சிறப்புப்பக்கங்கள்

இலக்கியத்தில் சந்தர்ப்பவாதம்

ந.முருகேசபாண்டியன்

இறுதி இலக்கைத் தற்காலிக நலன்களுக்காகப் பலி கொடுப்பதே சந்தர்ப்பவாதம். -லெனின்

பூமியில் வாழ்கின்ற உயிரினங்களில் இன்றளவும் லட்சக்கணக்கில் சேர்ந்து வாழ்கின்ற மனிதர் களை ஒருங்கிணைக்கிற மொழி, சமூக அடுக்கில் வகிக்கின்ற இடம் காத்திரமானது.

வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கி, பின்னர் எழுத்து வடிவில் பதிவான படைப்புகள், காலந்தோறும் சமூக இருப்பினை விசாரணைக்குட்படுத்துகின்றன. நல்லது X கெட்டது என்ற முரணில் விரிந்திடும் மனித வாழ்க்கையில் முடிவற்ற கேள்விகளை எழுப்புகிற இலக்கியம், பன்முகப் பரிமாணங்களுடன் விரிந்துள்ளது. தமிழர் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் சங்க காலத்தில் இருந்து அறம் சார்ந்த வாழ்க்கைதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. எது அறம்? என்ற கேள்விக்குப் பின்னர் தோன்றுகின்ற பல்வேறு கருத்தியல்களில் துரோகம், சந்தர்ப்பவாதம் போன்றவை முக்கியமான பேச்சுகளை உருவாக்குகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது சந்தர்ப்பம் வாய்க்காதோ என்று தவிக்கின்றனர். சந்தர்ப்பம் என்ற சொல்லின் பொருளை வாய்ப்பு என்று கருதிட இடமுண்டு. அதேவேளையில் சந்தர்ப்பவாதி என்று ஒருவரை அடையாளப்படுத்தப்படும்போது அவருடைய குணத்தையும் பண்பையும் எதிர்மறையாக விமர்சிக்கிக்கிற தொனி பொதிந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் சந்து முனையில்கூட சிந்து பாடுகிறவர் என்று ஒருவரைக் கேலி செய்வது, நடைமுறை வழக்கினில் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் பலரும் சந்தர்ப்பம் கிடைத்தால்போதும் உடனடியாகச் சந்தர்ப்பவாதியாக மாறுகின்றனர். சிலர் விதிவிலக்காகச் தங்களுடைய கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருக்கின்றனர். அண்மைக்காலத் தமிழ்நாட்டு அரசியலை அவதானிக்கும்போது சந்தர்ப்பவாதம், சகல மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவியிருப்பதை அறிய முடிகிறது.

இலக்கியவாதிகளுக்கு இடையில் உவப்பத் தலைகூடி உள்ளப்பிரிதல் இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் சக எழுத்தாளர்களைப் புறந்தள்ளி தன்னை முன்னிறுத்துதல் காலந்தோறும் நடைபெறுகின்றது. இலக்கிய உலகில் ஓரிடம் கிடைத்தவுடன் பத்து நாவலாசிரியர்களின் நாவல்கள் மட்டும் சிறந்தவை என்று ஒரு அட்டவணை தயாரித்து அதை எவ்விதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வப்போது மாற்றிக்கொண்டிருந்த விமர்சகர் க.நா.சு. ஒருவகையில் சந்தர்ப்பவாதிதான். அப்புறம் தமிழில் இரண்டு அல்லது மூன்று நாவல்கள்தான் தேறும் என்று நெற்றியடியாகப் பேசுவதுகூட சந்தர்ப்பவாதம்தான். இலக்கிய உலகில் சிறிய குழுக்களாகச் செயல்படுகிறவர்கள் எதிர்க் குழுவில் இருக்கிற படைப்பாளி, காத்திரமான படைப்பு எழுதினாலும் புறக்கணிப்பு மனநிலையுடன் செயல்படுவதும், திடீரென எதிரணியில் சேர்ந்தவுடன் மாற்றி எழுதுவதும் சந்தர்ப்பவாதத்தில் அடங்கும். ஓர் இலக்கியப் பத்திரிகையை முன்வைத்து ஒரு குழுவாகச் செயல்படுவதும் அந்தப் பத்திரிகை சார்ந்த பதிப்பகம் வெளியிடுகின்ற புத்தகங்கள் உன்னதமானவை என்ற தகவலைப் பரப்புகின்ற சில இலக்கியவாதிகள், திடீரென எதிர்க்குழுவினரால் வென்றெடுக்கப்பட்டவுடன் அணி மாறிப் பேசுவதுகூட சந்தர்ப்பவாதம்தான். எப்படியாவது விருது வாங்கிட வேண்டுமெனத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற சில படைப்பாளர்கள், சந்தர்ப்பவாதிகளாகச் செயல்பட்டு வெற்றி அடைகின்றனர். சரி, இருக்கட்டும்.

பண்டைய இலக்கியப் படைப்புகளில் சந்தர்ப்பவாதிகளாகச் செயல்படவர்கள் பற்றிய தகவல்கள், காப்பியங்களில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. துரோகத்திற்கும் சந்தர்ப்பவாதச் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்ற புரிதலுடன் சந்தர்ப்பவாதிகளை அடையாளங்காண வேண்டியுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஏற்கெனவே திருமணமான கோவலன், தெருவில் மாலையை வாங்கி, மாதவியுடன் கொண்ட பாலுறவு, குடும்ப நிறுவனத்தில் கண்ணகியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிச் சந்தர்ப்பத்திற்கேற்பச் செய்த செயலாகும். அந்தவகையில் கோவலன் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. கொலைக்களக் காதையில் கோவலன் சிலம்பினை விற்பதற்காகக் கடைத் தெருவுக்குச் செல்லும்போது எதிரில் வந்த பொற்கொல்லனிடம் சிலம்பின் விலையை மதிப்பீடுத் தர இயலுமா என்று கேட்கிறான். தற்செயலாகச் சந்தித்த கோவலனைக் குற்றவாளியாக்கி, தன்னை விடுவித்துக்கொள்ளப் பொற்கொல்லன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டான். கோவலன், பொற்கொல்லன் ஆகிய இருவரும் சந்தர்ப்பவாதிகள். இருவரும் கொடிய வில்லன்கள் அல்ல. அதேவேளையில் தன்னலத்துடன் வாய்ப்புக் கிடைக்கும்போது சந்தர்ப்பவாதியாக மாறிச் சக மனிதர்களின் வாழ்க்கையில் துயரத்தை அளித்தனர்.

தமிழ்க் காப்பியக் கதையாடல்களில் குண்டலகேசி, தனித்துவமானது. வணிகர் குலத்தில் பிறந்த குண்டலகேசி, புரோகிதரின் மகனான சத்துவான் என்ற வழிப்பறிக் கொள்ளையன்மீது காதல் வயப்பட்டு, அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியதால் சத்துவான் மனைவியைக் கொல்வதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். கணவனுடைய வஞ்சகத்தைப் புரிந்துகொண்ட குண்டலகேசி, அவனை வலம் வந்து வணங்குவதுபோல், திடீரென்று அவனை மலையின் உச்சியில் இருந்து தள்ளிக் கொல்கிறாள். குண்டலகேசி, கணவனுடைய சதித் திட்டத்தினை முன்கூட்டியே அறிந்ததால், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன்னுயிரைக் காத்துக்கொண்டாள். குண்டலகேசி, சந்தர்ப்பவாதியாக மாறினாலும் அவளுடைய செயல், நியாயமானது.

சீவக சிந்தாமணி காப்பியத்தில் ஏமாங்கத நாட்டு மன்னனான சச்சந்தன், நாட்டினை ஆள்கின்ற பொறுப்பினை அமைச்சரான கட்டியங்காரனிடம் ஒப்படைக்கிறான். கட்டியங்காரன் அதிகாரம் தன்னுடைய கைக்கு வந்தவுடன், சச்சந்தனைக் கொன்று நாட்டின் மன்னன் ஆனான். கட்டியங்காரனின் செயல், நம்பிக்கைத் துரோகம் என்றாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி செயல்பட்டதனால் சந்தர்ப்பவாதம்தான் முதன்மையாக உள்ளது.

நவீன இலக்கியப் படைப்புகளில் எவ்விதமான அறமும் நெறியும் இல்லாதிருத்தல், அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்படுதல், எப்பொழுதும் சுயநலத்துடன் இருத்தல் போன்றவை சந்தர்ப்பவாதிகளின் அடையாளங்களாகும்.

‘பிரதாப முதலியார் சரித்திரம்’(1879)நாவலில் நீதிமன்ற வழக்குகளில் பண ஆதாயத்திற்காகச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொய் சாட்சி சொல்கிறவர்கள், ஆங்கிலேயக் காலனியாதிக்க அரசிலும் ஜமீன் நிர்வாகத்திலும் அதிகாரத்திற்குப் பணிந்து அடிக்கடி தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றுகிறவர்கள், மக்களிடையே நிலவுகிற மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஆன்மிகவாதிகளாகக் காட்டிக்கொள்கிறவர்கள் போன்றோர் சந்தர்ப்பவாதிகளாக இடம்பெற்றுள்ளனர். பணத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னுரிமை தருகின்ற சுயநலவாதிகளைச் சந்தர்ப்பவாதிகளாக வேதநாயகம் பிள்ளை, படைத்துள்ளார். சம்பந்த முதலியார், தன்னுடைய மகள் ஞானாம்பாளைப் பிரதாபனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். இடைக்காலத்தில் பிரதாபனின் குடும்பம் வறுமையில் வாடியதும் தன் முடிவை மாற்றிக்கொள்கிறார். தன்னுடைய எண்ணத்தை மாற்றுகின்ற சந்தர்ப்பவாதியாகச் சம்பந்த முதலியார் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல், சோழ ஏகாதிபத்தியத்தின் சிறப்புகளை விவரித்து எழுதப்பட்டிருந்தாலும் சூழ்ச்சி, வஞ்சகம், பிழைப்புவாதம், நன்றியின்மை, சுயநலம் போன்றவற்றை முன்வைத்துப் படைக்கப்பட்டுள்ள கதைமாந்தர்கள், சந்தர்ப்பவாதிகள்தான். நந்தினி, சோழப் பேரரசை வீழ்த்துவதற்காகப் ரவிதாசன் போன்ற ஆபத்துதவிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். அவளுடைய தூண்டுதலினால் பெரிய பழுவேட்டரையர் சோழப் பேர்ரசைக் கைப்பற்ற நினைக்கிறார். கல்கியின் படைப்புகளில் நந்தினி, கதைமாந்தர் ஆக்கம், சந்தர்ப்பவாதத்தின் உச்சத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளது.

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ’தில்லானா மோகானாம்பாள்’ நாவலில் வைகுந்தம் என்ற வைத்தி சந்தர்ப்பவாதத்தின் மொத்த வடிவாகச் செயல்படுகிறார். கலையின் மீது ஈடுபாடு எதுவும் இல்லாமல் நேரத்திற்குத் தக்கவாறு பணத்திற்காக எதையும் செய்கின்ற வைத்தி, பொருளாதாரரீதியில் யாரையாவது சார்ந்து சந்தர்ப்பவாதியாகி ஒட்டுண்ணிபோல உறிஞ்சுகின்ற வேலையைச் செய்கின்றார். சந்தர்ப்பவாதி என்று யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமென்றால் வைத்தி கதாபாத்திரத்தைச் சொல்கிறவர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.

டில்லி போன்ற பெருநகரத்தில் வசிக்கின்ற விஸ்வம், செல்லப்பா, பத்ரி போன்றவர்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றவர்களும் பொறுப்புத் துறப்பு மனநிலையுடன் சந்தர்ப்பவாதிகளாக விளங்குவதை ஆதவனின் ‘காகித மலர்கள்’ நாவல், பதிவாக்கியுள்ளது. ஊடகவியலாளர்கள், நடுத்தர வர்க்கத்து அறிவுஜீவிகள் போன்றோர் சமூக மாற்றத்தை முன்வைத்துப் பேசினாலும் இறுதியில் பிழைப்புவாதத்திற்காகச் செய்கின்ற செயல்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்தான்.

இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி’ நாவல், டில்லி நகரின் மறுபக்கத்தில் நிகழ்கின்ற அரசியல் ஆதாயத்திற்காகவும் உயர் பதவிகளுக்காகவம் அறிவுஜீவியாகவும் முற்போக்காளர்களாகவும் செய்கின்ற சந்தர்ப்பவாதச் செயல்பாடுகளை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. அதிகாரப் போட்டியில் பெண்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்ற ஆண்களின் சந்தர்ப்பவாதமும் அடங்கியொடுங்கிப் போகின்ற பெண்களின் சந்தர்ப்பவாதமும் கதையாடலில் முக்கிய இடம் வகிக்கின்றன. நாவலின் முதன்மைப் பாத்திரமான ரவியும் அவனுடைய காதலியான சாருமதியும் டில்லி அதிகார வர்க்கத்தைச் சந்தர்ப்பவாதத்துடன் எதிர்கொள்கின்றனர்.

வறுமை, ஏழ்மை காரணமாக விளிம்புநிலையினர், அறத்தில் இருந்து வழுவி, சந்தர்ப்பவாதிகளாக மாறுவதை ஜெயகாந்தன் தன்னுடைய நாவல்களில் அழுத்தமாகச் சித்திரித்துள்ளார். ‘உன்னைப் போல ஒருவன்’ நாவலில் எளிய மனிதர்கள் அன்றாடத் தேவைகளுக்காகச் சந்தர்ப்பவாதத்தில் செயல்படுவது பதிவாகியுள்ளது. ‘சுந்தர காண்டம்’ நாவலில் மேடைகளில் லட்சியத்தை முன்வைத்துப் பேசுகிற கதைமாந்தர்கள், சொந்த வாழ்க்கையில் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் கொள்கையைக் கைவிட்டுச் சந்தர்ப்பவாதிகளாகின்றனர்.

ரசிய நாவலாசிரியரான தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் இடம் பெற்றுள்ள கதைமாந்தர்கள் வறுமை ஒருபுறமும் மனக்குழப்பம் இன்னொருபுறமும் என்று தத்தளித்தாலும் காத்திரமான சந்தர்ப்பவாதிகளாக விளங்குகின்றனர். ‘குற்றமும் தண்டனை’ நாவலில் பியோத்தர் பெட்ரோவிச் தன்னுடைய தகுதிக்குக் குறைந்தவர்களைத் தாழ்த்தி தன்னிலையை உயர்த்திட விழைகின்ற அப்பட்டமான சந்தர்ப்பர்வாதியாகப் படைக்கப்பட்டுள்ளான். அர்காடி இவினோவிச், தன்னுடைய பாலியல் வேடகையையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ள எல்லா வகையான சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்கிறான்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கதைமாந்தர்கள், சொந்த ஆதாயங்களுக்காகச் சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றுகின்றனர். ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகமான ‘டெம்பஸ்ட்’, துரோகம், சந்தர்ப்பவாதம், பழி வாங்குதல் போன்றவற்றின் பின்புலத்தில் அரசியல் சந்தர்ப்பவாதத்தைச் சித்திரித்துள்ளது. ‘ஒத்தெல்லோ’ நாடகத்தில் சந்தர்ப்பவாதியான இயாகோவின் செயல்பாடுகளினால் ஒத்தெல்லோவுக்கும் டெஸ்டிமோனாவுக்கும் இடையிலான காதல் சிதி லமடைந்து அவள் கொல்லப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் மனிதர்கள் தங்களின் பேராசை அதிகாரம், பதவி போன்றவற்றுக்காகக் கீழ்த்தரமான தந்திரங்களையும் கபடங்களையும் செய்திட முயலுவார்கள்; ஆனால், அதன்் விளைவாக அவர்கள் இறுதியில் தங்களின் அழிவைத் தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

காலங்கடந்து நிலைத்திருக்கிற உலகச் செவ்வியல் படைப்புகளில் மனித விழுமியங்களின் வீழ்ச்சி சித்தரிக்கப்படும்போது மனிதர்களின் சந்தர்ப்பவாதம் முன்னிலை வகிப்பதைக் கண்டறிய முடிகிறது. சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான பேச்சுகளை உருவாக்கிட முயலுகின்ற படைப்புகள், காத்திரமான அரசியல் பிரதிகள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram