விசுவாசம் என்ற வார்த்தை எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது?
யாரோ ஒருவருக்கோ பலருக்கோ அல்லது ஏதோ ஒன்றுக்கோ மனிதன் காட்டும் நன்றியுணர்வே விசுவாசம். இத்துடன் சேர்த்து, அதில் பாசம், நேசம், மரியாதை, ஒற்றுமை என்று எத்தனையோ அம்சங்கள் சேர்ந்திருக்கின்றன. சாதாரணமாகவே புகுந்து விளையாடும் தமிழ் சினிமா, விசுவாசம் என்ற லட்டுக் குவியல் கையில் கிடைத்தால் சும்மாவா விட்டுவிடும்? எனவே தமிழ் சினிமா, விசுவாசம் என்பதை எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.
ஆதிகால தமிழ்ப் படங்கள் கடவுள் பக்திப் படங்களாகவே இருந்தன. அவற்றிலேயே விசுவாசம் உண்டு. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் படங்களை எடுத்துக்கொள்வோம். இவர் படங்களில் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. தவறான எதன்மேலோ முழுக்க முழுக்க விசுவாசம் வைத்ததால், சரியான விஷயங்களான பெற்றோர், மனைவி, கடவுள் ஆகியவை மீது பாகவதரின் கதாபாத்திரம் விசுவாசத்தை இழந்துவிடும். அதனாலேயே வாழ்க்கையில் கொடும் துயரங்களை அனுபவிக்கும். இறுதியில் புத்தி வந்ததால் தீயவற்றை விட்டுவிட்டு நல்லவை பக்கம் அந்தக் கதாபாத்திரத்தின் விசுவாசம் மாறிவிடும். எனவே துயரத்துக்கு விடுதலை கிடைக்கும். எம். கே. தியாகராஜ பாகவதரின் சிந்தாமணி, திருநீலகண்டர், சிவகவி (இதில் மட்டும் கடவுள் மீது கடும் விசுவாசம் வைத்த பொய்யாமொழிப் புலவருக்கு நடந்த சோதனைகள் விரிவாக வரும். ஆனால் இதிலும் விசுவாசம் இருக்கிறதுதானே?), ஹரிதாஸ் ஆகிய சூப்பர்ஹிட்கள் இப்படிப்பட்டவையே. இவரது படங்கள் மட்டுமல்லாமல், அக்காலத்தில் வெளிவந்த பல படங்களில் இப்படிப்பட்ட கதையம்சமே இருக்கும்.
விசுவாசம் என்ற பதத்தை முற்றிலும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர் என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம். காரணம் ஏராளமான படங்களில் அவரது கதாபாத்திரம் விசுவாசம் என்ற வார்த்தைக்கு உதாரணமாக இருந்து அதனால் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும். படிக்காத மேதை படத்தை உதாரணமாகப் பார்க்கலாம். ராவ் பகதூர் சந்திரசேகர் என்ற ரங்காராவ் கதாபாத்திரத்துக்கு விசுவாசமாக இருக்கும் ரங்கன் என்ற வேலையாள் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். சந்திரசேகருக்கு வியாபார நட்டம் ஏற்பட்டு அதனால் நடுத்தெருவுக்கு வரும்போது அவரது குழந்தைகள் அவரை ஏளனம் செய்துவிட்டுப் போய்விட்டாலும் ரங்கன் மட்டுமே அவரிடம் அத்தனை விசுவாசமாக இருப்பான். இறுதியில் பல சோதனைகளைத் தாண்டி எப்படி ரங்கன் அந்தக் குடும்பத்தை சேர்த்து வைக்கிறான் என்பதே கதை. இதில் காட்சிகள் மட்டுமல்லாமல் பாடல்களிலும் விசுவாசத்தை அழுத்தமாகப் பதியவைத்திருப்பார் இயக்குநர் பீம்சிங்.கே.வி. மகாதேவன் இசையில் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற பாரதியார் பாடலை இந்தப் படம் பார்ப்பவர்கள் மறக்க முடியாது. ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்ற பாடலில், இந்தப் படத்தின் கதையையே சுருக்கமாகச் சொல்லி, ரங்கனின் விசுவாசத்தை விளக்கியிருப்பார் கண்ணதாசன்.
இது மட்டுமா? நாட்டின் மீது விசுவாசம் கொண்ட கதாபாத்திரங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சித்தூர் ராணி பத்மினி, சிவந்த மண் போன்றவை, கடமையின் மீது விசுவாசம் கொண்டவராக கௌரவம், தங்கப்பதக்கம், தொழிலின் மீது விசுவாசம் கொண்ட ஆண்டவன் கட்டளை, பழநி, ராஜபார்ட் ரங்கதுரை, மனிதனும் தெய்வமாகலாம் போன்றவை. இன்னும் குடும்பம் மீது, கடவுள் மீது, நண்பர்கள் மீதெல்லாம் அவரது கதாபாத்திரங்கள் விசுவாசம் வைத்த படங்கள் என்று எழுதத் துவங்கினால் இந்த இதழ் முழுவதும் எழுதவேண்டிய அளவு கட்டுரைகள் தேறும்.
சிவாஜி படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும்போதே ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை இயக்கி சாதனை படைத்தார் புதுமை இயக்குநர் சி.வி. தர். அதில், தான் செய்யும் மருத்துவத் தொழில் மீது விசுவாசம் கொண்ட ஒரு முன்னாள் காதலன், அவனுடைய பழைய காதலியின் இந்நாள் கணவனுக்கு ஏற்படும் ஒரு நோயை எப்படிச் சரி செய்கிறான் என்பதே கதை. தியாகத்தின் உருவமான முன்னாள் காதலனாகக் கல்யாண்குமார். அவரது பழைய காதலியாக தேவிகா. அவரது கணவனாக முத்துராமன். இந்தப் படம் இந்தியாவில் எந்த மொழியில் எடுத்தாலும் சூப்பர்ஹிட் ஆனது. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் கேட்காத இடமே இல்லை எனலாம்.
இந்தக் காலகட்டத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் விசுவாசத்தில் ஒரு பயங்கரமான புதுமை செய்தது. அதில், வழக்கமாக ஹீரோ வேடத்தில் வரும் ஜெமினி கணேசன், பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் முகம் தெரியாத வில்லன் போல நடித்திருப்பார். அதேபோலக் கையில் பூனையை வைத்துத் தடவிக்கொண்டும் இருப்பார். அதேபோல, வழக்கமாக வில்லன் வேடம் போடும் அசோகன் மற்றும் ஆர்.எஸ் மனோகர் ஆகியோர் ஹீரோ வேடம் போடுவார்கள். அந்தப் படம் - ‘வல்லவனுக்கு வல்லவன்’. அட்டகாசமான பாடல்கள் நிரம்பிய ஆக்ஷன் காவியம். சரி. இதில் விசுவாசத்துக்கு என்ன வேலை என்று கேட்டால், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் முழுவதும் கொடும் வில்லனுக்கு விசுவாசமான பயங்கர அடியாட்கள் இருப்பார்கள். அவர்கள் வில்லனே ஓடிவிட்டாலும் கூட ஹீரோவை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். கூடவே பழகி வேவு பார்க்கும் பெண் உளவாளிகள், மர்ம பங்களாக்கள், குமிழைத் திருப்பினால் சுவற்றில் ஓட்டை விழுந்து உள்ளே ரகரகமாக கலர் லைட் வைத்துக்கொண்டு வில்லனுக்கு ஒரு மறைவிடம், அக்காலத்திலேயே டிவி போன்ற ஒரு சாதனத்தில் லைவாக ஹீரோவைக் கண்காணித்தல் என்று பட்டையைக் கிளப்பியது மாடர்ன் தியேட்டர்ஸ். வில்லனுக்கு விசுவாசம் என்றாலே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.
இதே காலகட்டத்தில், வசனம் பேசும் மனிதர்களே வேண்டாம்; மிருகங்களை வைத்துப் படம் எடுக்கிறேன் பார் என்று தேவர் பிலிம்ஸ் நிறுவனம் சக்கைப்போடு போட்டது. பின்னால் வந்த தொண்ணூறுகளில்தான் மிருகங்கள் மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளும் செய்தன என்றாலும், அறுபதுகளிலேயே ஹீரோவுக்குப் பயங்கர விசுவாசமான மிருகங்களை சாண்டோ சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் கொண்டுவந்துவிட்டது. முதன்முதலில் ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் காளை மாட்டைக் கொண்டுவந்த தேவர் (இதில் ஜல்லிக்கட்டில் மாட்டை எம்.ஜி.ஆர் அடக்கும் காட்சி வரும்), அதன்பின் விதவிதமாக, ரகரகமாக மிருகங்களை அழைத்துக்கொண்டுவந்தார். ’யானைப்பாகன்’ படத்தில் - வேறு என்ன வரும்? யானைதான்! தமிழில் தெய்வச்செயல் என்று மேஜர் சுந்தர்ராஜனை வைத்து எடுத்து அது சரியாகப் போகாமல் இந்தியில் சலீம் ஜாவேத் என்ற திரைக்கதை மன்னர்களை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்று அதையே மாற்றி எடுத்து சூப்பர்ஹிட் ஆக்கி, அதே படத்தை நல்ல நேரம் என்று எம்.ஜி.ஆரை வைத்து மறுபடியும் தமிழில் எடுத்த சாமர்த்தியம் தேவரையே சேரும். எம்.ஜி.ஆரை வைத்துப் பதினாறு படங்கள் எடுத்தார் தேவர். எப்படி தேவர் படங்களில் மிருகங்கள் மிக நல்லவையாக, நாயகனுக்கு விசுவாசமாக இருக்குமோ அப்படி தாய்க்குப் பின் தாரம் படத்திற்குப் பின் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் வந்த பிரச்னை சரியாகி, அதன்பின் தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இருந்து இருவரும் இருவருக்கும் மிக விசுவாசமாகவே இருந்தனர்.
அறுபதுகளில் வந்த சிவாஜி படங்கள் போலவே தொண்ணூறுகளில் விசுவாசத்துக்கு உதாரணம் காட்டவேண்டும் என்றாலே ரஜினிகாந்தின் நினைவுதான் வரும். சிவாஜி போலவே ரஜினியும் பல படங்களில் குடும்பத்துக்கு விசுவாசம் (ஆறிலிருந்து அறுபது வரையில் துவங்கிப் படையப்பா வரை ஏராளமான படங்கள்), நண்பனுக்கு விசுவாசம் (நினைத்தாலே இனிக்கும், புவனா ஒரு கேள்விக்குறி, நான் வாழவைப்பேன், ரங்கா, சிவா, வேலைக்காரன், குரு சிஷ்யன், அண்ணாமலை, பாட்ஷா ஆகியவை இதில் முக்கியமான படங்கள்), தொழிலுக்கு விசுவாசம் (சிவப்பு சூரியன், கர்ஜனை, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், படிக்காதவன், மிஸ்டர் பாரத்) என்று எந்த வகையை எடுத்தாலும் அதில் சில ரஜினி படங்கள் வந்துவிடும். இவைதவிரவும் இன்னும் நிறைய உதாரணங்கள் உண்டு (அழகிய பெண்களுக்கு விசுவாசமாக ரஜினி நடித்த நெற்றிக்கண் ஒரு ஸ்பெஷல் உதாரணம்).
கமல்ஹாஸனை எடுத்துக்கொண்டால், உயர்ந்த உள்ளம் படத்தில் நண்பனிடம் ஏமாந்து சொத்தை முழுதும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் கதாபாத்திரம். நண்பன் மேல் வைத்த விசுவாசம் அப்படி ஆக்கியிருக்கும். அவரது சட்டம் படத்திலும் சரத்பாபுவுடன் விசுவாசமான நட்பு. ஆனால் இருவருக்குள்ளும் ஒரு பெரிய பிரச்னை இருக்கும். பேர் சொல்லும் பிள்ளை படத்தில் குடும்பத்தின் மேல் மிகவும் விசுவாசம் வைத்த வேலைக்காரன் வேடம். கிட்டத்தட்டப் படிக்காத மேதையின் இன்னொரு வடிவம். சத்யா படத்தில் அரசியல்வாதி தண்டபாணியின் மீது வைக்கும் விசுவாசம், தண்டபாணியால் ஏமாற்றப்படுவதில் வந்து முடியும். இறுதியில் தண்டபாணியைக் கொன்றுவிடுவார் (உடனே மாரியப்பாவையும் கொல்கிறாரே என்று கேட்கவேண்டாம். இந்தக் கட்டுரைக்கு தண்டபாணியிடம் விசுவாசமாக இருப்பதே முக்கியம்).
சிப்பிக்குள் முத்து படத்தில் ராதிகா கதாபாத்திரம் மீது விசுவாசம் வைப்பார் கமல். அது காதலில் முடியும். ஆனால் அது என்னவென்றே தெரியாத கதாபாத்திரம். குணா படத்தில் அபிராமியின் மீது விசுவாசம். சலங்கை ஒலியில் நடனக்கலை மீது விசுவாசம். மகாநதி படத்தில், தன்னை ஏமாற்ற வந்த ஆள் என்றே தெரியாமல் அவனை அப்படியே நம்பி, கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து முற்றிலும் எல்லாவற்றையும் தொலைத்துவிடுவார் கமல். விருமாண்டி படத்தில் கொத்தாளத்தேவன் மீது நிஜமாகவே விருமாண்டி விசுவாசம் வைத்து வாழ்க்கையையே தொலைத்துவிடுவான்.
குருதிப்புனலில், போலீஸ் வேலைக்கு விசுவாசியான கமல், தனது போலீஸ் ஆட்களை எதிரி முகாமில் ஊடுருவ வைத்த சக போலீஸ் நண்பன் அர்ஜுன் கொலைசெய்யப்பட்ட பின்னர், அந்த உளவாளிகளே துப்பாக்கி முனையில் தன்னைக் கொல்லுமாறு செய்வார். போலீஸ் வேலைக்கு விசுவாசம்! இது மட்டுமல்லாமல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை சத்யராஜை வைத்துத் தயாரித்தவரல்லவா கமல்?
ஒரு மாறுதலுக்காக ஹாலிவுட் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், காட்ஃபாதர் போன்ற படங்களில் எப்படியெல்லாம் அடியாட்கள் விசுவாசம் வைத்திருக்கிறார்கள், அதில் யாரெல்லாம் துரோகம் செய்கிறார்கள் என்று பிரமாதமாகக் காட்டியிருப்பார்கள். ‘நமது எந்த விசுவாசி முதலில் உன்னிடம் வந்து எதிரி உன்னை சந்திக்க விரும்புகிறான் என்று சொல்கிறானோ அவன் தான் நம்மைக் காட்டிக்கொடுத்த துரோகி’ என்று இறப்பதற்குச் சிலநாள் முன்னர் காட்ஃபாதர், அவரது மகன் மைக்கேல் கார்லியோனியிடம் சொல்வார். அதேபோல் காட்ஃபாதர் இறந்தபின்னர் நடக்கும். இதன் பின் தான் மைக்கேல் கார்லியோனி அவனது எதிரிகள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவான்.
விசுவாசமான கதாபாத்திரங்களின் பொற்காலம் என்றால் தாராளமாகத் தொண்ணூறுகளைச் சொல்லிவிடலாம். அக்காலகட்டத்தில்தான் எத்தனை எத்தனை விசுவாசமான கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன? நட்புக்காக படத்தில் ‘மீசக்கார நண்பா ஒனக்கு ரோசம் அதிகண்டா’ என்று ஒருவர் மேல் ஒருவர் விசுவாசமான நட்பு வைத்திருக்கும் இரண்டுபேராக சரத்குமாரும் விஜயகுமாரும் நடித்தனர். அதேபோல் நாட்டாமை படத்தில் கையாளப்பட்ட விசுவாசம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சூரிய வம்சம் படத்தில் அப்பா சரத்குமார் மேல் எத்தனையோ விசுவாசம் வைத்திருக்கும் மகனாக அதே சரத்குமார் நடித்திருப்பார். வானத்தைப் போல, ஆனந்தம் இரண்டு படங்களிலும் அண்ணன் மீது ஏராளமான விசுவாசம் கொண்ட தம்பிகள் இருந்தனர். சின்னக்கவுண்டர் படத்திலும் எஜமான் படத்திலும், கதாநாயகர்கள் மீது அந்தக் கிராமமே விசுவாசம் வைத்திருக்கும். தொண்ணூறுகளுக்குப் பிறகு அதே இயக்குநர் சசி இயக்கிய ‘பூ’ படத்தில், தனது உறவுக்கார நாயகன் மீது கதாநாயகிக்கு இருந்த விசுவாசமான அன்பு அற்புதமாக சொல்லப்பட்டது. நாயகர்களைத் தவிரவும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களுமே விசுவாசமாக இருக்கும்படியான ‘தேவர் மகன்’ (சங்கிலி முருகன் & வடிவேலு) போன்ற படங்களும் நிறைய உண்டு,.
இப்போது இந்த விசுவாசம் என்பது திரைப்படங்களில் எப்படிக் காட்டப்படுகிறது?
இப்போது அதன் பொருள் முற்றிலுமாகவே மாறிவிட்டது. பல படங்களில், நாயகன் தான் கொடூரமான செயல்கள் புரிபவனாக இருக்கிறான். வில்லனை விட இவன்தான் மோசமாக இருக்கிறான். இதனாலேயே பல படங்களில் நாயகர்களை மட்டுமே மையப்படுத்தி, எந்தவிதக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுமே இல்லாமல் எடுக்கப்பட, விசுவாசம் என்பதும் துளிக்கூட இல்லாமல் போய்விட்டது. எங்கோ மிக அரிதாக, நடிகர் மணிகண்டன் நடிக்கும் படங்களில்தான் பல கதாபாத்திரங்கள் இயல்பாக எழுதப்பட்டு வருகின்றன. நாம் உண்மையில் பல்வேறு கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணாம்சங்கள், இயல்பாக இருக்கக்கூடிய காட்சிகள் ஆகியவற்றிலிருந்து வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறோமோ என்றுகூட சில சமயங்களில் தோன்றியிருக்கிறது. முதலில் அப்படிப்பட்ட நல்ல கதைகள் மீது நாம் விசுவாசம் வைத்து அவற்றை ஓடவைத்தால்தான் அதிகமான நல்ல படங்கள் நமக்குக் கிடைக்கும். அதை முதலில் யோசிப்போமாக.