சினிமா என்பது மாய உலகம். கற்பனையைக் காசாக்கும் சினிமாவில் ஜெயிக்கவும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவும் நிறைய உழைப்பும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும். அதுவும் மொழி தெரியாத ஊரில், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி உச்சிக்குச் செல்வதற்கெல்லாம் அசுரத்தனமான உழைப்பும் தியாகங்களும் அவசியம். அப்படி உழைப்பையும் ஆர்வத்தையும் தொழில் கொடுப்பவர்கள்தான் மற்றவர்களுக்கான முன்னுதாரணமாக இருந்து வெற்றி பெறுவார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் ஒப்பனைக்கலைஞர் புஜ்ஜி பாபு. ஆந்திராவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரான புஜ்ஜி பாபு பிழைப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். ஹோட்டல் ஒன்றில் டேபிள் துடைப்பவராக இருந்தவர் பின்னாளில் அமிதாப் முதல் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கை பெற்ற ஒப்பனைக்கலைஞராக வளர்ந்தார். அவரிடம் பேசினோம்.
“வயிற்றுப் பிழைப்புக்காக சென்னைக்கு வந்த புதிதில் சினிமா உலகம் எப்படி இருக்கும், எப்படி இயங்கும் என எந்த ஐடியாவும் கிடையாது. சென்னையின் பிரபல வாகினி ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டேபிள் கிளீன் செய்யும் வேலை முதலில் கிடைத்தது. அங்கு பல சினிமாத் தொழிலாளர்கள் சாப்பிட வருவார்கள். அவர்கள் சினிமா பற்றி பேசுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். மெல்ல சினிமா மீதும் ஆர்வம் பிறந்தது. அங்கு வரும் பிரபலங்களிடம் சினிமா ஸ்டுடியோவிற்கு என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் ஸ்டுடியோவிற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவரை நான் பார்க்காத இந்திரலோகமாக அது இருந்தது” என்று சற்று நேரம் பரவசமாக அந்த நினைவுகளில் மூழ்கினார்.
”அங்கு உள்ளவர்களிடம் எனக்கும் ஒரு வேலை தாருங்கள் எனக் கேட்டேன். செட் பாயாக முதலில் வேலைக்கு சேர்ந்தேன். படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோ தரையை பளபளப்பாகத் துடைப்பதுதான் என் வேலை. நான் துடைத்துக் கொண்டிருக்கும்போதே யாராவது அங்குமிங்கும் நடந்து கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ’அப்படி செய்யாதே’ என்று என்னால் சொல்லவும் முடியாது. ஆனால், நான் சரியாக வேலை செய்யவில்லை என்று கண்டபடி திட்டுவார்கள். பிரேக் நேரத்தில் ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட்டாக சென்று எப்படி வேலை நடக்கிறது என்று கவனிப்பேன். அதில் மேக்கப் ரூம்தான் கலகலப்பாக இருக்கும். சினிமா செட்டில் அப்போதெல்லாம் எங்களுக்கு இரண்டு இட்லி, ஒரு வடைதான். அதற்கு மேல் கேட்டால்கூட கொடுக்க மாட்டார்கள். இப்படி பசியோடுதான் பல நாட்கள் ஓடியது. ஒரு கட்டத்தில் எனக்கு இந்த வேலை சரிவராது என்பதை உணர்ந்தேன். ஒருவழியாகக் கெஞ்சி, கூத்தாடி மேக்கப் டிப்பார்ட்மெண்ட்டுக்கு மாறினேன். ஆனால், அங்கும் எனக்கு உடனே தொழில் சொல்லித் தரவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதம் மேக்கப் ரூமுக்கு வெளியேதான் நிற்க வைத்தார்கள். பொறுமையாக வெளியே நிற்பேன். சாவித்ரி, ஜெமினி, அஞ்சலி தேவி என பல நடிகர்களுக்கு மேக்கப் போடுவார்கள். உள்ளே என்ன நடக்கிறது எப்படி மேக்கப் போடுவார்கள் என்று எதுவும் தெரியாது. பிரஷ், கப் கழுவும் வேலைதான் கொடுத்தார்கள். பல நாட்கள் வாய்ப்பு கேட்டு கெஞ்சியதற்குப் பின் ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு மேக்கப் போட வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்களிடமும் திட்டு வாங்கி மெல்ல மெல்ல மேக்கப் கற்றுக் கொண்டேன்” என சினிமாவில் ஒப்பனைக்கலைஞராக அந்த கலையைக் கற்றுக்கொண்ட தனது ஆரம்ப காலம் குறித்து பேசினார்.
”தெலுங்கு, தமிழ் என எல்லா மொழி படங்களுக்கும் சினிமா ஷூட்டிங் சென்னையில்தான் அப்போது நடக்கும். 1967ஆம் ஆண்டு ஒப்பனைக் கலைஞர்களுக்கான சங்கம் ஆரம்பித்தார்கள். ரூ. 2 கொடுத்து நான் உறுப்பினர் கார்டு வாங்கினேன். மேக்கப்பில் கொஞ்சம் விஷயம் தெரிந்ததும் மேக்கப் அசிஸ்டெண்ட் ஆனேன். மாத சம்பளம் ரூ. 15. அப்போது சினிமாவில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாட்டைப் பொட்டலமாகக் கொடுக்காமல் உட்கார வைத்து சாப்பாடு போடலாம் என்ற முறையை ஜெகபதி பிக்சர்ஸ் கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்து எம்.ஜி.ஆரும் தொடங்கினார்” என்றார்.
பின் நடிகர்களுக்கு மேக்கப் செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், “நடிகை லட்சுமிக்கு ராஜேந்திரன் என்பவர்தான் மேக்கப்மேனாக இருந்தார். அவர் பிசியாக இருந்த சமயத்தில் என்னையும் இன்னொருவரையும் அசிஸ்டென்ட்டாக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார். லட்சுமிக்கு முன்கோபம் அதிகம். எங்களை சாப்பிடக்கூட விடாமல் அன்று ஒரு நாள் முழுவதும் படுத்தி எடுத்தார். அப்போது முடிவு செய்தேன். இனிமேல் அவருடன் வேலை செய்யக் கூடாது என்று! இப்படி சில வருடங்களுக்குப் பிறகு கே.ஆர். விஜயா நடித்த ஒரு தெலுங்கு படத்தில்தான் முதன் முறையாக மேக்கப் மேனாக புரமோட் ஆனேன். அந்த சமயத்தில் எனக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. கிட்டத்தட்ட மூன்று தேதிகள் முடிவு செய்து வேலை பளு காரணமாக என் திருமணத்திற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தள்ளிப் போன கல்யாணத்திற்கு மூன்றாவதாக முடிவான தேதி அன்று நாள் காலை தான் ஊர் போய் சேர்ந்தேன். திருமணம் முடித்த கையோடு உடனே பெங்களூருவுக்கு வேலை காரணமாக சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டேன்.
1980 கால கட்டம் அது! அமிதாப் நடித்த இந்திப் படம் ஒன்றில் அவருக்கு மேக்கப் போட வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது ஒல்லியாக இருப்பேன். என் உருவம் பார்த்து ‘இவன் அமிதாப்பிற்கு மேக்கப் போடுகிறானா?’ என்று என்னை நிராகரிக்கப் பார்த்தார்கள். அமிதாப்பிற்கும் என் மேல் அப்போது நம்பிக்கை இல்லை. அதனால் அவரே போட்டுக்கொண்டார். அதில் வயதான தோற்றத்துக்கு அவருக்கு ஒரு முன்னணி ஒப்பனைக்கலைஞர் வந்து மேக் அப் போட்டார். நான் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் அவர் வரவில்லை. அப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 20 நிமிடங்களிலேயே வேலையை முடித்தேன். மூன்று முறை கண்ணாடியில் அதைச் சரிபார்த்த அமிதாப்பிற்கு அதன் பின் தான் என்மேல் நம்பிக்கை வந்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அமிதாப் நடித்த ’மஹான்’, ‘கூலி’, ‘அந்தாகானூன்’ உட்பட பல படங்களில் அவருக்கு மேக்கப் போட்டேன்.
அமிதாப் படப்பிடிப்பு தளத்தில்தான் நடிகர் கமல்ஹாசன் எனக்கு பழக்கமானார். ‘விக்ரம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரஜினி, விஜய், பிரஷாந்த், சூர்யா, சந்தானம் என பல முன்னணி நடிகர்களுடன் வேலை செய்திருக்கிறேன். சாதாரண செட் பாயாக சினிமாவில் ஆரம்பித்த பயணம் ஐம்பது வருடங்களாக முன்னணி ஒப்பனைக் கலைஞராகப் பயணித்தேன். பின், ‘தலைவா’, ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தேன். அந்த கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. வயதாகி விட்டதால் மேக்கப் நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இப்போது ஒப்பனைக் கலைஞர்களுக்கு உரிய மரியாதை இல்லை. முன்னெல்லாம் நடிகர்கள் எங்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டுதான் மேக்கப் போடவே அமர்வார்கள். அப்படி இப்போதும் வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், உரிய அங்கீகாரம் இல்லை என்பதுதான் உண்மை” என்றார் ஆதங்கத்தோடு.