ஆடிப் பெருக்கு 
சிறப்புப்பக்கங்கள்

இனி மின்னணு ஆவணங்களில் மட்டுமே மிஞ்சுமோ காவிரி!

ரவி சுப்பிரமணியன்

காவிரி என்றதும் எனக்கு வரும் முதல் நினைவு, பதினெட்டாம் பெருக்கன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கீழ வீதி வீட்டிலிருந்து, சிறு சப்பரத்தை இழுத்தபடி சிறுவனாய் காவிரியின் பகவத் படித்துறைக்கு அம்மாவுடன் நடந்து சென்று, நீரை வழிபட்ட நினைவும், கன்னிப்பொங்கலன்று மாலை, காவிரியின் மணல் வெளியில் பெண்கள் கும்மியிட்டு பாடுவதைக் கேட்டபின், வகை வகையாய் கட்டிக்கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்றை உண்டு, இரவு கவிய வீடு திரும்புவதும்தான். அதைத் தவிர வளர்ந்த பின், என் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் நாட்கள் காவிரியோடு கலந்திருந்திருக்கின்றன.

இந்தியாவின் மிகமிக அபூர்வமாக கல்லூரிகளில் போட் கிளப்கள் உண்டு. அவற்றில் ஒன்று கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி. நீச்சலே தெரியாத நான் அதில் உறுப்பினராக இருந்து, நான்காண்டுகள் சவாரி செய்துள்ளேன். அதற்கு அப்போது டெஸ்ட் வைத்தெல்லாம் சேர்ப்பதில்லை.

எனது தமிழாசிரியர் மது.ச.விமலானந்தம் பதினெட்டாம் பெருக்கன்றைய விடுமுறையில், என் போன்ற ஆறு மாணவர்களைக் கல்லூரிக்கு வரச்சொல்லி, ஆடிப்பெருக்கு ஒரு விவசாயக் கலாச்சாரத்தின் மேன்மை பகரும் விழா என்றார். காவிரியைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் வந்த கவிதைகளை, கதைகளை எல்லாம் அவர் எடுத்துச் சொன்னார்.

நீரின்றி அமையாது உலகு என்ற குறளைச் சொல்லித் தொடங்கி, புறநானூறு, ஒளவை, ஒட்டக்கூத்தன்,காளமேகப்புலவர், ஜெயங்கொண்டான், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், சீத்தலைச்சாத்தன், சேக்கிழார், சம்பந்தர், தொண்டரடிப்பொடிஆழ்வார், கம்பன், பாரதி, பாரதிதாசன்,

ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன் எழுதியது வரை தமிழிலக்கியத்தில் காவிரி பற்றி எழுதப்பட்டவற்றையெல்லாம் ஒன்றரை மணி நேரம் தொகுத்துச் சொன்னார். அவற்றோடு மட்டுமின்றி, மகாபாரதப் போர், ஆடிமாதம்முதல் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி முடிவுற்ற போது, தர்மத்தின் வழியில் நின்று போரிட்டு பஞ்சபாண்டவர்கள்வெற்றி கண்ட பின், அந்தப் போரில் பயன்படுத்திய ஆயுதங்களை நீர் நிலைகளில் கழுவி, சிறப்பு பூஜை செய்து குலதெய்வ கோயில்களில் வைத்து வழிபாடு நடத்தினர். ஒரு வகையில் அந்த நாளை நினைவு கூர்வதும் இந்த நாள்தான் என்ற வழி வழி வந்த கதைகளையெல்லாம் அவர் சொல்லச் சொல்ல மிகுந்த ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தோம். இன்னும் பல நினைவில் இல்லை.

எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி மாணவர்மன்றத் தேர்தலில் எனக்கு விருப்பமான மாணவரை, நிற்கவைத்து, அவர் வெற்றி பெற்றதை நண்பர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இரண்டு ஆட்கள் மட்டுமே நடந்து செல்லும் அகலம் கொண்ட காவிரிப் பாலத்தை கடந்துதான் கல்லூரிக்கு உள்ளே செல்ல வேண்டும். அந்த பாலத்தின் மேல் பாதுகாப்புக்காக இரு பக்கத்திலும் சிறு சிறு கான்கிரீட் கட்டைகள் கட்டப்பட்டு அதன் குறுக்கே பைப்புகளை செருகியிருப்பார்கள். நாங்கள் இரு புறமும் அதில் அமர்ந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். தோற்றவன் வெகு வேகமாக என்னை நோக்கி வந்தான், எல்லாம் உன்னாலதாண்டா மயிரு என்று கத்த ஆரம்பிக்க, பக்கத்திலிருந்த சக மாணவர்கள் அவனை அடிக்கத் தொடங்க, சண்டையில் ஒருவரை ஒருவர் நாங்கள் அடித்து மோதி தள்ளி சப்தம்போட்டுக்கொண்டிருக்க, ஆசிரியர் ஒருவர் பாலத்தில் வருவதைக் கண்டு அமைதியானோம். அவர் பார்த்ததைப் பற்றி எதையும் கேட்காமல், கிளாஸ்ல்லாம் உங்களுக்கு இங்கதானாப்பா என்று கேட்டபடி போனார். அவர் பாலத்தை விட்டு இறங்கியதும், பாலத்தின் பைப்பில் அமர்ந்திருந்த என்னை, நுங்கும் நுரையுமாய் சுழித்தோடும் காவிரியில் -தோற்றவன் ஓடி வந்து அவ்வளவு உயரத்திலிருந்து தள்ளிவிட்டுவிட்டான். எனக்கு நீச்சல் தெரியாது என்று அவனுக்கும் தெரியாது. அருகிருந்த நண்பன் ஒருவனுக்கே தெரியும். புத்தகம், பணம், செயின், மோதிரம், கடிகாரத்தோடு விழுந்த நான்,முங்கி முங்கி நீர் குடித்து தவித்தேன். ஜல சமாதியை மிக அருகில் சந்தித்தபடி காப்பாத்துங்கவென சொல்ல முடியாமல் கையை கையை நீட்டினேன். டப டப வென்று மூன்று நண்பர்கள் நீரில் குதித்தது தெரிந்தது. அவ்வளவுதான். கடைசியில் போட் கிளப் அறையில் என்னை கிடத்தியிருந்தார்கள்.

ஏ… கண் முழிச்சிட்டாண்டா என்று அருகிருந்தவன் சொல்ல வெளியில் இருந்தவர்கள் ஹே என்ற சப்தத்தோடு ஓடிவந்தனர். அதில் ஒருவன் ‘வக்காள ஓ... ஏமாத்திட்டு போவ தெரிஞ்சியேடா’ என்று கன்னத்தில் ஓர் அடி அடித்தான். அவனுக்கு அன்பை அப்படித்தான் காட்டத் தெரியும். ஒருவன் காலை சூடு பறக்க தேய்த்துக்கொண்டிருந்தான். இன்னொருவன் டீயும் வடையும் வாங்கிவர ஓடினான்.

கொண்டாடா அவனை என்று ஒருவன் கட்டளை இட, மூன்று பேர் தோற்றவனை நையப் புடைத்து, ரத்தக் காயங்களோடு பின்னால் அவன் கைகளை கயிறால் கட்டியபடி இழுத்து வந்திருந்தனர். ஏ..ச்சீ.. அவன் கட்டை அவுறுங்கடா என்றேன். சாரி மச்சி மன்னிச்சிரு என்று அவன்கும்பிட்டான். ஏண்டா இப்படியாடா செய்வ. நான் செத்தா ஜெயிலுக்கு பொயிருப்பியேடா என்றேன்.

உனக்கு நீச்சல் தெரியாதுன்னு எனக்கு தெரியாதுடா, சாரி மச்சி என்று அழுதான்.

சரி போ. இனிமே நாம பிரண்ட்ஸ் என்றேன். சரி என்று அவன் அழும் தழுதழுப்பில் சொன்னான். ஏண்டா அவனைப் போட்டு இந்த அடிஅடிச்சிருக்கீங்க என்றேன். இங்க பாரு மாப்ளை உனக்கு ஒண்ணு ஆயிருந்துதுன்னு வச்சிக்கயேன் முதல்ல இவனைதான் பெருமாண்டில கொண்டு போய் வச்சிருப்போம், யாருகிட்ட என்று காலரை இழுத்துவிட்டான் நண்பன். எதோ காவிரியும் அன்று போ பொழிச்சி போ என்று மன்னித்து கரையில் போட்டதால்தான் இன்று இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ கவிதைகளில் காவிரியை எழுதிவிட்டேன். நீர் தான் நமக்கு எல்லாம் என்று எழுதியவன் வரிகள் அன்று தாள்களில் இருந்தது. வாழ்வின் பல அனுபவங்களாய் அது மாறிய போதுதான் எத்தனை எத்தனை பரிமாணங்கள்.

நம்மை போல் நீர் மேலாண்மை செய்த இனமும் இல்லை. நம்மைப்போல் அதைச் சீரழிக்கும் இனமும் இல்லை. நீரும் நமக்கு கடவுள். அதை நாம் பய பக்தியாய் வணங்கியிருக்கிறோம். அவைதான் நான் முதல் பாராவில் சொன்ன சடங்குகள். இந்த சடங்குசம்பிரதாயங்களின் உண்மையான தாத்பரியம் தெரியாதவர்கள், எல்லா செண்டிமெண்டையும் கேலி செய்து இல்லையில்லை என்று சொல்லி, நமக்கு மட்டுமல்ல அவர்கள் சந்ததிக்கும் ஏதுமில்லாமல் மொத்தத்தையும் சூறையாடி அழித்துவிட்டு வெறும் பணத்தை மட்டும் சேர்த்து கண்களை விற்று சித்திரம் வாங்கிக் களிக்கிறார்கள்.

கும்பகோணத்தில் பகவத் படித்துறையில் மட்டுமல்ல, ரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு புஷ்ய மண்டபத்துறை, மாயவரம்துலா கட்டம், சீர்காழி, திருவாரூர், திருக்காட்டுப்பள்ளியென நீரை வணங்கும் இவ்விழா, காவிரிக்கரை நெடுக கோலாகலமாக கொண்டாடப்படும். புதுமணத் தம்பதிகள், திருமணமான, திருமணமாகாத கன்னிப்பெண்கள் எல்லோரும் காவிரியில் குளித்து கரைக்கு வந்து புத்தாடை அணிந்து, மஞ்சளை பிள்ளையாராய்ப் பிடித்து, அதற்கு குங்குமம் வைத்து, எலுமிச்சைப் பழம் அறுத்து திருப்பிய சிறுசிறு அகல்களில் விளக்கேற்றி, மஞ்சள் கயிறுகளோடு ஓலையில்கருகமணிவளையல் செருகி வைத்து, வெல்லமும் அரிசியும் தேங்காயும் கலந்து படையலிட்டு, வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை, பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிந்துகொண்ட பின், காவிரி ஆற்றுக்கு தூபம் காட்டி, சூடம்காட்டி, காட்டிய சூடத்தை வெற்றிலையில் வைத்து நீரில் மிதக்கவிட்டு, மலர்களைத் தூவி, கரைக்கு வந்து காவிரியை தாயே மகாலக்ஷ்மியென விளித்து விழுந்து வணங்கி வழிபடுவார்கள்.

அந்த மகாலக்ஷ்மி வருகையால்தான் கோடைகாலத்திலும் வரும் குடிநீரும், வற்றா கிணறுகளும், வீட்டின் முன்னும் பின்னுமான மரங்கள் தரும் சில்லென்ற காற்றும். இவற்றோடு வக்கணையாய் உணவு வகைகள். இட்லி, கொஸ்த்து, கடப்பா, தேங்காய் சட்னி, முருங்கை, மாங்கா, கத்தரிக்காய் சாம்பார், தக்காளி ரசம், மசால்வடை மோர்க் குழம்பு, விதவிதமாய் வாழைப்பழங்கள், அதற்குப்பின் தாம்பூலத்துக்கு கொழுந்து வெற்றிலை, நெய்சீவல், பன்னீர் புகையிலை. வாசல் திண்ணையில் பாயிண்டு பணம் வைத்து ஆடும் ரம்மி. மாலையானால் தஞ்சாவூர் கதம்பமும், பாட்டும் கச்சேரியும், சுவாமிகளின் வீதி உலாவும் மல்லாரிகளும்... இப்படி இவற்றின் மகிமையெல்லாம் காவிரி கரைவாசிகளுக்குத் தெரியும்.

சில்க்ஜிப்பாவும், கெட்டிக்கரை வேஷ்டியும் கழுத்தைச்சுற்றும்அங்கவஸ்திரமும், காதில் வைரக்கடுக்கண்களும், பிளஷர்காரும், காங்கேயம் மாடுகள் பூட்டிய ரெட்டைமாட்டு வண்டிகளும், மாட்டுக்கொட்டிலில் பசுக்களும், ஆடுகளும், கோழியும், கோம்பை நாய்களும் அவளின்றி ஏது? நீர் தந்து வாழ்வளித்தவள் மட்டுமல்ல, கலை, பண்பாடு, வரலாறு, பாரம்பரியம், கொடை, கருணை, தானதருமம்போன்றதையும் காத்து அருள்பாலிக்கும் சக்தியவள்.

டோட்டெமிக் கலாச்சாரம் (totemic culture) என்றொரு வகைப்பாடு உள்ளது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான தொடர்பினை உள்ளடக்கியது அது. அதோடு மட்டுமல்லாது விலங்குகள், தாவரங்கள், மூதாதையர்கள், சடங்குகள், பாரம்பரியம் போன்றவற்றையும் இணைக்கும் சரடு என்றும் இதை சொல்லலாம். இவற்றை இணைப்பதன் மூலம் என்ன நடந்துவிடும். இந்த பிரபஞ்சத்தில் நம் அடையாளங்களை சொல்லி, அதன் மூலம் நம் வரலாறைச் சொல்லி, தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட நம் அறிவையும் கலையையும் சொல்லி, நம் இனத்தை செம்மாந்திருக்கச் செய்யும் பகுப்பு வகை இது. ஒரு வகையில் ஆன்மீகமே இதன் மையப் புள்ளி. தமிழர்கள் இந்த ஆன்மீகத்தை இயற்கையோடு இயைந்த வாழ்வில் பொருத்தியுள்ளனர் என்பதைப் பார்க்கையில் அவர்களின் அறிவு விகாசத்தை வியக்காதிருக்க முடியவில்லை. மலையே சாமி. நீர்தான் கடவுள். மண்ணே குலதெய்வம். அதையொட்டியே ஓவியமும் பாட்டும் ஆட்டமும் இன்னபிற கலைகளும். இந்த புனிதத் தன்மை மூலமே இயற்கைக்கும் மனிதர்களுக்குமானநல்லிணக்கத்தையும் பயோ ரிதத்தையும் பேணமுடியும்.இயற்கையை சுரண்டுவதை உயிரினங்களை அழிப்பதை தடுக்க முடியும்.

வேப்ப மரத்தை மாரியம்மனெனவும் அரச மர நிழலே பிள்ளையார் வாசம் செய்யுமிடமெனவும், மயிலும், மாடும் கடவுளின் வாகனமெனவும் எவ்வளவோ தொடர்புகளை குறிக்கும் கதைகள் கவிதைகள் காப்பியங்கள் பழமொழிகள், சொலவடைகள் நம்மிடமுண்டு. மானுடவியல் ரீதியாக மனிதர்கள் குழுவாக இயங்குதற்கும் சமூக கட்டமைப்புகளை வடிவமைப்பதற்கும்உந்து சக்தியாக இருப்பதுஇந்த டோட்டெமிசம்.

”ஓயாது மணி ஒலிக்கும்
ஓதுமறை கேட்டிருக்கும்
தாயான பொன்னி சூழும்
தண்ணீரும் அமிழ்தமாகும்
போயெங்கும் தென்றல்காற்று
பூவிதழில் குடியிருக்கும்
கோயில்எல்லாம் ஓங்கிநிற்கும்
குடந்தையில் நான் பிறந்துவந்தேன்”

  - என்று என் தமிழாசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் எழுதிதெல்லாம் பொய்யாய்ப் போய்விடுமோ.

காக்கவேண்டிய இயற்கைக் கூறுகளையெல்லாம் கடவுளாக்கினான் ஆதித் தமிழன். அதைப் பாதியில் மறந்த மனிதர்களால்தான் இத்தனை கேடும் என்பதை, கூவம் போல் நாறும் சாக்கடையாய் அமிலமாய் மாற்றப்பட்டகாவிரி மறுபடி மறுபடி நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. இருந்த பெருமையை வியந்து மாய்வதில் என்ன பயன். அழித்த பெருமையைச் சொல்லி சொல்லி மீட்க வேண்டிய காலமாயிருக்கிறது இது.

அதனால் தானோ என்னவோ, 1989இல் என் முதல் கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படி எழுதியிருந்தார் பாலகுமாரன். ‘குடந்தைக் காவிரி வறண்டு போய்விட்டது. மணலாய் மல்லாந்து கிடக்கிறது. நண்பர் ரவிசுப்பிரமணியன் போன்றவர்கள் தம் கவிதைகளால் அந்தக் குடந்தை மண்ணை, மக்களை ஈரப்படுத்த வேணும்’ என்று. அன்றைக்கு மணலாவது இருந்தது. இன்று அதுவும் போயிற்று.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram