சிறப்புப்பக்கங்கள்

வானவில் - கடிதங்கள்

Staff Writer

சிலிர்ப்பு

மார்ச் மாத இதழில், நூறு வயது வரை செம்மாந்து வாழ்ந்து, அண்மையில் மறைந்த தோழர் நல்லகண்ணுவிற்கு நல்லதோர் அஞ்சலியை அந்திமழை செலுத்தியுள்ளது! மாத மாதம் ஆரவாரம் செய்கிறார்களே, பாவலர் அறிவுமதியும், ஓவியர் ரவி பேலட்டும். தாய் தமிழ்... தாய் மொழி மட்டுமல்ல... தாய்மை மொழி அம்மிக்கல் - அம்மைக் குழவியாக மாறும்போது மெய்சிலிர்க்கிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு இதே அந்திமழை அளவில் இந்தத் தொடரை வண்ண ஓவியம் மாறாமல் புத்தகமாக வெளியிட வேண்டுகிறோம். வருங்கால தமிழ் சமுதாயத்திற்கு அந்திமழை செய்யும் சிறப்பான பணியாக அமையும். சும்மாவா சொன்னது இந்து தமிழ் திசை நாளிதழ்- அந்திமழை தரமான பண்பாட்டிதழ் என்று... நூற்றுக்கு நூறு உண்மை!

- லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை-20.

அவலம்

'குற்றப் பத்திரிகை நம்பர் 2 ?' என்ற சிறப்புப் பக்கங்களில்் ஜனநாயகனும், ஜனநாயகமும் என்று குறிப்பிட்டதிலேயே அந்தி மழையின் ஜட்ஜ்மெண்ட் பேசுவது புரிகிறது. ஒரு நடிகரின் திரைப்பட ரிலீஸ் என்றால் கூட அரசியல் பயத்தால் அவஸ்தைகளை உருவாக்குவதைப் பார்க்கும் போது அரசியல் அவலமாகத் தான் தெரிகிறது. அண்டர் கிரவுண்ட் வேலை புரியும் இயக்கங்களுக்கும் இனி பாரத ரத்னா விருது வழங்கலாம் போலிருக்கிறது!

ஆர்.விநாயகராமன்,செல்வமருதூர்.

நினைவில்

'இவரைப் போல் இனி யார் உண்டு ?' என்ற அஞ்சலிக் கட்டுரை 'அந்தி மழை'யால் கண்களை நனைத்தது! 40 ஆண்டுக்கு முன் 1975இல் 'உன்னைப்போல் தலைவருண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே!' என்று காமராஜருக்குக்காக உதிர்ந்த அஞ்சலி வார்த்தைகள் நினைவில் கலந்தன !

எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு.

அரிய தகவல்கள்

மறைந்த தூய அரசியல்வாதி 100ஆண்டுகள் வாழ்ந்து நல்ல நேர்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அய்யா நல்லக்கண்ணு பற்றி மகேந்திரன் எழுதிய இவரைப்போல இனி யார் உண்டு? அருமையான கட்டுரை படித்து பல அரிய தகவல்கள் அறிந்து வியந்து போனேன்!

கடல் நாகராசன், கடலூர்.

நிறைவாக இருக்குமே

சிறப்புப் பக்கங்களின் தொடக்கக் கட்டுரையில் எம்ஜிஆர் தனது படங்களில் தலைவர் அண்ணாவையும், திமுகவையும் எவ்வளவு தூரம் உயர்த்தி வளர்த்தார் என்று சிலாகித்து பட்டியலிட்டது......மெகா ஆச்சரியம்! அந்த அளவுக்கு கட்சி வண்ணத்தையோ, சின்னத்தையோ, தலைவர் அண்ணாவையோ கலைஞர் வசனம் எழுதிய படங்களில் தொட்டுக்கூட காட்டவில்லை. கட்சிக் கொள்கைகளை மட்டுமே வசனமாக்கினார் என்பதையும் ந.முருகேச பாண்டியன் கட்டுரையில் உணர முடிந்தது. அது போலவே நடிகர் சிவாஜி கணேசனும் தலைவர் காமராஜருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனது படங்களில் முக்கியத்துவம் கொடுத்ததையும் தனி கட்டுரையாக்கி இருந்தால் நிறைவாக இருந்திருக்குமே.

அ. யாழினி பர்வதம், சென்னை-78.

செவ்வணக்கம்

இவரைப் போல் இனி யார் உண்டு? அய்யா நல்லகண்ணு அவர்களைப் பற்றி சி. மகேந்திரன் எழுதியிருப்பது கொஞ்சம் கூட மிகையில்லாதது. சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பி னராகவோ தேர்ந்தெடுத்து அனுப்பாதது எவ்வளவு பெரிய அநீதி. ஆனால் நல்லகண்ணு அவர்கள் இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்பது தான் அவரின் தனிக்குணம். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதே பெருமைதான். செவ்வணக்கம்.

என். பாபு அருள் ஜோஷி, களக்காடு.

சுவாரஸ்யம்

திரையில் மிளிரும் அரசியல் சிறப்புப் பக்கங்கள் அருமை. எதை பாராட்டுவது எதை விடுவது என்று தெரியவில்லை. கரகாட்ட கோஷ்டியும் கமலும் ரஜினியும் கட்டுரை வித்தியாசமாக இருந்தது. அவர் பாடும் பாடல் – கட்டுரை வாலியின் பாடல்களைப் போலவே சுவாரஸ்யமாக உள்ளது.

அ. முரளிதரன், மதுரை.

கண்முன்

உறவு என்பது இருப்பதைப் பிடுங்கிக் கொள்வது. கண்மறைவில் ஏளனமாகப் பேசுவது, நல்லது செய்வதாக நடித்து தீங்கு விளைவிப்பது ஆகியவற்றைக் கொண்டதாக, தவிர்க்க இயலாததாக அமைந்து விடுவதை அப்படியே கண்முன் நிறுத்தியது கே.எஸ். சுதாகரின் வளர்ந்தவர்கள் சிறுதை.

நல்லகண்ணு ஐயாவின் உயர்ந்த நற்பண்புகளையும் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்திற்காக பட்ட சொல்லொணாத் துன்பங்களையும் நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகளையும் திறம்பட எழுதியிருந்தார் சி. மகேந்திரன்.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்.

சிறப்பான பெட்டகம்

தோழர் நல்லகண்ணுவைப் பற்றியும் அவருடைய தியாகம் குறித்தும் விரிவாக பதிவு செய்துள்ளீர்கள். அப்படிப்பட்ட தியாகி சொந்த ஊரிலேயே தேர்தலில் டெபாசிட் வாங்க முடியவில்லை என்ற அவலம். பதவி என்பது மக்கள் சேவைக்கு இல்லை. பெரும்பாணாற்றுப்படை அம்மைக்குழவி பாடலில் மனித அந்தரங்க வாழ்க்கையை அவ்வளவு சிறப்பாக சித்தரித்துள்ளார்கள். மத்திய – மாநில உறவு குறித்து நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான பேட்டி நன்று.

அரசியல் திரைப்படங்கள் குறித்த கட்டுரையில் அவன் அமரன், பாதை தெரியுது பார், சிவப்பு மல்லி, தாமரைக்குளம் போன்ற பொதுவுடமை தத்துவம் பேசும் படங்களை ஏன் யாரும் எழுதவில்லை?. அதேபோல், மனிதா மனிதா இனி விழிகள் சிவந்தால் போன்ற பாடல் எல்லாம் ஏன் தெரியவில்லை? அந்திமழை இன்றைய இளைஞர்களுக்கு பழைய காலத்தை கவனத்தில் கொண்டுவந்திருப்பது பாராட்டுகுரியது. இந்த இதழ் ஒரு சிறப்பான பெட்டகம்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்.

சிறப்பு

சிறப்புப் பக்கங்கள் பகுதியில் வெளியான குடும்ப அரசியலும் மத அரசியலும் கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றிகள்.

எஸ். பரமேஸ்வரி, பழனி.

ஏன் செய்யவில்லை?

இவரைப்போல இனி யார் உண்டு? மறைவுற்ற தோழர் நல்லகண்ணு அவர்கள் பற்றி தோழர் சி. மகேந்திரன் எழுதியிருந்த அஞ்சலி கட்டுரை நன்று. இவரைப் போன்று அத்திபூத்தாற்போல சில தலைவர்கள் அப்போதைக்கப்போது தோன்றி மறைவதுண்டு. இக்கட்டுரையில் அவரைப் பற்றி நாம் இதுநாள்வரை அறியாத பல அரிய தகவல்களை கட்டுரையாளர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இந்திய அளவிலேயே கட்சி ரகசியங்களைப் பாதுகாக்கக் கூடிய பட்டியலில் இவரது பெயர் முதலிடத்தில் இருந்தது, மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், தாமிர பரணி ஆறு காப்பாற்றப்பட காரணமாக இருந்தது போன்ற தரவுகள் கட்டுரையை கனமாக்கிக் காட்டியது. சிறப்புப் பக்கங்களில் விரிந்திருந்த கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரையில் மிளிரும் அரசியல் தகவல்கள் அத்தனையும் அருமை.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

மின்மினி

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… ஆய்வுக் கட்டுரைகள் மனதில் மின்மினியாக டாலடித்தன.

காசி. யோக அக்ஷயா, கோவை.

நன்றி

நல்லகண்ணு அய்யாவிற்கு முதலிடம் தந்து 6ஆம் பக்கத்திலேயே அஞ்சலிக் கட்டுரை சமர்ப்பித்து எங்களை ‘அஞ்சலி’ செலுத்திய உணர்விற்கு ஆட்படுத்திய அந்திமழை நல்உள்ளங்களுக்கும் வடிவமைத்த தோழர் சி. மகேந்திரன் அவர்களுக்கும் நன்றி.

கா. சித்ரா காமராஜ், கோவை