நமது தேசிய நோக்கும் அனைத்திந்தியப் பார்வையும் அணுகுமுறையும் அமரர் அண்ணா அவர்கள் காட்டிய வழியின் பாற்பட்டதே. இதனைக் குறைகூறுவோர் கேலி பேசுவோர் யார் என்பதை நான் அறிவேன். மத்திய அரசுடனும் அதன் ஆளும் கட்சியுடனும் நேச உறவு கொள்ள முயன்று முனைந்து தோற்றவர்கள்தான் இன்று என்னைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் தோற்ற இடத்தில் அண்ணாவின் சக்தியால் நான் வென்றேன் என்றால் அதனால் தமிழகம் பெற்ற நலன்கள் ஏராளம்.
1984-இல் வெளியான அண்ணா பவளவிழா மலரில் எம்ஜிஆர் எழுதிய கட்டுரையில் இருந்து.
1972-இல் தி.மு.கழகத்தில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 1977-இன் ஆரம்பத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், சிபிஐ உடன் கூட்டணி வைத்து பெரு வெற்றி பெற்றது. இந்நிலையில் மத்தியில் ஜனதா ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம் என்ற அபரிமிதமான நம்பிக்கை எம்ஜிஆருக்கு இருந்தது. காங்கிரஸையும் சிபிஐயையும் கழற்றிவிட்டார். சிபிஎம், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் மட்டும் அவருடன் கூட்டணி சேர மகத்தான வெற்றியுடன் முதலமைச்சர் ஆனார்.
1977 ஜூன் மாதம் 14 ஆம் முடிவுகள் வந்தாலும் எம்ஜிஆர் உடனடியாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள வில்லை. முன்னதாக நடித்துக்கொண்டிருந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படக்காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி, ஆஸ்தான ஜோதிடர் வித்துவான் லட்சுமணன் குறித்துக் கொடுத்த தேதியில் பதவியேற்றுக் கொண்டார். அதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. ஜூன் 30 ஆம் தேதிதான் ராஜாஜி ஹாலில் ஆளுநர் பட்வாரியிடம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். 14 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜாஜி ஹால் பதவியேற்பு வைபவத்துக்குப் பின் தி.நகரில் பெரும் பொதுக்கூட்டம். அதில் மக்கள் முன்னால் இன்னொருமுறை அவரும் அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆரம்பநாட்களில் ஊழல் எதுவுமற்ற நல்லாட்சி நடத்தவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தாகவே விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். 1980-இல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது தனக்கிருந்த நிதிநிலைமையைக் கண்டபிறகே அவரிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்வார்கள்.
பதவி ஏற்பதற்கு மூன்று நாள்கள் முன்னதாக பத்திரிகையாளர் சோலையிடம் கலைஞரிடம் திமுக - அதிமுக இணைப்பு பற்றி பேசச் சொன்னதாக ‘MGR A LIfe’ நூலை எழுதிய ஆர்.கண்ணன் அதில் குறிப்பிடுகிறார். 1979 வரை இந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
நேர்மையான, தூய்மையான நல்லாட்சி என்பது அவரது குறிக்கோளாக அறிவித்தார். ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக அமையவேண்டும் என அவர் கருதினார். தொழில்துறையை வேறு யாருக்கும் கொடுத்தால் ஊழல் ஏற்பட்டுவிடும் எனக்கருதி ஆரம்ப கட்டத்தில் தானே வைத்துக்கொண்டார். தொழிலதிபர்களுடன் சேர்ந்து பொது நிகழ்வுகளில் காணப்படுவதைக் கூட அவர் தவிர்த்தாராம்! அந்த காலகட்டத்தில் ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் எம்.எல்.ஏக்கள் எம்ஜிஆரைப் பார்க்கவரும்போது, எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்று கேட்பாராம்! எம்.எல்.ஏ. விடுதி என்றால் பிழைத்தார்கள்! வெளியே ஏதாவது ஹோட்டலில் தங்கி இருக்கிறேன் என்று சொன்னால் ஓ.. எப்படி உன்னிடம் இதற்குப் பணம் வந்தது? என்று கடிந்துகொள்வாராம்! இதை அவரது சமகாலத்துப் பார்வையாளர்கள் நினைவுகூர்கிறார்கள்! இந்த இறுக்கமான சூழல் தளர சில ஆண்டுகள் ஆயின.
1974-இல் கலைஞர் ஆட்சியில் மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதே கொள்கையை எம்ஜிஆரும் தொடர்ந்தார். பதவியேற்ற சில மாதங்களில் மது ஒழிப்பு மாநாடு நடத்தினார். கள்ளச்சாரம் காய்ச்சுவோருக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்தார். என்ன செய்தும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கமுடியவில்லை. ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இந்த கொள்கையில் சில ஆண்டுகளுக்குப் பின்னால் உறுதியாக இருக்கமுடியவில்லை என்பது நாடறிந்தது.
ஆட்சிக்கு வந்த முதல் ஐந்துமாதங்களில் அவர் இரண்டு முக்கியப் பிரச்னைகளை எதிர்கொண்டார். ஒன்று இரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த இந்திரா காந்திக்கு எதிராக திமுக நடத்திய கருப்புக் கொடிப் போராட்டம். மதுரையில் அவர் பயணித்த கார்மீது கல்வீச்சு நடந்தது. இந்த கலவரத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன் போன்றவர்கள் இந்திராவுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டி இருந்தது. சென்னைக்கு இந்திரா திரும்பியபோது கிண்டியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் இறந்தார். சைதாப்பேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கலைஞரும் அன்பழகனும் கைது செய்யப்பட்டனர். இந்த கருப்புக் கொடி போராட்டம் எம்ஜிஆர் அரசுக்கு மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மாறி பெரும் தலைவலியாக அமைந்தது.
இதற்கடுத்த பிரச்னை நவம்பர் 12-இல் வீசிய பெரும்புயல். சுமார் 2000 பேர் இறந்திருக்கலாம். எம்ஜிஆர் அரசுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. ஆனால் அதை அவர் சிறப்பாகவே கையாண்டார். அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி ஆதரவு கோரினார்.
ஆட்சிக்கு வந்ததும் எம்ஜிஆர் ஆட்சியின் முதல் பட்ஜெட் நிதியமைச்சர் நாஞ்சில் மனோகரனால் 1977 ஜூலை 25 அன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை, நீர்ப்பாசனம், மின்சாரம், தொழில்துறை ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதாக அந்த பட்ஜெட் உரை கூறுகிறது. 263.5 கோடி ரூபாய் தான் அன்றைக்கு மொத்த பட்ஜெட் மதிப்பு! கிராமப்புறங்களில் குடிநீர் வசதிக்காக இதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது! இந்த பட்ஜெட்டில் 16-30 வயதுக்கு உட்பட்ட 1000 கைம்பெண்களுக்கு ஆண்டுக்கு 150 ரூபாய் வழங்கும் அறிவிப்பு இருக்கிறது! ஆண்டு வருமானம் ரூ 3000-க்கும் குறைவாக உள்ள கைம்பெண்களின் பிள்ளைகளுக்குப் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது! அவர்கள் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயின்றுகொள்வதற்காக இந்தத் தொகை வழங்கப்படும்!
எஸ்.சி./எஸ்.டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, இலவச பாடப்புத்தகங்கள் அவர்களின் குடும்ப வருமானத்தைக் கணக்கில் எடுக்காமல் வழங்கும் திட்டம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது!
இங்கிருந்துதான் பின்னாளில் அவர் கொண்டுவந்த ஆதரவற்றோர், முதியோர், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை, சத்துணவுத்திட்டம் போன்ற வற்றுக்கான விதை ஊன்றப்பட்டிருக்க வேண்டும்!
இந்த பட்ஜெட் உரையில் தமிழகக் கல்வித்துறையில் கோத்தாரி ஆணையப் பரிந்துரைப்படியிலான 10+2+3 என்ற முறையிலான வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது! இது 1978 –இல் அமலுக்கு வந்தது!
அந்த காலகட்டத்தில் பல அமைச்சர்களிடம் கார் கிடையாது! எம்ஜிஆரின் செயலாளர் லட்சுமி நாராயணன், மாலையில் ஸ்கூட்டரில் தி நகர் வீட்டுக்கு வருவாராம்! முதல்வரின் அலுவலகச் செயலாளர்களில் ஒருவராக இருந்த பிச்சாண்டி கடற்கரை அருகே நகர்ப்பேருந்தில் ஏறி தி.நகர் அலுவலகம் வருவாராம்! ( நன்றி: எனக்குள் மணக்கும் எம்ஜி ஆர் நினைவுகள்- த.பிச்சாண்டி ஐஏஎஸ்)
அவரது காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த மோகன் தாஸ், தன்னுடைய மேன் அண்ட் தி மித்-நூலில் பல சுவையான சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்! “ஒருமுறை எம்ஜிஆருடன் காரில் அவர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அன்று அவருடைய திருமண நாள் என்று சொன்ன அவர் உணவருந்த அழைத்து அருகே அமரவைத்தார். மேலும் சில முக்கிய விருந்தினர்களும் இருந்தனர். ஜானகி, தலைவாழை இலையில் சிறந்த சைவ உணவு பரிமாறினார். சாப்பிடுகையில் எம் ஜி ஆர் காதில் ‘உங்கள் அலுவலகத்தில் கோப்புகள் தாமதம் ஆவதாக உயரதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்’ என்று கிசுகிசுப்பாக கூறினேன்! ‘ஓ… உங்கள் வயிற்றில் இடம் இருந்தால் சொல்லுங்கள். அந்த கோப்புகளை இங்கே கொண்டுவரச் சொல்கிறேன். நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள்; நானும் கொஞ்சம் சாப்பிடுகிறேன்’ என்று பதிலுக்கு கிசுகிசுப்பாகச் சொல்ல, இருவரும் சிரித்தோம். எதிரில் இருந்தவர்கள் என்ன என்று ஆவலாகக் கேட்டனர்! ‘ ஒரு சீக்ரெட் அலுவலகத் தகவல்!’ என்று எம்ஜிஆர் குறும்பாக பதில் சொன்னார்!”
எம்ஜிஆரின் ஆரம்ப மாதங்கள், கலைஞரின் எதிர்ப்புகளை சமாளித்தல், டெல்லியில் காங்கிரஸ்- ஜனதா அரசியலுக்கு இடையே அல்லாடல், உள்ளூரில் பல்வேறு போராட்டங்கள் ஆகியவற்றில் கழிந்து மெல்ல அவர் நிர்வாக அனுபவங்களைப் பெற்றார்!