சிறப்புப்பக்கங்கள்

காவலரின் கிடுக்கிப் பிடி!

டி.எஸ்.எஸ். மணி

 பேருந்தின் பின் இருக்கையில் இருந்து என்னை கிடுக்கிப் பிடி போட்டு அந்த க்யூ பிரிவு காவலர் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த காலத்தில் நான் மேற்கொண்டிருந்த தலைமறைவு வாழ்க்கை கடினமாக இல்லை. ரசிக்கத்தக்கதாக இருந்தது. நம்மை எப்படிப் பிடிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்தேன். விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை ஆயிற்றே! தேடப்பட்டதால் நான் தலைமறைவாகவில்லை. தலைமறைவானதால் தேடப்பட்டவன்.

நான் 1965இல் பள்ளிப்படிப்பை(S.S.L.C) முடிக்கும் போது, ‘வயதுக் குறைவில் தேர்வு எழுதிய’ ( Underage Certificate) சான்றிதழுடன் வெளியே வந்தேன். கம்யூனிஸ்ட் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டேன். கல்லூரியில் சேர்ந்த பின், நக்சல்பாரி எழுச்சி என்னைப் பற்றிக் கொண்டது. ‘கல்லூரிகளை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்குச் செல்லுங்கள்’ என்று சாரு மஜும்தார் மாணவர்களுக்குக் கொடுத்த அறைகூவல் என்னை இழுத்துக் கொண்டு போனது. அதுதான் ‘தலைமறைவுப் புரட்சிகர பயணத்தை’ என் கைகளில் கொடுத்தது. 1974 இல் வீட்டை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்குச் சென்றேன்.

கிராமங்களில், நிலமற்ற ஏழை விவசாயிகளுடன் இரண்டறக் கலக்க, சாரு கொடுத்த உத்தரவுப்படி,  ‘உற்பத்திக்கான போராட்டங்களில்  (Struggle for Production)’ ஈடுபட்டேன். கல்லுடைப்பதும், கதிர் அறுப்பதும், கரிமூட்டம் போடுவதும், கிணறு வெட்டுவதும் ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்தது. அது நமது வர்க்கத் தன்மையைக் குறைக்க எடுக்கப்படும் பயிற்சிகள் என்பதை அனுபவ ரீதியாக உணர உதவியது. 1977, 1978 ஆண்டுகளில், காவல்துறையின் கியூ பிரிவால் தேடப்படுவதும், கல்கி இதழில்,  ‘நக்சலைட்டுகள் எனும் நச்சுப் பாம்புகள்’ என்று தலைப்பிட்டு, எஸ்.பி. ஸ்டிரேசி எழுதிய கட்டுரையும், எங்களைப் பகிரங்கப்படுத்தின. என் படத்துடன் ஏலகிரி ராமர், தமிழ்வாணன், கண்ணாமணி, தனபால் ஆகியோரின் படங்களுடன், அந்தக் கட்டுரை வெளிவந்தது. அனைத்துக் காவல் நிலையங்களிலும் எங்களது படங்கள் வைக்கப்பட்டன. இவை கொஞ்சமும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. நாம் அரசுக்கு எதிரான ஒரு போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ரசிக்கத் தக்க உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

  தூத்துக்குடியில் அந்த முதல் சம்பவம் நடந்தது. 1978 இல் தூத்துக்குடிக்குக் கட்சிப் பணிக்காக வந்திருந்தேன். என்னுடன் , தோழர் முத்தையா என்ற  கட்சிப் பெயருடன், முழு நேர ஊழியர் முகவூர் ஆறுமுகம் இருந்தார். இருவரும் ஒரு மாணவத் தோழரது வீட்டில் தங்கினோம். அன்று இரவு ‘நக்சல்பாரி சுவரொட்டி ஒட்ட’ மாணவத் தோழர்கள் நகருக்குள் சென்றனர். அது எனக்குச் சிறிது எச்சரிக்கை சிந்தனையை ஏற்படுத்தி இருந்தது. நள்ளிரவில், ஒரு ஜீப், அந்த வீட்டு வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது. துணுக்குற்று எழுந்த நான் சன்னல் வழியாகப் பார்த்தேன். அங்கே அந்த வீட்டு மாணவர், துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் வாசற்கதவைத் திறக்க எத்தனித்துக் கொண்டு நிற்கிறார். உடனே, தோழர் முத்தையாவையும் எழுப்பிக் கொண்டு, வீட்டின் பின்புறமாக ஒடி, உப்பளங்கள் வழியாக பழைய காயல் சென்று தப்பித்தோம்.

இதுபோல பலமுறை நான் தப்பியிருக்கிறேன். ஒருமுறை, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்ற போது, கல்லூரி முதல்வரிடம் சிக்கி, வாதம் செய்து தப்பிய நிகழ்வும் உண்டு.

1985 இல், ராமநாதபுரத்தில், அன்றைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( P.L.O.T.E.)   அமைப்பின் படைத் தளபதி கண்ணன் என்ற ஜோதீஸ்வரனுடன், நவீன ஆயுதங்களைப் பதுக்கி வைக்க அவர்களது ஜீப்பில் செல்லும்போது, காவல்துறை, மறித்து விசாரணை செய்தது. மத்திய அரசின் உதவியுடன் ஈழப் போராளி அமைப்புகள் அன்று நடமாடி வந்ததால், என்னை இங்குள்ள ஒரு நண்பர் எனக் கூறி, எல்லோருமே தப்பி வந்தோம்.

இப்படிப் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும், 1987 நவம்பரில், சாத்தூர் அருகே, பேருந்து பயணத்தில், என்னை அடையாளம் கண்ட கியூ பிரிவு காவலரிடமும், துணை ஆய்வாளரிடமும் நான் மாட்டியது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. பேருந்தின் உள்ளே பின் இருக்கையிலிருந்து என்னைக்  கிடுக்கிப் பிடி போட்டு அந்தக் காவலர் பிடித்து விட்டார்.

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து,  காவல்துறைக்குப் போக்குக் காட்டி வந்த நிலையில் இவ்வளவு எளிதாக மாட்டி விட்டோமே என்று அதிர்ச்சி அடைந்தேன்.

1987 நவம்பரில் கைது செய்யப்பட்டு 1988 ஏப்ரலில் ஜாமி்னில் வெளியே வந்தேன். எதற்காக கைது செய்யப்பட்டேன் என்றால், மயிலாடுதுறை அருகே இரண்டு பண்ணையார்கள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்.

இது தொடர்பான ஒரு வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு திருவாரூர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இரண்டு வழக்கிலும் 15 நாள்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்பு பெறுவதற்காக, என்னை திருச்சி சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வார்கள். இதனால் ஏழு நாள்களுக்கு ஒருமுறை நான் வெளியே வருவேன். அப்போது, வேண்டியவர்களை சந்தித்துக் கொள்வோம். அது எனக்கு பெரிய சலுகையாக இருந்தது.

அரசியல் கைதி என்பதால் என்னை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் காவலர்கள் கைவிலங்கிட்டே அழைத்துச் செல்வார்கள். ஒருமுறை பேருந்தில் அழைத்துச் செல்லும்போது, “உங்களுக்கெல்லாம் மெமோ வரப்போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஓடும் வாகனத்தில் கைவிலங்கு போடக்கூடாது என்ற தீர்ப்பு உள்ளது. இதை நீதிபதிகிட்ட சொல்லப்போகிறேன்” என்றேன். அஞ்சிய காவலர்கள் என்னை அவிழ்த்து விட்டனர்.

இப்போது பிரபல வழக்கறிஞராக இருக்கின்ற கென்னடி எனக்கு ஒவ்வொரு நாளும் ஆங்கில புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார்.

மாவட்ட எஸ்.பி.யும் அடிக்கடி வந்து பேசுவார். தமிழரசன் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு காவல்துறை இப்படி அடிக்கடி வந்தும் பேசும் நடைமுறையை கையாண்டனர்.

நக்லைட் தலைவர்களுக்கு என்று தனி ப்ளாக் இருக்கும். குளிக்கவும் தொட்டி முழுக்க தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அங்கு செடிகளும் வளர்க்க முடியும். இதனால், சிறைவாசமும் சுவையாகத்தான் இருந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு எம்.எல். அமைப்பின் வெகுஜன இயக்கமான இந்திய மக்கள் முன்னணியில் இணைந்து செயல்படத் தொடங்கினேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram