குமரி அனந்தன் ஆரம்பகாலத்திலேயே ஒரு பேச்சாளராகத்தான் வளர்ந்தார். அவரது குடும்பமே பாரம்பரியமாக வில்லிசைக் குடும்பம்தான். அந்த இசை உணர்வு அவரிடமும் இருந்தது. அவர் நல்ல பேச்சாளராக பரிணமிக்க அதுவும் காரணம். அந்த காலத்திலேயே எம்.ஏ படித்-தவர் அவர். அப்போது நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தும் அதற்கெல்லாம் போகாதவர் அவர். குமரி மாவட்டத்தில் பல அமைப்புகள் உண்டு. அங்கெல்லாம் அவர் பேசியிருக்கிறார். ஜீவாவின் கலை இலக்கியப் பெருமன்றப் பேச்சுகளில் அவர் நிறையப் பேசியிருக்கிறார் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சாலமன் பாப்பையா, எஸ்.ராமகிருஷ்ணன்( எஸ்.ஆர்.கே என அழைக்கப்பட்ட இடதுசாரித் தலைவர், எழுத்தாளர்) போன்ற பெரும் பேச்சாளர்களுக்கு இடையில் பேசிப் பழகியவர் அவர்.
மிக நிதானமாக யாரையும் புண்படுத்தாமல் சொல்ல வந்த கருத்தை ஆழமாகச்சொல்லுகிற பாணி அவருடையது. சொற்களை அழுத்திப் பேசுவார் அவர்.
சிவாஜிகணேசனுடைய பாணியில் அவர் பேசுவார் என்று நான் கூறுவதுண்டு. குரலில் ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும். கிட்டத்தட்ட அவருடைய பேச்சு ஒரு சங்கீதத்துக்கு உரிய குணாம்சங்களுடன் இருக்கும்.
சங்கீதம் என்றால் சாதாரண சங்கீதம் அல்ல. மதுரை சோமுவின் மேன்மையான கச்சேரி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பெரிய கூட்டம், சின்னக் கூட்டம் என்றெல்லாம் பார்க்க மாட்டார். எல்லாவற்றுக்கும் ஆழமாகத் தயாரித்துக்-கொண்டு வருவார். விரிவாகப் பேசுவார். தலைப்பு தொடர்பான செய்திகளைச் சேகரித்து, ஜீரணித்து, பால் போலப் பொழிவார். வந்தோம் சென்றோம் என்று பேச மாட்டார்.
உதாரணத்துக்கு கன்னியாகுமரி பகவதி அம்மையைப் பற்றிய பேச்சு என்றால் குமரி என்றால் சோற்றுக் கற்றாழை, சோற்றுக்கற்றாழை நாடு, இதன் மருத்துவ குணங்கள் என்று ஆரம்பித்து குமரி என்றால் கல்யாணம் ஆகாத பெண் என்பதற்கு வருவார். ஜீவா மேடையில் பேசும்போது உடல் அசைவுகள் பெரிதாக இருக்கும். டாக்டர் ராதாகிருஷ்ணன் பெரிய பேச்சாளர். கையை பின்பக்கம் கட்டினாரென்றால் பேசி முடிக்கும் வரை ஒரு அசைவும் இருக்காது. குமரி அனந்தனின் உடல்மொழியும் ஜீவா அளவுக்கு அசைவுகள் இல்லையென்றாலும் கவர்ச்சியான அசைவுகளுடன் கூடியது. முகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். கண்களும் அப்படியே. ஜீவாவின் பேச்சு கர்ஜனை மாதிரி இருக்கும். ஜெயகாந்தனும் அதைப் பின்பற்றியவர். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் குமரி அனந்தனுடையது சங்கீதம்.
பாரதியில் தோய்ந்தவர் இவர். கேட்போருக்கு ஏற்பப் பேசி அவர்களைக் கட்டிப் போடுவார். இலக்கிய சொற்றொடர்கள், பழமொழிகள், நாட்டுப்புற வழக்காறுகள் ஆகிவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்துவார். தன்னை ஒருபோதும் பேச்சில் முன்னிலைப் படுத்தமாட்டார். உபகதைகள் நிறைய வைத்திருப்பார்.
தன் காதலி ஒருத்தி அம்மாவின் இதயத்தைக் கேட்டதற்காக அவளைக் கொன்று அவளது இதயத்தை எடுத்துக் கொண்டு ஒருவன் வருவான். அப்போது அவன் கல் தடுக்கி கீழேவிழுவான். அவனைப் பார்த்து அந்த இதயம், அடிபட்டுவிட்டதா மகனே என்று கேட்கும் என்கிற கதை போன்ற உணர்ச்சிகரமான பல கதைகளைச் சொல்லக் கூடியவர் அவர்.
காமராஜரால் ஆதரிக்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவர் தஞ்சை ராமமூர்த்தி. அவரது பேச்சு ஆழமாக இருக்கும். கருத்துக்களுடன் இருக்கும். அவருடன் ஒப்பிடுகையில் குமரி அனந்தன் பேச்சில் அலங்காரமான சொற்கள் நிறைய இருப்பதைக் காண முடியும். நிறைய விருத்தங்களைப் போட்டுப் பேசுவார்.
அரசியல், இலக்கியம்- இவற்றில் எந்த தலைப்பில் இவர் சிறப்பாகப் பேசுவார் என்று கேட்டால் இலக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது அரசியல் பேச்சிலும் இலக்கியமே முன்னுக்கு வந்து நிற்கும். அவர் இலக்கிய நயம் குறித்துப் பேசும் பேச்சுகள் எனக்குப் பிடித்தமானவை. நாட்டுப்புற இலக்கிய நயம் பற்றி ஒருமுறை அவர் பேசியபேச்சு எனக்கு அவர் பேச்சில் பிடித்ததாக இன்றும் இருக்கிறது. அலம்பல் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் கடும் உழைப்புடன் பேசக்கூடிய ஒரே பேச்சாளர் இவர்தான்.
(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)
ஆகஸ்ட், 2013.