சிறப்புப்பக்கங்கள்

முராரி ஸ்வீட்ஸ்

தாத்தா காட்டிய வழி!

Staff Writer

உத்தரபிரதேசத்தில் குரிஜா என்கிற கிராமத்தில் இருந்து கும்பகோணத்துக்கு சிறுவயதில் பிழைப்புக்காக வந்து சேர்கிறார், முராரிலால் சேட். அவர் சின்ன அளவில் 1915இல் தொடங்கியதே இன்று கும்பகோணத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறிநிற்கும் முராரி ஸ்வீட்ஸ்.

‘கும்பகோணத்தின் பெரிய கடைத்தெருவில் கும்பேஸ்வரர் கோவில் அருகே இனிப்புக் கடையை முராரி பாம்பே ஸ்வீட்ஸ் என்ற பெயரில் எங்கள் தாத்தா திறந்தார். நான்கு பக்கமுமே கோவில்கள். சக்கரபாணி, சாரங்கபாணி. ராமசாமி, கும்பேஸ்வரர் ஆகிய நான்கு திருத்தலங்களுக்கு நடுவே அமரும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது’ என்று சொல்கிறார் முராரிலால் சேட்டின் பேரன்களில் ஒருவரான கணேஷ்குமார். இவரது சகோதரர்கள் ரமேஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோருடன் இணைந்து தற்போது நிர்வகித்துவருகிறார். இவர்களின் வாரிசுகளும் இதே தொழிலில் படிப்பை முடித்துவிட்டு இணைந்துள்ளனர்.

’தாத்தாவின் உழைப்பை எங்கள் தந்தை தேவிதாஸ் பின்பற்றி கடையின் வளர்ச்சியைக் கொண்டுவந்தார். எங்களுக்கு அடுத்த தலைமுறையினர் கால மாறுதலுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். வெளியூருக்குச் சென்று ஸ்வீட் சப்ளை செய்வதற்கான ஆர்டர்களைப் பெற்றுவருகின்றனர்.

சென்னையில் கிளவுட் கிச்சன் அமைத்து சப்ளை செய்கிறோம். ஆன்லைன் ஆர்டர்களும் பெற்று அனுப்புகிறோம்.’ என்கிறார்.

”எங்கள் தாத்தா கையால் செய்யப்பட்ட சோன் பப்டி எங்கள் மிக முக்கியமான இனிப்பு வகை. இத்துடன் ட்ரை ஜாமூன், தூத் பேடா, அஜ்மீரி கேக் ஆகியவை நமக்குப் பேர் சொல்லும் இனிப்புகள். கும்பகோணத்தில் ஐந்து கிளைகள் உள்ளன.கும்பகோணத்துக்கு வெளியேயும் விரிவாக்கும் திட்டங்கள் உள்ளன,” பெருமையுடன் சொல்கிறார். இவர் பத்தாவது படித்தவுடன் தந்தைக்குத் துணையாக கடைக்கு வந்துவிட்டவர். ஆனால் இவர்களது அடுத்த வாரிசுகள் மேற்படிப்புகள் முடித்தபின்னர் தொழிலில் இணைந்துள்ளனர்.

இவரது மூத்த சகோதரர் அருண்குமார் தந்தையின் காலத்திலேயே பிரிந்து சென்று கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ் என தனி நிர்வாகம் செய்துவருகிறார் என்பது கூடுதல் தகவல்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram