ஒரு குளிர்ப்பெட்டி வாங்கலாம் என்று கடைக்குச் சென்றோம். வரிசையாகப் பல வண்ணங்களில், வடிவங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெட்டிகளை அலசி ஆராய்ந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அதன் விலை, சுமார் நாற்பதாயிரம் ரூபாய்.
‘இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம். ஏதேனும் தள்ளுபடி உண்டா?' என்று கடைக்காரரிடம் விசாரித்தேன்.
‘நீங்க 0% வட்டிக்குக் கடன் வாங்குவதாக இருந்தால் ஐந்தாயிரம் தள்ளுபடி தருகிறோம்' என்றார் கடைக்காரர்.
அவர் சொன்னது எனக்குச் சரியாகப் புரியவில்லை, ‘எனக்குக் கடன் வேண்டாம். முழுப் பணமும் கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்' என்றேன்.
‘அப்படியானால், உங்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இல்லை. நீங்கள் முழுப் பணத்தையும் செலுத்தவேண்டும்' என்றார் அவர்.
‘என்னங்க சொல்றீங்க? கடனுக்கு வாங்கினா முப்பத்தஞ்சாயிரம். முழுப் பணத்தைக் கொடுத்து வாங்கினா நாப்பதாயிரமா?' என்று வியப்புடன் கேட்டேன்.
‘ஆமா சார். அதுதான் இப்ப நிலவரம்' என்று சிரித்தார் கடைக்காரர்.
அதாவது, குளிர்ப்பெட்டி வாங்குவதற்கென்று பணம் சேர்த்து அதை மொத்தமாகக் கொண்டுவந்து கட்டுவதைவிட, 0% வட்டிக்கு, அதாவது வட்டியில்லாமல் கடன் வாங்குவது சிக்கனம். அதன்மூலம் நமக்கு ஐந்தாயிரம் ரூபாய் மிச்சமாகிறது.
அத்தனைப் பெரிய தொகையை விட்டுக்கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. அதனால், என்னிடம் முழுத் தொகையும் இருந்தபோதும் நான் கடன் வாங்கினேன், முப்பத்தைந்தாயிரம் ரூபாயை மூன்று தவணைகளாகச் செலுத்த ஒப்புக்கொண்டேன்.
இப்படிக் கடைகளில், இணையத் தளங்களில், மொபைல் செயலிகளில் வட்டியில்லாக் கடன், 0% வட்டிக் கடன், BNPL (Buy Now Pay Later, அதாவது, இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்) என்று பல பெயர்களில் கடன்கள் அள்ளித் தரப்படுகின்றன. முழுப் பணத்தையும் செலுத்துகிறவர்களைவிட இப்படிக் கடனுக்கு வாங்குகிறவர்களுக்குக் கூடுதல் சலுகைகளைக் கொடுத்துக் கவர்ந்திழுக்கிறார்கள்.
இன்னொருபக்கம், தனிநபர் கடன் (Personal Loan) என்ற பெயரில் எந்தச் செலவுக்கானாலும் நாங்கள் கடன் தருகிறோம் என்று வங்கிகள் கூவி அழைக்கின்றன. கடன் அட்டை (Credit Card) மூலமாகக் கடன் வாங்குவது அதைவிட எளிது.
இவையெல்லாம் நுகர்வோரைக் குறிவைக்கும் கடன்கள் என்றால், வழக்கமான வீட்டுக் கடன், வண்டிக் கடன், கல்விக் கடன் போன்றவையும் பெரிய அளவில் பெறப்படுகின்றன. இங்கும் கடனைக் கருவியாகப் பயன்படுத்தி அதிகம் செலவு செய்யத் தூண்டுவது நடக்கிறது.
எடுத்துக்காட்டாக, ‘எனக்கு வெறும் கார் போதும்' என்று சொல்லிக்கொண்டு கடைக்குள் செல்கிற ஒருவர், ‘பணத்தைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். கடனில்தானே வாங்குகிறீர்கள்? நல்ல வசதியான காராக வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு மாதம் சில ஆயிரம் கூடுதலாகச் செலுத்தினால் போதும்' என்கிற வெண்ணெய்ப் பேச்சுகளை எதிர்கொள்கிறார். அதைத் தாண்டி ‘வெறும் காரை' வாங்குவதற்கு அவருக்குப் பெரிய மன உறுதி தேவைப்படுகிறது.
இப்படிச் சிறியதும் பெரியதுமாகக் கடன்கள் ஒவ்வொன்றாகச் சேரச்சேர, EMI (Equated Monthly Installment) எனப்படும் மாதத் தவணைத் தொகைகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்கொள்கின்றன. மாதச் செலவில் பெரும்பகுதி EMI செலுத்துவதற்கே போய்விடுகிறது. மீதியிருக்கும் தொகையை வைத்துக் குடும்பத்தை நடத்துவதே சிரமம் எனும்போது, சேமிப்பு, எதிர்காலத்துக்கான முதலீட்டுக்கெல்லாம் ஏது இடம்? ‘அதையெல்லாம் வருங்காலத்தில் சம்பளம் கூடினால் பார்த்துக்கொள்ளலாம்' என்று பெரும்பாலானோர் தீர்மானித்துவிடுகிறார்கள்.
ஆனால், சம்பளம் கூடும்போது, செலவுகளும் கூடுகின்றன, கடன்களும் கூடுகின்றன. இது ஒரு முடிவில்லாத சுழலாக இருக்கிறது.
என்ன செய்யலாம்? ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்கிற அந்தக் காலப் பாட்டை நினைவு கூர்ந்து கடனே வாங்காமல் இருப்பதைக் கொண்டு வாழ்ந்துவிடலாமா?
செய்யலாம். ஆனால், அது எல்லாருக்கும் ஒத்துவராது. குறிப்பாக, கடனை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்திச் செய்துகொள்ளக்கூடிய முன்னேற்றங்களை முற்றிலும் புறந்தள்ளுவது அறிவார்ந்த செயலாகவும் இருக்காது.
எடுத்துக்காட்டாக, கல்விக் கடன் பெற்றுப் படிக்கிற ஒருவர் அதன்மூலம் இன்னும் சிறந்த வேலையைப் பெற்றுப் பலமடங்கு சம்பாதிக்கலாம். கடனில் வீடு கட்டுகிற அல்லது வண்டி வாங்குகிற ஒரு குடும்பம் அடுத்த பல ஆண்டுகளுக்கு (அதாவது, அதற்கான பணம் சேரும்வரை) காத்திருக்காமல் உடனடியாக அந்தச் சொத்தை அனுபவித்து மகிழலாம். இதுபோன்ற நன்மைகளுக்காகக் கொடுக்கிற விலைதான் அந்தக் கடனின் வட்டித்தொகை.
ஆக, எல்லாவற்றுக்கும் கடன் வாங்குவது, கடனே வாங்காமல் இருப்பது ஆகிய இரு முனைகளில் தங்கிவிடாமல் சரியான நோக்கத்துக்காகக் கடன் வாங்கலாம், அதை முறையாகத் திருப்பிச் செலுத்தலாம், அந்தச் சுமை நம்முடைய சேமிப்பு, முதலீட்டைப் பாதித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளலாம். இது தனி நபர் நிதி ஒழுக்கத்தின் முதன்மையான, கட்டாயமான ஒரு பகுதி.
முதலீட்டாளர்கள் Power of Compounding (கூட்டு வளர்ச்சி ஆற்றல்) என்பதைப்பற்றிப் பேசக் கேட்டிருப்பீர்கள். அதாவது, நம் பணம் கூட்டு வட்டி பெறும்போது படிப்படியாக மெல்ல வளராது, அதிவிரைவாக வளரும்.
எடுத்துக்காட்டாக, இன்றைக்கு நீங்கள் 100 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள், அதற்கு 5% ஆண்டு வட்டி பெறுகிறீர்கள் என்றால், அடுத்த ஆண்டு உங்கள் கையில் 105 ரூபாய் இருக்கும். இப்போது நீங்கள் 105 ரூபாய்க்கும் 5% வட்டி பெறுவீர்கள். இது அடுத்த ஐந்து, பத்து, இருபது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால் உங்கள் பணம் மேலும் மேலும் வளரும், அதிவிரைவாகப் பெருகும்.
இதன் பொருள், உங்களிடம் பணமும், நேரமும் (அதாவது, பல ஆண்டுகளும்), ஓரளவு நல்ல வட்டி விகிதமும் இருந்தால் உங்கள் தொகை வளர்ந்துகொண்டே செல்லும். இப்படித்தான் பெரும்பாலானோர் செல்வம் சேர்க்கிறார்கள்.
ஆனால், கடனைப் பொறுத்தவரை இது எதிர்மறையாக வேலை செய்கிறது. அதாவது, உங்கள் கடன் பல ஆண்டுகளுக்கு நீள்கிறது என்றால், நீங்கள் மேலும் மேலும் கூடுதல் தொகையை வட்டியாகச் செலுத்துகிறீர்கள் என்று பொருள்.
எடுத்துக்காட்டாக, இரண்டு பேர் ஒரே தொகைக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார்கள். ஆனால், முதல் நபர் பத்து ஆண்டுக் கடன் பெறுகிறார். இரண்டாம் நபர் பதினைந்து ஆண்டுக் கடன் பெறுகிறார். அப்படியானால், முதல் நபருடன் ஒப்பிடும்போது இரண்டாம் நபர் செலுத்தும் வட்டித் தொகை மிக மிகக் கூடுதலாக இருக்கும்.
ஆக, Power of Compounding நமக்கு எதிராகச் செயல்படாமலிருக்கவேண்டுமென்றால், நம்முடைய கடன்கள் அனைத்தையும் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். தேவையானவற்றுக்கு மட்டும்தான் கடன் பெறவேண்டும். அந்தக் கடனுக்கான வட்டிவிகிதம் சரியா என்று பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் கடன் வழங்குபவருடன் பேசி வட்டி விகிதத்தைக் குறைக்க முயலவேண்டும். அதன்பிறகு, தவணைத் தொகையை மாதந்தோறும் முறையாகத் திருப்பிச் செலுத்தவேண்டும். குறிப்பாக, கூடுதல் வட்டி விகிதத்தில் வாங்கியுள்ள கடன்களை முதலில் திருப்பிச் செலுத்தி வெளியில் வரவேண்டும்.
எடுத்துக்காட்டாக, கடன் அட்டையில் வாங்கும் கடன்களுக்கு ஏகப்பட்ட வட்டி விதிக்கப்படுகிறது. அதனால், மற்ற கடன்களைவிட அந்தக் கடனை அடைப்பதற்குதான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
இப்போதெல்லாம் கடன் அட்டைகள் கூவி அழைத்துத் தலையில் கட்டப்படுகின்றன. அதிலும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று ஏராளமான கடன் வரம்பைக் கொடுத்துவிடுகிறார்கள். அதனால் நாம் எதை நினைத்தாலும் வாங்கலாம் என்கிற சூழ்நிலை.
ஆனால், அப்படி வாங்கியபிறகு சில நாட்களில் கடன் அட்டைக்கான அறிக்கை வரும். அடுத்த 20 நாட்களுக்குள் அந்தப் பணத்தைச் செலுத்தவேண்டும். அப்போது நம் கையில் போதுமான பணம் இல்லாவிட்டால் பெரிய வட்டியைச் செலுத்தும் சுழலுக்குள் சிக்கிக்கொள்வோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வாங்கியிருப்பவர்கள் தங்களுடைய மொத்த EMI தொகையை, அதாவது, மாதந்தோறும் எல்லாக் கடன்களுக்கும் சேர்த்துத் தாங்கள் செலுத்தவேண்டிய தவணை எவ்வளவு என்பதைக் கணக்கிடவேண்டும். இது அவர்களுடைய சம்பளத்தில் 30% முதல் 40%க்குள் இருந்தால், நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது என்று பொருள். அதற்குமேல் தவணை செலுத்திக்கொண்டிருந்தால் செலவுகள், சேமிப்பு, முதலீடு என எல்லாம் அடி வாங்கும். அல்லது, கூடுதல் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடலாம்.
கடன் அளவு கட்டுக்குள் இருக்கிறவர்கள்கூட, அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த ஒழுக்கத்தைக் காண்பிக்கவேண்டும். ஏனெனில், தவணைத் தொகையைச் செலுத்துவது ஓரிரு நாட்கள் தள்ளிப்போனாலும் கூடுதல் வட்டி, அபராதம் செலுத்தவேண்டியிருக்கலாம். அதனால், சம்பளம் வந்ததும் அனைத்துத் தவணைகளுக்குமான தொகையை ஒதுக்கிவைப்பது, அதை Autodebit போன்ற தானியங்கி முறைகளில் செலுத்துவது போன்ற முறைகளைப் பயன்படுத்தி வீண் செலவைக் குறைக்கலாம்.
அத்துடன், நம்முடைய கடன்களை இயன்றவரை விரைவாக முடிப்பதற்கு முயலவேண்டும். ஏனெனில், எவ்வளவு விரைவாகக் கடன்களிலிருந்து வெளியில் வருகிறோமோ, அவ்வளவு விரைவாக நம்முடைய சேமிப்பு, எதிர்காலத்துக்கான முதலீடுகளை வலுவாக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு ஒரு முறை, அல்லது, சில மாதங்களுக்கு ஒரு முறை ஒரு கூடுதல் EMI செலுத்துவது, தீபாவளி, பொங்கல் போனஸ் போன்ற எதிர்பாராத தொகைகள் கிடைக்கும்போது அவற்றைக் கொண்டு கடனின் ஒரு பகுதியைத் திரும்பச் செலுத்துவது போன்ற உத்திகள் இதற்குப் பயன்படும்.
ஆனால், இவையெல்லாம் ஒருவிதத்தில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற வேலைகள்தான். கடன் சுமையைக் கட்டுப்படுத்துகிற பணியைக் கடன் வாங்குவதற்கு முன்பாகவே தொடங்கிவிடவேண்டும். அதாவது, 'இந்தக் கடன் தேவையா?' என்கிற கேள்விதான் அனைத்துக்கும் தொடக்கப்புள்ளி.
ஒரு பொருளைக் கடனில் வாங்குவதா, கூடாதா என்பதைத் தீர்மானிப்பதற்கு எளிய வழி, அந்தக் கடனின்மூலம் நமக்கு ஒரு சொத்து கிடைக்கப்போகிறதா, அது நமக்கு வருமானத்தையோ, தொலைநோக்கில் முதன்மையான மகிழ்ச்சியையோ, இவை இரண்டையுமோ கொண்டுவரப்போகிறதா என்று சிந்திப்பதுதான். எடுத்துக்காட்டாக, கல்விக் கடனின்மூலம் நமக்கு ஒரு புதிய பட்டம் கிடைக்கப்போகிறது, வீட்டுக் கடனின்மூலம் நம் சொந்த வீட்டில் வாழ்கிறோம் என்கிற மகிழ்ச்சி உண்டாகப்போகிறது. ஆனால், ஏற்கெனவே ஒரு செல்ஃபோன் நன்கு பயனில் இருக்கும்போது கடனில் புதிய, நவீன செல்ஃபோன் ஒன்றை வாங்குவது நமக்கு எந்தச் சொத்தையும் சேர்க்கப்போவதில்லை.
ஆனால், இந்தப் பொதுவான அறிவுறுத்தலை எல்லாரும் (குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர்) ஏற்கமாட்டார்கள். ‘வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற எண்ணம் பரவிக்கொண்டிருக்கிற இன்றைய சூழலில், ‘கடன் வாங்கி வெளிநாட்டுப் பயணம் தேவையா?' என்று யாராவது கேள்வி கேட்டால், ‘தேவைதான். அந்த நினைவுகள் எங்களைப் புதுப்பிக்கும், இன்னும் நன்கு உழைக்கச்செய்யும்' என்று பதில் வரும், ‘நான் சம்பாதிக்கிறேன், கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன். புது செல்ஃபோன் வாங்கக்கூடாது என்று சொல்ல நீ யார்?' என்கிற கேள்விகள் எழும்.
இதற்குக் காரணம், சேமிப்பை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியச் சமூகம் இப்போது நுகர்தலை, நன்கு வாழ்தலை அடிப்படையாகக் கொள்ளத்தொடங்கியிருக்கிறது. அதனால், கடன் தொடர்பான நம்பிக்கைகள் மாறிவருகின்றன, வருங்காலத்துக்குச் சேமிப்பதுபற்றியெல்லாம் அவ்வளவு அலட்டிக்கொள்ளவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகள் எழுந்துவருகின்றன. அந்த மனநிலை புரிந்துகொள்ளக்கூடியதுதான். எனினும், கடன் வாங்குதல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட நிதித் தீர்மானம். அதைத் திருப்பிச் செலுத்தும் வல்லமை, அதன்மூலம் வேறு சிக்கல்கள் உருவாகிவிடாமல் பார்த்துக்கொள்கிற அறிவு, மாற்றுத் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர் அந்தத் தீர்மானத்தை வலுவாக்கவேண்டும், சிறியதும் பெரியதுமாக வாங்கிய கடன்கள் வலையாகித் தன்னை மூடிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு எல்லாரும் வளர்த்துக்கொள்ளவேண்டிய அடிப்படைத் திறன்கள் இவை!