சிறப்புப்பக்கங்கள்

பெயரில் மட்டுமல்ல மனதிலும் ஒழிப்போம்!

பழ.அதியமான்

மம்தா பானர்ஜி, பியூஷ் கோயல், மல்லிகார்ஜுன கார்கே, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு என்று இன்றைய அரசியல்வாதிகள் பெரும்பாலோர் தங்கள் ஜாதியைப் பெயரோடு ஏந்தித் திரிகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் கூட தம் ஜாதியைப் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வதில்லையே! இது எப்படி நிகழ்ந்தது என்பது "அந்திமழை"யின் கேள்வி.

உ.வே.சாமிநாதையர், ரா.பி.சேதுப்பிள்ளை என்று இலக்கியவாதிகளும் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கல்யாண சுந்தர முதலியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர், காமராஜ் நாடார் என்று அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டில், சென்ற தலைமுறையில் ஜாதிப் பின்னொட்டைக் கொண்டிருந்தது உண்டு. ஆனால் இந்தத் தலைமுறையில் அவர்கள் பெயரைக் கூட ஜாதிப் பெயரின்றியே நாம் எழுதுகிறோம்.

நாய்களின் வகைகளிலும் ஜாதிகள் இருக்கின்றன என்று ஒரு பேராசிரியர் பேசியது சமூக வலைத்தளத்தில் சுற்றி வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அந்த நாய்களைக் கூட  ‘ஜானி செப்பர்டு, சீசர் பாமரேனியன்' என்று ஜாதிப் பின்னொட்டுடன் நாம் அழைப்பதில்லை.

ஜாதியை விடுவது இந்தியாவில் அவ்வளவு எளிதல்ல; ஜாதிகளைப் பொருட்படுத்தாத இடதுசாரித் தலைவர்கள்கூட முந்தைய தலைமுறையில், தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிகளோடு தான் காட்சி தந்தார்கள்.

 ஜோதிபாசு, மோகித் சென், இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்ற பெயர்கள் அதற்குச் சான்றுகள். அத்தலைவர்கள், தங்கள் பெயர்களுக்குப் பின்னே இருந்த பின்னொட்டுகளைப் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்றைய இடதுசாரித் தலைவர்கள் குறிப்பாகக் கேரளத் தலைவர்கள் எவரும் சாதியைப் பெயரில் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் ஜாதியை விடுவதில்லை. ஜோதி பாசுவின் அமைச்சரவையில் இருந்த ஒருவர் ஜாதியையும் விடுவதில்லை; சாமியையும் விடுவதில்லை. பாசு என்பதும் சென் என்பதும் ஜாதிப் பெயர்கள் அல்ல, குடும்பப் பெயர்கள் என்பார்கள். ‘தங்கள் சகோதரர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் செய்யும் உபகாரங்கள் கூட ஜாதியைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் தாம்' என்பார் பெரியார்! . "காயஸ்தர்" மட்டும்தான் போஸ், சென் என்ற பெயர்களைச் சூட்டிக் கொள்ள முடியும் என்று "பாசு"வையும் "சென்"னையும் காப்பாற்றுபவர்களுக்கு நாம் சுட்டிக்காட்டலாம். அவர்கள் ஷத்திரியரா, சூத்திரரா என்பதைக் குறித்து வேண்டுமானால் நீதிமன்றங்கள் வேறுபட்ட தீர்ப்பைத் தரலாம். ஆனால் எந்தத் தீர்ப்பாயினும் அவர்கள் இரு பிறப்பாளர் இல்லை என்பதை மட்டும் குறிப்பிட மறப்பதில்லை! இது பேருண்மை !!

அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரும் இதைப் பற்றிப் பேச வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். அவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளை அறியாமல் கேட்கிறார்கள் என்று நாகரிகமாக நாம் பதில் சொல்லலாம். "சாதிப் பெருமை" என்ற நூல் இவர்களுக்கு வரலாற்றுப் பதிலை அளிக்கிறது.

இன்றைய ஒன்றிய அரசின் அமைச்சரவையில் பிரதமர் உட்பட மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மோடி தொடங்கி கட்கரி (3/72 ), கோயல் (10), பாட்டில் (43), தாகூர் (63), சவுத்ரி(65), மல்ஹோத்ரா (67) உட்பட்ட அமைச்சர்கள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய அமைச்சரான ஜார்ஜ் குரியன்(71) வரை அனைத்து அமைச்சர்களும் ஜாதியின் அடையாளங்களோடு தான் குறிக்கப்படுகின்றனர். அந்த 72 பேரில் நான்கு பேர் ஜாதியைப் பெயரிலாவது தொலைத்தவர்களாக உள்ளனர். அதில் மூவர் தமிழர்கள் அல்லது தமிழோடு தொடர்புள்ளவர்கள். நிர்மலா சீதாராமன் (6), ஜெய்சங்கர் (7), எல். முருகன் (52) அவர்களே அம்மூவர். பெயரில் ஜாதியைக் குறிப்பது பற்றி அவர்களுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தும் தம் பெயரில் ஜாதியைப் போடாமலிருப்பது , வழக்கம் பற்றி வந்த சமூக அழுத்தம். அது கண்ணுக்குத் தெரியாத மாய அழுத்தம்.

இன்னொரு முரண் உண்டு. ஜாதியை அழித்தொழித்து, சமூக முற்போக்கை விரும்புபவர்களும் அதற்குப் புத்தகம் எல்லாம் எழுதும் அறிவாளர்களும்கூட ஜாதிப் பின் னொட்டைத் தூக்கிச் சுமக்கிறார்கள். அல்லது சமத்துவத்திற்கு எதிரான ஒன்றைத் தன் பெயருக்குப் பின்னால் வைத்துள்ளார்கள்.இவர்கள் எல்லாம் உயர்தரமான சமூகப் போராளிகள். இந்தியாவே கொண்டாடும் சமூக முற்போக்கினர் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிராவ் பூலே பெயரில் உள்ள பூலே ஒரு சூத்திரப் பட்டம்; ஓம் பிரகாஷ் வால்மீகியில் உள்ள வால்மீகி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குறியீடு. பேபி டாய் காம்பிளே என்ற பெண்ணியப் போராளியின் பின்னொட்டு அவர் மஹர் சமூகத்தினர் என்பதைக் காட்டுவது. ஆனந்த் டெல்டும்டே என்பதில் உள்ள இறுதியும், ஜாதியின் குறியீடு தான். இளம் அறிஞரான சூரஜ் யெங்கடே வின் பெயரில் உள்ள "யெங்கடே " ஜாதியின் பெயர் தான். ஜாதியின் பெயரை நீக்கி, ஜாதியின் பரவலைத் தடுப்பது ஒரு முறை என்றால், தான் பிறந்த ஜாதி இழிவில்லை என்பதைச் சுட்ட சில பேர் ஜாதியின் பெயரைப் பின்னொட்டாக்கிக் கொள்வதும் உண்டு.

அயோத்திதாசரின் "ஒரு பைசாத் தமிழ"னைத் தேடி 1980களில் சென்னை, சேத்துப்பட்டில் ஒரு தோழரைப் போய்ப் பார்த்தேன். அவர் வீட்டுப் பலகையில் "முனுசாமி பறையன்" என்று பெயரைப் பொறித்திருந்தார். இதுவும் ஜாதி இழிவை நீக்கும் முறைகளில் ஒன்று என்கிறார்கள்.

"சாதிப் பெருமை " என்ற பெயரில் மிகச் சமீபத்தில் புத்தகம் எழுதிய மனோஜ் மிட்டாவின் பெயரின் பின்பகுதி, குடி உயர்வைச் சுட்டுவது தான் என்று "ரெட்டி" என்ற பின்னொட்டைக் கொண்ட என் தெலுங்கு நண்பர் கூறுகிறார். மிட்டா, மிராசு, ஜமீன் போன்ற பின்னொட்டுகளை ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் பிரிவினர் பயன்படுத்த வாய்ப்பில்லை தானே.

எந்தப் பின்னொட்டை, விரும்பும் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்த வாய்ப்பு இல்லையோ, எந்தப் பின்னொட்டு வருணாசிரம முறையை நினைவுபடுத்தி அதைப் பாதுகாக்க அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ உதவுகிறதோ, அது தவிர்க்கப்பட வேண்டியதுதான்.

அதனால்தான் 1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார் ஜாதிப் பின்னொட்டைப் பெயரிலிருந்து நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த முறையில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தால் ஒழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்கு உழைத்து வாழ முடியாது. ஆகையால் வித்தியாசங்களைக் காட்டும் வகுப்புப் பட்டங்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் " என்று அந்தத் தீர்மானத்தை விளக்கினார் ( 24 பிப்ரவரி 1929, குடிஅரசு ) .

இப்படி அந்தத் தீர்மானத்தை விளக்கியதோடு, குறிப்பான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

" செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் தீர்மானப்படி பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலியார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும் நாமம், விபூதி, பூணூல் முதலிய மதச் சின்னங்களையும் நீக்கிவிட்டவர்களின் ஜாபிதாவையும், இனி 'குடி அரசு' பத்திரிகையில் வெளியிட உத்தேசித்து இருப்பதால், ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர்களும் மதக்குறியை விட்டவர்களும் தத்தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப்படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாக இருக்கும்" என்று அந்த அறிவிப்பில் பெரியார் கேட்டுக் கொண்டார்.

அதோடு இனி எனக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெயரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டுகிறோம்" என்றும் அதே இதழில் அவர் வேண்டியிருந்தார்.

 பெரியார் மனதார விரும்பியபடி ஜாதியைத் தமிழ்நாட்டில் ஒழித்தோமோ இல்லையோ, பெயரின் பின்னால் வால் போல் ஒட்டிக்கொண்டிருந்த ஜாதியின் பெயரை ஏறக்குறைய நறுக்கி விட்டோம். மற்ற மாநிலங்களில் அவர்கள் பொருளாதாரத் தளங்களில் எவ்வளவு முற்போக்குக் கருத்தைக் கொண்டிருந்தாலும் ஜாதியிலிருந்து வெளியே வர வில்லை. அதைப் பற்றிய எண்ணமும் கூட அங்குப் பரவவில்லை.

'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்றார் ஒரு கவிஞர். அதுபோலவே தமிழ்நாட்டில் ஜாதிப் பெயர் பின்னொட்டு நீங்கியதற்கு 1929 இல் செங்கல்பட்டு தீர்மானமும் அதைத்தொடர்ந்து பெரியார் செய்து வந்த தொடர் பிரசாரங்களும் தான் காரணம்.

அடுத்து, சமூகத்தில் ஜாதிப் பெயரின் தேவையை ஏற்படுத்தாத அரசாங்கங்கள் காரணம். ஜாதிப் பெயரைச் சொல்வது அவமானம் என்ற கருத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தியது அடுத்த முக்கிய காரணம்.

எனினும் ஜாதிச் சங்கங்கள் தொடங்க, எம். ஜி. ஆர். ஆட்சியில் அனுமதித்ததற்குப் பிறகு இந்தக் கருத்தில் உடைவு ஏற்பட்டது. "குடிப்பெருமை" என்ற பெயரில் இப்போது சிலர் ஜாதியை வளர்க்க முனைகின்றனர்.

 ஒவ்வொருவரது ஜாதி விருப்பமும் எலிகளைப் போல வலைக்குள் வாழ்கின்றன. கண்களில் தென்படாமல் இருப்பதால் எலிகள் இல்லை என்று பொருளில்லை. எலிகள் உணவுப் பொருட்களை அழித்து விடுகின்றன; எலிகள் நோய்களைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. "பிளேக் " என்ற நோயைச் சிவப்பு எழுத்தில் எழுதிய அபாயமான காலம் ஒன்று இருந்தது. அதை ஏற்படுத்தியது எலிகள் தாம். இன்று அந்நோய் இல்லை என்பதால் எலிகளால் ஆபத்து இல்லை என்று நினைத்து விட வேண்டாம். எலிகளை வளர விட்டால் பிளேக் பின் தொடர்ந்து வரும். அப் பெருந்தொற்று பரவினால் மருத்துவமனை முதலாளிகளுக்கும், மருந்து உற்பத்தி செய்பவர்களுக்கும், லாபம், லாபம், லாபம். நோய் கண்ட மக்களுக்கு தான் அழிவு, அழிவு, அழிவு. பெயரில் மட்டுமல்லாமல் மனத்தில் இருக்கும் ஜாதியையும் நாம் ஒழிக்க முயல்வது நல்லது.

(கட்டுரையாளர், வரலாற்று ஆய்வாளர்)

கேரள பின்னொட்டுகள்

நேற்றைய கேரளத்தில் பெயர்கள் ஜாதிப் பின்னொட்டுடன் தான் அறியப்பட்டன. இ.எம்.எஸ். நம்பூதிரி பாட், அச்சுத மேனன், கருணாகர மேனன், இ.கே. நாயனார் என்றெல்லாம் இருந்த பெயர்கள் இந்தத் தலைமுறையில் தம் ஜாதிப் பின்னொட்டை நீக்கிவிட்டு நிற்கின்றன.

கேரளத்தின் ஜாதிகளை நான்கு பிரிவுகளாக நெகிழ்வாகப் பிரிக்கலாம். நம்பூதிரிகள் ஜாதி ஏணியில் முதல் படியில் நிற்கிறவர்கள். அவர்களில் எட்டுப் பிரிவுகள் முக்கியமானவை. தம்புரான்கள், அடையன், வசிஷ்ட நம்பூதிரி, சாமான்யர், ஜாதி மாதர்கள், சபா சிராஸ்தார், பாபிஸ்தர், சம்வோதிகர் என்பவை அவை. வைக்கம் போராட்டத்தில் பழமைவாதிகளுக்குத் தலைமை தாங்கியவர் பெயர் இந்தன் துருத்தில் நீலகண்டன் நம்பியாத்திரி. பொதுவாகப் பெண்கள் தம் பெயருடன் ஜாதியை இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்பூதிரிப் பெண்கள் "அந்தர் ஜனம் " என்று அழைக்கப்பட்டனர். எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனம் புகழ்பெற்ற உதாரணம்.

ஜாதி அடுக்கில் அடுத்ததாக அமருபவர்கள் நாயர்கள் . அவர்களிலும் பல வகை உண்டு. பிள்ளை, தம்பி, செண்பகராமன், உன்னிதான், வலியதான், கர்தாவு, கைமால், குரூப், பணிக்கர், மேனன் ஆகிய அழைப்புகளைக் கொண்டவர்கள் அவர்கள் . சங்கர் குரூப், கே.எம். பணிக்கர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை அழைத்த கே. பி. கேசவ மேனன் எனப் பல சான்றுப் பெயர்களைச் சொல்லலாம்.

என்னுடன் வானொலியில் பணியாற்றிய என் நண்பர் ஒருவர் உன்னிதான் என்றே அறியப்பட்டார், நம்பியாரைப் போல.

நம்மூர் திரைப்பட வில்லன் கே. என். நம்பியார் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவரே. அவர் பெயரில் இருக்கிற சாதியான நம்பியார் என்பதைத் தமிழர்கள் பெயறென்றே நம்பிக் கொண்டிருந்தனர். உண்மையில் அது ஜாதி வால். சுதந்திரத்திற்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது என்றாலும் 1960களில் பிறந்த சிலரும் இத்தகைய பட்டங்களைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

அதற்கு அடுத்த பிரிவினர் ஈழவர்கள் . ஜாதிப் பின்னொட்டைப் பயன்படுத்துவதில்லை. அவர்களிலும் பொருளாதார வலுவுள்ளவர்கள் 'கோவிந்தன் சானார்' போல ஜாதி அடையுடன் அழைக்கப்பட்டனர்.அதற்கு அடுத்த நிலையில் புலையர்கள் இருந்தனர். தங்கள் பெயருடன் ஜாதிகளைப் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளப் பயன்பட்ட ஜாதிப் பட்டத்தைப் புலையர்கள் போட்டுக்கொள்வது இயலாது அல்லவா? புகழ்பெற்ற புலையர்களுள் ஒருவரான பண்டிட் கே.பி. கருப்பன் கூட தன் பெயருடன் ஜாதியைச் சேர்த்துக் கொள்ளவில்லை.

எது எப்படியாயினும் சென்ற தலைமுறையில் இருந்த ஜாதிப் பின்னொட்டுகள் இன்றைய கேரளத்தில் பெரும்பாலும் இல்லை என்று நாம் முடிவுக்கு வரலாம்.

இடதுசாரி முற்போக்கு எண்ணங்களும் அதைப் பற்றிய தொடர்ந்து பிரசாரங்களும் ஜாதியைப் பற்றிய பொதுவெளியில் இருக்கிற அபிப்பிராயமும் ஜாதி வால்கள் ஒழிந்ததற்கான காரணங்களாக இருக்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram