ஓவியம்: ரவிபேலட்
சிறப்புப்பக்கங்கள்

கூட்டணிக் கட்சிகளை நிர்வகிப்பது எப்படி?

Staff Writer

தேர்தல் என்றாலே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், கூடுதல் சீட்டுக் கேட்டு இழுபறி என நாம் சலித்துப் போகும் அளவுக்கு தேர்தலுக்கு முந்தைய ஆறேழு மாத அரசியல் நிலவரங்கள் அமைந்துவிடுகின்றன. இந்திய அரசியல் நிலவரப்படி நான்கு விதங்களில் கூட்டணிகள் அமைவதாகச் சொல்லலாம்.

1) பெரிய கட்சிகள் தங்களை விட சிறிய கட்சிகளை அவை கொள்கையில் இணக்கமாக இருக்கும் சமயத்தில் தங்களுடன் கூடவே வைத்துக்கொள்கின்றன. இது இயல்பாகவே நடப்பது.

2) பொதுவாக ஒரு பெரிய நோக்கம் இருக்கையில் கொள்கைவேறுபாடு இருந்தாலும் பரவாயில்லை என மாறுபட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து தொகுதி உடன்பாடு கொள்கின்றன.

3) சிறிய கட்சிகள் தங்களால் தனித்து நின்று எந்த தொகுதியும் வெல்ல இயலாது என்ற நிலையில் பெரிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொள்கின்றன.

4) பலம்பொருந்திய கட்சிகள் சில சமயம் பிற கட்சிகளை ‘சாம பேத தான தண்ட’ நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டணியில் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்த நான்குவித கூட்டணிகளையும் தமிழக அரசியல் வரலாற்றில் நாம் பலமுறை கண்டுள்ளோம். பொது நோக்கில் ஒன்றிணையும் கட்சிகளைக் கொண்ட கூட்டணி பெரும்பாலும் வென்றுள்ளது.

கட்சிகளை ஒரே அணியில் சேரவிடாமல் பிரித்துப் போட்டு பல அணிகளாக்கி, தனித்துநின்று போட்டியில் பெரிய கட்சி வென்ற கதையும் உண்டு.

கூட்டணிகள் உருவாவதை அவ்வப்போதைய அரசியல் சூழல்கள் தீர்மானிக்கின்றன. அரசியலில் நிரந்தர நண்பனோ எதிரியோ கிடையாது என்ற தேய்வழக்கு ஒவ்வொரு முறையும் உண்மையாகிக் கொண்டே போகிறது. மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனித்து நின்று வெற்றிபெறும் பலத்தை அரசியல் கட்சிகள் இழந்துவருவதாகவும் இந்த கூட்டணி அரசியலைக் காணும்போது உணரலாம். இந்த இதழில் ராஜாஜி காலத்தில் இருந்து ஸ்டாலின் காலம் வரை வெற்றிகரமாக உருவான சில தேர்தல் கூட்டணிகளைப் பற்றிய தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மக்களாட்சியின் கூறுகளில் ஒன்று கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது. இன்னும் அது கூட்டணி ஆட்சியாக தமிழ்நாட்டில் பரிணாமம் பெறவில்லை! ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது டெல்லியில் மைய அரசில் வழக்கமாகி இருந்தாலும் அதற்கான சூழல் இதுவரை இங்கே அமையவில்லை. ‘தேர்தல் கூட்டணியில் இடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கே மூச்சு வாங்கிவிடுகிறது; இதில் ஆட்சியில் பங்கு என்றால் என்ன ஆகுமோ?’ என்கிறார் அனுபவம் வாய்ந்த அரசியல் விமர்சகர்.

தேர்தல் திருவிழாவில் உற்சாகமாக நாமும் பங்குகொள்வோம்!