திருமணமான நிலையிலும் குழந்தைப் பேறு ஆன நிலையிலும் பல பெண்கள் தாங்கள் பார்த்துவரும் வேலைகளை விட்டுவிடுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வேலை தேடினால் கிடைப்பதில்லை. எப்படி அணுகுவது என்று தெரிவதில்லை. இதுபோன்ற பெண்களுக்காக ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ் (overqualifiedhousewives.com) என்றொரு தளத்தைத் தொடங்கி வழிகாட்டி, பல பெண்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தருகிறார் சங்கரி சுதர்சனன். அவரிடம் பேசினோம்.
என்னுடைய வாழ்வில் நடந்தவற்றை வைத்துதான் இந்த 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்'ஐத் தொடங்கினேன். தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட நான் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் முடித்தேன். பின்னர் 8 வருடம் ஐ.டி. துறையில் வேலை. திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் வீடு, வேலை இரண்டையும் சமாளிக்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால், வேலையை விட்டேன். ஒன்றரை வருடம் நான் வீட்டோடு இருந்தேன். அந்த நாள்களில் என்னுடைய தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பிறகு வேலைக்குச் செல்லலாம் என்று தேடும்போது, வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலை செய்யும் வகையிலான வேலைகள் குறைவாகவே இருந்தன. குறைந்தது 10 முதல் 12 மணிநேரம் வரை கட்டாயம் பணிபுரிய வேண்டிய வேலைகள்தான் அமைந்தன.
அந்த நேரத்தில்தான் என்னைப் போலவே நன்கு படித்த நிறைய பெண்கள், திருமணம், குழந்தைப்பேறு போன்ற இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவது எப்படி என்று தெரியாமல் இருப்பதைக் கண்டேன்.
அதேபோல, நிறைய ஸ்டார்ட் அப், சிறிய தொழில் நிறுவனங்களுக்கு நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களின் தேவையும் இருந்தது.
நாம் ஏன் இவர்கள் இரு தரப்பையும் இணைக்கக்கூடாது என நினைத்தேன். அப்போது உருவானதுதான் இந்த 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்'. ஆகஸ்ட் 15, 2022ஆம் ஆண்டு இந்தத் தளத்தை உருவாக்கினோம். இதில் இப்போது 700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைக்கு ஆள்களை எடுத்துக்கொள்ள பதிவு செய்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாங்கித் தந்துள்ளோம்.
இந்த ‘ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' பயணத்தில் நான் கண்ட என் மனதிற்கு மிகவும் நெருக்கமான சில கதைகளைச் சொல்கிறேன். தன்னுடைய 30ஆவது வயது வரை வேலை செய்த பிறகு, தனது இரண்டு பெண்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், வேலையிலிருந்து அந்தப் பெண் நின்றுவிட்டார்.ஆனால் எதிர்பாராதவிதமாக, கொரோனா காலத்தில் அவரின் கணவர் தவறிவிட்டார். இதனால் தன் குடும்பச் செலவுகளை சமாளிக்க 20 வருட இடைவேளைக்குப் பின்னர், தனது 50ஆவது வயதில் வேலையில் சேர விரும்பினார். அவருக்கு இந்தத் தளம் வேலைவாய்ப்பைப் பெற்று தந்திருக்கிறது.
இன்னொரு நிகழ்வு. கல்லூரி படிக்கும்போதே அப்பெண்ணுக்கு 19 வயதில் திருமணம் நடந்துவிட்டது. படிப்பை முடிப்பதற்கு முன்னரே தாய்மை அடைந்துவிட்டார். இடைவேளைக்குப் பின்தான் கல்லூரிப் படிப்பையே முடித்தார். ஒரு வருடம் வேலை செய்த அனுபவம் அவருக்கு இருந்தது. பின்னர் 5 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தற்போது வேலையில் சேர்ந்துள்ளார்.
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, கிராமத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அது 15 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம். ஆனால், அவருக்கு எப்படியாவது வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. இப்போது, எங்கள் தளத்தின் உதவியுடன் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். சென்னையில் பணி புரிந்தபோது சம்பாதித்ததைவிட 3 முதல் 4 மடங்கு சம்பளம் அதிகமாகப் பெறுகிறார்.
நல்ல பட்டப்படிப்புகளுடன் இருக்கும் பெண்கள், தன்னுடைய திறன்களை மேம்படுத்தாமலும், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளாமலும் இருப்பது தான் மிகப்பெரிய சவாலாக தற்போது இருக்கிறது.
அதேபோல வேலைபார்த்த அனுபவமே இல்லாதவர்களுக்கு வேலை தேடும்போது சிரமம் ஏற்படுகிறது. குறைந்தபட்ச அனுபவத்தையாவது பல்வேறு நிறுவனங்கள் எதிர்பார்க்கிறார்கள்.
‘ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' என்பது ஒரு பிளாட்ஃபாம். இதில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவோ, அவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவோ எந்தக் கட்டணமும் நாங்கள் பெண்களிடம் வசூலிப்பதில்லை. நிறுவனங்களிடம் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் என்னுடைய குடும்பத்தில் தொழில்முனைவோராக அடியெடுத்து வைக்கும் முதல் பெண் நான். இதற்காக என் மனநிலையை தயார்ப்்படுத்துவதே என்னுடைய முதல் சவாலாக இருந்தது. அதன் பின்னர்தான் என்னால் கவனம் குவிக்க முடிந்தது.
பெண்களுக்கு கேரியர் பிரேக் என்பது பலவீனம் இல்லை. அந்த இடைவெளி எடுத்ததற்கான முக்கிய காரணம் நம் குடும்பத்தை மேம்படுத்துவதும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதுமே. அதைவிட முக்கியமான வேலை எதுவும் இல்லை. அதனால், இந்த இடைவேளையில் இதைத் தான் கற்றுக்கொண்டேன், அடுத்து இதைச் செய்யப்போகிறேன் என்ற இலக்குடன் தைரியமாகப் பயணிக்கத் தொடங்க வேண்டும்.
குழந்தை பெற்ற பெண்களே, உலகில் கடினமான வேலை தாயாக இருப்பது. அதையே நாம் செய்து விட்டோம். அதனால் நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொருவரும் ‘கம் பேக்’ கொடுக்கலாம்!