஃபெலினியின் கதைசொல்லல் முறை, இவைகளுடன் சேர்ந்து வழக்கமான ஹாலிவுட் நகைச்சுவை ஆகிய பல்வேறு சினிமா பாணிகளில் ஏராளமான பரிசோதனைகள் செய்தவர் வூடி ஆலன். இவற்றால் வூடி ஆலன் வெறும் நகைச்சுவைப் படங்களை உருவாக்கும் இயக்குநராக மட்டும் இல்லாமல், மனித உறவுகளின் அபத்த நகைச்சுவை, சோகம் ஆகியவற்றைத் தனக்கே உரிய பாணியில் ஆராயும் படங்களை உருவாக்கிய ஒரு auteur ஆக மாறினார் (auteur என்றால், தனது படைப்புகளில் சந்தேகமே இல்லாமல் தனது சொந்த முத்திரை பதிக்கும் படைப்பாளி என்று பொருள். ஒரே ஒரு ஷாட்டைப் பார்த்தால்கூட அது இன்னார்தான் என்று தெரிந்துவிடும்), வூடி ஆலனின் பாணி பல்வேறு இயக்குநர்களை பாதித்தது. கூடவே, ஒரு வணிக ரீதியாக வெற்றிகரமான ஹாலிவுட் திரைப்படம் ஒரே நேரத்தில் மிகவும் தனிப்பட்டதாகவும், இலக்கியத்தன்மை கொண்டதாகவும், கலை ரீதியாகப் பரிசோதனை நிறைந்ததாகவும் இருக்க முடியும் என்ற கருத்தை நிலைநிறுத்த வூடி ஆலனின் பாணி உதவியது. இவரது படங்களைப் பற்றி இணையத்தில் தேடிப் பாருங்கள்.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட்

ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் திரைப்படங்களின் முடிசூடா மன்னர் இவரே. ஐம்பதுகளில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் துவங்கி, புகழ்பெற்ற இயக்குநர் செர்ஜியோ லியோனியால் அடையாளம் காணப்பட்டு Spaghetti Western என்று அழைக்கப்பட்ட மிகவும் குறைந்த பட்ஜெட் வெஸ்டர்ன்களில் நடிக்கத் துவங்கி (A Fist Full of Dollars திரைப்படமே இவரை சூப்பர்ஸ்டார் ஆக்கியது), அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏராளமான வெஸ்டர்ன் படங்களில் நடித்து, அதன்பின் திரைப்படங்களை இயக்கத் துவங்கி, அவற்றிலும் பெரும்பாலும் பிரதான வேடங்களில் நடித்து, இன்றுவரை திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கும் பிதாமகர் ஈஸ்ட்வுட். இன்று அவருக்கு வயது 96 ஆகிறது. இப்போதுதான் - இந்த வருடம்தான் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். 2024இல் Juror#2 என்று இவரே இயக்கிய இறுதித் திரைப்படம் வெளியானது.

தனது சொந்த இயக்கத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த பல படங்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் High Plains Drifter, The Outlaw Josey Wales, Bronco Billy, Firefox, Honkytonk Man, Sudden Impact (புகழ்பெற்ற Dirty Harry படங்களில் நான்காவது படம்), Pale Rider, Heartbreak Ridge, The Rookie, Unforgiven (மறக்க முடியாத திரைப்படம். சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம்), A Perfect World (கெவின் காஸ்ட்னர் ஹீரோ. ஆனால் ஈஸ்ட்வுட்டும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருப்பார்), The Bridges of Madison County (ஈஸ்ட்வுட் நடித்த மிகச்சில காதல் படங்களில் ஒன்று. ராபர்ட் ஜேம்ஸ் வாலரின் நாவலின் படமாக்கம். அற்புதமான காதல் கதை. எனக்கு மிகப்பிடித்த ஈஸ்ட்வுட் படம் இதுவே) என்று பட்டியல் போட்டுக்கொண்டே வந்தாலும் இவற்றுக்குப் பின்னரும் ஏராளமான திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் ஈஸ்ட்வுட். அவரது படங்கள் பற்றி நீங்களே இணையத்தில் தேடிப்பார்க்கலாம். அவரது எல்லாப் படங்களுமே வித்தியாசமானவை.

இப்போது நான் மேலே கொடுத்திருக்கும் நபர்கள், ஹாலிவுட்டில் படங்கள் இயக்கி, அவர்களே கிட்டத்தட்ட அந்த எல்லாப் படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்தவர்களில் மிக முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர, பிரபல நடிகர் வாரன் பீட்டீ (Warren Beatty), ஐந்து படங்களை இயக்கி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த ஐந்தில் Heaven can Wait, Reds, Dick Tracy, Bulworth ஆகிய படங்கள் முக்கியமானவை. அவரது ஐந்தாவது படமான Rules Don’t Apply சரியாகப் போகவில்லை. இருப்பினும் வாரன் பீட்டீ ஹாலிவுட்டில் மிக முக்கியமான ஒரு ஆளுமை.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட்

இதேபோல் பிரபல நடிகர் ஜாக் நிகல்சனும் மூன்று படங்கள் இயக்கி நடித்திருக்கிறார். அவற்றில், The Two Jakes மிக முக்கியமானது. Chinatown என்ற அமர காவியத்தில் ஜாக் நிகல்சன் நடித்திருந்தார். மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையைப் பேசும் படம் இது (தண்ணீர்). இயக்கம் – கல்ட் இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி. அந்தப் படத்துக்கான இரண்டாம் பாகம் இது.

இப்போதைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டால் நடிகர் பென் ஆஃப்லெக் (Ben Affleck) மூன்று படங்களை இயக்கி நடித்திருக்கிறார். மூன்றுமே நல்ல படங்கள். The Town, Argo & Live by Night. இவற்றில் ஆர்கோ மூன்று ஆஸ்கர்கள் வாங்கிய படம்.

இவர்கள் தவிர, டென்ஸெல் வாஷிங்டன், சேத் மெக்ஃபார்லேன் (Ted நினைவிருக்கும். அது தவிர Million ways to die in the West என்ற சிறப்பான கறுப்பு நகைச்சுவைப் படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார்), ஜார்ஜ் க்ளூனி, ஷான் பென் (க்ளூனி மற்றும் பென் ஆகியோர் இயக்கிய படங்களில் அவர்கள் சிறிய வேடங்களிலேயே நடித்தார்கள்), டெர்ரி ஜிலியம் (இவரும் சிறிய வேடங்களே), ஹிட்ச்காக், க்வெண்டின் டாரண்டினோ (இருவரும் சிறிய வேடங்களே செய்தார்கள்) என்று ஒரு பெரிய பட்டியல் போட முடியும்.

சாச்சா பாரென் கோஹென்

இவர்களில் இருந்து ஆர்சன் வெல்ஸ் கொஞ்சம் மாறுபட்டவர். ‘சிடிசன் கேன்’ என்ற அற்புதமான படத்தை எடுத்தவர். அதில் அவரே பிரதான வேடத்தில் நடித்தார். அந்தப் படம் உலகெங்கும் பேசப்பட்டது. பல திரைப்படக் கல்லூரிகளில் உலகம் முழுதும் இன்றும் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் படங்களில் இது முக்கியமானது. இதைத்தவிர அவரே இயக்கிய பல படங்களில் அவர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார் (மேக்பெத், ஓத்தெல்லோ, Mr. Arkadin முதலியவை. ஆனால் அதே சமயம் மிகச்சிறு வேடங்கள், பின்னணிக் குரல் மட்டும் கொடுக்கும் கதாபாத்திரங்கள் என்று கலந்துகட்டி அடித்தார் ஆர்சன் வெல்ஸ். இவரது படங்களைப் பார்த்தால் அக்காலத்திய ஹாலிவுட் படங்கள் பற்றிய நல்ல புரிதல் கிடைக்கும். அதேபோல் ஷேக்ஸ்பியரை இவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்.

இவர்களைத் தவிரவும் இன்னும் சிலரும் ஹாலிவுட்டில் படங்கள் இயக்கி நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஸ்பைக் லீயும் அவரது படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் வருவார். நகைச்சுவை இயக்குநர் மெல் ப்ரூக்ஸ், அவரது எல்லாப் படங்களிலும் நடிப்பார். ஆனால் குட்டிக் குட்டி நகைச்சுவை வேடங்களில் மட்டுமே. நமது கே.எஸ். ரவிகுமார் போல. அதேபோல் பிரபல இயக்குநர் கென்னத் ப்ரேனா (Kenneth Branagh) அவர் இயக்கிய சில படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் ஷேக்ஸ்பியர் ரசிகர். இவரது படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும் (திடீர் என்று மார்வெல் படமான Thor படத்தையும் இயக்கி ஒரு கை பார்த்தவர் இவர்).

இவர்களே ஹாலிவுட்டில் தங்கள் படங்களைத் தாங்களே இயக்கி நடித்த மிக முக்கியமான நபர்கள்.

உலகப் படங்களிலும் இயக்கி நடித்தவர்கள் இல்லாமல் போகவில்லை. புகழ்பெற்ற இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Franois Truffaut), அவரே இயக்கிய Day for Night திரைப்படத்தில் ஒரு திரைப்படம் இயக்கும் இயக்குநராகவே நடித்தார். இது ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

ஆக்னெஸ் வார்தா

த்ரூஃபோ செய்த ஒரு வித்தியாசமான செயல் என்னவென்றால், தானே தனது எல்லாப் படங்களிலும் நடிக்காமல், ஆண்ட்வான் ட்வானெல் (Antoine Doinel) என்ற கதாபாத்திரத்தைக் கற்பனையாக உருவாக்கினார். இந்தக் கதாபாத்திரம் அப்படியே நிஜவாழ்க்கையில் த்ரூஃபோ எப்படி இருப்பாரோ அதைப்போலவே இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தை, ஸான் ப்யேர் லேயோ (Jean-Pierre LEaud) என்ற நடிகரை வைத்து, த்ரூஃபோ இயக்கிய சில படங்களில் நடிக்க வைத்தார். இதனால் படம் பார்ப்பவர்களுக்கு அது த்ரூஃபோவா, அல்லது கற்பனைக் கதாபாத்திரமா என்ற கேள்வி வரும். அதுதான் த்ரூஃபோவின் பாணி. பிந்நாட்களில் வூடி ஆலன் இதையேதான் செய்தார். அவர் உருவாக்கிய நியூயார்க்கர் பாத்திரத்தில் அவரே நடித்திருப்பார். இது அவரா கற்பனைக் கதாபாத்திரமா என்று படம் பார்க்கும் மக்கள் மனதில் கேள்வி எழும்.

இவரைப் போலவே இன்னொரு இயக்குநரான ஸாக் டாடி (Jacques Tati), ஆறு படங்கள் இயக்கி நடித்திருக்கிறார். அதேபோல் இத்தாலியின் நான்னி மொரேட்டி (Nanni Moretti), நிறையப் படங்கள் இயக்கி நடித்திருக்கிறார்.

உலகப் பட இயக்குநர்களில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர் தகாஷி கிடானோ. ஜப்பானிய இயக்குநர். நமது மிஷ்கினுக்குப் பிடித்தமானவர். மிஷ்கினின் நந்தலாலா, தகாஷி கிடானோவின் கிகுஜிரோ படத்தின் தழுவலே என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். இந்த தகாஷி கிடானோ, தான் இயக்கிய எல்லாப் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தவர். மொத்தம் பனிரண்டு படங்களில் இப்படி இயக்கி நடித்திருக்கிறார். அனைத்துமே நல்ல படங்களே. இவரது பட்டியல் இணையத்திலேயே கிடைக்கும். மிகப் பிரபலமான இயக்குநர் இவர்.

தகாஷி கிடானோவின் சிறப்பம்சம் என்னவென்றால், நிஜவாழ்க்கையில் இவர் மிகவும் வெளிப்படையான, ஜாலியான மனிதர். ஆனால் இவரது திரை கதாபாத்திரங்கள் அதற்கு நேர் எதிராக, அமைதியாக, தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டு, மென்சோகம் நிறைந்த பாத்திரங்களாக வெளிப்படும். இது வூடி ஆலனுக்கு நேர் எதிர். வூடி ஆலனின் கதாபாத்திரங்கள் திரையில் கிட்டத்தட்ட சார்லி சாப்ளினின் இன்னொரு வடிவம் போல இருக்கும்.

இன்னொரு இத்தாலிய இயக்குநரான ராபெர்த்தோ பெனிக்னி (Roberto Benigni), தன் படங்களை இயக்கித் தானே நடிப்பதில் புகழ்பெற்றவர். இவரது Life is Beautiful பற்றித் தமிழ்நாட்டின் திரை விமர்சகர்கள் வண்டிவண்டியாக எழுதித் தள்ளியாயிற்று (இந்தப் படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் பத்ரி படத்தில் அப்படியே வெட்டி ஒட்டப்பட்டிருக்கும்). ராபெர்த்தோ பெனிக்னி படங்களை அவசியம் திரைரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

ராபெர்த்தோ பெனிக்னி

சாச்சா பாரென் கோஹென் (Sacha Baron Cohen) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். Borat, Dictator போன்ற படங்களால் பிரபலமானவர். ஐரோப்பாவின் முக்கியமான திரை ஆளுமை. கறுப்பு நகைச்சுவை ததும்பும் படங்களை இயக்கி நடித்தவர். ஆனால் பொதுவாக இவரது படங்கள் லேரி சார்லெஸ் என்பவரால்தான் இயக்கப்பட்டதாகப் போட்டிருக்கும். இருப்பினும் அவர் லேரி சார்லசுடன் இணைந்தே இயக்கியிருப்பார். அவர்கள் இருவரும் சேர்ந்து பணி புரிவது ஒருவிதமான வித்தியாசமான பாணியில். அப்படிப்பட்ட படங்களில் Brüno முக்கியமானது. இந்தப் படத்தில் சாச்சா பாரென் கோஹெனின் நடிப்பைக் கவனித்துப் பாருங்கள்.

இந்தப் பட்டியலில் இன்னொரு முக்கியமான திரை ஆளுமை, ஆக்னெஸ் வார்தா (Agnès Varda). இவரது படைப்புகளில் இவரே நடிப்பார். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும். பிரதான கதாபாத்திரங்களாக இருக்காது. இருப்பினும் இவரது திரைப் பங்களிப்பு முக்கியமானது.

இவர்களைத் தவிரவும் இன்னும் சிலர் இருந்தாலும், கட்டுரை நீண்டுகொண்டே போவதால் இத்துடன் முடித்துவிடலாம். இந்தக் கட்டுரையில் இடம்பெற்ற திரை ஆளுமைகளின் திரைப்படங்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்காவிட்டால் அவசியம் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக, அவர்களின் பாணியில் இயக்கி நடித்து எடுத்திருக்கும் இந்தப் படங்கள் அவசியம் உங்களது திரைப் பார்வையை விசாலப்படுத்தி, நல்ல புரிதலை அளிக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram