சிறப்புப்பக்கங்கள்

பக்கவாதம் வராமல் காத்துக்கொள்வது எப்படி?

மருத்துவர் ஏ.வி. சீனிவாசன்

ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் களில் அடைப்பு ஏற்படுவதால் உருவாகிறது. மூளை என்பது அளவில் சிறியதாக இருந்தாலும் ஆற்றலில் மிகவும் பெரியது. உடலின் இயக்கங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மூளையின் குறிப்பிட்ட பகுதி இதனால் இறந்துவிடுகிறது. எனவே உடல் இயக்கம் பாதிக்கிறது. இதய மாரடைப்பு போலத்தான் மூளையும் பாதிக்கப்படுகிறது.

மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன?

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் வழக்கத்துக்கு மாறாகத் தடை ஏற்பட்டால் சிறிது நேரத்துக்கு உண்டாகும் தாக்கத்துக்கு மினி ஸ்ட்ரோக் என்று பெயர். இது 24 மணி நேரத்துக்குள் சரியாகிவிட்டால் அதை ட்ரான்ஸியண்ட் இஸ்கீமிக் அட்டாக் (Transient ischemic attack) என்று அழைப்போம். அது நான்கு நாட்கள் மட்டும் இருந்து சரியாகி விட்டால் ரிவர்சிபிள் இஸ்கீமிக் நியூரலாஜிகல் டெபிசிட் (Reversible Ischemic neurological deficit) என்று அழைப்போம். மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைபட்டு பின் சரியாகி விடுகிறது. இதையும் தாண்டி சரியாகாமல் இருந்தால் முழுமையான ஸ்ட்ரோக் என்று சொல்கிறோம்.

ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் என்ன?

F A ST என்று சொல்வோம். F என்றால் முகத்தில் பாதிப்பு ஏற்படும். A என்றால் ஆர்ம். அதாவது கை கால் பாதிப்பு. S என்றால் Speech. பேச்சில் ஏற்படும் பாதிப்பு. T என்றால் டைம் அதாவது இந்த அறிகுறிகள் தெரிந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் விரைவில் செயல்பட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். உடலில் ஒரு பகுதியில் முகம் கைகால்களில் மரத்துப்போன உணர்வு ஏற்பட்டு செயலிழப்பு ஏற்படும். திடீரென பார்வை தெளிவில்லாமல் போகலாம். நடந்து செல்லும்போது திடீரென தலை சுற்றி நிலை தடுமாறி விழலாம். திடீர் குழப்பம், பேச்சுத் தெளிவின்மை, பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமை, எவ்வித காரணமும் இல்லாமல் திடீரென தலைவலி வரலாம்.

பெண்களுக்கு என்று தனியாக அறிகுறிகள் உண்டா?

பெண்களுக்கென்று தனியாக அறிகுறிகள் இல்லாவிட்டாலும் திடீரென கைகால் முகத்தில் வலி, திடீர் விக்கல், திடீர் வாந்தி, திடீர் களைப்பு, திடீர் நெஞ்சுவலி, திடீர் மூச்சு விடத் திணறுதல், இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்றவை ஏற்படும்போது கவனத்துடன் இருக்கவேண்டும்.

பக்க வாதம் என எப்படி உறுதி செய்வது?

மூளையின் அமைப்பை அறியும் சிடி ஸ்கேன் போன்ற பலவித சோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். அறிகுறிகள் ஏற்பட்ட முதல் நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவரிடம் சென்றுவிட்டால், அதற்கென்று உள்ள மருந்துகளைச் செலுத்தி பாதிப்பில் இருந்து முழுமையாகக் காப்பாற்றலாம். பொதுவாக வலதுபக்க மூளை பாதிக்கப்பட்டால் இடது கையும் காலும் இடதுபக்க மூளை பாதிக்கப்பட்டால் வலது கையும் காலும் செயலபாடுகள் பாதிக்கப்படும்.

இடதுபக்க மூளை பாதிக்கப்படும்போது பேச்சு தடைபடுகிறது. எந்த வேலையையும் நிதானமாகத்தான் செய்யமுடியும். பிறர் துணை அவசியம். புதிதாகக் கற்றுக்கொள்வது மிகச் சிரமம். பத்து நிமிடத்துக்கு மேல் ஒரு வேலையைச் செய்யும்போது மறதி ஏற்படும்.

வலது பக்க மூளை பாதிக்கப்பட்டால் தூரம் கணிப்பதில் சிரமம்; கீழே விழுந்த பொருளை எடுப்பதில் சிரமம்; நடப்பதில் மாறுதல்கள், குறுகிய கால நினைவுகளில் இழப்பு; (உதாரணத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது நினைவில் இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டது நினைவில் இருக்காது).

பக்கவாதம் யாருக்கு வரலாம்?

வயதானவர்களுக்கு வரும். குறிப்பாக 65 வயதைத் தாண்டியவர்கள் கவனமாக இருக்கலாம். அவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். இளைஞர்களுக்கும் வரலாம். வளர்ச்சி அடைந்த நாடுகளில் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்ததால் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு 10% குறைவாகி இருக்கிறது. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இது 10% அதிகமாகி இருக்கிறது.

ஸ்ட்ரோக்கில் பெண்கள் உயிர் இழக்கும் விகிதம் ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

பக்கவாதம் வராமல் தடுக்கலாமா?

எண்பது சதவீதம் வராமல் தடுக்கலாம். எப்படி? ஆங்கிலத்தில் A B C D E Fஆகிய எழுத்துகளை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். A- age- வயது, B- Blood Pressure ரத்த அழுத்தம், C- coronary Disease – இதய நோய்கள், D- diabetes- சர்க்கரை நோய், E- elevated cholesterol- அதிக கொலஸ்ட்ரால், இதெல்லாம் அதிகமாக இருந்தால் F – உடல் நலம் Fail ஆகி ஸ்ட்ரோக் ஏற்படலாம்.

இதைத் தடுக்க முக்கியமாக நமது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். இதில் இரண்டு உண்டு. ஒன்று சிஸ்டோலிக்; இன்னொன்று டயஸ்டோலிக். டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் பற்றி எல்லா மருத்துவர்களும் கவனம் செலுத்துவார்கள். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 160க்கு மேல் இருந்தால் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இத்துடன் கூடுதல் உடல் எடையும் கவனிக்கவேண்டிய விஷயம் ஆகும்.

ரத்த சர்க்கரையில் ஒரு எளிய பார்முலா உள்ளது. வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 100 என வைத்துக்கொள்வோம். சாப்பாட்டுக்குப் பின் இருக்கும் சர்க்கரை அளவு 100 + உங்கள் வயது என்று இருக்கவேண்டும். உங்கள் வயது 40 என்றால் 140 ஆக இருக்கவேண்டும். அது போல் HbA1c எவ்வளவு இருக்கவேண்டும் என்றால் அதற்கும் ஒரு எளிய பார்முலா உள்ளது. 50 வயதில் 5; 60 வயதில் 6’ எழுபது வயதில் 7; அதன் பின் எல்லாவயதிலும் ஏழில்தான் இருக்கவேண்டும்.

உடல் எடை எப்படி இருக்க வேண்டும்? உங்கள் உயரத்தை இஞ்சுகளில் கணக்கிடுங்கள். அதுவே உங்கள் எடையாக இருக்கவேண்டும். என்னுடைய உயரம் 66 அங்குலம் என்றால் என் எடை 66 கிலோ முதல் 76 கிலோவுக்குள் இருக்கலாம். இதுவொரு எளிமையான புரிதல். இந்த எடையைத் தாண்டி 96க்கு மேல் போய்விட்டது என்றால் கடுமையான உடல் பருமன். அப்போது ஸ்ட்ரோக் பற்றி எச்சரிக்கை கூடுதலாகத் தேவை. வயிற்று சுற்றளவு? உங்கள் உயரத்தில் பாதிதான் இருக்கவேண்டும். 66 அங்குலம் உயரம் என்றால் வயிற்று சுற்றளவு 33 அங்குலம் இருக்கவேண்டும்.

இன்னொரு ஏபிசிடி சொல்லவேண்டும்.

ஏ- ஆல்கஹால்

பி -பீடா

சி- சிகரெட்

டி- டிரக்ஸ் (போதைப் பொருள்)

இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

உணவில் காய்கறிகள் சேர்க்கவேண்டும். பூமிக்கு மேல் விளையும் காய்கறிகள் நிறையவும் பூமிக்குக் கீழ் விளையும் காய்கறிகள் குறைவாகவும் சேருங்கள். அதாவது இதைத் தொண்டை நிரம்பும் அளவுக்கு சாப்பிட்டால் போதும்; தொப்பை நிரம்பும் அளவுக்கு வேண்டாம்!

சாக்லேட், கேக் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடவேண்டாம். காய்கறி சூப்கள் சாப்பிடுங்கள். மன அழுத்ததைக் குறையுங்கள். தனிமையை நாடாமல் நல்ல மனிதர்களுடன் பொழுதைக் கழியுங்கள். நூல் படிக்கலாம்; இசை கேட்கலாம்.

இன்னொரு ஏழு ‘டி’க்கள்.

1) டிடெக்‌ஷன்: அறிகுறிகளைக் கண்டறிதல்

2) டெஸ்பேட்ச்: நோயாளியை அப்புறப்படுத்துதல்

3)டெலிவரி: உரிய இடத்தில் சேர்த்தல்

4)டோர்: மருத்துவ மனையில் அனுமதித்தல்

5)டேட்டா: நோயாளியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல்

6) டிசிஷன்: முடிவு எடுத்தல்

7) ட்ரக்: அந்த முதல் நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவர் தரவேண்டிய மருந்து

பக்கவாதம் போல் தோன்றக்கூடிய ஆனால் பக்கவாதம் அல்லாத நோய்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளுதல் நல்லது. வலிப்புவருதல், உடலில் நச்சு தன்மை, நோய்த் தொற்று, மயக்க நிலை, அதிக கொழுப்பு நிலை போன்றவை.

25- 40 வயதில் ரத்த அழுத்தம் இருப்பின் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு: 3-5 சதவீதம்.

உடல் உழைப்பு இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு இது– 2-5%

ரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு 1.8- 2.7%. அதிகம் எடை உடையவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு:–1.8-2.5%. இதயத் துடிப்பு சீரற்று இருந்தால் -1-6%

கொரோனாவுக்குப் பின் என்ன ஆகியிருக்கிறது?

பாதிக்கப்படுகிறவர் எண்ணிக்கை அதிகம் ஆகவில்லை. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஸ்ட்ரோக் வந்துள்ளது. ஆனால் கொரோனாவால்தான் இது ஏற்பட்டது என்று சொல்வதற்கு தரவுகள் இல்லை.

(மருத்துவர் ஏ.வி. சீனிவாசன், மூத்த நரம்பியல் துறை மருத்துவர். 2024-இல் அமெரிக்க நரம்பியல் அகாடமியால் சிறப்பு விருது வழங்கிப் பாராட்டப்பட்டார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் இவர்தான். சையண்டிபிக் லாரல்ஸ் அமைப்பால் இதே ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது)

- நமது செய்தியாளர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram