ஆங்கிலத்தில் டீன் ஏஜர் எனப்படும் குமரப் பருவத்தினரிடையே கொரோனா எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது... யோசித்துப் பார்ப்போம். வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும், வெளியில் போனால் நம்மால் மற்றவர்களுக்கு நோய் பரவும் எனும்நிலை... யாரையும் நாம் பார்க்கமுடியவில்லை. பள்ளி நடக்கவில்லை, வகுப்புகள் இணையத்தில் நடந்தன. வேண்டப்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டு சிலரின் வீடுகளில் மரணங்கள்கூட நடந்திருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையானவற்றை இழக்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
பொதுவாக மன அழுத்தம், மனநலத்தைப் பாதிக்கும். இதில் குமரப் பருவத்தினரிடம் கொரோனாவுக்கு முன்னரே மன பாதிப்பு மோசமாகத்தான் இருந்தது. குறிப்பாக, 13- 19 வயதினரின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணம் தற்கொலை என உலக சுகாதார அமைப்பு கூறியது.
பொதுவாகவே இந்தப் பருவத்தினரிடம் மனச்சோர்வு நோய், மனப்பதற்ற நோய் போன்றவை அதிகரித்தபடி இருந்தது. கொரோனா முதலாண்டில் இந்த இரண்டும் குமரப் பருவத்தினரிடையே மூன்று மடங்கு அதிகரித்தது என்பது புள்ளிவிவரம். இவர்களின் மன அழுத்தம், பதற்றத்தை கொரோனா ரொம்பவே சீண்டியிருக்கிறது என்பது ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது!
பொதுவா குமரப் பருவத்தை ஸ்ட்ரெஸ் அண்டு ஸ்டார்ம் என்று சொல்லுவோம். இது ஒரு உணர்ச்சிமயப்பட்ட பருவம். இந்தப் பருவத்தில்தான் மனநலப் பிரச்சினை ஏற்படும் காலகட்டம். பாதிக்கப்படுவோர் ஒன்று ஏற்கெனவே இந்தப் பிரச்சினைகளோடு வாழத் தொடங்கியிருப்பார்கள் அல்லது இனிதான் தொடங்கும் என்கிற காலகட்டம் இது.
இந்தப் பருவத்துடன் மனநலப் பிரச்சினை நின்றுவிடுமா என்றால் இல்லை. உரியபடி கவனிக்காவிட்டால் அது பெரிய மனிதராக ஆனபின்னும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்றைக்கு நம்முடைய குமரப்பருவத்தினர்தான் நாளைக்கு பெரியவர்களாக ஆவார்கள். இவர்கள்தான் நாளைக்கு குழந்தைகள் வளர்ப்பு, உலகத்தினுடைய பிரச்னைகளைக் கையாளப்போவது இவர்கள்தான். மனநலமற்ற தலைமுறை பிற்காலத்தில் உலகை வழிநடத்தும் என்றால் அது எப்பேர்ப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் எனப் பாருங்கள்.
கொரோனா முடிந்துவிட்டதால் எல்லாம் சீராகிவிட்டது என நாம் நினைக்கலாம். ஆனால் குமரப் பருவத்தினரின் நலத்தில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முடிவடையவில்லை.
குமரப் பருவத்தினர் பலவித மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். உலக அளவில் பெருந்தொற்று, பருவநிலை தப்புதல், உள்நாட்டுப் பிரச்னைகள், குடும்ப வன்முறை போன்ற தனிநபர் பிரச்னைகளும் அவர்களிடம் அழுத்தத்தை உண்டாக்குகிறது.
இந்தப் பருவத்தினரின் மனநலச் சிக்கல்களை தனிநபர்ரீதியாக, சமூகரீதியாக என இரண்டு வகைகளில் தீர்க்கலாம்.
தனிநபருடைய மனப் பிரச்சனையோ நடத்தைக் கோளாறோ அவரின் உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்போ அதைச் சமாளிக்க நேரடியாக அவருக்கு கவுன்சிலிங் தருவது. ஆனால் தனிப்பட்டு சிகிச்சை தரும் அளவுக்கு மனநல மருத்துவர்களோ மனநல ஆலோசகர்களோ போதுமான அளவில் இல்லை. இதனால் நீண்டகாலத்துக்கு தனிநபராக சிகிச்சையளிப்பது சாத்தியமில்லாத விசயம். எனவே, சமூகமட்டத்திலான சிகிச்சை அளிக்கலாம்.
பொதுவாக, எல்லா குமரப் பருவத்தினரையும் பெற்றோர், கூட்டாளிகள் எனப்படும் சகவாடிகள், ஆசிரியர்கள், அவர்களின் சமூகம் என நான்கு தரப்பினர் சுற்றிலும் இருக்கிறார்கள். சமூக மட்டத்திலான தலையீடு பள்ளி, கல்லூரிகள் மூலமாக செய்யலாம். அங்கு பிரச்னை வெடிப்பதற்கு முன்னரே மனநலச் சிக்கலுக்கான அறிகுறிகள் வெளிப்படும்; அதை முன்கூட்டியே கண்டறியலாம். இதற்கான அறிவியல் இருக்கிறது.
அவருடைய படிப்பில் பின்னடைவு இருக்கும்; உறவுகளில் சிக்கல் வரும்; மதுபோதைப் பழக்கத்துக்கு ஆட்படுவது... பிறகு, வன்முறையில் ஈடுபடுவது. கைபேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது. திடீரென அதிகமான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வது. எந்த சமூகத் தொடர்புகளும் இல்லாமல் தனிமையில் போய் உட்கார்வது போன்ற பல அறிகுறிகளைக் கண்டுபிடிக்கலாம். பெற்றோர், ஆசிரியர்கள் இவற்றைக் கண்டறியமுடியும்.
இதற்கான செயல்முறைகள், கட்டமைப்புகளை கல்விக்கூடங்களில் உருவாக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பது பெரிய கேள்வி. ஊதியம் போதாமை, ஊரகப் பகுதிகளில், மிகவும் உள்ளே இருக்கக்கூடிய பகுதிகளில் சென்று வேலைசெய்யத் தயக்கம் போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தாண்டிதான் இதைச் செய்தாகவேண்டும்.
மனநலப் பிரச்சினைகளில் பாதி 14 வயதுக்கு முன்னரே தொடங்குவதாக ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன. ஆனால், அவர்கள் பாதிக்கப்பட்டு 10-12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நிலையில் முன்கூட்டியே கவனித்து சரிசெய்யத் தொடங்கிவிட்டால் அவர்களின் கல்வித்திறன், உறவுமுறை மேம்படும். தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவது குறையும். படிப்போ தொழிலோ அவர்களின் உற்பத்தித்திறன் மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
முன்னரெல்லாம் பள்ளிகளில் நன்னெறிப் பாட வகுப்பில் நீதிக் கதைகள் எல்லாம் சொல்வார்கள். அதைக் கேட்டு அவர் அப்படி நீதியாக மாறிவிடுவாரா என சந்தேகம் வந்தது. ஒரு குழந்தையிடம் ஒரு மணி நேரம் அன்பைப் பற்றி ஒரு மணி நேரம் வகுப்படுத்தால் அந்தக் குழந்தை மாறிவிடுமா? மாறவில்லை என்பதுதான் ஆராய்ச்சிகள் காட்டுவது.
அதன்பிறகு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுக் கல்வி என்பதை உலக சுகாதார நிறுவனம் ஊக்குவித்தது. அதன்மூலம் நடத்தைக் கோளாறு குறைந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை நம் பள்ளிகளில், ஏழாம் வகுப்பிலிருந்து செயல்படுத்தலாம்.
அரசாங்கம் இந்தக் குமரப் பருவத்தினரின் மனநலத்தை மேம்படுத்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான என்னென்ன திட்டங்களை வகுத்திருக்கிறது என்பதை, பொதுவெளியில் விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டும்.
அரசின் கொள்கை அளவில் மாற்றம் வராமல் அடித்தளத்தில் பொதுமக்களிடம் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பது என்னுடைய கருத்து.