தண்ணீ பாட்டிலு வேணுமாங்க.. தண்ணீ தண்ணீ... " ஒவ்வொரு சன்னல் வழியாகவும் தன்னிடமிருக்கும் தண்ணீர் பாட்டில்களை உயர்த்திக் காட்டி வேணுமாங்க.. என்று கேட்டுக் கொண்டே முன்னும் பின்னும் அந்த பேருந்து நிற்கும் சிறிய கால இடைவெளிக்குள் அலைந்து கொண்டிருந்தார் அவர்.
அவரின் பின்புறப் பாடலென "முறுக் முறுக் முறுக் முறுக்... சூடான சுவையான முறுக்கேஏஏ" என்று ராகம் பாடியவரை தன் தன் முகத்தை திருப்பி பார்வையால் கடிந்து கொள்ளவும் செய்தார்.
"யோவ் கெண்டியரே... என்னய்யா நிமிசத்துக்கும் மொறைக்கிற"
"எலேய் நீ ஏம்பளே நா திரியுற பக்கத்துலயே பின்னாலேயே வால புடிச்சிகிட்டு வரே?''
"என்னாதே இது கதையா இருக்கு.. நாங்கெல்லாம் அப்பறம் பொலப்பு பாக்க வேணாமா... நிக்கிறதே ஒத்த வண்டி... நாங்களும் வந்து கூவி தானே ஆகனும்"
"ஆமாலே என் காதுக்குள்ளயே வந்து கூவு"
"யோவ் நீ வேலைய பாருயா" என்று சொன்னவன் மீண்டும் "முறுக் முறுக்கென" தொண்டையை செருமினான்.
இப்போது அவனிடம் வாதம் செய்ய நேரமில்லை என்பதால் தண்ணீர் பாட்டிலின் விற்பனையை கவனிக்க தொடங்கினார் கெண்டியர்.
"ஆமா இந்தாளு சும்மா தர மாதிரிதான் முன்னால வந்து நீட்டுவானுங்க" என்று முணுமுணுத்த பயணியின் சொற்கள் அவர் காதில் நுழையவில்லை.
சன்னல் வழி பத்து ரூபாய் தாளொன்றை வெளியில் நீட்டிய பெண்ணுக்கு அரை லிட்டர் அளவிலான தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் கொடுத்தார்.
அவர் அடுத்த சன்னலைத் தாண்டி செல்லும் முன்னே ஒரே மூச்சில் தண்ணீரைக் குடித்தவள் காலியான பாட்டிலை வெளியே வீசினாள்.
என்னதான் இதுவொரு தொழிலாக இருந்தாலும் பயணத்தின் போது பேருந்திலிருந்து இறங்க முடியாமல் தவிக்கும் சிலரின் தேவையை பூர்த்தி செய்யும் சேவையாகவும் தானே இந்தத் தொழில் மேன்மையுடையதாக உள்ளது. ஐந்து நிமிட இடைநிற்றலில் பேருந்திலிருந்து இறங்க யோசிக்கும் பயம் அதிகமானவர்களுக்கு உண்டு தானே... பயணத்தின்போது பசிக்கும் தாகத்திற்கும் யாரை துணைத்தேட முடியும். அடுத்த நிறுத்தத்தில் யாராவது தண்ணீர் விற்பார்கள் வாங்கி அருந்திடலாம் என்றும், யாராவது தின்பண்டங்கள் விற்பார்கள் வாங்கி உண்ணலாம் என்றும் தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொண்டு அடுத்த நிறுத்தத்திற்கான தூரத்தை மனதில் கணக்கிட்டு கொண்டே பயணிப்பவர்கள் எத்துனை பேர்... அவர்களின் அந்த எதிர்பார்ப்பிற்கும் தேடலுக்குமான தொழிலாக பேருந்து நிலையம் முழுவதும் கூடைகளில் பொருட்களை சுமந்து சுற்றி வரும் அவர்களின் உழைப்பு எதுவுமற்று போவது தான் சில சமயம் வேதனைக்குரியதாகி விடும்.
கடைசி இருக்கையின் வழி ஒருவன் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொள்கிறான். அவன் கைகளை எதிர்நோக்கி காத்திருக்கும் போது பேருந்து நகரத் தொடங்கியிருந்தது.
கையிலிருந்த பணத்தை அவன் கொடுப்பதாக தெரியவில்லை. அவரின் கைகளுக்குள் அது அகப்படாதவாறு வித்தை காட்டினான். பணத்தைத் தரக்கூடாது என்பது மட்டும் அவனது எண்ணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வியாபாரியின் ஏக்கத்தை பணத்தேடலை அதற்காக இறைஞ்சும் அந்தக் குரலை இரசிக்கும் ஈரமற்ற குணம் பலரிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
"ஏங்க காசுங்க... காசுங்க...’’ என்று பேருந்தின் பின்னே கைகளை உயர்த்திக் கொண்டு ஓடியவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலும் திசைக்கொன்றாக உருண்டோடியது.
அதை சன்னலின் வழியே அவன் எட்டிப்பார்த்து புன்னகைத்துக் கொண்ட போது அவன் உளவியல் நோயிற்கான மருந்தாக அது இருந்திருக்கலாம்.
"யோவ் கெண்டியரே...” என்று கத்திக் கொண்டே முறுக்கு விற்றவர் ஓடிவந்து அவரை தூக்கி நிறுத்தினார். “என்னய்யா நீ பாத்து இருக்க மாட்டியா . இப்புடி போய் விழுறியே" என்றபடி அவரது உடைமைகளை சேகரிக்கலானார்.
"இல்லடா அவன் பாட்டிலு வாங்கிட்டு பணத்த தராமலே போயிட்டான் அதான்"
“அதுக்கு இந்த ஓட்டம் ஓடிவியாக்கும். பத்து ரூபா தானே போனா போகுதுனு விட்டுட்டு போவாமா... விழுந்தப்ப பின்னால வண்டி எதும் வந்திருந்தா... நேரம் நல்லாயிருக்கும் தப்பிச்ச... நமக்கு நேரம் சரியில்லனா தடுக்கி விழுந்தா கூட தடமே இல்லாம போயிடுவோம்”
"அந்த பத்து ரூபாயிக்கு தானேடா பொழுதேனிக்கும் சுத்தி சுத்தி வந்திட்டு இருக்கோம். நம்மள ஏமாத்த இவனுங்களுக்கு எப்புடிதான் மனசு வருதோ"
“அதான் மனசு வருதே... வரதாலதானே இப்படி பண்றானுங்க.. அவனுங்களுக்கு பணத்த விட அடுத்தவன் வேதனப்படுறத பாக்கனும். அதெல்லாம் ஒரு மனநோயிதான் கெண்டியரே"
" என்னமோ போடா... இன்னைக்கு என்னோட ஏட்டுல எழுதுனது இதான் போல" என்றபடி காலை கொஞ்சம் ஊன முடியாமல் உந்தி உந்தி நடந்தார்.
கீழே விழுந்த வேகத்தின் போக்குக்கு ஏற்ப முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு பனை மரத்தின் வார் பிளந்த சிதாம்புகளின் கோடுகளுக்கு இடையே இரத்தம் கசிவது போல கசிந்து கொண்டிருந்தது. அந்த வலியை வெளிக்காட்டவில்லை என்றாலும் அதற்கு மேல் நடந்தும், ஓடியும் விற்பனையை பார்க்கும் அளவிற்கு அந்த கால்களில் பலம் இல்லாமல் இருந்தது. இன்றைய நாளின் பயன் அவ்வளவுதான் என்று சோர்ந்து பேருந்து நிலையத்தின் ஓரமாக இருந்த திட்டில் வந்து அமர்ந்தார்.
முறுக்கு விற்றவன் தன்னிடமிருந்த தொகையில் களிம்பு வாங்கி வந்தான். சிராய்ப்பில் இரத்தம் வடிதல் நின்று கொஞ்சம் ஈரப்பதம் குறைந்து காயத்தொடங்கியிருந்தது. தண்ணீர் கொண்டு லேசாக சுத்தம் செய்து களிம்பை தடவிய பின் அவனுக்கு அங்கு வேலை நிற்கவில்லை.
“கெண்டியரே நா போயி பொழப்ப பாக்குறேன். நீ செத்த இருக்கியா இல்ல வூட்டுக்கு கெளம்புறியா"
“வூட்டுக்கு போயூ என்னாடா பண்றது.. செத்த நேரம் பாக்குறேன் வலி கொறைஞ்சா பாதைக்கு வந்துடுறேன்"
“அடடா ஒரு நாளு உக்காந்தா ஒன்னுமாயிடாது.. எத்தினி நாளு ஒத்த ரூபா யாவரத்தோட வூட்டுக்கு போயிருப்ப அப்படி நெனச்சிக்க இன்னைக்கு"
“அப்படி எப்படி கண்ணு நெனைக்க முடியும். ஒன்னுமில்லாம போனாலும் அன்னைக்கு முச்சுடும் ஓடி திரிஞ்ச நெறைவு இருக்குமுல்ல" கெண்டியரின் வார்த்தையிலிருந்த வாட்டத்தை அவனும் உணராமல் இல்லை.
“சரிய்யா பழம் விக்கிறானுல சின்னதம்பி அவனோட அக்கா இன்னைக்கு என்னமோ வரலனு சொன்னான். அவனும் இன்னைக்கு தனியா செரமப்படுறான். நீ அவனுக்கு பழத்த வெட்டி கொடுத்தா அவன் நாலு வண்டியில வித்திடுவான். அவனே வெட்டி அவனே வண்டிக்கு போறதுகுள்ள ரெண்டு மூணு வண்டி போயிடுதுனு கவலபட்டுக்கிட்டான்"
“அப்படியா சரி அவனுக்காவது இன்னைக்கு ஒத்தாசையா உக்காந்திருக்கேன்" என்றவர் ஒருபக்கம் காலை இழுத்தவாறு நடந்தே சின்னதம்பி பழங்கள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தார்.
“என்னடா சின்னதம்பி அக்கா இன்னைக்கு வரலையாமே" பேச்சை கொடுத்தபடி பக்கத்தில் சென்றார் கெண்டியர்.
ஒருகணம் திரும்பி கூட பார்க்காமல் குரலை வைத்தே "யாரு கெண்டியரு தாத்தாவா... ஆமா தாத்தா அக்காவுக்கு ஏதோ மேலுக்கு முடியல. சரினு நா தனியாவே வந்துட்டேன்". என்று பதில் தந்த போதும் அவன் அவரைப் பார்க்காமலே பழத்தை வெட்டிக் கொண்டு பதில் சொன்னான்.
"என்னடா ஆள பாக்காம கூட பதிலு பேசுறியே... அவ்வளவு மும்மரமா வேலை செய்யுறியோ"
"ஆமா தாத்தா அக்கா வரலல பழம் வெட்டி தர ஆள் இல்ல. அதான்" என்று சொன்ன போதுதான் அவரின் கால்களைப் பார்த்தான் சின்னதம்பி.
"அச்சச்சோ தாத்தா என்னாச்சி...?’’ பதட்டமான வார்த்தை அவரை சூழ்ந்தது.
"கீழ விழுந்துட்டேன்டா சின்னப்பயலே... எங்க அதெல்லாம் கவனிக்க ஒனக்கு நேரமிருக்கு. விழுந்தப்ப நூறு சனம் சுத்தி இருந்தது எவனுமே பாக்கல. நீ மட்டும் என்னா பண்ணுவ பாவம்"
"என்னங்க தாத்தா எப்படி விழுந்தீங்க"
"அந்தக் கதைய சொன்னா நம்ம கதை இன்னைக்கு ஓடாது.அது கெடக்குது. காலு நடக்க முடியல இன்னைக்கு ஒனக்கு நா பழத்த வெட்டி வைக்கிறேன். நீ போயி வித்திட்டு வா" என்றார்.
"வலிக்கலியா உங்களுக்கு.. வேலை செய்யுறனு சொல்லுறீங்க?’’
"பொழப்ப விட வலியா முக்கியம்.. போடா போயி பொழப்ப பாரு" என்றவர் அவனிடமிருந்த கத்தியை வாங்கிக் கொண்டார்.
பேப்பர் குப்பிகள் நிறைய தர்பூசணி பழத்தையும், அன்னாசி பழத்தையும், பலாச்சுளைகளையும் அளவாக வெட்டி நிரப்பிக் கொண்டிருந்தார்.
அவரின் வரவு அவனுக்கும் உதவியாக இருந்தது. உடனுக்குடன் அவர் நிரப்பி வைத்திருந்த குப்பிகளை விற்பனை செய்துவிட்டு மீண்டும் வந்தான்.
சில பேருந்துகளில் ஏறி உள்ளே சென்று விற்றுக்கொண்டான். சில பேருந்துகளில் உள்ளே ஏற அனுமதி மறுக்கப்படும் போது சன்னல் வழியாக பழங்களின் பெயர்களை கூவி விற்றான். ஆனால் அவனை இதுவரை யாரும் அலைக்கழிக்க வில்லை. இளமையானவன் ஒரே ஓட்டத்தில் பேருந்தை பிடித்து உள்ளே ஏறி சண்டையிடவும், பிறரிடம் கூறி தனக்கான தொகையை பெற்றுக்கொள்ளவும் அவனால் முடியுமென்ற பயம் கூட அவனிடம் அதுபோன்ற செயலை யாரும் செய்யாமல் இருந்திருக்கலாம். அவன் உடல் கொஞ்சம் ஓய்வைத் தேடியிருக்கலாம். கெண்டியரின் அருகில் வந்து அமர்ந்தான்.
"என்னடா போகலையா"
"இல்ல தாத்தா ஓடி ஓடி எளப்பா இருக்கு கொஞ்சம் உக்காந்துட்டு போகலாமுனு வந்தேன்".
" சரி சரி அதுவும் நல்லதுதான் . ஓடிக்கிட்டே இருந்தா என்னாத்துக்கு ஆகுறது... ஆமா நீ பாட்டுக்கு விறுட்டுனு ஏறுற இறங்குற... கொஞ்சம் பயத்தோட இருடா"
"என்னா தாத்தா பயம். நம்ம தொழிலுக்கு ஓடுற வண்டியில ஏறுறதும் இறங்குறதும் தானே வேலை. அதுக்குலாம் பயந்தா கதைக்கு ஆகுமா".
"அதுகில்லடா தவறி விழுந்தா நமக்கு தானே தெண்டம்"
"ஆமா நம்ம கடலமிட்டாய் விக்கிற மாரியண்ணே... அப்படித்தான் உள்ள ஏறிப்போயி கடலமுட்டாய வித்திருக்காரு. அந்த வண்டிக்காரன் என்னா காண்டுல இருந்தானோ எறங்குயானு தள்ளிருக்கான். அதுக்குள்ள வண்டி ஓட்டுறவரு எதையும் பாக்காம வண்டிய எடுக்க தடுமாறி விழுந்துட்டாரு. கையே ஒடைஞ்சி போச்சு. பத்து நாளுதான் முழுசா சரியாகுறத்துக்குள்ள வந்துட்டாரு. திரும்ப வண்டி வண்டியா ஏறித்தான் விக்கிறாரு. வண்டிக்காரங்கிட்ட வாங்காத ஏச்சும் பேச்சுமா.உசுரு இருக்குற வரை ஓடித்தானே ஆகனும்". சின்னத்தம்பியின் இளமை பேசினாலும் அதுதான் உண்மையென்பதாக தோன்றியது கெண்டியருக்கு.
ஓடும் வண்டியில் ஏறி இறங்க முடியாத இயலாமையால் கெண்டியர் தன் வயது மூப்பிலிருந்து சன்னல் வழியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இளமையில் எத்தனை பேருந்துகள் ஏறி இறங்கி விற்பனை செய்திருக்கிறோம் என்பது கூட அவருக்கு நினைவில்லை. ஆனாலும் அது நினைவில் வைக்க முடியாத எண்ணிக்கையாகத்தான் இருந்திருக்கும். ஒரு நாளின் இறுதிக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான முறை பேருந்துகளில் ஏறி இறங்கியதுண்டு. ஒரே பேருந்தில் இரண்டு மூன்று முறை கூட அது புறப்படும் வரை ஏறி இறங்குவது பழக்கமாகியிருந்தது. சில பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் வரை வண்டி நகருவதே கிடையாது. அப்போதெல்லாம் முதல் கூடிய நான்கு நபருக்கும் இறுதியில் நிறையும் எண்ணிக்கையற்றோருக்கு-மிடையே பலமுறை நுழைந்து தன் பொருளை விற்பனை செய்திடுவார்.
இப்போது இந்த உடல் தன்னை வலுவற்றதாக மாற்றிக் கொண்ட பின் தண்ணீர் பாட்டிலைத் தவிர எதையும் விற்பதுமில்லை. அதுவும் கீழிருந்தபடியே குரலை மட்டும் பேருந்திற்குள் வீசியெறிந்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
வெயிலும் மழையுமென எந்த காலநிலையற்ற வாழ்வு அவர்களுடையதாக இருந்ததை எண்ணிக் கொண்டிருக்கையில் சின்னத்தம்பியின் குரல் இடை புகுந்தது.
" தாத்தா பொழுதோட நேரமாவே போகலாமுனு இருக்கேன்.. அக்காவுக்கு எதாவது மருந்து மாத்திரை வாங்கித் தரனுமில்லே.. அதனால இதோட போதும் பழத்த வெட்ட வேண்டாம்" என்றான் சின்னத்தம்பி.
"சரிடா கண்ணு... நீ வெட்டுன வரை முடிச்சிட்டு கெளம்பு" என்றார்.
" நீங்க போகலையா...”
"நானெங்க போறது... காலு கொஞ்சம் வலி கொறைஞ்ச மாதிரி இருக்கு நல்லா நீட்ட முடியுது யாவாரத்துக்குதான் போகனும்"
"இன்னைக்கு முழுக்க யாவாரம் இல்ல செலவுக்கு வேணுமுனு போறீங்களா... நீங்க இம்புட்டு நேரம் பழம் வெட்டி தந்தீங்களே அதுக்கு நான் கொஞ்சம் பணம் தரேன் நீங்க வீட்டுக்கு கெளம்புங்க"
"அட போடா தம்பி இதெல்லாம் ஒரு வேலையா? எம்பேரனா இருந்தா நா பண்ண மாட்டேனா? எனக்கு பணம் ஒன்னும் வேண்டாம். நீ பணமே கொடுத்தாலும் நா நாலு வண்டிய பாத்துட்டுதான் வீட்டுக்கு கெளம்புவேன். இல்லனா இன்னைய நாளு செரிக்காமலே போயிடும்".
சின்னதம்பி மிச்சமிருந்த பழங்களை ஒரு தார்ப்பையால் மூடிவிட்டு பொழுது சாயும் முன்னே வீட்டிற்கு புறப்பட்டு சென்றான்.
கெண்டியர் தன் கால்களை முன்னும் பின்னும் அசைத்துப் பார்த்தார். அது தன்னை தயாராக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்றடி நடை பயின்று கொண்டார். அவரது காயத்திலிருந்து ஊனீர் சுரந்து களிம்பின் வழி கசிந்திருந்தது. அதை துடைத்துக் கொண்டு மீண்டும் களிம்பை தடவியவர் தன் கூடையில் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டார்.
அந்த பேருந்து நிலையத்தை சுற்றி அவர் பார்வை திரும்பியது.
கடலை மிட்டாய் விற்பவன், காரம் விற்பவன், சோன்படி விற்பவன், நூல்கள் விற்பவன், பழங்கள் விற்பவனென அத்தனை பேருடைய உடலிலும் எண்ணற்ற சிராய்ப்புகளும், காயங்களும், முக்கியமாக நிராகரிப்புகளும் அந்த கால்களின் சங்கிலியை உடைத்து சிதறிக்கிடப்பதை பார்க்கிறார்.
தன்னை ஏமாற்றிய ஒருவனின் விலங்கு இப்போது அவரிடமிருந்து அறுபட்டு விழுகிறது. அந்தக் கால்களின் வேதனைகளுக்கு மருந்திட்டு தன் கூடையை கையிலெடுக்கிறார்.
"தண்ணீ பாட்டிலு" என்ற அழுத்தமான குரலின் எதிரொலி பேருந்தின் சன்னலை ஊடுருவி அவர்களின் காதுகளை பிடித்து வெளியே இழுக்கத் தொடங்கியது.
நிழலி, பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். ஒப்பந்தமிட்ட இரவு, கோடை விரும்பிகள், இன்னும் முளைக்காத காடு, பரிதியாழ் ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சவுக்காரம், குடம்பி, ஆகிய இவரது சிறுகதைத் தொகுப்புகள் விருதுகளைப் பெற்றுள்ளன. படல் இவரது இன்னொரு சிறுகதைத் தொகுப்பு ஆகும்.