சிறப்புப்பக்கங்கள்

சிறுநீரகங்களைக் காப்பது எப்படி?

மருத்துவர் ஆர். விஜயகுமார், எம்டி, டி.எம்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதை இப்போது பார்க்க முடிகிறது. இந்த டயாலிசிஸ் என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடிய ஒன்று.

அரசு தரும் காப்பீட்டுச் சிகிச்சைகளில் மிக அதிகமாக செலவு பிடிக்கக்கூடியதாக டயாலிஸிஸ் சிகிச்சை உள்ளது. சொல்லப்போனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கேகூட டயாலிசிஸுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் செலவாகும். அத்துடன் தேவையான அளவுக்கு சிறுநீரகங்களும் கிடைப்பது இல்லை.

இந்தியா விடுதலை அடைந்தபோது சராசரி இந்தியர்களின் வயது 32 மட்டுமே. ஆனால் இப்போது அது 70 ஆக உயர்ந்துள்ளது. எனவே வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்களும் அதிகரித்துள்ளன. சிறுநீரகம் பழுதடைதல், புற்றுநோய். இதயநோய் போன்றவை வயதான நிலையில் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

சிறுநீரகம் பழுதாகும்போது இதற்கு சிகிச்சை அளிப்பது கடினமான விஷயமாகும். இதை வருமுன் காப்பது மிக முக்கியமாகும். அதையும் மீறி பாதிப்பு ஏற்படும்போது முன்கூட்டியே கண்டுபிடிப்பதும் மிக அவசியமாகும். சிறுநீரகப் பழுதுக்கு என்ன காரணம்? நிறைய உள்ளன.

முக்கியமானவை உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவு அதிகரிப்பும் தான். மரபு ரீதியான காரணங்களும் இருக்கலாம்.

எல்லா மருத்துவர்களும் தங்களிடம் வரும் அத்தனை நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிப்பதை கட்டாயமாகச் செய்யவேண்டும். சமூக அளவிலும் தற்போது கிடைக்கும் தானியங்கி ரத்த அழுத்தம் கண்டறியும் கருவிகளைக் கொண்டு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிசை அளிக்கவேண்டும். சிறுநீரக நோய்கள் மட்டுமல்ல, இதயம் சம்பந்தபட்ட நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களையும் கூட தடுத்து நிறுத்த ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது அவசியம்.

அதுபோல் சர்க்கரை நோயையும் ஆரம்பத்திலேயே பரிசோதனை மூலம் கண்டறிவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை முப்பது வயது தாண்டிவிட்டாலே அவர்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை (HbA1c) 6 க்கு கீழே உள்ளதா என்று கண்டறிய வேண்டும் .

சிலருக்கு சிறுநீரக நோய்களின் அறிகுறி முதலில் இருந்தே இருக்கும், சிலருக்கு ஆரம்பகட்டமாக இருக்கும்போது அறிகுறி எதும் இருக்காது. எல்லா நோய்களையும் போல சிறுநீரக நோயையும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் சிகிச்சை எளிதாக இருக்கும். நிறைய பேருக்கு இது கண்டுபிடிக்கப்படுவதே இல்லை. பின்னாளில் கால்வீக்கம், இதய நோய் என்று வந்த பிறகுதான் பல ஆண்டுகளாக இவர்களுக்கு சிறுநீரக நோய் இருந்திருக்கிறது என்று தெரியவருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்துவது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமல்லாமல் கூட வருகிறவர்களுக்கு சேர்த்து பரிசோதனை செய்வது போன்றவற்றின் மூலம் மக்கள் தொகையில் யாருக்கு சர்க்கரை பிரச்னை, சிறுநீரக நோய் உள்ளது என்று கண்டுபிடித்து,அவர்களைக் குறிவைத்து சிகிச்சை அளிக்கமுடியும்.

சர்க்கரை,ரத்த அழுத்தம் இரண்டையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது சிறுநீரகம் காக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்ட முயற்சி என்று சொல்கிறேன். இதைத்தவிர நம் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்னை. அதுவும் குழந்தைப் பருவ உடல் பருமன் என்பதை அப்போதே சரி செய்யவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு கொழுப்பு செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பின்னாளில் சரி செய்வது கஷ்டம். பள்ளிகளில் இருந்தே உடல்பருமன் அதிகம் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சரிவிகித உணவு, உணவுக்கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கலாம். இப்பணியில் ஆசிரியர்களையும் ஈடுபடுத்தலாம். அவர்களே பெற்றோரிடம் இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

பள்ளிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டும். சீனாவில் மாசேதுங் ஆட்சிக்கு வந்தபோது டேபிள் டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இதன் விளைவு, உலகில் இப்போது இருக்கும் டேபிள் டென்னிஸ் சாம்பியன்கள் பலர் சீனர்களாகத்தான் இருக்கிறார்கள். நிறைய டேபிள் டென்னிஸ் டேபிள்கள் இருந்தால் நிறையபேர் விளையாடத்தான் செய்வார்கள். இதுபோன்ற வசதிகள் பள்ளிகளில் அதிகரிக்கப் படவேண்டும். இது உடல் உறுதிகொண்ட தலைமுறை உருவாக உதவி செய்யும்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான கல்வி என்பது மிக முக்கியம். எல்லோருமே கணினிப் பொறியாளர்கள் ஆகவேண்டும் என்பதை நோக்கி நம் கல்வி உள்ளது. ஆனால் எல்லோரும் அப்படி ஆகமுடியாது. ஆனால் எல்லோருக்கும் ஆரோக்கியம் தேவை. உணவுப் பழக்கவழக்கம், தடுப்பூசிகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்குமே தேவை.

இது சிறுநீரகப் பாதுகாப்பு என்று மட்டும் இல்லை; எல்லா நோய்களுக்குமே பொருந்தும்.

சிறுநீரக நோய்களுக்கு என்ன அறிகுறிகள் இருக்கலாம்? சிறுநீரகப் பாதிப்பு என்பது கடைசிக் கட்டத்தில்தான் தெரியவருகிறது என்பது துரதிருஷ்டம். இருந்தாலும் முக வீக்கம், கால்வீக்கம், மூச்சுத் திணறல், கூடுதல் ரத்த அழுத்தம் போன்றவை இதன் அறிகுறியாக இருக்கலாம். காலம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டும். டயாலிசிஸ் கட்டாயம் என்ற நிலைக்குச் செல்வதை இதன்முலம் பல ஆண்டுகள் தள்ளிப்போடலாம்.

சிறுநீரக நோய் மட்டுமல்ல; எந்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்தாலும் தனி நபருக்கு மட்டுமல்ல; அந்த குடும்பத்துக்கும் சமூகத்துக்குமே உதவியாக இருக்கும்.

மூட்டுவலி, தலைவலி போன்றவற்றுக்கு எடுக்கும் NSAID என்று சொல்லப்படும் வலி நிவாரண அலோபதி மருந்துகள், சில உலோகங்கள் அடங்கிய ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை நீண்டகாலம் சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும்.

ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு உப்பையும் சர்க்கரையையும் அறவே தவிர்ப்பது நல்லது. மேலும் நாம் அனைவருமே சாப்பிடும் உப்பின் அளவைக் குறைப்பது என்பது மிக முக்கியம். இதனால் ரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக நோய்களும் குறையும். ரத்த அழுத்தம், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகளுக்கு மிக முக்கியமான காரணம் சிகரெட் பிடிப்பது. இந்த பழக்கத்தை அறவே விட்டு ஒழிப்பது இந்த எல்லா நோய்கள் மட்டுமன்றி நுரையீரல் புற்று நோயையும் தவிர்க்கும்.

ஆக மொத்தம் சமூகத்தில் அனைவருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கள உள்ளதா என்று சோதிப்பது, வலி நிவாரணிகளைத் தவிர்ப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, உணவில் உள்ள உப்பைக் குறைப்பது, சமூக விழிப்புணர்வு சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க உதவும்

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram