ஜெயலலிதா 
சிறப்புப்பக்கங்கள்

ஜெ. மரணமும் விளைவுகளும்

கால்நூற்றாண்டு தமிழகம் - அரசியல்

ராவ்

இருபத்தியோராம் நூற்றாண்டு… கால்வாசியை முடித்துக்கொள்ளும் இந்நேரத்தில் ‘துளிர்க்குமா? இல்லை துவளுமா?’ என்ற விளிம்பில் நிற்கும் பரிதாப நிலையில்தான் அதிமுக இருக்கிறது.

பல கட்சிகள் கம்பீரமான தலைமை இல்லாத காரணத்தால்… காணாமல் போன, தெம்பு இழந்துபோன வரலாறுகள் நிறைய! இங்கேயே ராஜாஜி, காமராஜர் போன பின்னர் அவர்கள் வழி நடத்திய கட்சிகள் எங்கே இருக்கின்றன? கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுத்துப் போனது ஏன்? கட்சியின் சூடு குறையாமல் இருக்க ‘வாரிசு ரத்தம்’ தேவைப்படுகிறதோ என்னமோ?

ஒரு காட்சி! திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகிய பின்னர் எமர்ஜென்சிக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு திமுக அமைச்சர் போட்டியிட்ட தொகுதி. அமைச்சர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தெருப் பிரச்சாரத்தில் இருக்கிறார். நடந்து போகிறார். மைக் கட்டிய வேன், ‘எம்ஜிஆர் வந்துகொண்டு இருக்கிறார் என்று அலறிக்கொண்டு குறுக்கே செல்கிறது. அமைச்சருடன் வந்தவர்கள் கட்சிக்கொடிகளையும் தட்டிகளையும் கீழே போட்டு விட்டு எம்ஜிஆரைப் பார்க்க ஓடிவிட்டார்கள். அமைச்சர் திரும்பிப் பார்த்தால் ஒருவர்கூட இல்லை! அப்போது பல தொகுதிகளில் லாரிகளில் வந்து இறங்கிய திமுக பிரச்சார சுவரொட்டிகளை இறக்கி வைக்க திமுக பிரமுகர்களுக்கு ஆள் கிடைக்கவில்லை! திமுக ‘தேனீ’த் தொண்டர்களை இழந்துவிட்டது!

எடப்பாடியாரின் அதிமுகவும் அப்படியே! வலிய வந்து பணிபுரியும் அந்த தேனீத் தொண்டர்கள் தேனியிலும் இல்லை!

அறிவுக்கூர்மை மிக்க ஜெயலலிதா, கட்சிக்குள் போராட்டம் நடத்தி தலைமையைப் பிடித்தவிதம், எம்ஜிஆர் திரட்டிய தொண்டர்களுக்குப் பிடித்திருந்தது! கொ.ப.செ பதவியைக் கொடுப்பது, நீக்குவது என்று புதுவிதமான பயிற்சியை அவருக்கு எம்ஜிஆர் கொடுத்திருந்தார்.

சட்டமன்றத்தில் அவர் காட்டிய துணிச்சல், தேர்தலில் தோற்றபோதும், சிறைவாசத்துக்குப் பிறகும்- அவரை வீழ்த்த முடியவில்லை! இருந்தால் இன்று டெல்லியிலும் கொடி நாட்டியிருப்பார்.

இப்போதுள்ள அதிமுகவுக்கு சில தொகுதிகளைப் பிடிக்கவே மூச்சுவாங்குகிறது! ஜெயலலிதா மறைந்த அந்த கணத்தில் இருந்து- அவரது கல்லறையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே பதவிச் சண்டைகள்! ஊரே சிரிக்கும்படியாக அதிமுக இரண்டாம் கட்டத்தலைவர்கள் கட்டிப் புரண்டார்கள்! அவற்றைத் தொகுத்தால் பக்கம் நீளும்!

அப்பல்லோவில் ஜெ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று புரியாத இறுக்கமான சூழலில் திடீரென பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றதை என்னவென்பது? அதில் இருந்து விதவிதமான- மர்மமான- பதற்றமான- திடுக்கிடும்படியான- நகைச்சுவையான –திருப்பங்கள் நிறைந்த நாடகங்கள் –அந்தக் கட்சியில் அடிக்கடி நிகழ்ந்ததை – தமிழக மக்கள் மட்டுமல்ல.. லாபம் கருதாக கட்சித் தொண்டர்களே ரசிக்கவில்லை!

சோ முன்னிலையில் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஜெ வெளியேற்றினார். பின்னர் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். அப்பல்லோவில் சசிகலாதான் ‘தலைவி’யைப் பார்த்துக்கொண்டார் அவர்தான் இறுதிக்காட்சிகளை நடத்தினார். அவர் தயவின்றி எப்படி முதல்வரானார் பன்னீர்? அந்த கேள்விக்குறி நீடிக்கவில்லை! சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். பீடு நடைபோட்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

பிறகு என்ன? பன்னீர் ஓடிப்போய் ஜெ சமாதி முன் சில நிமிடங்கள் தவம் இருந்தார். ஞானம் பெற்றார்! ஜெ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் உணர்ந்தார்! ஆனால் கட்சியில் இருந்து ‘கல்தா’ ஆனார்!

சசிகலா முதல்வராக முடிவுகட்டிய நேரத்தில் கவர்னர் கப்சிப்! பிறகு வந்ததே தீர்ப்பு! சசிகலா சிறை ஏகினார்! சுஜாதா- ராஜேஷ்குமார் கதைகளில்கூட இந்த திருப்புமுனைகள் கிடையாது! எடப்பாடியாருக்கு முடி சூட்டிவிட்டு, ஜெ சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதம் செய்துவிட்டு சிறைக்குள் போனார் புரட்சித்தலைவி சின்னம்மா ஆன சசிகலா! பிறகு கூவத்தூர் வேதனைக்காட்சிகள்! காட்சிகள் இன்னும் தொடர்கின்றன. எடப்பாடியார் நிமிர்ந்து நிற்பதுபோல் வீர கர்ஜனைகள் புரிகிறார். ஓரக்கண்களால் டெல்லியைப் பார்த்தவாறுதான் இருக்கிறார். டெல்லி தர்பாரில் உள்ள ’ஷா’ வை நினைத்தால் தயக்கம் ஏற்படுகிறது! இரட்டை இலையில் இருக்கிறது அவருக்கான சக்தி. அது கிடைக்காவிட்டால் என்ன ஆகுமோ?

‘எடப்பாடியார் பன்னீரைவிட தந்திரசாலி! பிஜேபியுடன் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கூட்டணி அமைப்பது எப்படி என்று அவருக்குத் தெரியும். அதற்கான ராஜதந்திரப் பணிகளை பிஜேபியே தீட்டித்தரும்!’ என்றார் ஒதுங்கிவிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்.

எப்படியா?

1967-இல் திமுகவுடன் ராஜாஜி கூட்டணி அமைத்தார். அக்கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளும் இடம்பெற்றன. ‘கம்யூனிஸ்டு்கள் உங்கள் எதிரிகளாயிற்றே.. அவர்களுடன் கூட்டணியா?’ என்று நிருபர்கள் கேட்டனர்.

‘நான் கூட்டணி வைத்திருப்பது திமுகவுடன். அவர்கள் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்திருப்பதில் எனக்கு சம்பந்தம் இல்லை’ என்றார் ராஜாஜி.

அப்படி கூட்டணிகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். வெற்றி?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram